Published:Updated:

கயிலை... காலடி... காஞ்சி! - 11

கயிலை... காலடி... காஞ்சி! - 11
பிரீமியம் ஸ்டோரி
கயிலை... காலடி... காஞ்சி! - 11

திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே...நிவேதிதா

கயிலை... காலடி... காஞ்சி! - 11

திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே...நிவேதிதா

Published:Updated:
கயிலை... காலடி... காஞ்சி! - 11
பிரீமியம் ஸ்டோரி
கயிலை... காலடி... காஞ்சி! - 11
கயிலை... காலடி... காஞ்சி! - 11

பவானி த்வம் தாஸே மயி விதர த்ருஷ்டிம் ஸகருணாம்
இதி ஸ்தோதும் வாஞ்சன் கதயதி பவானி த்வமிதி ய:
ததைவ த்வம் தஸ்மை திசஸி நிஜ ஸாயுஜ்ய பதவீம்
முகுந்த - ப்ரஹ்மேந்த்ர - ஸ்புட மகுட நீராஜித பதாம்


‘பவன் எனப் பெயர் பெற்ற பரமசிவனுடைய பத்னியே! நீ, அடிமையாகிய என்னிடத்தில் கருணையுடன் கூடிய பார்வையைச் செலுத்தி அருள்வாயாக’ என்று ஒருவன் துதி செய்ய விரும்பி, ‘பவானி! நீ...’ என்ற இரண்டு வார்த்தைகளைச் சொன்ன உடனே, அப்போதே அவனுக்கு விஷ்ணு, பிரம்மா, இந்திரன் ஆகியவர்களால் வணங்கப்பெறுகிற திருவடிகளை உடைய உனது ஸாயுஜ்ய பதவியை அளிக்கிறாய்!

- சௌந்தர்யலஹரி

அன்னை காமாட்சி அளப்பரிய கருணைத் திறம் கொண்டவள். தன்னை நம்பிச் சரண் அடைந்தவர்களை ரக்ஷிப்பதில் அவள் என்றுமே சுணக்கம் காட்டியதில்லை. அப்படித்தான் அவள் மீனாட்சி பாட்டிக்கும் அருள்புரிந்தாள். அம்புஜம் தனக்குக் காணிக்கையாகச் செலுத்தவேண்டிய தங்கச் சங்கிலியை தன் கோயில் பிராகாரத்திலேயே தவறி விழும்படிச் செய்தவள், அந்தத் தங்கச் சங்கிலி மீனாட்சி பாட்டியின் பேத்திக்கே கிடைக்கும்படி செய்தாள். அதன் காரணமாகவே மகா பெரியவா சந்நிதியில் மீனாட்சி பாட்டியும் அம்புஜம் அம்மாளும் சந்திக்க நேர்ந்ததும், அம்புஜம் அம்மாளின் மூலமாகவே மீனாட்சி பாட்டி மகா பெரியவாளிடம் வைத்த கோரிக்கை நிறைவேறவும் செய்தது.

மகா பெரியவாளிடம் நம்முடைய பிரார்த்தனையை சேர்த்துவிட்டால் போதும், வியக்கத்தக்க விதத்தில் நம்முடைய கோரிக்கை நிறைவேறிவிடும். சதாசர்வ காலமும் உலகத்தின் நன்மையை மட்டுமே சிந்தையில் இருத்தி மோனத் தவம் இயற்றிய யுகபுருஷர்; மகா ஞானி!  அனைவரையும் சமமாக நினைத்து அன்பும் கருணையும் பொழிந்தவர்; இன்றைக்கும் அவரைத் தியானிப்பவர்களுக்கு சகல நன்மைகளையும் அருளும் கருணைத் தெய்வம் அவர்!

 மகா பெரியவாளைத் தரிசித்து ஆசி பெறாத முக்கிய பிரமுகர்களே இல்லை என்று சொல்லும்படி, அத்தனை பிரமுகர்களும் தரிசித்து ஆசி பெற்றிருக்கிறார்கள். கவியரசு கண்ணதாசன் ஒருமுறை மகா பெரியவாளை தரிசிக்கச் சென்றிருந்தார். அப்போது நடைபெற்ற ஒரு சம்பவம்தான், ‘திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா’ என்ற பிரசித்தி பெற்ற பாடல் உருவாகக் காரணமாக இருந்தது.

அந்தச் சம்பவம்...

தொடக்கக் காலத்தில் நாத்திகராக இருந்த கண்ணதாசன், பின்னர் ஆன்மிகத்தின் பக்கம் ஈர்க்கப்பட்டுப் பல ஆன்மிக நூல்களை இயற்றி இருக்கிறார். குறிப்பாக, அவருடைய ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ மக்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்றது.

மகா பெரியவாளை தரிசிக்கச் சென்ற கண்ணதாசன் பெரியவாளிடம், ‘‘ஸ்வாமி, பகவான் மகாவிஷ்ணு பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பதாகச் சொல்கிறார்கள். பாற்கடல் என்றால், வெண்மை நிறமாகத் தானே இருக்கவேண்டும்? ஆனால், பாற்கடல் மேகவர்ணமாக அல்லவா காட்சி தருகிறது?’’ என்று கேட்டார். அவருடைய கேள்வியில் சற்றே குதர்க்கம் இருப்பதாகச் சுற்றிலும் இருந்தவர்கள் நினைத்தனர்.

ஆனால், கண்ணதாசன் கேட்டதற்கு மகா பெரியவா பதில் ஒன்றும் சொல்லாமல் மௌனமாகவே புன்னகைத்தார். அன்றைக்கு மதியம் கண்ணதாசன் கேள்விக்கு விடை கிடைக்கும் என்றும், அதுவரை கண்ணதாசன் காத்திருக்கவேண்டும் என்றும் உத்தரவாகியது.

அன்று பிற்பகல் உம்மிடி செட்டியார், மகா பெரியவாளை தரிசிப்பதற்கு வந்தார். மகா பெரியவாளை நமஸ்கரித்து எழுந்த உம்மிடியார், தான் கொண்டு வந்திருந்த பெரிய மரகதக் கல்லை பெரியவாளுக்குச் சமர்ப்பித்து, ஏற்றுக் கொள்ளுமாறு பிரார்த்தித்துக் கொண்டார்.

மகா பெரியவா பதில் ஒன்றும் சொல்லாமல், மடத்துச் சிப்பந்தியிடம் ஒரு பாத்திரத்தில் பால் கொண்டு வருமாறு பணித்தார். பால் வந்ததும் உம்மிடியார் கொடுத்த மரகதக் கல்லை அந்தப் பாலில் போடுமாறு செய்தார். அதைப் பார்த்த உம்மிடியார், தான்  கொடுத்த மரகதத்தின் தரத்தைதான் அப்படிச் சோதித்துப் பார்க்கிறாரோ என்று நினைத்தார். மரகதத்தின் தரத்தை அப்படிப் பாலில் போட்டுச் சோதித் துப் பார்ப்பது வியாபார ரகசியம். அது மகா பெரியவாளுக்கு எப்படித் தெரிய வந்தது என்ற வியப்பும் உம்மிடியாருக்கு ஏற்படவே செய்தது.

கயிலை... காலடி... காஞ்சி! - 11

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மகா பெரியவா தம்முடைய அத்யந்த பக்தரான உம்மிடியாரை சந்தேகிப்பாரா என்ன? அவர் அப்படிச் செய்ததற்குக் காரணமே வேறு. மரகதக் கல்லை பாலில் போடச் செய்த மகா பெரியவா, கண்ணதாசனை அழைத்து மரகதக் கல் போடப்பட்டிருந்த பாலைப் பார்க்குமாறு கூறினார்.

கண்ணதாசன் அந்தப் பாத்திரத்தைப் பார்த்தார். பாத்திரத்தில் இருந்த பால் பச்சை நிறத்துக்கு மாறி இருந்தது. மரகதக் கல்லின் நிறம் பாலில் பிரதிபலித்தது. இதழ்களில் குறுநகை தவழ கண்ணதாசனைப் பார்த்த மகா பெரியவா, ‘‘மரகதப் பச்சை பாலோட நிறத்தை எப்படிப் பச்சையா மாத்திடுச்சு பார்த்தியோ? அப்படித்தான் மேகவர்ணம் கொண்ட மகாவிஷ்ணு பாற்கடலில் பள்ளி கொண்டதும், அவருடைய நிறமே பாற்கடலில் பிரதிபலிக்குது. அதனால்தான் பாற்கடல் மேகவர்ணத்துல தெரியறது’’ என்றார்.

மகா பெரியவாளின் செயல்முறை விளக்கம் கண்ணதாசனை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அவருடைய மனதில் தெளிவும் ஏற்பட்டது. அந்தச் சம்பவத்தை வைத்துக் கண்ணதாசன் எழுதிய பாடல்தான், ‘திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே...’ என்ற பாடல்.

பின்னர், உம்மிடியாரிடம் திரும்பிய மகா பெரியவா, அவர் தமக்குச் சமர்ப்பித்த மரகதக் கல்லை வரதராஜபெருமாள் கோயிலுக்குக் காணிக்கையாகக் கொடுக்குமாறு பணித்து, அவருக்குப் பிரசாதம் கொடுத்து அனுப்பினார்.

நம்மையெல்லாம் உய்விப்பதற்காகவே 87 ஆண்டுகளாக நீண்ட நெடிய தவ வாழ்க்கையை மேற்கொண்ட மகா பெரியவா, சுமார் பத்து வருடங்களாக மோனத் தவம் இயற்றிய தவபூமி தேனம்பாக்கம் என்னும் சிவாஸ்தானம். இன்றைக்கும் மகா பெரியவாளின் பரிபூரண சாந்நித்தியம் திகழும் தேனம்பாக்கத்துக்கு வந்து தங்கள் வாழ்க்கையில் நிம்மதியும் சந்தோஷமும் பெற்றுத் திரும்பும் எண்ணற்ற பக்தர்களின் அனுபவங்கள், மகா பெரியவாளின் பரிபூரண சாந்நித்தியத்தை நமக்கு உணர்த்துவதாக அமைந்திருக்கின்றன.

அப்படி தேனம்பாக்கம் திருத்தலத்தில் மகா பெரியவாளின் பரிபூரண சாந்நித்யம் பரிபூரணமாக நிலைபெற்று இருப்பதன் தாத்பர்யம் என்ன?

நம்மையெல்லாம் ரக்ஷிப்பதற்காக, மகா பெரியவா நீண்ட நெடிய தவத்தினை மேற்கொள்ளும் அளவுக்கு அந்தத் தலத்துக்கு என்ன தனிச் சிறப்பு..?

- திருவருள் தொடரும் 

கயிலை... காலடி... காஞ்சி! - 11

சுந்தர விநாயகர்  கோயிலில் விநாயக சதுர்த்தி விழா...

சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு, கணபதி அக்ரஹாரத்தைச் சேர்ந்த புஷ்பவனம் என்பவர் காஞ்சி மகா பெரியவாளை தரிசிக்கச் சென்றார்.

மகா பெரியவாளை நமஸ்கரித்தவர், ‘‘பெரியவா, என்னோட சொந்த ஊர் கணபதி அக்ரஹாரம். வேலை விஷயமா இப்ப சென்னைக்கு வரவேண்டி இருக்கு. தினமும் மகாகணபதியை வழிபடும் எனக்கு இப்ப என்ன செய்யறதுன்னு புரியலை’’ என்று வருத்தத்துடன் முறையிட்டார்.

அவரை கனிவு ததும்ப பார்த்த மகா பெரியவா, ‘‘கவலைப்படாதே. நீ குடிபோற எடத்துல சீக்கிரமே ஒரு பிள்ளையார் கோயிலை நிர்வாகம் பண்ணக்கூடிய பாக்கியம் உனக்கு கிடைக்கும்’’ என்று சொல்லி ஆசிர்வதித்து அனுப்பினார்.

மகா பெரியவா அனுக்கிரகத்தின்படி சென்னை,  சின்னபோரூர் செந்தில் நகரில், சுவாமிநாத கணபதியாக தென்திசை நோக்கி அருள்புரியும் சுந்தர விநாயகர் கோயில் அமைந்தது.

இந்தக் கோயிலில், விநாயக சதுர்த்தி விழா  செப்டம்பர்  மாதம் 2-ம் தேதி கணபதி பூஜை மற்றும் மகா கணபதி ஹோமத்துடன்  தொடங்க இருக்கிறது. 3 மற்றும் 4 தேதிகளில் மகா  கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேக அலங்காரங்களும் நடைபெற இருக்கின்றன. விநாயக சதுர்த்தி அன்று காலை 7 மணிக்கு மகா கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேக அலங்காரங்களும், மாலை 5 மணிக்கு சுந்தர விநாயகருக்கு சந்தனக் காப்பு அலங்காரமும், இரவு 7 மணிக்கு திருவீதி உலாவும் நடைபெற இருக்கிறது. யம பயம் அகற்றும் சுந்தர விநாயகரை  விநாயக சதுர்த்தி அன்று தரிசித்து அருள் பெறலாம்.

- வசந்தா சுந்தரம், சென்னை-116

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism