Published:Updated:

இடுகம்பாளையம் ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோயிலின் மூன்று சிறப்புகள் என்னென்ன தெரியுமா?

சுமார் 700 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலை தரிசிக்கலாமே!

இடுகம்பாளையம் ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோயிலின் மூன்று சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
இடுகம்பாளையம் ஜெயமங்கள ஆஞ்சநேயர் கோயிலின் மூன்று சிறப்புகள் என்னென்ன தெரியுமா?

யற்கையாகவே பூமியிலிருந்து பொங்கி வரும் ஏழு தீர்த்தங்கள் தன்னைச் சூழ்ந்திருக்க, அவற்றுக்கு மத்தியில் கோயில்கொண்டு அருள்கிறார் அருள்மிகு ஜெயமங்கள ஆஞ்சநேயர். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்று சிறப்புகளையும் தன்னகத்தே கொண்ட திருக்கோயில் இது. சுமார் 700 ஆண்டுகள் பழைமை வாய்ந்த இந்தக் கோயிலை தரிசிக்கலாமே!

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள இடுகம்பாளையத்தில் அமைந்திருக்கும் கோயிலுக்குச் செல்லும் வழியெங்கும் இயற்கை எழில் கொஞ்சுகிறது. கோயிலை அடைந்ததுமே மனதில் பூரண அமைதி குடிகொண்டுவிடுகிறது. கோயில் சுற்றுச் சுவர்களின் உட்புறத்தில் நம் வாழ்வை வளப்படுத்தும் வாழ்க்கை நெறிகள் பதிக்கப்பட்டிருக்கின்றன. ஜெயமங்கள  ஆஞ்சநேயருக்குத் தென்புறத்தில் விநாயகரும், கன்னிமூலையில் ராமலிங்கேஸ்வரரும், வடக்கில் செல்வமுத்துக்குமரனும், அவருக்கு அருகில் பர்வதவர்தனி அம்மனும் சந்நிதி கொண்டிருக்கிறார்கள். 

கோயிலில் இருக்கும் கல்வெட்டில் `கலி 4404’ என்று குறிப்பிடப்பட்டிருப்பதாலும், சிவன் மற்றும் பார்வதி சந்நிதிகளில் மீன் சின்னங்கள் பொறிக்கப்பட்டிருப்பதாலும், இந்தக் கோயில் 13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. 

மாதவ குருமார்களில் ஒருவரான ஶ்ரீவியாசராய தீர்த்தர் இந்த இடத்துக்கு வருகை புரிந்தபோது, இங்கிருந்த பாறையொன்றில் ஆஞ்சநேயர் தியானம் செய்வது போன்ற காட்சி தெரிந்தது. எனவே, அந்தப் பாறையில் ஜெயமங்கள ஆஞ்சநேயரின் திருவுருவத்தைத் தாமே பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக நம்பப்படுகிறது. வேறெங்கும் காண இயலாத அபூர்வத் தோற்றத்தில் காட்சி தருகிறார் ஜெயமங்கள ஆஞ்சநேயர். எட்டு அடி உயரம் கொண்ட பாறையில், ஆறு அடி உயரமும் ஐந்து அடி அகலமும் கொண்டு மிக பிரமாண்டமாக, நம்மை நேருக்கு நேர் பார்த்து ஆசீர்வதிக்கும் கோலத்தில் கம்பீரமாகக் காட்சிதருகிறார் ஆஞ்சநேயர். 

ஆஞ்சநேயரின் திருவடிகளில் தாமரை மலர் போன்ற தண்டை அணிந்தும், வலக் கரத்தில் சுதர்சன சக்கரம் பொறிக்கப்பட்டு ஆசீர்வாதம் செய்யும் நிலையிலும், இடக் கரத்தில் சவுகந்திக மலரை ஏந்தியபடி தொடையில் ஊன்றிக் காட்சிதருகிறார். இரு கால்களிலும் தாமரை மலர் போன்ற தண்டை அணிந்திருக்கும் ஆஞ்சநேயரின் வால் ஆஞ்சநேயரின்   தலைப் பகுதிக்குப் பின்புறம் இடப் புறமாக மேல் நோக்கி நீண்டிருக்க, வாலின் நுனியில் மணி கட்டப்பட்டிருக்கிறது. ஆஞ்சநேயரின் வாலுக்கு நவகிரகங்களைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக ஐதீகம். `வாலின் நுனியில் உள்ள மணியை மானசீகமாக வழிபட்டு வேண்டிக்கொண்டால், நவகிரக தோஷங்கள் விலகிவிடும்’ என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இந்தப் பகுதியில் மூன்று சித்தர்கள் வாசம் செய்துகொண்டிருப்பதாகவும் அதனால் அருள் மணமும், சக்தியும் இந்தக் கோயிலில் நிறைந்துள்ளதாகவும் நம்பப்படுகிறது. இந்தத் திருக்கோயிலுக்கு  ‘ஸ்ரீ அனுமந்தராயசாமி கோயில்' என்ற பெயரும் உண்டு. ஆஞ்சநேயர் கோயிலுக்கு வலப் புறத்தில் கிழக்கு நோக்கி அமைந்துள்ள விநாயகர் கோயிலில், பூமியிலிருந்து மேலெழுந்த ஒரு நீள்வடிவ சுயம்புப் பாறையில் விநாயகர், சூரியன், சந்திரன், ஆதிசேஷன், சிவலிங்கத்துக்கு பால் அபிஷேகம் செய்யும் காமதேனு ஆகிய ஆறு வடிவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளதைக் காணலாம்.

ஜெயமங்கள ஆஞ்சநேயரை வழிபடுபவர்களுக்கு நவகிரக தோஷங்கள் நீங்குவதோடு, மும்மூர்த்தியரின் அனுகிரகமும் ஒருசேரக் கிடைப்பதாகவும் ஐதீகம். மேலும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்குப் புத்திரப்பேறு கிடைக்குமென்றும் திருமணம் மற்றும் சுபகாரியங்களில் இருக்கும் தடைகள்  நீங்கும் என்றும் பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், ஆஞ்சநேயரை வேண்டிக்கொண்டு தினமும் ஒரு கைப்பிடி அரிசி சேர்க்க வேண்டும். இப்படி முப்பது நாள்கள் சேர்த்த அரிசியைக் கோயிலில் கொண்டு வந்து ஆஞ்சநேயரை வேண்டிக்கொண்டு சமர்ப்பிக்க வேண்டும். அப்படி காணிக்கையாக வரும் அரிசியைக்கொண்டு பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெறுகிறது. 

எப்படிச் செல்வது?:  

கோவையிலிருந்து 44 கி.மீ தொலைவில் உள்ளது  இடுகம்பாளையம்.  கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் சென்றுவிட்டால், அங்கிருந்து இடுகம்பாளையம் செல்வதற்கு பேருந்து வசதி இருக்கிறது.

சந்நதி திறக்கும் நேரம்: காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை.