Published:Updated:

ஊர்வலம்! - திருச்சி

ஊர்வலம்! - திருச்சி
பிரீமியம் ஸ்டோரி
ஊர்வலம்! - திருச்சி

ஊர்வலம்! - திருச்சி

ஊர்வலம்! - திருச்சி

ஊர்வலம்! - திருச்சி

Published:Updated:
ஊர்வலம்! - திருச்சி
பிரீமியம் ஸ்டோரி
ஊர்வலம்! - திருச்சி
ஊர்வலம்! - திருச்சி

சென்னை- கன்யாகுமரி தேசிய நெடுஞ்சாலை யில் சென்னையிலிருந்து சுமார் 320 கி.மீ. தொலைவில், கடல் மட்டத்திலிருந்து சுமார் 78 மீட்டர் உயரத்தில் உள்ளது திருச்சி மாநகரம். இது தமிழகத்தின் மூன்றாவது பெரிய மாநகராட்சி. புராணங்களும் சரித்திரக் குறிப்புகளும் பெரிதும் போற்றும் ஊர் திருச்சி.

* ராவணனின் சகோதரனான மூன்று தலைகளை உடைய திரிசிரன், இங்குள்ள இறைவனை பூஜித்து பேறு பெற்றதால், ‘சிராப்பள்ளி’ என்று பெயர்.

* மலை மீது உச்சிப் பிள்ளையார் கோயிலின் பின்புறம் உள்ள கல் படுக்கைகள், சுமார் 5-ஆம் நூற்றாண்டில் சமண முனிவர்களது வசிப்பிடமாக விளங்கினவாம். சமண முனிவர்களில் ஒருவரது பெயர் சிரா. அவரது பெயருடன் சமணப் பள்ளியை இணைத்து, ‘சிராப்பள்ளி’ என்று பெயர் ஏற்பட்டதாகவும் காலப்போக்கில் ‘திரு’ என்ற அடைமொழியுடன் திருச்சிராப்பள்ளி என மாறியதாகவும் கூறுவர்.

* சமண மதத்தில் இருந்து அப்பர் பெருமானால் சைவத்துக்கு மாறிய முதலாம் மகேந்திரவர்மனின் பட்டப் பெயர்களுள் ஒன்றான லலிதாங்குரன் நினைவாக ஒரு காலத்தில் திருச்சி ‘லலிதாங்குர பல்லவேச்சர கிருகம்’ எனப்பட்டது. 10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நாராயண வேம்பையர் கோன் ‘சிராமலை’ என்றும், ராஜராஜனின் கல்வெட்டு ‘சிற்றம்பர்’ என்றும், அருணகிரிநாதரும் தாயுமானவரும் (ஸ்ரீதாயுமானவர் அருளால் பிறந்ததால் இவருக்கு இந்தப் பெயர்) ‘சிரகிரி’ என்றும் திருச்சியைக் குறிப்பிட்டுள்ளனர்.

* அருள்திரு சைவ எல்லப்ப நாவலர் (செவ்வந்திப் புராணம்), வேம்பையர்கோன் நாராயணன் (சிராமலை அந்தாதி), மகா வித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை (யமக அந்தாதி) ஆகியோர் திருச்சியின் தொன்மை மற்றும் தலப் பெருமை குறித்து நூல்களை இயற்றியுள்ளனர். மேலும் தாயுமான அடிகள், அருணகிரிநாதர், ஐயடிகள் காடவர்கோன் நாயனார் ஆகியோரும் இந்தத் தலத்தை போற்றிப் பாடியுள்ளனர்.

* சோழப் பேரரசர்களின் தலைநகராகத் திகழ்ந்த உறையூர், தற்போது திருச்சி மாநகரின் ஒரு பகுதியாக திகழ்கிறது. உறையூருக்கு ‘கோழியூர்’ என்றும் ஒரு பெயர் உண்டு. ஒரு காலத்தில் பகைவர்களின் படையைச் சேர்ந்த யானை போரில் ஈடுபட்டபோது, உறையூர்க் கோழி ஒன்று அந்த யானையைத் தன் அலகினாலும் கால் நகங்களினாலும் கீறி, யானையின் கண்களைக் குருடாக்கி ஓடச் செய்தது. அன்று முதல் உறையூருக்கு கோழியூர் என்ற பெயர்  ஏற்பட்டது.

* திருச்சி உறையூரில்தான் பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒருவரான திருப்பாணாழ்வார் அவதரித்தார்.

* திருச்சியின் புகழுக்கு மணிமகுடமாகத் திகழ்கிறது மலைக்கோயில். இதை ‘தட்சிண கயிலாயம்’ என்பர்.

* பூமியின் வயது சுமார் 460 கோடி ஆண்டு. சிரா மலையின் வயது சுமார் 230 கோடி ஆண்டு. இமயத்தின் வயது சுமார் 4 கோடி ஆண்டுகளே என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

* ஒரு முறை ஆதிசேஷனுக்கும், வாயு பகவானுக்கும் தங்களில் பலசாலி யார் என்று அறியும் ஆவல் ஏற்பட்டது. ‘‘மேரு பர்வதத்தை இறுகப் பற்றிக் கொண்டு உன் பலத்தால் முடிந்தால் அகற்றிப் பார்!’’ என்றார் ஆதிசேஷன். வாயுவால் அந்த நிலையில் மேருவை அசைக்கக் கூட முடியவில்லை. அதனால் வாயுவுக்கு உதவ தேவர்கள் முன்வந்தனர். அவர்கள் ஆதிசேஷனிடம் வஞ்சகமாக பேச்சுக் கொடுத்து, ஆதிசேஷனது கவனத்தைச் சிதறடித்தனர். அதன் மூலம் வாயுவின் வீரியம் மலையைப் பெயர்த்து வீசியது. அதனால் மேரு பர்வதத்தின் பகுதிகள் ஆங்காங்கே சிதறி விழுந்தன! அப்படி சிதறி விழுந்த பகுதிகளில் ஒன்றுதான் சிரா மலை. மற்றவை திருக்காளத்தியும், திரிகோண மலையும் (இலங்கை) என்று கூறுவர்.

* மலைக்கோயில் மூன்று நிலையாக அமைந்துள்ளது. அடிவாரத்திலிருக்கும் மாணிக்க விநாயகர் சந்நிதி உள்ளிட்ட பகுதி முதல் நிலை. மட்டுவார்குழலம்மை உடனாய ஸ்ரீதாயுமானவர் திருக்கோயில்கள் இரண்டாம் நிலை. குடைவரைக் கோயிலான உச்சி விநாயகர் கோயில் மற்றும் மணி மண்டபம் உள்ளிட்ட பகுதிகள் மூன்றாம் நிலை. இப்படி மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளதால், இதற்கு முத்தலை மலை என்றும் பெயருண்டு.

* மலைக் கோயிலை கிழக்கிலிருந்து பார்த்தால், விநாயகர் போன்றும், வடக்கிலிருந்து பார்த்தால் தோகை விரித்தாடும் மயில் போன்றும், மேற்கிலிருந்து பார்த்தால் நங்கூரம் பாய்ச்சிய கப்பல் மற்றும் சிவலிங்கம் போலவும் தெற்கிலிருந்து பார்த்தால் தலை உயர்த்தி அமர்ந்திருக்கும் ரிஷபம் அல்லது யானை மேல் அம்பாரி இருப்பது போலவும் தோற்றம் அளிக்கும். உச்சிப் பிள்ளையார் கோயிலிலிருந்து கீழே நோக்கினால், படிக்கட்டுகளும், மலையின் தோற்றமும், விநாயகரின் தும்பிக்கை போல் தோற்றமளிக்கும்.

* மலையின் உயரம் நில மட்டத்திலிருந்து உச்சிப் பிள்ளையார் சிகரம் வரை 273 அடி. 178 படிகள் ஏறி முடித்தால் ஸ்ரீதாயுமானவர் திருக்கோயிலை அடையலாம். அடிவாரத்தில் இருந்து 417 படிகள் ஏறினால் உச்சிப்பிள்ளையார் கோயிலை அடையலாம். அடிவாரத்தில் மாணிக்க விநாயகர் சந்நிதியில் இருந்து படி ஏறினால், மௌன சுவாமிகள் மடம், முருகன் சந்நிதி, நூற்றுக் கால் மண்டபம், இன்னும் பல மண்டபங்கள், தாயுமானவரின் கோயில் மண்டபம், கம்பத்தடி விநாயகர், ஆறுமுகன், அறுபத்துமூவர், செவ்வந்தி விநாயகர், மட்டுவார்குழலி, சுகந்த குந்தளாம்பிகை ஆகியோரை தரிசித்த பிறகு மூலவர் ஸ்ரீதாயுமானவரை தரிசிக்கலாம்.

* சிவபெருமானை மணம் செய்ய விரும்பிய உமாதேவியார், தாமரை மலரில் சிறிய பெண் குழந்தையாக வடிவெடுத்தாள். காத்தியாயன முனிவர் அவளை வளர்த்து வந்தார். அவளின் கூந்தலில் நல்மணம் வீசியதால் அவள் மட்டுவார்குழலி என அழைக்கப்பட்டாள். பருவமெய்திய மட்டுவார்குழலி சிவகங்கை தீர்த்தத்தில் மூழ்கி, அருகில் உள்ள சுயம்பு லிங்கத்தை வழிபட்டு தவம் செய்தாள். இந்த இடம் நாகநாத சுவாமி கோயில். பெருமான் அவளுக்குக் காட்சி கொடுத்து மணம் புரிந்தார். சித்திரைத் திருவிழாவின் 6-வது நாளில் இந்தத் திருமண விழா இங்கு நடைபெறும்.

ஊர்வலம்! - திருச்சி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

* ராம பட்டாபிஷேகத்துக்குப் பிறகு இலங்கைக்குப் புறப்பட்ட விபீஷணன், திருமாலின் சயனக்கோல விக்கிரகத்தை ராமனிடம் இருந்து பரிசாகப் பெற்று இலங்கையில் பிரதிஷ்டை செய்ய விரும்பினான். அப்போது ராமன், ‘இலங்கையை அடையும் வரை விக்கிரகத்தை எங்கும் கீழே வைக்கக் கூடாது’ என்று நிபந்தனை விதித்தார். ஒப்புக் கொண்டு நடந்தான் விபீஷணன். காவிரிக் கரையை அடைந்ததும் நீராட விரும்பிய விபீஷணன், அப்போது அங்கு அந்தணச் சிறுவன் ஒருவனிடம் கொடுத்து, ‘நான் குளித்து வரும் வரை இதை கீழே வைக்காதே!’ என்றான். அந்தச் சிறுவன் விநாயகர். அவன் விக்கிரகத்தைக் கீழே வைத்து விட்டு மலைக்கோட்டை உச்சியில் போய் உட்கார்ந்து விட்டான். கரையேறிய விபீஷணன் அதிர்ந்தான். விக்கிரகத்தை அங்கிருந்து எடுக்க முயன்று, முடியாமல் தோல்வியடைந்தான். இந்தக் கோபம் தாங்காமல் துரத்திக் கொண்டு வந்து அந்தணச் சிறுவனின் தலையில் ஓங்கிக் குட்டினான் விபீஷணன். அந்த வடுவை உச்சிப் பிள்ளையாரின் தலையில் இன்றும் காணலாம்!

* 16-ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் விசுவநாத நாயக்கர் என்பவரால் கொத்தளங்கள் அமைக்கப்பட்டு வலுப்படுத்தப்பட்ட மலைக்கோட்டை, சுமார் 200 ஆண்டு காலம் பல போர்கள் ஏற்பட காரணமாக இருந்திருக்கிறது. 18-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயருக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையே நடைபெற்ற போர்களின்போது மலைக்கோட்டை வெடிமருந்துக் கூடமாக விளங்கியது. இதற்கு அடையாளமாக மலை மீது உள்ள குகைக் கோயிலின் தரைப் பகுதியில் குழிகள் சில உள்ளன.

* இந்தத் தலத்தில் தீர்த்தங்கள்: ஊருக்கு வடக்கே சுமார் அரை கி.மீ. தூரத்தில் ஓடுகிறது காவிரி. ‘குடக காவிரி நீளலை, சூடிய திரி சிரா மலை மேலுரை வீர’ எனும் திருப்புகழ் வரியின்படி, காவிரி முற்காலத்தில் மலையை ஒட்டி ஓடியதாகத் தெரிகிறது.  அடுத்தது சிவகங்கை தீர்த்தம். இது, மலைக்கு வடமேற்கில் நாகநாத சுவாமி கோயிலுக்குப் பக்கத்தில் உள்ளது.

* சோம ரோகணி: கோயிலுக்கு மேற்புறம் அமைந்த இந்த தெப்பக்குளம் பிரம தீர்த்தம் என்றும் சொல்லப்படும். இது 16-ம் நூற்றாண்டில் திருச்சியை ஆண்ட விசுவநாத நாயக்கரால் கட்டப்பட்டது. இங்கு பங்குனியில் தெப்போற்சவம் நடைபெறும்.

* நன்றுடையான்: திருச்சி டவுன் ரயில் நிலையத்தில் இருந்து மலைக்குக் கிழக்கே சுமார் கால் மைல் தூரத்தில் உள்ளது.

* தீயதில்லான்: மலைக்குத் தெற்கில் அமைந்திருக்கும் இதை உட்குளம் என்றும் சொல்வார்கள். தற்போது இங்கு வைத்தே சித்திரை மாதம் பிரம்மோற்வஸத்தின் 6-ம் நாளன்று அம்மனின் தபசு விழா நடைபெறுகிறது.

* திருச்சிக்கு அருகிலுள்ள தலம் திருவானைக்கா. திருச்சிராப்பள்ளி மாவட்டம், திருவரங்கம் வட்டத்தில் உள்ள இந்தத் தலம், திருச்சியில் இருந்து வடக்கே சுமார் 5 கி.மீ. தொலைவிலும் ஸ்ரீரங்கம் ரயில் நிலையத்தில் இருந்து கிழக்கே சுமார் 1 கி.மீ. தூரத்திலும் உள்ளது.

* 18-ம் நூற்றாண்டில் இங்குள்ள ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில்தான் பிரெஞ்சுப் படைகள், பிரிட்டிஷ் படைகளிடம் சரண் அடைந்தன. இங்கே பிரிட்டிஷ் படைகளுக்கு வெற்றி தேடிக் கொடுத்த மேஜர் லாரன்ஸின் நினைவாக, லண்டனிலுள்ள வெஸ்ட் மினிஸ்டர் ஆலயத்தில் பொறிக்கப்பட்டுள்ள சின்னத்தில், திருச்சி மலைக்கோட்டையின் படம் இடம்பெற்றுள்ளது.

ஊர்வலம்! - திருச்சி

* பஞ்ச பூத சிவத்தலங்களில் அப்பு (நீர்) தலமாகவும், சக்தி பீடங்களில்- வராகி பீட தலமாகவும் திகழ்வது திருவானைக்கா. யானை பூஜித்ததால், ஆனைக்காவல், கஜாரண்யம், கரிவனம் ஆகிய பெயர்களாலும் அம்பாள், ஈசனிடம் உபதேசம் பெற்ற தலமாதலால், உபதேச ஸ்தலம் என்றும் இந்தத் தலம் அழைக்கப்படுகிறது.

* காவேரி- கொள்ளிடம் நதிகளுக்கு இடையே, நாவல் மரங்கள் நிறைந்த- திருவானைக்காவல் அமைந்திருக்கும் தீவுக்கு ‘ஜம்பு தீவு’ (ஜம்பு மரம்- நாவல் மரம்) என்று பெயர். புராணங்கள் போற்றும் நான்கு மகா தீவுகளில் ஒன்றான நாவலந்தீவு என்பதும் இதுவே என்கிறார்கள். வேதங்களின் நான்கு தூண்களாக போற்றப் பெறும் தலங்களில் முதலிடம் பெறுவது திருவானைக்காவல். மற்றவை திருவாரூர், மகேந்திரப்பள்ளி, திருவண்ணாமலை.

* உலகம், விராட புருஷன் என்றால்... திருவாரூர்- அதன் மூலாதாரம். திருவானைக்கா- தொப்புள், திருவண்ணாமலை- மணிபூரகம், திருக்காளத்தி- கண்டம், காசி- புருவ மத்தி, சிதம்பரம்- இருதயம் என்பர்.

* அன்னை அகிலாண்டேஸ்வரியுடன் ஜம்புகேஸ்வரர் அருளோச்சும் இங்குள்ள ஆலயத்தில், உச்சிகால பூஜையை அம்பிகையே செய்வதாக ஐதீகம். இதையொட்டி அம்பாள் சந்நிதி அர்ச்சகர் அம்பாள் போன்றே புடைவை உடுத்திக்கொண்டு ஸ்வாமி சந்நிதியில் பூஜைகள் நிகழ்த்துவார்.

* ஆதிசங்கரர் இந்தக் கோயிலுக்கு விஜயம் செய்தபோது, அம்பிகை அகிலாண்டேஸ்வரியின் சந்நிதிக்கு முன்பாக விநாயகரை பிரதிஷ்டை செய்ததுடன், அம்பிகைக்கு ஸ்ரீசக்ர அமைப்பில் தாடங்கங்கள் செய்து அணிவித்தார்.

* திருச்சி என்றதும் திருவானைக்கா போன்று சட்டென்று நம் நினைவுக்கு வரும் மற்றொரு புண்ணிய க்ஷேத்திரம் திருவரங்கம். பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படும் ஸ்ரீரங்கம் (திருவரங்கம்), 108 வைணவத் தலங்களுள் முதன்மையானது. வைணவர்கள், ‘கோயில்’ அல்லது ‘பெரிய கோயில்’ என்று குறிப்பிட்டால் அது ஸ்ரீரங்கம் ஆலயத்தையே குறிக்கும். ஆழ்வார்கள் அனைவராலும் பாடப் பெற்ற வைணவத் தலம் இது மட்டுமே. ஸ்ரீரங்கம் ஆலயம் அமைந்துள்ள இடத்தின் பரப்பளவு சுமார் 156 ஏக்கர்.

* உலகத்தின் எந்த மூலையில் இருந்தும் திருவரங்கம் இருக்கும் திசையை நோக்கி வணங்கினாலே போதும்; இந்தத் தலத்துக்கு நேரில் வந்து, இங்குள்ள சந்திர புஷ்கரணியில் நீராடி திருவரங்கனை தரிசித்த பலன் கிடைக்கும். பெயர், கோயில், பெருமாள், தாயார், ஊர், தளிகை, வாத்யம், மற்றும் பலகாரங்கள் அனைத்தும் ‘பெரியது’ என்று ஏற்றிச் சொல்லப்படும் பெருமை இந்தத் தலத்துக்கு மட்டுமே உண்டு.

* இங்குள்ள மூலவர் ரங்கநாதர் என்றும் பெரிய பெருமாள் என்றும் திருநாமங்கள் உடையவர். உற்ஸவ மூர்த்தியான ரங்கராஜர், நம்பெருமாள் என்றும் அழகிய மணவாளன் என்றும் போற்றப்படுகிறார். 

* ஸ்ரீரங்கம் கோயிலில் கம்பராமாயணம் அரங்கேற்றம் நடைபெற்றபோது, நரசிம்ம மூர்த்தியே நேரில் பிரசன்னமாகி அங்கீகரித்ததாக தலவரலாறு. இங்கு நரசிம்ம மூர்த்தி மேட்டழகிய சிங்கர் என்னும் திருப் பெயருடன் சந்நிதி கொண்டிருக்கிறார்.

ஊர்வலம்! - திருச்சி

* திருவரங்கத்தில் நடைபெறும் பூச்சாற்று உற்ஸவ நாளில் மட்டுமே பக்தர்கள் கொண்டு வரும் மலர்கள் எம்பெருமானுக்கும், சக்கரத்தாழ்வார் மற்றுமுள்ள பரிவார இறைத் திருமேனிகளுக்கும் சாற்றப்படுகின்றது. அந்த ஒருநாளைத் தவிர மற்ற 364 நாட்களும் மதுரகவிப் பிள்ளை என்பவர் ஏற்படுத்திய நந்தவனத்தில் பூக்கும் மலர்களே மாலையாகக் கட்டி எம்பெருமானுக்கும் மற்ற பரிவார தெய்வங்களுக்கும் சாற்றப்படுகின்றன. இந்த நந்தவனத்தைப் பராமரிக்கும் பணியில் ஈடுபடுவோர் திருமணம் செய்துகொள்வதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

* தைப் பூசத்தின்போது திருவரங்கம் ரங்கநாதர், தன் தங்கையான மாரியம்மனுக்கு பட்டுப் புடைவைகள், மாலைகள் முதலியவற்றை சீராக அனுப்பி வைக்கிறார். அன்று அம்மன் கொள்ளிடத்தின் தென் பகுதிக்கு வருவது வழக்கம்.

* திருச்சி - துறையூர் சாலையில் அமைந்துள்ளது உத்தமர் கோயில். 108 திவ்விய தேசங்களில் ஒன்றான இந்தக் கோயிலில் விஷ்ணு, பிரம்மா, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும் அருள்பாலிக்கின்றனர். பிரம்மா மற்றும் சரஸ்வதிக்கு தனி விமானத்துடன் கூடிய சந்நிதி அமைந்துள்ளது.

* திருச்சிக்கு அருகில் உள்ள பழுவூர் என்ற ஊரில் அமைந்திருக்கும் அருள்மிகு விசாலாட்சி சமேத விஸ்வநாதர் ஆலயத்தில் நவகிரகங்கள் தேவியருடன் காட்சி தருகின்றனர்.

 *மலைக்கோட்டை உள் வீதியில் உள்ள ஒரு வீட்டில்தான் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை வசித்து வந்தார். அவருடைய மாணவர் தான் தமிழ்த் தாத்தா உ.வே.சாமிநாதய்யர். ஸ்ரீகோபாலகிருஷ்ண பாரதியார் தான் இயற்றிய கீர்த்தனைகளுக்கு அங்கீகாரம் பெறுவதற்காக மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களைச் சந்தித்ததாக வரலாறு.

* திருச்சிக்கு அருகில் உள்ள ஆதிவயலூர் தற்போது வயலூர் என்று அழைக்கப்படுகிறது. அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல் பெற்ற தலம். அருணகிரிநாதரை திருவண்ணாமலையில் தடுத்தாட்கொண்ட முருகப் பெருமான், ‘வயலூ ருக்கு வா’ என்று உத்தரவிட்டார். அதற்கேற்ப அருணகிரியார் வந்து வழிபட்ட தலம் வயலூர் ஆகும். இன்னும் பல தலங்களும் சுற்றுலா ஸ்தலங்களும் திருச்சியைச் சுற்றிலும் உண்டு.

* காவிரி ஆற்றின் குறுக்கே, கம்பீரமாக நிற்கும் கல்லணை, திருச்சியிலிருந்து அரை மணி நேரப் பயண தூரத்தில் உள்ள சுற்றுலா ஸ்தலம் முக்கொம்பு ஆகிய இடங்கள் அனைவரும் வாழ்வில் ஒருமுறையேனும் சென்று வரவேண்டிய இடங்களாகும்.

* ஆடி மாதத்தில் காவிரி ஆற்றில் குளித்து புனிதநீராடும் ஆடிப்பெருக்கு, திருச்சி மற்றும் பக்கத்து மாவட்டமான தஞ்சாவூரில் பிரபலமானது. திருமணமான புதுமணத் தம்பதிகள், திருமணம் விரைவில் நடக்க வேண்டி வரும் இளம் பெண்கள் ஆகியோர் இங்கு ஆடி மாதத்தில் வரும் ஆடிப் பெருக்கின்போது நீராடினால் வேண்டியது நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

தொகுப்பு: எஸ்.ராஜம், சேலம்-2 -தேனி. பொன் கணேஷ், என்.காளிதாஸ், சிதம்பரம்-2,  இரா.கணேசன், சேலம்-1,  ரேவதி வாசுதேவன், கும்பகோணம், எஸ்.வேணுகோபாலன், பெங்களூரு, யு.சரவணன், ஸ்ரீரங்கம், லக்ஷ்மி சந்தானம், ஸ்ரீரங்கம் முத்தூஸ், தொண்டி, மு. சுகாரா, திருவாடானை

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism