Published:Updated:

கலகல கடைசி பக்கம் - வித்தியாசமான தண்டனை!

கலகல கடைசி பக்கம் - வித்தியாசமான தண்டனை!
பிரீமியம் ஸ்டோரி
கலகல கடைசி பக்கம் - வித்தியாசமான தண்டனை!

யுவா, ஓவியம்: மகேஸ்

கலகல கடைசி பக்கம் - வித்தியாசமான தண்டனை!

யுவா, ஓவியம்: மகேஸ்

Published:Updated:
கலகல கடைசி பக்கம் - வித்தியாசமான தண்டனை!
பிரீமியம் ஸ்டோரி
கலகல கடைசி பக்கம் - வித்தியாசமான தண்டனை!
கலகல கடைசி பக்கம் - வித்தியாசமான தண்டனை!

து ஆறாம் வகுப்பு சி செக்‌ஷன். வகுப்பறை காலியாக இருந்தது. அவர்களுக்கு ரீடிங் பீரியர்ட் என்பதால், எல்லோரும் நூலகத்தில் இருந்தார்கள். மகேஷை மட்டும் ரகசியமாக சைகை காட்டி, வகுப்பறைக்கு அழைத்து வந்துவிட்டான் ரக்‌ஷன். “டேய் மகேஷ், வாசல் பக்கத்திலேயே நில்லு. யாராவது வந்தா சிக்னல் கொடு!” என்று சொல்லிவிட்டு, கடகடவென சிலரின் சாப்பாட்டுப் பையை எடுத்து, டிபன் பாக்ஸைத் திறந்தான்.

‘லன்ச் டைம்தான் முடிஞ்சுபோச்சே... காலி டிபன் பாக்ஸைத் திறந்து என்ன செய்யப்போறான்?’ என மகேஷ் குழம்ப, ரக்‌ஷன் செய்த காரியம் விசித்திரமாக இருந்தது. அவசர அவசரமாக ஏழெட்டு பேரின் லன்ச் பாக்ஸ் மூடிகளை மாற்றி மாற்றி மூடி, அவரவரின் பைகளில் போட்டான் ரக்‌ஷன்.

மகேஷின் குழப்பம் இன்னும் அதிகரித்தது!

ரக்‌ஷன் நல்ல பையன்தான். ஆனால், ரொம்ப குறும்புக்காரன். இன்று சயின்ஸ் மிஸ் வீட்டு விலங்குகள் பற்றிப் பாடம் நடத்திக்கொண்டிருந்தபோது, ‘மியாவ்’, ‘லொள்’, ‘ம்மேமேமே’ என்றெல்லாம் பெஞ்சுக்கடியில் குனிந்து குரலெழுப்பிக் கொண்டிருந்தான். பூனையையும் நாயையும்  தவறவிட்ட மிஸ், ஆட்டை கப்பென பிடித்துவிட்டார்.

ஆட்டின் காதைத் திருகியபடி, “திருட்டுத்தனமா குரல் கொடுத்தா எப்படி ஆடே? நல்லா எல்லாருக்கும் கேட்கிற மாதிரி கத்திக்கிட்டு, வகுப்பறையை பத்து சுத்து சுத்தி வா!” என்று தண்டனை கொடுத்துவிட்டார். ரக்‌ஷன் ஆடு போல் கத்தியபடி பரிதாபமாக வகுப்பறையைச் சுற்றிச் சுற்றி வந்ததைப் பார்த்துப் பிள்ளைகள் அனைவரும் கேலியாகச் சிரித்தனர். அதற்குப் பழி வாங்கத்தான் இந்தத் திட்டம்.

ஆனால், திட்டத்தைப் பூரணமாகச் செயல்படுத்துவதற்குள் கையும் களவுமாகப் பிடிபட்டான். அந்தப் பக்கமாக வந்த பிரின்ஸிபால் உள்ளே எட்டிப் பார்த்து, “ரெண்டு பேரும் இங்கே என்ன பண்றீங்க?” எனக் கேட்க, திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தார்கள் ரக்‌ஷனும் மகேஷும். ஏதேதோ சொல்லி சமாளிக்கப் பார்த்தான் ரக்‌ஷன்.

ஆனால், அவன் கையில் இருந்த டிபன் பாக்ஸும், திருதிரு விழியும் பிரின்ஸிபாலுக்கு சந்தேகத்தை ஏற்படுத்த, இருவரையும் தனது அறைக்கு அழைத்துச் சென்று, மிரட்டிக் கேட்டார்.
வேறு வழியின்று உண்மையை ஒப்புக்கொண்டான் ரக்‌ஷன். மகேஷோ அடியை எதிர்பார்த்து அழுவதற்குத் தயாரானான். ஆனால், பிரின்ஸிபாலின் முகத்தில் புன்னகை.

“வித்தியாசமா திங்க் பண்றே, ரக்‌ஷன். ஆனா, அதை தப்பா யூஸ் பண்ணியிருக்கே. அவ்ளோதான்! நம்மோட சிந்தனையும் செயலும் மத்தவங்களை சந்தோஷப்படுத்தறதுக்குப் பயன்படணுமே தவிர, வருத்தப்பட வைக்கக்கூடாது.

இப்ப நீ செய்ததையே ஒரு ஆக்டிவிட்டியா செய்யலாமே! டிபன் பாக்ஸ் மூடிகளை மாத்திப் போட்டு, அஞ்சு நிமிஷத்துக்குள்ளே சரியா போடச் சொல்லி, ஒரு கேம் வெச்சா சூப்பரா இருக்குமில்லே. இதை உன்னோட ஐடியாவாக நாளைக்கே பிரேயரில் சொல்றேன். இது போல இன்னும் நிறைய ஐடியாஸ் கொடு. சரியா?” என்று ரக்‌ஷனின் தோளைத் தட்டினார் பிரின்ஸிபால்.

ரக்‌ஷனின் முகம் மலர்ந்தது.

“ஓகே மேம்!” என்றான் உற்சாகமாக.

தான் கொடுக்கும் தண்டனைகள் மாணவனைத் திருத்தி நல்வழிப்படுத்துவதாக அமைய வேண்டுமே தவிர, அவன் மனத்தில் வெறுப்பையும் பழிவாங்கும் உணர்ச்சியையும் ஏற்படுத்தி, அவனை மேலும் மேலும் தப்பு செய்யத் தூண்டுவதாக இருக்கக் கூடாது என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார் பிரின்ஸிபால்.