Published:Updated:

ஆலயம் தேடுவோம்

ஆலயம் தேடுவோம்
பிரீமியம் ஸ்டோரி
ஆலயம் தேடுவோம்

மகேசனுக்கு திருக்கோயில்... மஹா ஸ்வாமிகளின் விருப்பம்!எஸ்.கண்ணன்கோபாலன்

ஆலயம் தேடுவோம்

மகேசனுக்கு திருக்கோயில்... மஹா ஸ்வாமிகளின் விருப்பம்!எஸ்.கண்ணன்கோபாலன்

Published:Updated:
ஆலயம் தேடுவோம்
பிரீமியம் ஸ்டோரி
ஆலயம் தேடுவோம்
ஆலயம் தேடுவோம்

கயிலையில் ஒரு போட்டி!

மகேஸ்வரனும் மகேஸ்வரியும் சொக்கட்டான் விளையாட விரும்புகின்றனர். ஆட்டத்தில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்று தீர்ப்பு சொல்வதற்கு ஒரு நடுவர் வேண்டுமே?

அந்தப் பொறுப்பை திருமால் ஏற்றுக்கொள் கிறார். ஆட்டம் ஆரம்பிக்கிறது. அதேவேளையில் அம்பிகையின் உள்ளத்தில் ஓர் ஆசையும் எழுகின்றது.

பூவுலகில் கோயில் கொண்டு தன்னை நாடிவந்து வழிபடும் அன்பர்களுக்கு, அவர்கள் வேண்டும் வரங்களை எல்லாம் உடனுக்குடன் வழங்கிடவேண்டும் என்று விரும்பினாள்.

தங்கை பார்வதியின் திருவுள்ளம் திருமாலுக்குப் புரிகிறது. தங்கையின் விருப்பத்தை நிறைவேற்ற அவரும் ஒரு நாடகம் ஆடுகிறார்.

ஆட்டத்தில் தேவி வெற்றி பெறுகிறாள். ஆனால், திருமால் சிவபெருமான்தான் வெற்றி பெற்றார் என்று தீர்ப்பு கூறுகிறார். அதனால் அம்பிகை சினம் கொண்டு திருமாலை பாம்பாக மாறும்படி சபித்துவிடுகிறாள்.

ஆலயம் தேடுவோம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பூமியில் கோயில் கொண்டு பக்தர்களுக்கு அருள் புரிய விரும்பிய தன் தங்கையின் விருப்பத்தை நிறை வேற்றவேண்டும் என்பதற்காகவே தவறான தீர்ப்பு கொடுத்த திருமால், அம்பிகையின் சாபத்தை சந்தோஷமாக ஏற்றுக் கொள்கிறார். சாப விமோசனம் பெற அம்பிகையின் ஆணைப்படி பூமிக்கு வந்து ஓர் ஆலமர பொந்துக்குள் இருந்தபடி அம்பிகையை தியானித்து தவம் இருந்தார். திருமாலின் தவத்துக்கு இரங்கிய அம்பிகை, ஐயனுடன் நேரில் தோன்றி திருமாலுக்கு தரிசனமும் சாபவிமோசனமும் அருளினாள்.

சுய வடிவத்துக்கு வந்த  திருமால் அம்பிகையிடம், ‘‘தேவி, எமக்கு தரிசனமும் சாபவிமோசனமும் அருளிய நீங்கள் இருவரும் இங்கேயே கோயில் கொண்டு, வழிபடும் பக்தர்களுக்கு அவர்கள் கேட்கும் வரங்களை அருள வேண்டும்’’ என்று பிரார்த்தித்தார். அதன்படியே ஐயன் ஸ்ரீகாளகண்டேஸ்வரர் என்ற திருப்பெயருடனும் அம்பிகை ஸ்ரீவரந்தர நாயகி என்ற திருப்பெயருட னும் கோயில் கொண்டனர். அந்தத் தலம்தான் திருமாலயன் பொய்கை திருத்தலம்.

ஆனால், அங்கே நாம் நினைத்தபடி பிரமாண்டமான கோயில் எதுவும் இல்லை. சிதிலமடைந்து

ஆலயம் தேடுவோம்

புதர்கள் மண்டிய ஒரு கட்டடத்தைத்தான் நம்மால் காணமுடிந்தது. நமக்கெல்லாம் அருள்வதற்காகவே திருமாலுக்கு சாபம் கொடுத்து, அதன் காரணமாக சிவனாருடன் பூமியில் தோன்றிய அம்பிகை, ஐயனுடன் குடிகொண்ட கோயிலின் இன்றைய சிதிலமடைந்த நிலையைக் கண்டு நெஞ்சம் பதறித் துடித்து கண்ணீர் பெருக்கெடுத்தது.

ஒருகாலத்தில் மிகுந்த சாந்நித்தியத்துடன் திகழ்ந்த இந்தக் கோயில் காலப்போக்கில் சிதிலம் அடைந்துவிட்டதால், ஒரு சிறிய கட்டடத்தில் தெய்வ மூர்த்தங்களை பிரதிஷ்டை செய்து இயன்றவரை பூஜைகள் செய்துகொண்டிருந்தனர். 1958-ம் ஆண்டு காஞ்சி மஹா பெரியவா இந்தப் பகுதிக்கு விஜயம் செய்தபோது, சிறிய கட்டடத்தில் இருந்த தெய்வமூர்த்தங்களை தரிசித்துச் சென்றார் என்றால், இந்தத் தலத்தின் உன்னத மகிமையைச் சொல்லவும் வேண்டுமா என்ன?!

மஹா ஸ்வாமிகளின் விஜயத்துக்குப் பல வருஷங்களுக்குப் பிறகு, ஆலயத்தின் பரம்பரை அறங்காவலர் குடும்பத்தைச் சேர்ந்த நாராயணஸ்வாமி ஐயரும் அவருடைய மகன் சங்கரும் குல்பர்காவில் எழுந்தருளி இருந்த காஞ்சி மஹா பெரியவாளை தரிசிக்கச் சென்றனர். அப்போது மஹா பெரியவா அவர்களிடம், ‘‘இன்னும் எத்தனை காலத்துக்குத்தான் சுவாமியையும் அம்பாளையும் சின்ன கட்டடத்தில் அப்படியே வைத்திருக்கப்போகிறாய், சீக்கிரம் கோயில் கட்ட வேண்டாமோ, காசு பணத்துக்கு பஞ்சமோ?’’ என்று கேட்டிருக்கிறார். இத்தனைக்கும் ஆலயத்தின் அன்றைய நிலை பற்றி மஹா பெரியவாளிடம் தெரிவிக்கவே இல்லை. அனைத்தும் உணர்ந்த ஞானி அப்படிக் கேட்டதுமே அதிர்ச்சியும் வியப்பும் அடைந்த குடும்பத்தினர், எப்படியாவது கோயிலைப் புதுப்பித்துக் கட்டவேண்டும் என்ற முடிவுக்கு வந்தனர். ஆனாலும் அதற்கான காலம் இப்போதுதான் கனிந்து வந்திருக்கிறது!

ஆலயத்தின் பரம்பரை அறங்காவலர் குடும்பத்தைச் சேர்ந்த பி.என்.என். சங்கர் அவர்களிடம் ஆலயத்தின் திருப்பணிகள் குறித்து விவரம் கேட்டோம்.

ஆலயம் தேடுவோம்

‘’ரொம்ப வருஷமாவே இந்த கட்டடத்தில்தான் தெய்வ மூர்த்தங்களை பிரதிஷ்டை பண்ணி பூஜைகள் பண்ணிண்டு வர்றோம். 1958-ம் வருஷம் மஹா பெரியவா வந்தப்போ இங்கே இருக்கற தபஸ்காமாட்சியைப் பற்றி சொல்லும்போது, அந்த அம்பாளை வழிபட்டா வேண்டுதல்கள் எல்லாம் நிறைவேறும்னு சொன்னார். பிறகு குல்பர்காவில் அவரை தரிசிக்க போனப்போகூட இன்னும் கோயில் கட்டலையான்னு கேட்டார். அப்ப இருந்த நிலையில எங்களால எதுவுமே செய்யமுடியலை. ஆனாலும் பூஜைகளை மட்டும் நிறுத்தாம செஞ்சிக்கிட்டு வர்றோம். கணேச சிவாச்சார்யார்தான் தினப்படி பூஜைகள் செஞ்சுக்கிட்டு வர்றார்.

ஆலயம் தேடுவோம்

இப்பத்தான் ஊர்மக்களோட ஒத்துழைப்போட திருப்பணிகளை ஆரம்பிச்சிருக்கோம். ஜூலை மாசம் 27-ம் தேதி நடந்த பூமிபூஜையின்போது கும்பகோணம் திருவடிக்குடில் சுவாமிகள் வந்திருந்து திருப்பணிகளைத் தொடங்கி வச்சார். ஊர்மக்கள் ஒத்துழைப்போட சீக்கிரமே திருப்பணிகள் பூர்த்தியாகி கும்பாபிஷேகம் நடைபெறவேண்டும்ங்கறதுதான் எங்களோட விருப்பம். பகவான்தான் அனுக்கிரகம் செய்யணும்’’ என்றார்.

ஆலயம் தேடுவோம்

நமக்கெல்லாம் அருள்புரிய வேண்டும் என்பதற் காகவே ஒரு தெய்விகத் திருவிளையாடலை நிகழ்த்திய அம்பிகை, ஐயனுடன் கொண்ட கோயில் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் சிறிய கட்டடத்தில் இருப்பது? தான் கொண்ட வரந்தர நாயகி என்னும் திருப்பெயருக்கேற்ப பக்தர்களுக்கு அவர்கள் கேட்கும் வரங்களை எல்லாம் உடனுக்குடன் வழங்கியவள் அல்லவா அம்பிகை?! விரைவிலேயே புதுப்பொலிவுடன் கோயில் அமைய வேண்டும். அம்பிகை வரந்தர நாயகி ஐயன் காளகண்டேஸ்வரருடன் அங்கே எழுந்தருளவேண்டும்; நாளும் தங்களை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு வரங்களை வாரி வாரி வழங்கவேண்டும். அதற்கு நாமும் நம்மால் ஆன பொருளுதவியைச் செய்தால்தானே சாத்தியப்படும்? 

ஆலயம் தேடுவோம்

வரந்தர நாயகி சமேத ஐயன் காளகண் டேஸ்வரர் திருக்கோயில் திருப்பணிக்கு நாமும் நம்மால் இயன்ற பொருளுதவியைச் செய்வோம். அதன்மூலம் நமக்கும் நம் சந்ததியினருக்கும்  அம்பிகை வரந்தர நாயகி அருளுடன், ‘பண்ணின் இசையாகி நிற்பானும் பாவிப்பார் பாவம் அறுப்பானு’மாகிய ஐயன் காளகண்டேஸ்வரரின் அருளும் கிடைக்கச் செய்து சிறப்புற வாழ்ந்திடலாமே!

படங்கள்: க.சதீஷ்குமார்

எங்கே இருக்கிறது... எப்படிச் செல்வது..?

திருவாரூர் - திருமருகல் சாலையில் திருவாரூரில் இருந்து சுமார் 20 கி.மீ. தூரத்தில் அமைந்திருக் கிறது திருமாலயன் பொய்கை. திருவாரூரில் இருந்து அரசுப் பேருந்து (தடம் எண் 14) வசதி உண்டு.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism