மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சித்திர ராமாயணம்

சித்திர ராமாயணம்
பிரீமியம் ஸ்டோரி
News
சித்திர ராமாயணம்

பி.ஸ்ரீ., ஓவியங்கள்:சித்ரலேகா

சித்திர ராமாயணம்

ஞானத்தின் தோல்வி!

மயக்கம் தீர்ந்து கண்களை மலர விழித்துக்கொண்ட சக்ரவர்த்தி, தம் எதிரே வசிஷ்ட முனிவரைப் பார்க்கிறார். பார்த்து, ‘‘வீரன் வந்தானோ?” என்று கேட்கிறார். இது கேட்ட வசிஷ்டர், மறுமொழி சொல்ல முடியாமல் ஏங்கி நிற்கிறார். அந்த நிலையும், முனிவர் முகத்தைப் பார்த்து அரசர் சோர்வு அடைவதும், அரசன் நிலைகண்டு பொறுக்கமுடியாமல் முனிவர் அப்பால் போய்விடுவதும் எவ்வளவு இயற்கையாகச் சித்திரிக்கப்படுகின்றன.

‘இல்லை’என்(று) உரைக்க லாற்றான், ஏங்கினன் முனிவன் நின்றான்;
வல்லவன் முகமே ‘நம்பி வந்திலன்’ என்னும் மாற்றம்
சொல்லலும், அரசன் சோர்ந்தான்; துயர்உறு முனிவன், ‘நான் இவ்
அல்லல்காண் கில்லேன்!’ என்னா, ஆங்குநின்(று) அகலப் போனான்.


தந்தைக்கு வசிஷ்டரே ஆறுதல் சொல்லக்கூடும் என்று ராமன் நம்பினான். ஆனால், அந்தப் பெருந்துயரத்தின் முன் அந்த மகரிஷியால் நிற்க முடியவில்லை. உணர்ச்சி வெள்ளம் வேதாந்த ஞானத்தையும் அடித்துக்கொண்டு போய்விடுகிறது.

சக்ரவர்த்தியின் துயரத்தைப் பார்க்க முடியாமல் வசிஷ்டர் அப்பால் போனதும், தசரதர் சுமந்திரனைப் பார்க்கிறார். அவன் இப்பொழுது கண்ணீரைத் துடைத்துக் கொண்டு, முகத்திலும் துயரத்தை அதிகமாய் காட்டிக்கொள்ளாமல்தான் நிற்கிறான். தசரதருக்கு மீண்டும் சிறிதளவு நம்பிக்கை பிறக்கிறது. ராமன் இப்பொழுது வந்து சேரவில்லை என்று எண்ணியபோதிலும், தம் அருமை மகன் தம்மை நோக்கி வந்துகொண்டு இருப்பதாகவே சக்ரவர்த்தி நம்புகிறார். எனவே, சுமந்திரனை நோக்கி, ‘‘ராமன் தூரத்தில் வருகிறானா, சமீபத்தில் வருகிறானா?” என்று கேட்கிறார்.

உடனே, சுமந்திரன் தன்னை அறியாமலே தன் மனதில் ஆழ்ந்து பதிந்திருந்த அந்த வனப் பிரவேசக் காட்சியை அப்படியே வெளியிடுகிறான்:

வேய்உயர் கானம், தானும் தம்பியும் மிதிலைப் பொன்னும்
போயினன் என்றான்; என்ற போழ்தத்தே ஆவி போனான்!


‘மூங்கில்கள் ஓங்கி அடர்ந்து வளர்ந்திருக்கும் அக்காட்டிலே ராமன் தம்பியோடும் ஆருயிர்த் தேவியோடும் போனான்’ என்று சுமந்திரன் சொல்லும்போதே ஆவி போய்விடுகிறது தசரதருக்கு.
‘யமதூதனைப்போல் போவேனா? என் சொல் லால் கொலை செய்யப் போகிறேனா?’ என்றெல் லாம் பரிதவித்துக் கொண்டிருந்த சுமந்திரன், கடைசியாக தசரதருக்கு யமனாகவே வந்து சேர்ந்தான்.

மூன்று காட்சிகள்!

சித்திர ராமாயணம்

தசரதன் இறந்தது கண்டு மூர்ச்சை அடைந்த கோசலை, உணர்வு மீண்டதும் பலவிதமாகப் புலம்பினாள். சுமித்தி ரையும் உயிர் சோர்ந்த நிலையில் கிடந்தாள்.

‘வேத முனிவன், விதிசெய்த வினையை
நோக்கி விம்முவரின்’.

ஈமக்கிரியை நடத்த நாலு பிள்ளைகள் இருந்தும், சமயத்திற்கு உதவ ஒருவரும் இல்லையே என்று வருந்தும் வசிஷ்டர், பரதன் கேகய நாட்டிலிருந்து திரும்பி வந்ததும், கிரியைகளை முடித்துக்கொள்ளலாம் என்று சொன்னார். அதுவரை, தசரதனுடைய உடம்பைத் தைலத் தொட்டியில் போட்டு வைக்கிறார்கள்:

‘தையல் கடல்நின்(று) எடுத்(து) அவனைத்
தயிலக் கடலின் தலை உய்த்தார்’.


உயிர் நீங்கிய தசரதர் உடம்பைச் சூழ்ந்து மொய்த்துப் புலம்பிக் கொண்டிருந்தார்கள், எண்ணிறந்த அரண்மனைப் பெண்கள். அவர்களை விட்டு அவ்வுடம்பை எடுத்து, அது கெட்டுப் போகாமல் இருப்பதற்காகத் தைலத் தொட்டிக்குக் கொண்டுபோவது பெரும் பிரயத்தனமாகிவிட்டதாம்.

அழியா அழகு!

ராமன் முன்னே செல்ல, சீதை பின்னே தொடர்ந்து வருகிறாள். கடைசியாக வருகிறான் இளையவன். ‘பொய்யோ எனும் இடையாள்’ - வேறு பொய்தான் நெருங்க முடியாதே! - ராமனது நிழல் போலச் செல்லுகிறாள். ராமன் அவளைத் தன் நிழலிலே அழைத்துப் போகிறான், சூரிய கிரணங்கள் தன்மேல் படும்படியாக. சீதையோடும் இளையவ னோடும் செல்லும் ராமனது நிற அழகும், மேனியின்
எழிலும், பெருமிதப் பொலிவும் கம்பன் காட்ட, நம் உள்ளத்திலும் பிரதிபலிக்கின்றன.

இப்படி இவர்கள் செல்லும்போது, ஒரு பக்கத்திலே ஆண் அன்னமும் பெண் அன்னமும் உலாவிக் கொண்டிருக்கின்றனவாம். லட்சுமணன் கொஞ்சம் பின்தங்கி வருகிறான். சீதையும் தானும் உடன் செல்வதுபோல, அந்த அன்னங்கள் உலாவுவதை ராமன் கண்டு களிக்கிறான்.

அளியன்னதொர் அறல்துன்னிய குழலாள்,
    கடல் அமிழ்தின்
தெளிவன்னதொர் மொழியாள்,
    நிறைதவம் அன்னதொர் செயலாள்,
வெளியன்னதொர் இடையாளொடும்,
    விடையன்னதொர் நடையான்,
களியன்னமும் மடஅன்னமும்
    உடனாடுவ கண்டான்.


அக்கம்பக்கத்திலுள்ள பூக்களைக் கொய்து சீதை கூந்தல் நிறையச் சூடிக் கொண்டு, ராமனோடு உல்லாசமாக நடந்து போகிறாள். அப்படிப் போகும்போது சூடிய பூக்களிலிருந்து நல்ல வாசனையும் மகரந்தப் பொடியும் காற்றிலே பறக்கின்றன.

வழியிலே கரும்பு ஆலை முதலான காட்சிகள். அந்த விசித்திரங்களை ஒவ்வொன்றாகப் பார்த்துக்கொண்டு நிற்பாள் சீதை. பெரும்பாலும் அரண் மனைக்கு உள்ளே இருந்த அவளுக்கு எல்லாமே விசித்திரம்தான்; உற்சாகம்தான்! ராமன் எத்தனையோ தடவை இத்தகைய காட்சிகளைக் கண்டிருக்கிறான். எனவே கொஞ்சம் முன்னேறி நடந்து போய்க் கொண்டிருப்பான். பிந்திப் போன சீதை ‘ஓஹோ, பிந்திவிட்டோமே!’ என்று அப்படியே ஓடிப்போய் ராமனுடைய தோளைப் பற்றி, விளையாடிக்கொண்டே போகிறாள்.

கருப்பேந்திரம் முதலாயின கண்டாள், இடர் காணாள்,
பொருப்பேந்திய தோளானொடு விளையாடினாள் போனாள்.


இந்த விதமாக, உல்லாஸமாய் நடந்து கங்கைக் கரைக்கு வந்துவிடுகிறார்கள், ராமனும் சீதையும் லட்சுமணனோடு.

சித்திர ராமாயணம்

ஆனந்த வெறி

ராமன் முதலியோர் வளம் நிறைந்த கோசல நாட்டைக் கடந்து, கங்கையின் வட கரைக்கு வந்துவிட்டார்கள். வழியிலே எத்தனையோ தாமரைத் தடாகங்கள், சோலைகள், மணல்மேடுகள், நந்தவனங்கள், ஆறுகள், அவற்றின் பல கால்வாய்கள்; அவற்றையெல்லாம் தாண்டி, உச்சி வேளைக்கு முன், கங்கையின் அலை வீசும் நீர்ப்பரப்பைக் கண்ணுற்றார்கள்.

‘இத்தெய்வ நதியைப் பார்க்க வேண்டும், கண்புரிந்த தவமாக; கங்காதீரவாஸிகளான தவசிகளையும் தரிசித்துப் பேறு பெற வேண்டும்’ என்று வந்தார்கள். இக்கரையில் தங்கி வாழும் தபோதனர்களோ, ‘நாம் தேடிப்போன தெய்வம் நம்மைத் தேடி வந்ததே, என்ன பாக்கியம்!’ என்ற உணர்ச்சியுடனும் மகிழ்ச்சியுடனும் ராமனைத் தரிசிக்க வேண்டும் என்று எதிர்கொண்டு வந்து விட்டார்கள்.

கங்கை என்னும் கடவுள் திருநதித்
தங்கி வைகும் தபோதனார் யாவரும்
‘எங்கள் செல்கதி வந்த(து)!என்(று) ஏமுறா,
அங்கண் நாயகற் காணவந்(து) அண்மினார்.


ராமனைக் கண்ட முனிவர்களின் கண்களைப் ‘பசுங்கண்’ என்கிறான் கவிஞன். பச்சைப் பசுங் குழந்தைபோல் பார்க்கிறார்களாம். ‘ஞானக் குழந்தை’களல்லவா?

பெண்ணில் நோக்கும் சுவையின் பிறர்பிறர்க்கு
எண்ணில் நோக்கி இயம்பரும் இன்பத்தைப்
பண்ணில் நோக்கும் பராஅமு தைப்பசுங்
கண்ணின் நோக்கினர் உள்ளம் களிக்கின்றார்.


** 23.3.47, 30.347, 6.4.47 மற்றும் 13.4.47 ஆனந்த விகடன் இதழ்களில் இருந்து...