Published:Updated:

நான்கு வீதிகளில் வலம்வந்த பெரிய கோயில் தேரோட்டம்!

நான்கு வீதிகளில் வலம்வந்த பெரிய கோயில் தேரோட்டம்!
நான்கு வீதிகளில் வலம்வந்த பெரிய கோயில் தேரோட்டம்!

உலகப்புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நடைபெற்றது.

உலகப் புகழ்பெற்ற தஞ்சைப் பெரிய கோயில் தேரோட்டம், இன்று காலை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தியாகேசா ஆரூரா என்ற கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். தஞ்சாவூர் பெரிய கோயில் சித்திரைத் திருவிழா, கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஏறத்தாழ 100 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய தேர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த 2015-ம் ஆண்டு முதல் தேரோட்டம் நடந்து வருகிறது. இந்த வருடம்,  நான்காம் ஆண்டு தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. பதினாறரை  அடி உயரம்கொண்ட தேரில், சுமார் 25 அடி உயரத்துக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து 18 நாள்கள் நடைபெற்ற சித்திரைத் திருவிழாவில், காலை மாலைகளில் சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் வீதி உலா, திருமறை உலா என நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம், இன்று அதிகாலை 4 மணிக்கு பெரிய கோயிலிலிருந்து விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணியர், நீலோத்பலாம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகளுடன் தியாகராஜர்  உடனுறை கமலாம்பாள் சுவாமிகளைத் தேர் மண்டபம் அமைந்திருக்கும் இடமான மேலவீதிக்கு பக்தர்கள் துாக்கிவந்தனர்.

அங்குள்ள தேர்மண்டபத்தில் சுவாமிகளை வைத்துப் பூஜைகள் செய்தனர்.  அதன்பின்னர் முளைப்பாறி, மேளதாளம், ஓதுவார்கள் ஆகியோர் தனித்தனியாக அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் முன்னதாக அமர்ந்தனர். இதைத் தொடர்ந்து விநாயகர், வள்ளி, தெய்வானையுடன் சுப்ரமணியர் ஆகிய சுவாமிகளை தேருக்கு முன்னதாக இரண்டு சிறிய தேர்களில் வைத்தனர். தியாகராஜர் உடனுறை கமலாம்பாள் சுவாமியை தேரில் வைத்தனர்.  அதன் பின்னர்,  நீலோத்பலாம்பாள், சண்டிகேஸ்வரர் சுவாமிகளை வைத்தனர். 

அதன்பிறகு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, 5.40 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நடந்தது. அப்போது பக்தர்கள், 'தியாகேசா ஆரூரா' என்று கோஷமிட்டு சுவாமி தரிசனம்செய்தனர்.  அதன்பின்னர் தேர் மேலவீதி, வடக்குவீதி, கீழவீதி, தெற்குவீதி வழியாக மண்டபம் இருக்கும் இடமான மேலவீதியை 10.30 மணிக்கு வந்தடைந்தது. பக்தர்கள், தேங்காய் உடைத்து சுவாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக மேலவீதி, தெற்கு வீதி ஆகிய இடங்களில் தலா 3 இடங்களிலும், வடக்குவீதி, கீழவீதி ஆகிய இடங்களில் தலா 4 இடங்கள் என்று மொத்தம் 14 இடங்களில் அரண்மனை தேவஸ்தானம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து, 18 நாள்கள் நடக்கும் சித்திரைத் திருவிழா, வரும் 29-ம் தேதி கொடி இறக்கப்பட்டு நிறைவுபெறும். தேரோடும் வீதிகளில், போலீஸார் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
 

அடுத்த கட்டுரைக்கு