மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அருட்களஞ்சியம்

அருட்களஞ்சியம்
பிரீமியம் ஸ்டோரி
News
அருட்களஞ்சியம்

அருட்களஞ்சியம்

அருட்களஞ்சியம்

சந்திரசேகரர்

- தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான்

சிவபெருமானின் திருவடிவங்களுள் சந்திரசேகர திருவடிவமும் ஒன்று. பிறைநிலவைத் தன் திருமுடியில் சூடிக் கொண்டிருக்கும் வடிவமே சந்திரசேகர வடிவம்.

பிரம்மதேவனது புத்திரர்களில் ஒருவன் தட்சன். அவனுக்கு 27 புதல்வியர். அனைவருக்கும் மாப்பிள்ளைமார் தேடுவது என்றால் எளிதான காரியமா? ஆதலால், அத்திரி முனிவருக்கும் அநசூயைக்கும் பிறந்த சந்திரனைத் தேர்ந்தெடுத்து, அவனுக்கே 27 பெண்களையும் மணமுடித்துக் கொடுத்து, கஷ்டத்தை ஒருவகையாகச் சமாளித்துக் கொள்கிறான், தட்சன்.

சந்திரனோ அந்த 27 பேரில், அழகு மிக்க கார்த்திகை, ரோகிணி இருவரிடமும் அதிக அன்பு பாராட்டுகிறான். அதனால் மற்ற பெண்கள் எல்லாம் தந்தையிடம் சென்று முறையிடுகின்றனர். தட்சனுக்கோ ஒரே கோபம். மருமகனை அழைத்து, அவன் நாளொரு கலையாகத் தேய்ந்து அழியட்டும் என்று சாபமிடுகிறான்.

சாப விமோசனத்துக்காக பிரம்மன், விஷ்ணு இவர்களிடம் நடையாய் நடக்கிறான், சந்திரன். அவர்களால் ஒன்றும்  செய்ய முடியவில்லை. அதற்குள் 14 நாட்கள் கழிந்துவிடுகின்றன. நாளொரு கலையாகத் தேய்ந்து வருகிறான் சந்திரன். கடைசி ஒரு கலை இருக்கும்போது, கயிலையை அடைகிறான். சிவபிரான் திருவடி களில் விழுகிறான். அவரும் அடைக்கலம் என்று வந்தவனுக்கு அபயம் அளித்து, அந்த ஒற்றைக் கலைச் சந்திரனை எடுத்துத் தன் திருமுடி மீது அணிந்துகொள்கிறார். அவனுடைய கலை நாளும் வளரவும் அருள்புரிகிறார். இப்படி, சந்திரன் கலை தேயவும், வளரவும் செய் கிறான் என்று புராணங்கள் கூறுகின்றன.

தன் தலையில் சந்திரனைச் சூடிய இறை வனையே சந்திரசேகரன், பிறைசூடி என்றெல்லாம் அழைத்து மகிழ்ந்திருக்கிறார்கள் பக்தர்கள், கலைஞர்கள் எல்லாரும்.

இந்தச் சந்திரசேகர மூர்த்த வரலாற்றைக் கூறுகிறது கந்த புராணம்.

‘தீர்ந்தன அன்றியே திங்கள தன்னிடை
ஆர்ந்திரு கலையினை அங்கையில் சேர்த்தினால்
சாந்தில அவ்வழித் தக்கன் சாபமே' - என்பது பாடல். இதுவே புராணம் கூறும் வரலாறு.

பழைய புராணம், புதிய விஞ்ஞானம் எல்லாம் கற்றறிந்த கவிஞர் ஒருவர், மாலைப்பொழுதில் ஒரு நாள் செக்கர் வானை நோக்கியிருக்கிறார். பொழுது இருட்டிக்கொண்டே வருகிறது. அந்த நேரத்தில் மூன்றாம் பிறைச் சந்திரன், வானவெளியில் தோன்றுகிறான். அதனைப் பார்த்துப் பாடுகிறார் கவிஞர்.

‘வான வெளி தனிலே
கவிந்து ஏழு மாலைப்
பொழுதினிலே
கூனப் பிறை வரவே
சிவன் திருக்கோலம் தெளிவேனடி'


- என்ற பாடல் உதயமாகிறது. பாடிய கவிஞர் அமரர் கவிமணி தேசிகவிநாயகம் பிள்ளை. இப்படித்தான் புராணத்தில் உருவான சந்திரசேகரர், கவிஞர் உள்ளத்திலும் உருவாகி இருக்கிறார்.

இந்தச் சந்திரசேகரன் சிற்பக்கலை உலகில் எப்படி உருவாகியிருக்கிறான் என்றும் பார்ப்போமே!

தமிழகத்துக் கோயில்களில் சிலை வடிவில் சந்திரசேகரர் அதிகம் இல்லை. அதே நேரம், உற்ஸவ மூர்த்தியாக சந்திரசேகரர் இல்லாத சிவன் கோயிலும் இல்லை. சில இடங்களில் அவரைச் சந்திரசேகரர் என்பார்கள்; சில இடங்களில் பிரதோஷ மூர்த்தி என்பார்கள். ‘கஸ்யப சில்பம்' என்னும் சிற்ப நூலிலே சந்திரசேகரர் தனியாகவும் இருக்கலாம், அன்னை கௌரியுடன் சேர்ந்தும் இருக்கலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.

நானறிந்த மட்டிலே, சந்திரசேகரர் தனியாக நிற்கக் காணோம். அன்னையும் அத்தனும் இணைந்து நிற்கும் திருக்கோலமே செப்புச் சிலை வடிவில் இருக்கின்றது, எல்லாக் கோயில்களிலும், மழுவும் மானும் ஏந்திய கையராயும், வரதமும், அபயமும் அருளும் திருக்கரங்களோடும் சமபங்க நிலையில்தான் அவர் நிற்பதைப் பார்க்கிறோம். தலையில் சடா மகுடம் இருந்தால் அதில் இளம் பிறை விளக்கமாக இருக்கும். மணி மகுடம் இருந்தால் பிறை நன்றாகத் தெரிவதில்லை. அன்னையும் அத்தனும் எட்டி நிற்கும் கோலமே பொதுவாய் எல்லா இடத்தும் இருக்கும். என்றாலும், அன்னையை அணைத்துக் கொண்டு நிற்கும் கோலமும் உண்டு. அதனையே ‘ஆலிங்கன சந்திரசேகரர்' என்று அழைப்பர்.

* 1961 - ஆனந்த விகடன் தீபாவளி மலரில் இருந்து...

அருட்களஞ்சியம்

அரசா, ஆண்டியா?

தகுந்த அணிகளால் தன்னை அலங்கரித்துக் கொண்டு சித்திரப்பாவை போல் இருக்கும் சீதை, பெருமகிழ்ச்சிக்கு உரிய நிகழ்ச்சி ஒன்றை அமைதியாக எதிர்நோக்கியிருந்தாள். திடீரென்று அமங்கலமான அழுகுரல்கள் காதில் விழுகின்றன. எதிர்பாராத விபரீதக் காட்சியொன்று கண்ணெதிரே வருகிறது.

    அழுது, தாயரொ(டு) அருந்தவர்
       அந்தணர்அ ரசர்
    புழுதி ஆடிய மெய்யினர்,
        புடைவந்து பொருமப்,
    பழுது சீரையின்உ டையினன்
      வரும்படி பாரா,
    எழுது பாவை அன்னாள்
     மனத் துணுக்க மொ(டு) எழுந்தாள்.


ஒருபுறம் தாய்மார், ஒருபுறம் முனிவர்கள், அரசர்கள் ஆதியர்... இப்படி ஏன் இவர்கள் புழுதியில் புரண்டு எழுந்தவர்களைப் போல் காணப்படுகிறார்கள்? இப்படி ஏன் பொருமிக் கொண்டு வருகிறார்கள்?
இவர்களுக்கிடையே - என்ன கொடுமை! - அரசர் கோனாக வாழ வேண்டியவன் ஆண்டி போல் உடுத்து வருகிறானே! இவனையே உயிராகக் கொண்டு வாழும் அயோத்திமா நகரம், அப்படியே மயங்கி, ஏங்கி, நிலை குலைந்து மரண வேதனை அனுபவித்துக் கொண்டு இவனை விடாது தொடர்ந்து வருகிறது.

தன் அரண்மனை முன்வாசலில் உட்கார்ந்து கொண்டிருந்த சீதை, மேலே சொன்ன கோரமான நிலையில் நாயகன் தன்னை நோக்கி வருவதைப் பார்க்கிறாள். பார்த்துத் திடுக்கிட்டுத் திக்பிரமை கொண்டு எழுந்திருக்கிறாள். நடுங்கிக்கொண்டே ராமனை நோக்கி, “நடந்தது என்ன?” என்று பரபரப்பாய்க் கேட்கிறாள். அப்போது, அவன் தனது ஆருயிர்க் காதலிக்கு எவ்வளவு பக்குவமாய்ச் செய்தி தெரிவிக்கிறான்:

   “பொருவில் எம்பி புவிபுரப் பான்: புகல்
  இருவர் ஆணையும்ஏ ந்தினென், இன்றுபோய்க்,
  கருவி மாமழைக்க ல்தடம் கண்டு, நான்
  வருவென் ஈண்டு,- வருந்தலை நீ"
என்றான்.

அருட்களஞ்சியம்

சீதை கேட்டதற்கு ராமன், “என் அருமைத் தம்பி பரதன் ராஜ்யம் ஆளப் போகிறான்” என்று பதில் சொல்லத் தொடங்குகிறான். அச்செய்தியை முதலில் தெரிவித்துவிட்டு, தான் வனவாசம் செய்யப் போவதை, “தாய் தந்தையரது ஆணையைத் தாங்கினேன்” என்ற பீடிகையோடு மெள்ள வெளியிடத் தொடங்குகிறான்.

“அந்த ஆணைக்கு இணங்க நான் இன்று போய், மேகம் தங்கும் மலையோடு கூடிய காட்டைக் கண்டு வருவேன்!” என்று கூறுவது, இன்று போய்க் குற்றால மலைவளம் கண்டு திரும்பி வருவேனென்று, ஏதோ உல்லாசப் பயணம் மேற்கொள்வது போன்று ஒருவன் சொல்வதை நினைப்பூட்டுகிறதல்லவா?

எவ்வளவு காலம் வனவாசம் செய்ய வேண்டியிருக்கும் என்று சொல்லாமலே சாதுரியமாகச் செய்தி தெரிவித்து, “இங்கே நீ வருந்தாமல் இரு” என்று ராமன் வேண்டிக்கொள்கிறான். தான் அவளைப் பிரிந்து எவ்வளவு துன்பம் அடைய நேர்ந்த போதிலும், அவள் தன்னைப் பிரிந்த பின்பு வருந்தலாகாது என்ற ஒரே கவலைதான் இப்போது காதலன் உள்ளத்தில் இடம் பெற்றிருக்கிறது.
சீதையின் வினாவும் ராமனின் விடையும் இச்சம்பாஷணையின் முதல் வார்த்தையாக அமை கின்றது.

இப்போது, சீதையின் மன நிலையை நோக்குவோம். அவளுக்கோ ராஜ்யம் இழந்தது கவலை தரவில்லை; காட்டுக்குப் போவது கூடச் சிறிதும் கவலை தரவில்லை. தாய் தந்தையரது வாக்கைக் காப்பாற்றத் துணிந்தது சம்மதம்தான். ஆனால்,

நாயகன் வனம்நண்ணல் உற்றான் என்றும்,
மேய மண்இழந்தான் என்றும், விம்மலள்;
`நீவ ருந்தலை, நீங்குவென் யான்'என்ற
தீய வெஞ்சொல் செவிசுடத் தேம்புவாள்.


`என் வருத்தத்திலும் வாழ்க்கைத் துணையாகிய உனக்குப் பங்கு உண்டு' என்று சொல்லாமல், `நீ வருந்தாமல் இரு; நான் போவேன்!' என்று சொன்னதுதான் சீதையின் செவியைச் சுடுகிறது; அவளைத் தேம்பித் தேம்பி அழச் செய்கிறது. `என்ன வார்த்தை சொல்லிவிட்டார்? தீமையும் கொடுமையும் நிறைந்த வார்த்தை!' என்று நினைக்கிறாள்.

“கொடிய அரக்கர்கள் போய்ப்படுத்துக் கிடப்பது போலப் பெரிய மலைகள் போய் விழுந்து கிடக்கும்! (அவை இரவில் எவ்வளவு பயங்கரமாக இருக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளலாம்.) பகலில் அங்கே வீசும் வெயில் இரவிலுங்கூட எரிந்து கொண்டிருக்கிறதோ என்று பிரமிக்கும்படி, அவ்வளவு கொடிய உஷ்ணமாயிருக்கும். காதலியே! அப்படிப்பட்ட காடுகளிலுள்ள கற்களை மிதித்துச் செல்லும்படி அவ்வளவு கடுமையானவையல்லவே, அழகும் மென்மையும் வாய்ந்த உன் அடி மலர்கள்!” என்று காதலன் சொல்லுகிறான்.

அருட்களஞ்சியம்

அதற்கு, “அம்மம்ம! பேச்சில்தான் என்ன அன்பு! எவ்வளவு கருணை! இதயமோ என்றால், ஈரமில்லாத பாலை நிலம்தான்!" என்று பதில் சொல்லத் தொடங்குகிறாள் சீதை.

“பரி(வு)இ கந்த மனத்(து)ஒரு பற்றிலா(து),
ஒருவு கின்றனை; ஊழிஅருக்கனும்
எரியும் என்ப(து) யாண்டைய(து)? ஈண்டுநின்
பிரிவினும் சுடுமோ, பெருங்கா(டு)?” என்றாள்:


காதலன் காட்டை வருணித்துப் பயங் காட்டுவதும், காதலி அலட்சியமாகப் ‘பிரிவினும் சுடுமோ பெருங்காடு?' என்று கேள்வி போடுவதும், நாயக - நாயகி சம்பாஷணையின் ‘இரண்டாவது வார்த்தை'யாகும்.

சீதையின் வார்த்தையைக் கேட்ட ராமன், அவள் உள்ளத்திலே பொங்கிக் கொண்டிருந்த கருத்தையும் உணர்ந்துகொண்டான். ஏதோ ஒரு சிறு துவாரத்தின் வழியாக, பொங்கிக் குமுறிச் சுழன்று அலை பாய்ந்துகொண்டிருக்கும் சமுத்திரத்தைப் பார்ப்பது போல், சீதை உள்ளத்திலே அலை அலையாகப் பொங்கிப் பெருகிக் கொண்டிருக்கும் கரை காணாத சோகக் கடலைப் பார்த்து விடுகிறான் ராமன், அவள் சொன்ன சிறு வார்த்தை மூலமாக!

ராமன் உள்ளத்திலும் சோகம் பொங்குகிறது. அப்படியே கண்ணீராகக் கொட்டிவிட வேண்டுமென்று தோன்றுகிறது. அப்படிக் கொட்டியிருந்தால், அதுவும் ஒரு கடலாகப் பெருகிவிடும் என்று தோன்றுகிறது. ஆனால், அவன் சீதை முன் அப்படிச் செய்ய இசையவில்லை.

எப்படியோ சோகக் கடலை உள்ளத்திலும், கண்ணீர்க் கடலைக் கண்களிலும் வெளிப்படாது நிறுத்திக்கொண்டு, “இனி என்ன செய்யலாம்?” என்ற சிந்தனைக் கடலில் மூழ்கிப் போனான்.

அருட்களஞ்சியம்

தந்திரமும் வெற்றியும்

‘இதுதான் சமயம்' என்று கருதும் சீதை, விசாலமான தன் அரண்மனைக்குள்ளே புகுந்து காட்சிச்சாலைபோல் தோன்றும் ஓர் அறைக்குப் போகிறாள். அங்கே விநோத விநோதமான பல பொருள்களுக்கிடையே, அநாகரிகமான காட்டு மனிதர்கள் ஆடையாகக் கொள்ளும் மரவுரிகள் வைக்கப்பட்டிருக்கின்றன.

அந்த மரப்பட்டை வகைகளில், தான் கட்டிக்கொள்ளக்கூடும் என்று தேர்ந்தெடுத்து அம் மரவுரியைத் துணிந்து உடுத்திக் கொள்கிறாள். பிறகு, தன்னை மறந்திருந்த ராமனுக்குப் பின்னாக மெள்ள வந்து, பக்கத்தில் நிற்கிறாள். மறுகணம், நாயகனது நீண்ட கையைப் பற்றிக்கொள்கிறாள்.

அப்போதுதான் ராமன், உணர்ச்சி வந்து சீதையை நோக்குகிறான். அவள் வெற்றி தோன்றப் புன்னகை புரிந்துகொண்டிருப்பதைப் பார்க்கிறான்:

முல்லையும் கடல்முத்தும் எதிர்ப்பினும்,
வெல்லும் வெண்ணகையாய் விளை(வு) உன்னுவாய்
அல்லை! போத அமைந்தனை; ஆதலின்
எல்லை அற்ற இடர்தரு வாய்!" என்றான்.


“எல்லை அற்ற இடர் தருவாய்!” என்ற ராமன் வார்த்தை, பின்னால் விளையப் போகும் துன்பப் பெருங்கதைக்கு ஒரு முற்குறியாக வந்து விழுகிறது. இந்த வார்த்தையைக் கேட்டதும்தான் தாமதம், சீதை “உனக்குத் துன்பமெல்லாம் இது ஒன்றுதான்; என்னையும் துறந்த பின்பு இன்பம்தானே?” என்று சீறுகிறாள்.

குயிலை வென்ற குரலினிமையோடும், குழந்தையின் மழலை போன்ற இனியமென் சொற்களோடும் வெளிப்பட்ட அக்கோப வார்த்தைக்கு ராமன் பதில் சொல்லத் துணியவே இல்லை. இப்படி இவர்கள் பேசிக்கொண்டது சம்பாஷணையின் மூன்றாவது வார்த்தை.

சீதாராமர்களின் சம்பாஷணை இந்த மூன்றே வார்த்தைகளோடு முற்றுப்பெறுகின்றது.

இந்தச் சித்திரத்தின் பெரும் பகுதியும் உணர்ச்சியை வெளியிடும் மௌனத்தாலும் செயல்களாலும் உருவாக்கப் பெறுகின்றது.

‘சீதை ராமனைப் பிரிந்து இருக்க மாட்டாள், அவனைத் தொடர்ந்து காட்டுக்குப் போவாள்' என்பது தசரதர், சுமித்திரை, வசிஷ்டர், சுமந்திரன் முதலானவர்களுக்கும் பொது மக்களுக்கும் தெரியும். பகைமையுணர்ச்சி கொண்ட கூனி, கைகேயிகளுக்கும் நன்றாகத் தெரியும்.

எனினும், இவ்வளவு தெளிவான விஷயம் ராமனுக்கு மட்டும் தெரியவில்லை. ஏன்? காதல் மிகுதியால் ராமன், சீதை வருந்தக் கூடும் என்பதை நினைக்கவும் துணியவில்லை. இத்தகைய ராமன் காதலையும் சீதை காதல் வென்றுவிடுகிறது.

அருட்களஞ்சியம்

சீதையின் கடைசி வார்த்தை, ராமனை மௌனமாக்கி விடுகிறது. அப்படியே தெருவுக்கு வந்துவிடுகிறான். ராஜ வீதி வழியாகப் புறப்படுகிறான்.

லட்சுமணன் வில்லும் கையுமாக முன்னே போகிறான்; சீதை பின்னே போகிறாள்; இடையே ராமன் போவதைப் பார்க்கிறோம். ஆனால், மரவுரியை எப்படியோ சுற்றிக் கட்டிக்கொண்டு மகாலட்சுமிபோலப் பின்னே செல்லும் சீதையின் பரிபூரண அழகும், பரிதாப நிலையும் நமது கவனத்தை முதன்முதல் வசீகரிக்கிறது.

* 16.2.47 மற்றும் 23.2.47 ஆனந்த விகடன் இதழ்களில் இருந்து