Published:Updated:

கேள்வி-பதில்!

கேள்வி-பதில்!
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி-பதில்!

விநாயகர் சதுர்த்தியில் எருக்கம்பூ மாலை எதற்கு?சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி-பதில்!

விநாயகர் சதுர்த்தியில் எருக்கம்பூ மாலை எதற்கு?சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

Published:Updated:
கேள்வி-பதில்!
பிரீமியம் ஸ்டோரி
கேள்வி-பதில்!
கேள்வி-பதில்!

? விநாயக சதுர்த்தி நாளில் பிள்ளையாருக்கு எருக்கம்பூ மாலை சார்த்துகின்றனரே, ஏன்?  இந்த தினத்தைத் தவிர, விநாயகரை வழிபடுவதற்கான வேறு விசேஷ தினங்கள் என்னென்ன?

- வி.சங்கரன், காரைக்குடி

மாதந்தோறும் வளர்பிறை சதுர்த்தியில் சுக்ல சதுர்த்தி விரதமும், தேய்பிறை சதுர்த்தியில் சங்கடஹர சதுர்த்தி விரதமும் உண்டு என்கிறது புராணம்.

சதுர்த்தி, விநாயக வழிபாட்டுக் கான சிறந்த நாள் (சதுர்த்தி என்றால் நான்கு). 4-வது புருஷார்த்தத்தை (மோட்சம்- வீடுபேறு) எளிதாக எட்ட வைப்பவர் விநாயகர். உலக இன்பத்துடன் பேரின்பத்தையும் அளிப்பவர்!

அவருடைய கழுத்துக்குக் கீழே உள்ள பகுதி, உலக இன்பத்துக்கு ஆதாரமான பிரபஞ்சத்தைச் சுட்டிக் காட்டும். பிரபஞ்சத்துக்கு அழிவும் தோற்றமும் உண்டு. அப்படித் தோன்றி மறைவதை, ‘மாயை’ (‘யா’- எது; ‘மா'-இல்லையோ. எது இல்லையோ அது மாயை) என சாஸ்திரம் வர்ணிக்கிறது. அவரது மஸ்தகம் பிரம்மம்; எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருள் என்பதைக் குறிக்கும். மிகப் பெரியது எனும் பொருளுக்கு ஏற்ப, அவரின் யானை முகம் எல்லோருக்கும் புலப்படும் படியாகத் தென்படுகிறது என்று விவரிக்கிறது புராணம் (கண்டாதோ மாயயா யுக்தம் மஸ்தகம் பிரம்மவாசகம்).
விநாயகரின் கரத்தில் உள்ள கொழுக்கட் டைக்கு மோதகம் என்றும் பெயர் உண்டு. மோதக ஹஸ்தா எனப் போற்றுகிறது ஒரு செய்யுள். மகிழ்ச்சியைத் தரும் என்பதே மோதகத்தின் தாத்பரியம். ஆக, மகிழ்ச்சியை (மோதகம்) கையில் ஏந்தித் தயாராக வைத்திருக்கிறார் விநாயகர். நமது வேண்டுதலை எதிர்பார்க்காமல், நமக்கு வேண்டியதைத் தந்தருளும் வள்ளல் அவர். கொழுக்கட்டைக்கு உள்ளே இருப்பது பூரணம்; அதாவது நிறைவு! அது இனிப்பாக இருக்கும். ‘இனிப்பு எல்லா உயிரினங்களுக் கும் பிடிக்கும்’ என்கிறது புராணம் (இக்ஷுகண்ட ஸமுத்பூதம் ஸர்வப்ராணி மனோகரம்.).

கேள்வி-பதில்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பூரணத்தை மறைத்திருக்கும் மாவு- வெள்ளை நிறம். அந்த நிறத்தின் குணம் சாத்விகம். மோதகம், உருண்டை வடிவில் இருக்கும்தானே?! அதைத் தன் கரத்தில் ஏந்தியிருப்பதன் மூலம், ‘உலகம் அனைத்துக்கும் மகிழ்ச்சியை அளிப்பேன்’ என விநாயகர் சொல்லாமல் சொல்கிறார் என்றால், அது மிகையல்ல!

‘21 உளுந்துமணி அளவு, புருஷனின் உருவம்’ என சூட்சும புருஷனைச் சுட்டிக் காட்டுகிறது வேதம். அது, ஆனைமுகனுக்கும் பொருந்தும்! ஆகவே, 21 இலைகள், 21 பூக்கள், 21 அருகம்புல் ஆகியவற்றால் விநாயக சதுர்த்தி தினத்தில் சிறப்பாக பூஜிப்பர் அவற்றில், எருக்க இலையும் எருக்கம்பூவும் அடங்கும்!

பரம்பொருள், தான் படைத்த இலைகளை யும் பூக்களையும் ஏற்று மகிழ்கிறார். இயற்கைச் செல்வமான பொருட்களை, இயற்கைக்குப் படைத்து விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளும் அற்புதத் தருணம் விநாயக சதுர்த்தி; இந்த நாளில் பரம்பொருளை வணங்குவது விசேஷம். மிகப் பெரிய உடல் கொண்ட யானை, காட்டில் இலைகளைச் சாப்பிட்டு உயிர் வாழும். அசைவ உணவு அங்கு கிடைத்தாலும், அதைத் தொடாது. யானையின் இயல்பு நமக்கு உணர்த்தும் உன்னதப் பாடம் இது!

நீங்கள் சொல்வதுபோல், விநாயக சதுர்த்தி நாளில் மட்டுமே இந்தச் சிறப்பு வழிபாடு உண்டு. தினமும் எருக்க மாலை அல்லது இலையைப் பயன்படுத்தினால், இதன் சிறப்பு மறைந்துவிடும். காரடையான் நோன்பு - அடை, விநாயக சதுர்த்தி - கொழுக்கட்டை, வருஷப் பிறப்பு அன்று சாப்பிடும் வேப்பம்பூ பச்சடி, திருவாதிரைக் களி ஆகியவற்றைத் தினமுமா சாப்பிடுகிறோம்?! அப்படித்தான், விநாயக சதுர்த்தி அன்று மட்டும் எருக்கம்பூ மற்றும் இலையை பிள்ளையாருக்கு சார்த்தி வழிபடுவதும்! இடையூறுகள் விலகி நமது எண்ணங்கள் ஈடேற, விநாயகரை வழிபடுவதுதான் முதன்மையானது என்பது நாமறிந்ததே!

? குறிப்பிட்ட ஒரு திதியானது முதல் நாள் மதியம் துவங்கி மறுநாள் மதியம் வரை நீடிக்கும் நிலை யில்... சிராத்த திதியை எவ்வாறு கணக்கிட வேண்டும்?

- கே.பார்த்தசாரதி, திண்டிவனம்

மதியம் சிராத்தம் செய்யும் வேளை. காலையில் சிராத்தம் செய்வது சிறப்பல்ல. பகல் 18 நாழிகையைத் தாண்டிய பிறகே, சிராத்த காலம் வரும். பிற்பகல் அதன் எல்லை.

தற்காலச் சூழலில் வயிற்றுப் பிழைப்புக்காக அலுவல்களில் ஈடுபட வேண்டிய நிர்பந்தம் இருப்பதால், சிராத்தத்தை காலையில் நிகழ்த்த வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது. நம் மனமும் அலுவல்களுக்கே முன்னுரிமை அளிக்கும். குறிப்பிட்ட திதி வரும் வேளையில் சிராத்தம் துவங்க வேண்டும் என்று இல்லை. அது வருவதற்கு முன்பே துவங்கலாம்; அதன் புண்ணிய காலம் துவங்கி விடும்.

மதியம் வரை சதுர்த்தசி இருந்து பிறகு அமாவாசை வரும் நாளில், காலையிலேயே தர்ப்பணம் செய்துவிட்டு அலுவலகம் செல்வது உண்டு, அந்த நடைமுறையை இங்கும் தொடரலாம். விடுமுறை நாட்களில் சிராத்தம் வந்தால், சரியான வேளையில் அதை நடை முறைப்படுத்துங்கள். அகாலத் தில் செய்தாலும் அதன் பழக்கம் அகலாமல் இருக்க, காலையில் செய்யுங்கள்.

? வட இந்தியாவில் சந்தோஷி மாதாவை விநாயகரின் புதல்வியாக வழிபடுகின்றனர். நாம் அவரை பிரம்மசாரியாகக் கருதுகிறோம். இந்த முரண்பாடு ஏன்?

- சங்கரி ராமநாதன், தேனி

மகன், மகள் என்பதெல்லாம் நம்பிக்கையில் நாமாக உருவாக் கிக் கொண்டவை. அவை புராண வரலாறுகள் இல்லை. காலப் போக்கில் நாம் அவற்றை புராணமாக மாற்றிக்கொண்டு விட்டோம். பரமேஸ்வரனுக்கு நேரடியாகப் பிறந்த பிள்ளை அல்ல கணபதி. முருகனும் நெற்றிக்கண்ணில் இருந்து வந்த அம்சம்தான். நம்மைப் போல் கல்யாணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தி, பிள்ளை பெறுபவர் அல்ல பகவான்.

நித்திய பிரம்மசாரிதான் விநாயகர். ஆனாலும் அவருக்குப் பிறந்தவர்தான் சந்தோஷி மாதா என்று நீங்கள் நம்புவீர்களானால், அது உங்கள் இஷ்டம்.அந்தந்த ஊர்களில் ஏற்பட்ட நம்பிக்கைதான் இப்படிப்பட்ட கதைகளை உருவாக்குகிறது. நூறு வருடங்களுக்கு முன்னால் சந்தோஷி மாதாவே கிடையாது. தற்போதுதான் சந்தோஷி மாதா வழிபாடெல்லாம்.

ராமாயணம் இருக்கிறது; உலகம் பூராவும் ஒன்று. மகாபாரதம் இருக்கிறது; எல்லா இடங்களிலும் ஒன்று. நீங்கள் சொல்லும் சந்தோஷி மாதா உலகம் பூராவும் இல்லை. ஒரு சாராருக்குத்தான் சந்தோஷி. இதனால் சந்தோஷி மாதாவைக் கும்பிடக்கூடாது என்பதில்லை. ஏதோ குறிப்பிட்ட ஒரு தெய்வத்தை நம்பிக்கையோடு வழிபட வேண்டும். அது சந்தோஷி மாதாவாகவும் இருக்கலாம். பிள்ளையாரின் மகள் என்று நீங்கள் நம்புவ திலும் தப்பில்லை. ஆனால், அதுதான் சரி என்று பிடிவாதம் பிடிக்க உங்களுக்கு உரிமை இல்லை. ஒரு சாராரின் நம்பிக்கையைப் பொதுமைப்படுத்தக் கூடாது.

சூரியனின் பிள்ளை சனி என்பார்கள். சூரியனுக்கு எப்படி பிள்ளை பிறக்க முடியும்? சூரியனின் சாரம் சனி என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். இதெல்லாம் உருவகப்படுத்திய விஷயங்கள். இன்னொரு முக்கியமான விஷயம்: ‘ந புத்தி பேதாம் ஜனயேத் அஞ்ஞானாம் கர்ம சங்கினாம்’ அதாவது, ஆராயாமலே ஒன்றின் மேல் நம்பிக்கை வைப்பவனை, அவனுக்கு அதில் திருப்தியும் இருக்கும்போது, இது சாஸ்திரப்படி தவறு என்று விளக்கிச் சொல்லி அவனை திசை திருப்பாதே. அவன் நம்பிக்கையே அவனுக்கு பலன் கொடுக்கும். உங்கள் நம்பிக்கை சந்தோஷி மாதாவாக இருந்துவிட்டுப் போகட்டும்.

கேள்வி-பதில்!

விநாயகர் பிரம்மசாரி என்று நம்புபவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்களே! அவர்களிடம் போய் அவர் கல்யாணமானவர் என்று விளக்க வேண்டுமா?

ஸித்தி, புத்தி என்று இரண்டு மனைவிகள் அவருக்கு இருப்பதாகச் சொல்வார்கள். ஸித்தி என்பது வெற்றி; புத்தி என்பது ஞானம். ஒருவன் இந்த இரண்டும் எனக்கு வேண்டாம் என்று சொல்ல முடியுமா?
 
?  பெண்கள், ஆடிப்பெருக்கு தினத்தில் திருமாங்கல்ய சரடை மாற்றிக் கொள்வது உண்டு. வேறு எந்தெந்த தினங்களில் மாங்கல்ய சரடு மாற்றலாம். இடையில், திருமாங்கல்ய சரடு பழுதுபட்டால் உடனடியாக மாற்றிக் கொள்ளலாமா?

- சுமதி சுந்தரம், சென்னை-44

செவ்வாய் மற்றும் சனிக்கிழமை தவிர மற்ற நாட்களில், பகல் வேளையில் தாராளமாக மாற்றிக்கொள்ளலாம். எதிர்பாராமல் நூல் அறுந்துவிட்டதெனில், அப்போது நேரங்காலம் பார்க்காமல், உடனே மாற்றிக்கொள்வதே உத்தமம்!

தங்கத்தில் தாலி கட்டிக்கொள்ளத் தகுதி இருப்பினும், நூலில் (சரடு) திருமாங்கல்யம் கோத்து

கேள்வி-பதில்!

அணிவதே சிறப்பு. அம்பாளைவிட செல்வத்தில் பெரிதானவர் எவருமில்லை. அவள், நூலில் திருமாங்கல்யம் தரித்திருக்கிறாள் என்கிறது சௌந்தர்ய லஹரி. லலிதா சஹஸ்ர நாமமும் அதை ஆமோதிக்கிறது (காமேச பந்த மாங்கல்ய சூத்திர சோபித கந்தரா). பூணூலை நூலில் அணிவது வழக்கம். அதனையும் தங்கப் பூணூல், வெள்ளிப் பூணூல் என அதிகமாக அணிவர். பிறகு, தங்கம் மற்றும் வெள்ளியை அகற்றிவிடுவர்; நூல் பூணூலே தோளில் தொங்கிக்கொண்டிருக்கும். அதேபோல், நூலில் கோக்கப்பட்ட திருமாங்கல்யம் கழுத்தில் இருப்பதே சிறப்பு!

? பூஜைக்கான மலர்களை முதல் நாளே வாங்கி வைத்திருந்து, மறுநாள் பயன்படுத்தலாமா?

- கே.சிவராமச்சந்திரன், காரைக்கால்

சாஸ்திரக் கண்ணோட்டத்தில் பார்த் தால், புஷ்பங்களில் ஆராதனைக்கு உரியது, அல்லாதது என்று வித்தியாசம் சொல்லப்பட்டிருக்கிறது. சில புஷ்பங்கள் கீழே விழுந் தாலும் எடுத்துக் கொள்ளலாம்.

சிலவற்றை மரத்திலிருந்து பறிக்கவேண்டும். பாரிஜாத புஷ்பத்தை உலுக்கி எடுக்க வேண்டும். செம்பருத்தி, தாமரை ஆகியவற்றைப் பறிக்க வேண்டும். கீழே விழுந்தால் எடுக்கக் கூடாது.
 
‘அன்று பூத்த புஷ்பங்களை அன்றே சார்த்த வேண்டும்; அடுத்த நாள் சார்த்தக் கூடாது!’ என்று சட்டமே உண்டு. இந்தச் சட்டதிட்டங்களைப் பார்க்கும்போது, அந்தக் காலத்தில் விஸ்தாரமான இடங்களில் வசித்து, நிறைய பூச்செடிகளை வளர்த்துக் கொண்டு தினப்படி பூஜை செய்திருக்கிறார்கள் என்று புரிகிறது.

இப்போது நாம் புஷ்பத்தைப் பார்க்கும் நிலையில் இல்லை. தரையையே பார்க்க முடியாத இடத்துக்கு நமது வீட்டைப் பெயர்த்துக் கொண்டு வந்திருக்கிறோம். ஆகாயத்தில் வீடு கட்டிக் கொண்டால், செடி வளர்க்க முடியாது.

உண்மைதான்!

இந்த இடத்துக்கு வந்தது உங்கள் விருப்பம். புஷ்பம் இல்லாத இடத் துக்கு வந்து... புஷ்பம் கிடைக்காத சூழலை உருவாக்கி... எங்கிருந்தோ அதைக் கொண்டு வரச் சொல்லி... நான்கு நாட்களுக்கு வைத் திருந்து... இவை எல்லாமே நாமாகச் செய்து கொண்டவை.

இப்படி வரும் என்பதை முன்கூட்டியே உணர்ந்த தர்மசாஸ்திரம் சில விஷயங்களைச் சொல்கிறது. துளசியையும் வில்வத்தையும் 4 நாட்கள் வைக்கலாம். ஃப்ரிஜ் இல்லாமல் காய்ந்து பொடிப்பொடி ஆனாலும் அவற்றைப் போடலாம் என்கிறது. தாமரைப் பூவை 2 நாள் வைத்திருக்கலாம். நவீன காரணங்களைச் சொல்லி சாஸ்திரத்துக்குப் புறம்பாகப் போகாமல், அது சொல்லியிருக்கும் மாற்று ஏற்பாடுகளைப் பின்பற்றலாமே!

- பதில்கள் தொடரும்...

ஸ்ரீகருத்து விநாயகர்!

நாகர்கோவிலின் ஒரு பகுதியான வடசேரியில், வரலாற்று சிறப்பு மிக்க விநாயகர் திருக்கோயில் ஒன்று உள்ளது. இங்கு அருள்பாலிக்கும் விநாயகருக்கு ஸ்ரீகருத்து விநாயகர் என்று திருப்பெயர்!

இந்தப் பகுதியில் உள்ள பக்தர்கள் வீடு கட்டுதல், திருமணம் போன்று எந்த சுப காரியங்களைச் செய்வதாக இருந்தாலும், முன்னதாக இந்த பிள்ளையாரின் சந்நிதிக்கு வந்து பூ, பழம், தேங்காய், வெற்றிலை பாக்கு வைத்து, விநாயகரின் திருவுள்ளக் கருத்தைக் கேட்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதனால் இந்த விநாயகருக்கு ஸ்ரீகருத்து விநாயகர் என்ற திருப்பெயர் ஏற்பட்டது.

சூடிக்கொடுத்த விநாயகர்!

ஸ்ரீவில்லிபுத்தூரில் வடக்கு ரத வீதியில் `சூடிக்கொடுத்த விநாயகர்' கோயில் கொண்டுள்ளார். ஆண்டாளுக்குச் `சூடிக்கொடுத்த சுடர்க்கொடி' என்ற திருப்பெயர் இருப்பதுபோல், இந்த விநாயகருக்கு `சூடிக்கொடுத்த விநாயகர்' என்ற பெயர் ஏற்பட்டதன் பின்னணியில் ஒரு நிகழ்ச்சி சொல்லப்படுகிறது.

திருப்பதி பிரம்மோற்ஸவத்தின்போது, ஏழுமலையானுக்கு ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலையை சூட்டுவது வழக்கம். அதற்காக, ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மாலையை எடுத்துச் செல்லும்போது, இந்த விநாயகர் கோயிலில் வைத்து வழிபட்ட பிறகே திருப்பதிக்கு எடுத்துச் செல்வார்களாம். அதனால்தான் இவருக்கு `சூடிக் கொடுத்த விநாயகர்' என்ற திருப்பெயர் ஏற்பட்டதாம்.

-இரா.பாலகிருஷ்ணன், வரக்கால்பட்டு

கேள்விகளை அனுப்பவேண்டிய முகவரி: சக்தி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை -  600 002
svdesk@vikatan.com என்ற மெயிலுக்கும் அனுப்பலாம்.