Published:Updated:

திண்டுக்கல், பாம்பார்பட்டி ஈஸ்வரன் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்படும் பிரமாண்ட அனந்த சயனப் பெருமாள்!

மிகவும் பிரமாண்டமான அனந்த சயனப் பெருமாளைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமா!

திண்டுக்கல், பாம்பார்பட்டி ஈஸ்வரன் கோயிலில்  பிரதிஷ்டை செய்யப்படும்  பிரமாண்ட அனந்த சயனப் பெருமாள்!
திண்டுக்கல், பாம்பார்பட்டி ஈஸ்வரன் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்படும் பிரமாண்ட அனந்த சயனப் பெருமாள்!

தேனியிலுள்ள பங்களாமேட்டைக் கடந்து சென்றுகொண்டிருந்தோம். கல்லுக்குள் இருக்கும் சிற்பத்தை வெளிக்கொண்டு வரத் துடிக்கும் ஓர் உளியின் ஓசை இன்னிசையாக நம்மைக் கவர்ந்திழுத்தது; ஓசை வந்த இடத்தை நோக்கிச் சென்றோம். பங்களாமேடு பகுதியில் அமைந்திருக்கிறது ஶ்ரீவெங்கடேஸ்வரா சிற்பக் கலைக்கூடம். அந்தக் கலைக்கூடத்தில்தான் மிக பிரமாண்டமான வடிவத்தில் திருமாலின் பள்ளிகொண்ட திருமேனி சிற்பிகளின் கைவண்ணத்தில் உருவாகிக்கொண்டிருந்தது. அனந்த சயனத்தில் ஆனந்தமாகப் பள்ளிகொண்ட நிலையில் காட்சி தரும் பெருமாள் சிற்பத்தைக் கண்டதும் நமக்குள் ஏற்பட்ட பரவசத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை.

அங்கு தலைமைச் சிற்பியாக இருந்த வெங்கடேஷ்குமாரிடம் பிரமாண்டமாக உருவாகி வரும் திருமாலின் சிற்பம் குறித்துக் கேட்டோம்.

``மூன்று தலைமுறைகளாக நாங்கள் சிற்ப வேலை செய்துவருகிறோம். என் அப்பா செல்வம்தான் இந்த கலைக்கூடத்தின் நிறுவனர். எங்களுக்குக் கீழ் 15 சிற்பிகள் இருக்கிறார்கள். திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகேயிருக்கும் பாம்பார்பட்டி புவனேஸ்வரி உடனுறை ஈஸ்வரர் கோயிலிலிருந்து, `அனந்த சயன நிலையில் திருமால் சிலை வேண்டும்’ என ஆர்டர் வந்தது. திருப்பூர் மாவட்டத்திலிருக்கும் ஊத்துக்குளிக்குச் சென்று 80 டன் எடை கொண்ட ஆண் கருங்கல்லைத் தேர்வு செய்தோம். சிலை செய்ய, பொதுவாகக் கருங்கல்லைத்தான் தேர்வுசெய்ய வேண்டும். அதுவும் நன்கு விளைந்த ஆண் கல்லாக இருக்க வேண்டும். சுத்தியலை வைத்து அடித்தால் வெங்கலமணிபோல சத்தம் வர வேண்டும். சிலையைக் குடைவதற்கும் கருங்கல்தான் ஏற்றது. கடந்த ஒன்பது மாதங்களாக சிலை செய்யும் பணியில் இரவு பகலாக ஈடுபட்டுவருகிறோம். பெரும்பாலும் பணிகள் முடிந்துவிட்டன. இன்னும் ஐந்து நாள்கள் வேலை மட்டும் மீதமிருக்கிறது. வரும் சித்ரா பௌர்ணமி அன்று பிரதிஷ்டை செய்ய இருக்கிறார்கள்’’ என்றார் வெங்கடேஷ்குமார்.

''நீங்கள் செதுக்கும் இந்த அனந்த சயனத் திருமால் கோலத்தில் ஏதேனும் சிறப்புகள் இருக்கின்றனவா?''

''நீங்கள் அனந்த சயனம் என்று சொன்னது சரிதான். மக்களைப் பார்த்து ஆசி வழங்கும் நிலை இது. இதனால் ஊர் செழிப்படையும்; மக்கள் நோய் நொடியில்லாமல் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை. இந்த சிலையில் பல சிறப்பம்சங்கள் இருக்கின்றன. முதலில் இந்தச் சிலை ஒரே கல்லினாலானது. பொதுவாக சயன நிலையிலிருக்கும் திருமால் சிலையில், ஆதிசேஷன் இடமிருந்து வலமாகத் தன்னை சுற்றிக்கொண்டிருப்பார். ஆனால், இந்தச் சிலையில் வலமிருந்து இடமாகச் சுற்றியிருப்பார். மேலும், திருமாலின் கால் பகுதியில் ஆதிசேஷனின் வால் பகுதி இருக்கும். இதில், திருமாலின் மார்புப் பகுதியில் வால் பகுதி இருக்கிறது. மற்ற திருமால் சிலைகளில் ராமாநுஜர், பெரியாழ்வார் சிலைகள் தனித்தனியாக இருக்கும், அதேபோல், ஸ்ரீ தேவி, பூதேவி சிலைகளும் தனித்தனியாக இருக்கும். ஆனால், இந்தச் சிலையில் அனைத்தும் ஒரே கல்லில் திருமாலோடு இணைந்து இருப்பதுபோல வடிவமைத்திருக்கிறோம். இப்படி ஒரு வடிவத்தை எங்குமே பார்த்திருக்க முடியாது.

பெருமாள் வயிற்றுப் பகுதில் நான்கு அங்குல அளவுக்கு ஒரு துளை போட்டிருக்கிறோம். அந்த இடத்தில் துளை போடுவது மிகவும் சவாலாக இருந்தது. அந்தத் துளையிலிருந்து காம்புடன் கூடிய தாமரை மலர் வெளிவருவதுபோலவும், அந்தத் தாமரை மலரின் நடுவில் பிரம்மா அமர்ந்திருப்பதுபோலவும் வெண்கலச் சிலையை வைக்கப் போகிறோம். பொதுவாக இந்தச் சிற்பம் கல்லிலேயேதான் வடிக்கப்படும். ஆனால், நாங்கள் வெண்கலத்தில் வடிக்கப் போகிறோம். இந்த வித்தியாசமே பார்ப்பவர்களின் மனதை வெகுவாகக் கவரும்'' பரவச்சத்தோடு சொல்கிறார் வெங்கடேஷ்குமார்.

திருமுடியில் கரம் வைத்தபடி அனந்தசயனத்தில் ஆனந்தமாகக் காட்சி தரும் திருமாலின் திருவடிவ அழகை சற்று நேரம் கண்குளிர ரசித்துவிட்டுத் திரும்பினோம்.