மற்ற எபிசோடுகள்
Published:Updated:

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 33

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 33
News
திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 33

சத்தியப்பிரியன் , ஒவியம்:ஸ்யாம்

திருக்கோளூர் பெண்பிள்ளாய் ரகசியம் - 33

55 - இரு கையும் விட்டேனோ த்ரௌபதியைப் போலே ?

சூதின் கொடுமையை உரைக்க வந்த காவியமோ என்னும் அளவுக்கு தன்நிலை இழந்து தருமர் சூதாடுகிறான் மகாபாரதத்தில். மகாபாரதத்துக்கு யுகம்தோறும் தன்னைத் தானே வளர்த்துக் கொள்ளும் தன்மை உண்டு என்கிறார் வியாசர். அதனால்தானோ என்னவோ வெகுண்டெழும் பாரதியார் அர்ச்சுனன் வாயிலாக,

‘சூதர் மனைகளிலே – அண்ணே தொண்டு மகளிருண்டு
சூதிர்ப் பணயமென்றே அங்கோர் தொண்டச்சி செல்வதில்லை'

 என்று ஆவேசமாகக் கூறுகிறார்.

என்ன சொல்லி என்ன பயன்? சூதின் போதையில் மதிமயங்கிய தருமர் வீடு, வாசல், நாடு, நகரம் அனைத்தையும் பணயம் வைத்துச் சூதாடி இறுதியில் தன் மனைவி பாஞ்சாலியை வைத்து சூதில் தோற்றது பழைய கதை.

கௌரவர் சபைக்கு திரௌபதி துச்சாதனனால் இழுத்து வரப்படுகிறாள். தனது கணவனாலும், சுற்றத்தாராலும், சபையோராலும் எள்ளளவு பிரயோஜனம் கூட கிடையாது என்று உணரும் அவள், சகல ஜீவராசிகளுக்கும் ரக்ஷகனாக விளங்கும் அந்த துவாரகாபுரி அச்சுதனை அழைக்கிறாள்.

சங்க சக்ர கதாபாணே த்வாராகாநிலயாச்யுதா !
கோவிந்த! புண்டரீகாக்ஷ ! ரக்ஷமாம் சரணாகதம்


ஸ்ரீவைணவத்தின் உயரிய தத்துவமாக விளங்கும் அந்த சராணாகதி தத்துவத்துக்கு ஆறுபேர் சாக்ஷி. பிரகலாதன், கஜேந்திரன், துருவன், அகல்யா, விபீடணன், மற்றும் திரௌபதி.

திரௌபதி ஆரம்பத்தில் இரு கைகளினால் தனது மானம் போகாமல் மறைத்தபடி கண்ணனை வேண்டி அலறுகிறாள். பிறகு ஒரு கையால் வணங்கியபடி ஒரு கையால் மானத்தை மறைத்து அலறுகிறாள். இறுதியாக, முற்றிலும் அவனே கதி என்று இரு கரங்களையும் தலைக்கு மேல் உயர்த்தி, 'கோவிந்தா' என்று அலறும்போதுதான் கண்ணன் ரக்ஷிக்கிறான். அனைத்தையும் அவனிடம் தந்து விட்டால் போதும் அவன் நம்மை காப்பாற்றுவான் என்பதற்கு இதைவிட வேறு என்ன சாட்சி வேண்டும்?

தான் அந்த திரௌபதியைப் போல முற்றிலும் அர்ப்பணம் செய்து சரணாகதம் செய்யவில்லையே, இனி நான் இந்தத் திருக்கோளூரில் இருந்து என்ன பயன் என்று கூறி அந்தப் பென்பிள்ளை அங்கிருந்து கிளம்புகிறாள்.

56 - இங்கு பால் பொங்கும் என்றேனோ வடுகநம்பியைப் போலே ?

வடுகநம்பி, உடையவர் ஸ்ரீராமாநுஜரின் முதன்மைச் சீடர்களில் ஒருவர். இவர் சித்திரைத் திங்கள் அஸ்வினி நட்சத்திரத்தன்று மைசூருக்கு அருகில் உள்ள சாலிகிராமம் என்ற சிற்றூரில் பிறந்தவர். அபரிமிதமாக நெல் விளையும் பூமி என்பதால், சாலிகிராமம் என்று பெயர். திருவரங்கத்தில் ஸ்ரீராமாநுஜரின் அபிமான சிஷ்யனான பிறகு குருவுக்கு தொண்டு செய்வதையே தனது வாழ்க்கையாக மாற்றிக் கொண்டவர் அவர். ராமாநுஜர் இவரது பாதங்களில் தனது கால்களை நீட்டியபடி தனது இறுதி மூச்சினை விட்ட பெருமை வடுகநம்பிக்கு உண்டு.

குருவின் மீது பக்தி என்பதைவிட பிரேமை என்றே சொல்லலாம் வடுகநம்பிக்கு. திருவரங்கப் பெருமாளுக்கு ரங்கநாதன் என்று பெயர். உற்ஸவருக்கு நம்பெருமாள் என்று பெயர். நம்பெருமாள் நடையழகு என்பது எங்கும் காணக் கிடைக்காத தனியழகு. ஒருமுறை ராமாநுஜர் அவருடைய கண்ணழகில் மயங்கி “வடுகா! நம்பெருமாளின் கண்களைப் பார். நீண்ட அப்பெரிய கண்கள் உம்மைப் பேதைமை செய்யவில்லையா?'' என்று கேட்டாராம். ராமாநுஜரைத் தவிர வேறு ஒருவரையும் பார்த்து ரசித்தறியாதவர் வடுக நம்பி.''என் அமுதனைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே'' என்று பதில் சொல்லி அவரையே பார்த்தபடி நம்பி நின்றாராம்.

திருக்குறுங்குடி என்ற திவ்ய தேசத்தில் வடுகநம்பியைப் போல எம்பெருமான் தோன்றி ராமாநுஜரிடம் திருமண்காப்பு இட்டுக்கொண்டாராம்.

இவ்வளவு பெருமை வாய்ந்த வடுகநம்பி ஒருமுறை ராமாநுஜர் திருமாளிகையில் அடுப்பில் பால் காய்ச்சிக் கொண்டிருந்தார். அப்போது நம்பெருமாளின் திருவீதி புறப்பாடு சென்று கொண்டிருந்தது. ராமாநுஜர் “வடுகா விரைந்து வாரும். நம்பெருமாள் புறப்பாடு போய்க்கொண்டிருக்கிறது. நம்பெருமாளை காணக் கண் கோடி வேண்டும். விரைந்து வாரும்” என்றார். குருவிற்கு சிச்ருக்ஷை செய்வதில் முனைப்புடன் இருந்த வடுகநம்பி “அங்கு வந்து உம்பெருமாளை பார்த்துக் கொண்டிருந்தால், இங்கு நம்பெருமாளுக்கு யார் பால் காய்ச்சுவார்களாம்?'' என்று கேட்டாராம். வடுகநம்பியை பொறுத்தவரையில் ஆசாரியன்தான் அவருக்கு நம்பெருமாள். இதைவிட  ஆசாரிய பக்திக்கு உதாரணம் சொல்ல முடியுமா?

அந்த வடுகநம்பியைப் போல ஆசாரிய பக்தி மேலிட பெருமாளையும் துறந்து ‘இங்கு பால் பொங்கும் என்றேனா?' இல்லையே. பின் எனக்கு இந்தத் திருக்கோளூரில் இருக்க என்ன தகுதி உள்ளது என்று கூறி அந்தப்பெண் கிளம்பினாள்.