மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - 23

சிவமகுடம் - 23
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம் - 23

ஆலவாய் ஆதிரையான், ஓவியங்கள்: ஸ்யாம்

சிவமகுடம் - 23

வனத்தின் வழியில் ஆபத்து!

கொழுந்துவிட்டு எரியும் நெருப்பு உடலைப் பொசுக்கும் எனில், குழப்பமான சிந்தனைகளோ உள்ளத்தையே பொசுக்கி விடும்! அந்த வனத்திலும் இருவரின் உள்ளங்கள், பெரும் குழப்பத்தால் எழுந்துவிட்டிருந்த சிந்தனைத் தீயில் பொசுங்கத் துவங்கியிருந்தன.

இருவரில் ஒருவர்- பாண்டியரின் பாசறையாகத் திகழ்ந்த குடிலுக்குள், கை-கால்கள் பிணைக்கப்பட்டுக் கிடந்த நம்பி. மற்றொருவர்- அந்த பாசறைக் குடிலில் இருந்து வெகுதூரத்தில், பெரும் வனத்தை ஊடறுத்துச் சென்ற பாதையில், மாமன்னன் கூன்பாண்டியனின் புரவிக்கு இணையாக தனது புரவியைச் செலுத்தியபடி, அதன் முதுகில் கனகம்பீரமாக ஆரோகணித்திருந்த சைவத் துறவியார்! இயல்பிலேயே பெரும் வீரர் என்பதால், அவருடைய தோற்றம் கம்பீரத்தை வெளிப்படுத்தினாலும், உள்ளத்தைப் பொசுக்கிக்கொண்டிருந்த சிந்தனைத் தீ, அவருடைய முகப்பொலிவை குறைக்கவே செய்திருந்தது.

ஏறக்குறைய நம்பியும் அதே நிலையில்தான் இருந்தான். எப்படி முயற்சித்தும் மீள முடியாதபடி பிணைக்கப்பட்டுக் கிடந்தவனுக்கு, தன்னைப் போலவே பெரும் கட்டுத்தளைக்குள் சிக்கிக்கொண்டிருந்த பொங்கியின் நிலை, பெரிதும் வருத்தம் அளித்தது. தனது இயலாமையால் எழுந்த துக்கமும், அவ்வப்போது பொங்கிதேவியிடம் இருந்து வெளிப்பட்ட முனகல் சத்தத்தைத்தவிர, அந்த இடத்தை பெரிதும் ஆக்கிரமித்துக்கொண்ட நிசப்தமும் சேர்ந்து அவனுக்குள் அலையலையாய் சிந்தனைகளை எழுப்பிக்கொண்டிருந்தன!

பொங்கி எப்படி மயங்கினாள், எப்போது மயக்கம் தெளிந்தாள், உண்மையில் இந்த சைவத் துறவி யார், பாண்டியனுக்கு அணுக்க மானவர் எனில், தங்களுக்காக அவனுடன் மோதியது ஏன், இறுதியில் அவனது முடி வையே அவரும் ஏற்றுக்கொண்டது எதற்காக?

எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த வனத்தில்  ஆங்காங்கே பாசறைக் குடில்களில் பதுக்கப் பட்டிருக்கும் ஆயுதங்களை, பாண்டியன் தனது படைகளுக்கு எவ்விதத்தில் பரிமாறப் போகிறான், சிறைப்பட்ட பிறகும் பாண்டியன் தங்களைக் கொன்றுபோடாமல், வெறுமனே கை-கால்களை மட்டும் பிணைத்து இங்கே விட்டுச் சென்றிருப்பதற்குக் காரணம் என்ன வாக இருக்கும்?!

- பெரும் வனத்தில் ஒரு விருட்சத்தின் கிளையில் சிறியதாகப் பற்றும் தீப்பொறி, சடுதியில் பெரிதாக வளர்ந்து, அடுத்தடுத்த விருட்சங்களுக்கும் பரவி, பெரும் காட்டுத் தீயாக பரிணமிப்பது போன்று, ஒன்றன்பின் ஒன்றாக நம்பிக்குள் எழுந்த கேள்விகள், பெரும் சிந்தனைத் தீயாகி அவனைப் பெரிதும் பொசுக்கத் துவங்கியிருந்தது.

சாதாரண தருணமாக இருந்திருந்தால், இதுபோன்ற எத்தனைக் கேள்விகள் எழுந் தாலும், அவை எல்லாவற்றுக்கும் பொருத்த மான பதில்களை, சிறந்த மதியூகியான நம்பி மிகக் கச்சிதமாக யூகித்திருப்பான். ஆனால், பாண்டியனும் துறவியாரும் அந்த இடத்தில் இருந்து புறப்படுவதற்குமுன், துறவியார் கேட்ட கடைசிக் கேள்வியும் அதற்கு பாண்டியன் அளித்த பதிலும், நம்பியை வெகுவாக அசர வைத்துவிட்டன. அவனது புத்தியையும் சக்தியையும்கூட ஒட்டுமொத்தமாய் முடக்கிப்போட்டுவிட்டன என்றே சொல்லலாம்.

‘‘தென்னவா! உறையூரில் நம்மவர்கள் சோழர்களிடம் சிறைப்பட்டிருக்க, அங்கே சக்ர வியூகம் எப்படிச் சுழலும்? போர் எப்போது துவங்கும்?’’

இதுவே, பாசறைக் குடிலின் அருகில் துறவியார் கூன்பாண்டியனிடம் கேட்ட கடைசிக் கேள்வி. அவர் இந்தக் கேள்வியைக் கேட்டதும், தலையை சற்று சாய்த்துப் புன்னகைத்து, ‘‘பொறுத்திருந்து பாருங்கள்’’ என்று கூறியவன், அதே புன்னகையுடன் நம்பி மற்றும் பொங்கியின் பக்கம் திரும்பி, ஏதோ அர்த்தம் பொதிந்த பார்வையை அவர்கள் மீது வீசிவிட்டு, சட்டென்று குடிசையில் இருந்து வெளியேறினான். அங்கே காத்திருந்த புரவியின் மீது தாவி ஏறியவன், அதைத் தட்டிவிட, மறுகணம் புயலாக பாய்ந்தது அவனுடைய புரவி. துறவியாரும் தன் புரவியில் ஏறி அவனைப் பின்தொடர்ந்தார்.
அதன் பிறகு, வெகுநேரம் வரையிலும் எதுவும் பேசிக் கொள்ளாமலும், சிற்சில இடங்களில் வெகுவேகமாகவும், சில இடங்களில் வேகத்தைத் தணித்தபடியும் தொடர்ந்தது அவர்களது பயணம். அப்படி வேகம் தணிந்திருந்த ஒரு தருணத்தில்தான் துறவியாரின் முகவாட்டத்தைக் கவனித்தான் மன்னவன்.

பாசறைக் குடிலை விட்டு புறப்பட்ட பிறகு, அவன் அனுஷ்டித்த மெளனமும், அதற்கு முன்பாக அவருக்கு சில விளக்கங்களை அவன் அளித்திருந்தாலும், அவை பூடகமான பதில்களாகவே அவருக்குத் தோன்றியிருந்தபடியாலும், துறவியார் மிகுந்த குழப்பத்தில் இருக்கிறார் என்பதை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது.  அவரின் சிந்தனைத் தீயை அணைக்க முற்பட்டவனாக, மெள்ள பேச்சுக் கொடுத்தான் பாண்டியன்.

‘‘துறவியாரே! தங்களின் முகவாட்டத்துக்குக் காரணத்தை நான் அறியலாமா?’’

‘‘தென்னவனே! காரணம் உங்களுக்குத் தெரியாததல்ல... தங்களது நிலைப்பாடும் செயல்பாடுகளும் மிகுந்த குழப்பத்தைத் தருகின்றன. அதைவிடவும், என் மீதும் தங்களுக்கு சந்தேகத் திரை விழுந்துவிட்டதோ என்ற எண்ணம் மிகவும் வாட்டுகிறது’’

‘‘விபரீதக் கற்பனை!’’ ஒற்றை வரியில் பதிலுரைத்தான் பாண்டியன்.

‘‘எது விபரீதம்? பாதுகாப்பு இல்லாமல் பகைவர் இடத்தில் தனியே உலவுகிறீர்கள். சோழர்களின் தூதுவப் பெண்ணைக் காப்பாற்றுகிறீர்கள். பிறகு, தாங்களே அவளைக் காயப்படுத்தி மயக்கத்தில் வீழ்த்துகிறீர்கள். அவளைக் காப்பாற்ற வந்தவனையும் சிறைப்படுத்துகிறீர்கள். அவர்கள் இங்கே இருப்பது நமக்கு ஆபத்து அல்லவா? அதற்காகத்தானே உங்களைத் தடுத்தேன் நான். இந்தச் செயல்களெல்லாம் உங்களுக்கு விபரீதமாகப் படவில்லையா?’’

என்று மூச்சிறைக்கப் பேசியவர் மேலும் ஒரு கேள்வியைக் கேட்டார்: ‘‘மன்னவா! நமது படை வியூகத்தின் சூட்சுமமும் எனக்கு விளங்கவில்லை. ஒருவேளை, அது எனக்கே தெரியக்கூடாத ரகசியம் என்று முடிவெடுத்து விட்டீர்களா?’’

அதற்குமேலும் அவருடைய ஆதங்கத்தை வளரவிட விரும்பாத பாண்டியன், அவரை

சிவமகுடம் - 23

ஆறுதல்படுத்தும்விதம் பதிலுரைத்தான்: ‘‘அதைத்தான் முன்னமே சொன்னேனே... எல்லாம் எதிர்பார்த்தபடி நிகழ்ந்து கொண் டிருக்கிறது என்று’’

‘‘என்ன நிகழ்கிறது’’

‘‘நமது அஸ்திர அணிகளில் ஒன்று உறை யூரை நெருங்கிவிட்டது’’

‘‘அது தெரியும். ஆனால், உறையூர் நமது இலக்கு இல்லை என்பது எனது கணிப்பு’’

‘‘உங்களின் கணிப்பு எப்போது பொய்த்திருக்கிறது துறவியாரே?!’’ என்றதுடன் சிறிது நகைக்கவும் செய்து, துறவியாரின் கடுமையைத் தணிக்க முற்பட்டான். ஆனால், அவர் விடுவதாக இல்லை.
‘‘இது விளையாடுவதற்கான தருணம் இல்லை மன்னவா!’’ என்றவர் தொடர்ந்து கேட்டார். ‘‘உறையூர் இலக்கு இல்லை என்றால், அதை நோக்கிய படை நகர்வும், உறையூர்க் கோட்டைக்குள்ளே சக்ரவியூக நடவடிக்கையும், சோழத்தின் எல்லையில் எரிபரந்தூட்டலும் எதற்காக மன்னவா?’’

இந்தக் கேள்விக்கு நேரிடையாகப் பதில் சொல்லவில்லை மன்னவன். மாறாக, ‘‘ஆஹா பலே பலே! பாண்டியனின் இமை அசைவும் துறவியாருக்குத் தெரியாமல் நிகழ வாய்ப்பில்லை போலும்’’ என்று கூறிச் சிரித்தான்.

இப்போது துறவியார் மன்னவன் பேச்சை இடைமறித்து, ‘‘என் பதவியின் பொருட்டு,  யாவற்றையும் அறிந்து வைத்திருக்கவேண்டிய அவசியம் எனக்கு உள்ளது மன்னவா’’ என்று விளக்கம் அளித்ததுடன், ‘‘இன்னும் என் சந்தேகங்களுக்கான பதில் தங்களிடம் இருந்து கிடைக்கவில்லை மன்னவா. உறையூரில் பின்னடைந்து சிறைப்பட்டிருக்கும் நம் வீரர்களின் நிலையையும் என்னால் அறிய முடியவில்லை’’ என்ற தனது ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்.

வேகம் தணித்து தளர்நடை போட்டுக்கொண்டிருந்த தன் புரவியின் முதுகில் ஆரோகணித்தபடி, அதன் பிடரியைப் பரிவு டன் தடவிவிட்டுக்கொண்டிருந்த மன்னவன், சட்டென்று நிமிர்ந்தான். இப்போது அவன் முகத்தில் புத்தொளி தெரிந்தது. அவன் பேச்சிலும் ஓர் உறுதி வெளிப்பட்டது.

‘‘விளக்கமாகச் சொல்கிறேன் துறவியாரே... நன்றாகச் செவிமடுத்துக் கொள்ளுங்கள். உறையூர் சிறுபோரில் நமக்கு ஏற்பட்டது பின்னடைவு அல்ல; சோழர்களை சிறிது மகிழ்ச்சியில் ஆழ்த்தி, அவர்களிடையே தளர்ச்சியை ஏற்படுத்த நாம் நடத்திய சிறு நாடகம். தவிர, எல்லையில் படைகுவிப்பும் எரிபரந்தூட்டலும்கூட அவர்களின் கவனத்தைச் சிதறடிக்கவே...’’

‘‘மேலும் குழப்புகிறீர்கள் மன்னவா! உறையூர் நம் இலக்கு இல்லையெனில், இந்த நடவடிக்கைகள் எல்லாம் எதற்கு?’’

துறவியாரின் இந்தக் கேள்விக்கு, பேரிடி யாய் ஒரு பதிலை வீசினான்... *செங்கோற் சேந்தனின் மைந்தனும், பாண்டிய பேரரசனு மான மாறவர்மன் அரிகேசரி: ‘‘உறையூரும் சோழமும் நம் இலக்கு இல்லைதான். ஆனால், உறையூரை மையமாகக் கொண்டு ஒட்டுமொத்த சோழமும் நம் போர்ப் பாசறை யாக வேண்டும். அதற்கு மணிமுடிச்சோழர் அனுமதிப்பாரா? ஆகவேதான் இப்படியான நடவடிக்கைகள்!’’

பதிலைக்கேட்டு அயர்ந்துபோனார் துறவி யார். அவருக்குச் சகலமும் புரிந்தது, பாண் டியன் வகுப்பது நிகழ்காலத்துக்கான வியூகம் அல்ல; எதிர்காலத்துக்கானது என்று.

மன்னவனுக்கு மிகவும் அணுக்கமான தமக்கே தெரியாத பெரும் வியூகமும் திட்டமும் பாண்டியனின் மனதில் இருப்பதை அறிந்த துறவியார் பெரிதும் மலைத்தார் என்றால், அந்தக் காட்டு வழியில் அடுத்த சில அடி தூரத்தில் நிகழ்ந்த விபரீதமும், பாண் டிய மன்னன் அதை எதிர்கொண்டவிதமும், அவரது மலைப்பை இன்னும் அதிகப்படுத்தின!

ஆம்! அந்தப் பாதையில் சிறிது தூரம் தள்ளி நின்றிருந்த பெரும் விருட்சத்தின் கிளையில் அமர்ந்திருந்த வீரன் ஒருவனது கையில், நெளிந்துகொண்டிருந்த கடும் விஷம் கொண்ட சர்ப்பத்தின் வடிவில் பேராபத்து காத்திருந்தது, கூன்பாண்டியனுக்கு!

அதேநேரம், உறையூரிலும் ஒரு விபரீதம் நிகழ்ந்து கொண்டிருந்தது.

அகழிக் காவிரி!

மூன்று பக்கங்களில் செயற்கை அகழிகள்  சூழ்ந்திருக்க, அவை அல்லாத வடதிசை பாகத்தில் இயற்கை அகழியாய் காவிரி யின் கிளையொன்று உறையூர்க் கோட்டை யைத் தழுவிச் சென்றது. மீதி மூன்று பக்கத் திலும் உள்ள அகழிக்கும், கோட்டை உபயோகத் துக்குமாக அந்த நதியில் இருந்து நீர்வரத்து வரும் விதம் வசதி செய்யப்பட்டிருந்தது. வெளித்தோற்றத்தில் வெகு அமைதியாகத் திகழ்ந்தாலும், அந்த நதியில் எப்போது வெள்ளம் அதிகரிக்கும், எப்போது குறையும் என்று எவராலும் கணிக்க இயலாது. தவிரவும், முதலைகளும் நீர்ச் சுழல்களும் அதில் அதிகம். இன்னும் சொல்வதானால்... கோட்டையின் வட திசையை பொன்னி நதியாளே தெய்வமாய் காத்து நின்றாள் எனலாம். ஆகவே, வழக்கமாக வடதிசை மதில் புறத்தில் காவலும் கண்காணிப்பும் அதிகம் தேவைப்படாது.

ஆனால், உறையூர் சிறு போருக்குப் பிறகு, மதிலின் மற்ற பக்கங்களில் இருந்தது போலவே, வடதிசை பாகத்திலும் காவலை பலப்படுத்தி இருந்தாள், இளவரசி மானி. அதாவது, ஏற்கெனவே அவள் வகுத்திருந்த வியூகப்படி மதிலைக் காத்து நின்றார்கள் வில்லாளிகள்; ஒருவன் கோட்டையின் உட்புறத்தை நோக்கியிருக்க, அவனை அடுத்தவன் வெளிப்புறத்தை நோக்கி நின்றிருந்தான். உள்ளேயோ புறத்தேயோ... தாக்குதல் எங்கிருந்து வந்தாலும் தாக்குப் பிடிக்க ஏதுவாக அமைந்திருந்தது அந்தக் கட்டுக்காவல். மதிலுக்கு மேல் மட்டுமின்றி, கோட்டைக்குள்ளும் வெளியேயும் வெளிப் படையாகவும் மறைவிடத்திலுமாகக் காத்திருந்தது சோழ சைன்னியம்.

நிலைமை இப்படியிருக்க, அதிஆபத்தான அகழிக் காவிரியின் நீர்ப்பரப்பில் தனது மூச்சுக் காற்றால் சிற்சில குமிழிகளை எழுப்பியதைத் தவிர, வேறு எந்த சந்தடியும் இல்லாமல்
மெள்ள தலைதூக்கினான் ஒருவன். மறுகணம் அவன் கரங்களும் நீர்ப் பரப்புக்கு மேல் எழுந்தன. வில்லும் கணையும் தாங்கி யிருந்த அவன் கரங்களில் ஒன்று, வில்லின் நாணை இழுக்க, மற்றொன்று கணை தொடுத்தது.

தனது வால்புறத்தின் பிணைக்கப்பட்டிருந்த கயிறுடன் பாய்ந்து சென்ற அந்தக் கணை, மதில் சுவரில் திறந்து கிடந்த ஒரு சாளரத்துக்குள் புகுந்தது! அவனைத் தொடர்ந்து வேறுசிலரும் நீர்ப்பரப்பில் தலைகாட்ட, ஆபத்தை உணர்த்தும் விதத்தில் மிகப் பெரிதாக முழங்கின, சோழதேசத்தின் முரசுகள்!

- மகுடம் சூடுவோம்...

* களப்பிரர்களை ஒடுக்கிய கடுங்கோனின் பெயரன் செழியன் சேந்தன். இவனை, செங்கோற் சேந்தன் என்றும் மண் மகளை மறுக்கடிந்த வேந்தர் வேந்தன் எனவும் சிறப்பிக்கிறது வேள்விக்குடி செப்பேடுகள்.