
ஒரு சைக்கிள் இரண்டு மாங்காய்!யுவா, ஓவியம்: மகேஸ்

“இன்னிக்கு இவன் பண்ணின கலாட்டாவில் எனக்கு ஆபீஸுக்கு லேட்டாயிடுச்சு. இதை என்னனு கேளுங்க’’ அறைக்குள் நுழைந்தவாறு சொன்னார் அபிஷேக்கின் அம்மா.
அப்பாவோடு கட்டிலில் அமர்ந்து, தலையணையால் சண்டைப் போட்டுக்கொண்டிருந்த அபிஷேக், சட்டென அமைதியாகிவிட்டான்.
“என்னடா பண்ணினே?’’ எனக் கேட்டார் அப்பா.
“நான் பெரிய பாய் ஆயிட்டேன். ஃபிப்த் ஸ்டாண்டர்டு போய்ட்டேன். இந்த அம்மா என்னை இன்னமும் லேடீஸ் ஸ்பெஷல் பஸ்ல, அவங்களோடு ஏறச் சொல்றாங்க. எல்லோரும் ஷேம் ஷேம்னு சொல்வாங்க’’ என்று இடுப்பில் கைகளை வைத்துக்கொண்டு சொன்னான் அபிஷேக்.
“ஆமாம் மீசை முளைச்ச பெரிய மனிஷன் ஆகிட்டான்’’ என்ற அம்மா, அவன் காதைப் பிடித்து திருக முயற்சிக்க, வில்லாக விலகினான்.
அபிஷேக்கின் அப்பா, மாதத்தின் பாதி நாட்கள் ஆபீஸ் டூரில் இருப்பார். அப்போதெல்லாம் அம்மாதான் அவனைப் பள்ளிக்கு அழைத்துச் செல்ல வேண்டும். சற்றுத் தொலைவில் இருக்கும் பள்ளிக்கு ஒரு பஸ் பிடித்துச் சென்று அவனை இறக்கிவிட்டு, அதே பேருந்தில் இன்னும் சில நிறுத்தங்கள் பயணித்து தனது அலுவலகத்துக்குச் செல்ல வேண்டும். பரபரப்பான காலை நேரத்தில் லேடீஸ் ஸ்பெஷல் பஸ்ஸில் அதிகக் கூட்டம் இருக்காது. ஆனால், கொஞ்ச நாட்களாக லேடீஸ் ஸ்பெஷலில் ஏற மாட்டேன் என அடம்பிடிக்க ஆரம்பித்தான் அபிஷேக். இன்று முடியவே முடியாது என தர்ணா செய்து சாதித்துவிட்டான்.
“இவனை காலையில சீக்கிரம் எழுந்துக்க சொல்லுங்க. கொஞ்சம் முன்னாடி கிளம்பினாலே, பஸ்ல கூட்டம் இல்லாமல் போயிடலாம்’’ என்றார் அம்மா.
“அந்த நேரத்துலதான் தூக்கம் சொக்குது. ‘எழுந்துருடா எழுந் துருடா’னு அம்மா சொல்றது தாலாட்டு மாதிரி இருக்கு’’ என்று கண்களை மூடி, தலையைச் சாய்த்து ரசித்துச் சொன்னான் அபிஷேக்.
“இருக்கும்டா. நாளைக்கு நான் லேடீஸ் ஸ்பெஷல்லதான் ஏறுவேன். நீ வரலைன்னா விட்டுட்டுப் போய்டுவேன்’’ என்றார் அம்மா.
“இதுக்கு நான் ஒரு தீர்வு சொல்றேன். நீ சைக்கிள் ஓட்ட கத்துக்க. ஸ்கூலுக்கு சைக்கிளிலேயே போய்டலாம்’’ என்றார் அப்பா.
“ஐய்... சூப்பர்! எப்போ வாங்கித் தர்றீங்க?’’ என குஷியோடு குதித்தான் அபிஷேக்.
“ஆனா ஒரு கண்டிஷன். காலையில சீக்கிரம் எழுந்துக்கணும். தினமும் ஒரு மணி நேரம் இங்கேயே சைக்கிளை ஓட்டிப் பழகணும். ஏன்னா, மெயின் ரோடெல்லாம் கடந்து ஸ்கூலுக்குப் போகணும். நீ நல்லா ஓட்டறேன்னு எனக்கு நம்பிக்கை வந்த பிறகுதான் ஸ்கூலுக்கு எடுத்துட்டுப்போக பெர்மிஷன் கொடுப்பேன்’’ என்றார் அப்பா. அபிஷேக் உற்சாகமாக தலையசைக்க, அந்த ஞாயிற்றுக்கிழமையே புத்தம் புது சைக்கிளோடு வந்துவிட்டார் அப்பா. அபிஷேக் தினமும் ஆறு மணிக்கே எழுந்து சைக்கிள் ஓட்டப் பழகினான். சில நாட்களில் அருகில் இருக்கும் கடைகளுக்குச் சென்று கறிவேப்பிலை முதல் காய்கறி வரை வாங்கி வந்து அம்மாவுக்கு உதவியும் செய்தான்.
மூன்று மாதங்கள் கழித்து, “அபிஷேக் நாளையில இருந்து நீ ஸ்கூலுக்கு சைக்கிளிலேயே போகலாம்’’ என்றார் அப்பா.
“ஐய்... எனக்கு லைசன்ஸ் கிடைச்சுடுச்சா? நன்றி ஆர்டிஓ ஆபிஸர்’’ என்று அப்பாவை குறும்புடன் வணங்கினான் அபிஷேக்.
“அப்போ, நாளையில இருந்து நல்லாத் தூங்க ஆரம்பிச்சுடுவே’’ என்றார் அம்மா.
“இல்லேம்மா... அதிகாலையில் எழுந்திருக்கிறதில் கிடைக்கிற சுறுசுறுப்பையும் பயனையும் தெரிஞ்சுகிட்டேன். எப்பவும் போல சீக்கிரம் எழுந்துப்பேன். உங்களுக்கும் உதவுவேன்’’ எனச் சொல்லி, அம்மாவை அணைத்துக்கொண்டான்.
ஒரு சைக்கிளில் இரண்டு மாங்காய் அடித்த மகிழ்ச்சி, அப்பாவின் முகத்தில்.