Published:Updated:

வசிஷ்டருக்குப் பெருமாள் தரிசனம், காவிரிக்குச் சாப விமோசனம்... சிறப்புகள் பல பெற்ற வடரங்கம்!

வசிஷ்டருக்குப் பெருமாள் தரிசனம், காவிரிக்குச் சாப விமோசனம்... சிறப்புகள் பல பெற்ற வடரங்கம்!
வசிஷ்டருக்குப் பெருமாள் தரிசனம், காவிரிக்குச் சாப விமோசனம்... சிறப்புகள் பல பெற்ற வடரங்கம்!

வடரங்கத்தில், பெருமாள் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்ட கோலத்தில் காட்சிதருகிறார்...

திகளில் காவிரிக்கு எப்போதுமே தனிச் சிறப்பு உண்டு. காவிரிதான் மூன்று இடங்களில் இரண்டாகப் பிரிந்து செல்கிறது. தீவு போன்று திகழும் அந்த மூன்று இடங்களுமே வைணவத் திருத்தலங்களாக அமைந்திருப்பது, காவிரிக்குக் கிடைத்த தனிப்பெருமை. காவிரி உற்பத்தியாகும் இடத்திலிருந்து வரிசைப்படுத்திப் பார்த்தால், முதல் தீவு - ஸ்ரீரங்கப்பட்டணம். இதை 'ஆதிரங்கம்’ என்பார்கள். அடுத்தது சிவசமுத்திரம். இது 'மத்திய ரங்கம்.’ மூன்றாவது, நமது 'திருவரங்கம்.’ இதை, 'பூர்வரங்கம்’ என்று அழைப்பார்கள். பூர்வரங்கமான திருவரங்கத்தைப்போலவே, மற்றொரு தலமும் நாகை மாவட்டம் சீர்காழிக்கு அருகில் அமைந்திருக்கிறது. 'வடரங்கம்' என்று அழைக்கப்படும் இந்தத் தலம் கொள்ளிடம் மற்றும் ராஜன் ஆற்றுக்கிடையில் அமைந்திருக்கிறது.

பஞ்ச அரங்க க்ஷேத்திரங்களாகப் போற்றப்படும் திருமலைரங்கம், ஶ்ரீரங்கம், வடரங்கம், பரிமளரங்கம், ஶ்ரீரங்கப்பட்டினம் ஆகிய ஐந்து அரங்க க்ஷேத்திரங்களில் ஒன்றான வடரங்கத்தில், பெருமாள் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்ட கோலத்தில் காட்சிதருகிறார்.

பவிஷ்யோத்திர புராணத்தில் இந்தத் தலத்தைப் பற்றிய வரலாறு இடம்பெற்றிருக்கிறது. காவிரி, தனக்கு அகத்திய முனிவரால் ஏற்பட்ட சாபத்தைப் போக்கிக்கொள்வதற்காக, சங்கு தீர்த்தத்துடன் வடரங்கத்துக்கு வந்து ஏழு நாள்கள் தவமியற்றினாள். காவிரியின் தவத்துக்கு இரங்கிய பெருமாள், ஆவணி மாதம் பௌர்ணமியன்று காவிரிக்குத் தரிசனம் தந்ததுடன், 'காவிரியே, அகத்தியரால் உனக்கு ஏற்பட்ட சாபம் விலகிவிட்டது. இனி நீ உன் கணவனுடன் சென்று சேர்வாயாக' என்று ஆசீர்வதித்தார். அதன்படி இந்தத் தலத்தில் சாபம் விலகிய காவிரி, தன் கணவனாகிய சமுத்திரராஜனிடம் சென்று சேர்ந்ததாக தலவரலாறு கூறுகிறது.

இந்தக் கோயில் வசிஷ்ட முனிவரால் ஸ்தாபிக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. தம்முடைய மகன் இறந்த துக்கத்திலிருந்து விடுபடவேண்டி, வசிஷ்ட முனிவர் தினமும் காலையில் காசியில் நீராடி, பகலில் ஶ்ரீரங்கத்தில் நீராடி, மாலையில் சேது தலத்தில் நீராடி, இறந்த மகனுக்கான கடன்களை நிறைவேற்றி வந்தார். ஒருநாள் மின்னல், இடியுடன் மழை பெய்ததால், அவரால் ஶ்ரீரங்கம் செல்ல முடியவில்லை. வசிஷ்டர் வருத்தத்துடன் கலங்கி நிற்க, அவருடைய வருத்தத்தைப் போக்கத் திருவுள்ளம் கொண்ட பகவான், அவருக்கு வடஆரண்ய க்ஷேத்திரமான வடரங்கத்தில் தரிசனம் தந்தார். பகவானின் தரிசனம் கண்டு மகிழ்ந்த வசிஷ்டர், தமக்குத் தரிசனம் தந்த இறைவன் அங்கேயே கோயில் கொண்டு, உலக மக்கள் அனைவருக்கும் நன்மைகளை அருள வேண்டும் என்பதற்காக பகவானுக்கு எழுப்பிய கோயில்தான் வடரங்கம் ரங்கநாத பெருமாள் கோயில்.

முற்காலத்தில் சௌராஷ்டிர தேசத்தை ஆட்சி செய்துவந்த மன்னர் சந்திரகீர்த்தியின் புகழ் தேசமெங்கும் பரவியிருந்தது. ஆனால், பூர்வஜன்ம வினைப் பயன் காரணமாக, அவருடைய மகனுக்குக் குஷ்டரோகம் ஏற்பட்டது. குஷ்டரோகத்தால் அவதிப்பட்ட தன்னுடைய மகனை அழைத்துக்கொண்டு பல தலங்களுக்கும் சென்று வழிபட்டார் சந்திரகீர்த்தி. இறுதியில் வடரங்கம் தலத்துக்கு வந்து மனமுருகப் பெருமாளை வழிபட்டபோது, மகனின் குஷ்டநோய் நீங்கி பூரண நலம் பெற்றதாகச் சொல்லப்படுகிறது.

இந்தக் கோயிலைப் பற்றிய விவரங்களைத் தெரிந்துகொள்ள சுந்தரேச சிவாசார்யாரிடம் பேசினோம்.

வசிஷ்ட முனிவர் வழிபட்ட பெருமைக்கு உரிய இந்தக் கோயில், 1924-ம் ஆண்டில் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது சிதைந்துவிட்டது. கோயில் முற்றும் சிதிலமடைந்துவிட்டாலும், கருவறையில் பள்ளிகொண்டிருந்த ரங்கநாதரின் திருவுருவம் எந்த ஒரு சேதமும் இல்லாமல், பொலிவுடன் இருந்தது அதிசயம்தான்! சிறிது காலத்துக்குப் பிறகு, பகவான் சிலரின் கனவில் தோன்றி, இப்போதுள்ள இடத்தில் தமக்கு ஓர் ஆலயம் எழுப்பும்படி உத்தரவிட்டார். அதன்படி 1925-ம் வருடம் இந்தக் கோயில் கட்டப்பட்டது. பெருமாளுடன், ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர், சக்கரத்தாழ்வார், நரசிம்மர் ஆகியோரும் காட்சிதருகின்றனர். ரங்கநாயகி தாயார் தனிச் சந்நிதியில் காட்சி தருகிறார். இந்தக் கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு, வைகாசி பிரம்மோற்சவம், மார்கழி வைகுண்ட ஏகாதசி ஆகிய விழாக்கள் கொண்டாடப்படுகின்றன'' என்றார்.

எங்கிருக்கிறது எப்படிச் செல்வது?

சீர்காழி பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்திலிருந்து மேற்கே சுமார் 12 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது வடரங்கம் திருத்தலம். பஸ், கார், ஆட்டோ வசதிகள் உண்டு.

அடுத்த கட்டுரைக்கு