Published:Updated:

ஆண்டுக்கொரு முறை அருள் தரும் மங்கலதேவி கண்ணகி! - சித்ரா பௌர்ணமி ஒருநாள் தரிசனம்! #ViktanInfography #Video

ஆண்டுக்கொரு முறை அருள் தரும் மங்கலதேவி கண்ணகி ஒருநாள் தரிசனம்....

ஆண்டுக்கொரு முறை அருள் தரும் மங்கலதேவி கண்ணகி! - சித்ரா பௌர்ணமி ஒருநாள் தரிசனம்! #ViktanInfography #Video
ஆண்டுக்கொரு முறை அருள் தரும் மங்கலதேவி கண்ணகி! - சித்ரா பௌர்ணமி ஒருநாள் தரிசனம்! #ViktanInfography #Video

ஐம்பெருங்காப்பியங்களில், 'சிலப்பதிகாரம்' தனிச் சிறப்பு கொண்டது. பூம்புகார்ச் செல்வியாம் கண்ணகியின் கற்புநலத்தை விவரிக்கும் அற்புதக் காவியம் சிலப்பதிகாரம்.

சிலப்பதிகாரத்தின் வஞ்சிக்காண்டம், வரம்தரு காதையில் கண்ணகியைப் பற்றிக் குறிப்பிடுகையில். 'மங்கல மடந்தை' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. நீதி தவறிய பாண்டியனின் தீர்ப்பினால் கணவனை இழந்த கண்ணகியை, 'மங்கல மடந்தை’ என்று அழைப்பது சரியா?.

நம்முடைய கேள்விக்கு விடையாக அமைந்ததுதான் தேனி மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையில், கூடலூருக்கு அருகிலுள்ள பளியன்குடி என்னும் கிராமத்திலிருந்து சுமார் ஆறு கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் கண்ணகி கோயில் பகுதியில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் நடைபெற்ற ஒரு சம்பவம்.

அந்தச் சம்பவம்...

மதுரையை எரித்த கண்ணகி இந்தப் பகுதிக்கு வந்து சேர்ந்தாள். அங்கிருந்த வேங்கை மரத்தினடியில் 14 நாள்கள் அமர்ந்து, தனக்கு ஏற்பட்ட சோகத்தை எண்ணியெண்ணி மனம் குமைந்திருந்தாள். அந்தப் பகுதியில் வாழ்ந்து வந்த குறவர் இன மக்களின் நடனமும் பாட்டும் கவலையை மறக்க அவளுக்கு சற்றே உதவி செய்தன. 14-ம் நாள் மாலை விண்ணிலிருந்து புஷ்பக விமானத்தில் வந்து இறங்கிய கோவலன், கண்ணகிக்கு மங்கல நாண் அணிவித்து, தன்னுடன் விமானத்தில் அழைத்துச் சென்றான். எனவேதான் இளங்கோவடிகள், கண்ணகியை 'மங்கல மடந்தை’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த அற்புதக் காட்சியைக் கண்ட அந்தப் பகுதி மக்கள், தங்களுடன் இத்தனை நாள்கள் இருந்த கண்ணகியின் கற்புத் திறனை எண்ணி வியந்தனர்.


 

சில காலத்துக்குப் பிறகு அந்தப் பகுதிக்கு வேட்டையாட வந்த மன்னன் சேரன் செங்குட்டுவனிடம் அங்கிருந்த மக்கள், தாங்கள் கண்ட தெய்விகக் காட்சியைப் பற்றித் தெரிவித்தார்கள். கண்ணகியின் கற்புத் திறனை காலமெல்லாம் அனைவரும் போற்றும்படிச் செய்ய விரும்பிய மன்னன் சேரன் செங்குட்டுவன், வட தேசத்துக்குச் சென்று எதிர்ப்பட்ட அரசர்களான கனக விசயர்களை அடக்கி, இமயத்திலிருந்து கொண்டு வந்த கல்லைக் கொண்டு இப்போதிருக்கும் இடத்தில் கண்ணகிக்கு கோயில் கட்டினார் என்பது கண்ணகி கோயிலின் வரலாறு.

அன்று முதல் கண்ணகி வழிபாடு மிகச் சிறப்பாக நடைபெற்று வந்தது. தமிழக மக்கள் கற்புக்கரசியாம் கண்ணகிக்கு தாங்கள் விரும்பியபோதெல்லாம் பொங்கல் வைத்து வழிபட்டதுடன், சிலப்பதிகாரம் முற்றோதலும் செய்திருக்கிறார்கள். நினைத்தபோதெல்லாம் கண்ணகியை வழிபட்ட காலம் மாறி, இன்றைக்கு ஆண்டுக்கு ஒருமுறை சித்ரா பௌர்ணமியன்று மட்டுமே கண்ணகியை வழிபடும் நிலை ஏற்பட்டுவிட்டது பரிதாபம்தான். 

தமிழக எல்லையிலிருந்து பயணத்தைத் தொடங்குபவர்கள் அனுமதி பெற்று, காலை ஆறு மணிக்குக் கிளம்பினால், ஒரு மணி நேரத்தில் கண்ணகி கோயிலை அடைந்துவிடலாம். கேரள மாநிலம் குமுளியிலிருந்து கார், ஜீப் மூலம் செல்பவர்கள் வனத்துறையிடம் அனுமதி பெற்று சோதனைக்குப் பிறகு அனுமதிக்கப்படுகிறார்கள்.

தமிழகத்திலிருந்து செல்லும் பக்தர்களே புற்கள், செடிகளை அப்புறப்படுத்தி கோயிலை தூய்மைப்படுத்துகிறார்கள். முன்னர் இந்தக் கோயிலில் ஒரு கண்ணகி சிலை இருந்ததாகச் சொல்கிறார்கள். இப்போது, எந்தச் சிலையும் இல்லை. செல்லும் பக்தர்கள், கண்ணகி அம்மன் சிலம்புடன் இருப்பதைப் போன்ற சிலையைச் சந்தனத்தால் செய்து, கோயிலுக்குள் பிரதிஷ்டை செய்கிறார்கள். அந்த அம்மனுக்கு முன்பாக சிலம்பைவைத்து, சிலப்பதிகாரத்தை முற்றோதல் செய்கிறார்கள். பிறகு, பொங்கலிட்டு படையல் செய்து வணங்கிவிட்டுத் திரும்புகிறார்கள்.


காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை மட்டுமே வனத்துக்குள் நுழைய கேரள வனத்துறையினர் அனுமதிக்கிறார்கள். அதற்குள் வழிபாட்டை முடித்துக்கொண்டு திரும்பி வந்துவிட வேண்டும். தமிழகப் பகுதியிலிருந்து நடந்து செல்லும் பக்தர்கள் குடிப்பதற்கு தண்ணீர் மற்றும் உணவுப் பொருள்களைக் கொண்டு செல்வது நல்லது.

வரும் ஏப்ரல் மாதம் 30-ம் தேதி சித்திரை முழு நிலவு நாளான அன்று மட்டும் மங்கல தேவி கண்ணகியின் கோயிலுக்குச் சென்று அவளது அருளைப் பெறலாம். அதிலும் சுற்றிலும் மரங்கள் சூழ்ந்திருக்க, அடர்ந்த வனத்தின் வழியே பயணித்து கண்ணகியை வழிபடுவது பரவசம் தரும் அற்புத வைபவமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.

நினைத்தபோதெல்லாம் கண்ணகி கோயிலுக்குச் சென்று வழிபட்ட நிலை மாறி, ஆண்டுக்கு ஒருநாள் சித்ரா பௌர்ணமியன்று மட்டுமே செல்லவேண்டிய அவலநிலை ஏன் தமிழக மக்களுக்கு ஏற்பட்டது?

1976-ம் வருடம் தமிழக அரசு கண்ணகி கோயிலுக்குச் செல்ல சாலை அமைக்கும் பணியைத் தொடங்கியது. அப்போதைய அரசியல் சூழ்நிலையின் காரணமாக சாலை அமைக்கும் பணி தடைப்பட்டுவிட்டது. ஆனால், அதே தருணத்தில் கேரள அரசு கண்ணகி கோயிலுக்கு அவசர அவசரமாக சாலை அமைத்துவிட்டது. அதையே காரணமாகக் கொண்டு, இந்திய தொல்லியல் துறையினர், கண்ணகி கோயில் நிர்வாகத்தை கேரள அரசின் தொல்லியல் துறையினரிடம் ஒப்படைத்துவிட்டனர். அப்போது பறிபோனதுதான் கண்ணகி கோயிலிடம் தமிழர்களுக்கு இருந்துவந்த உரிமை.இன்றும் தமிழக எல்லைக்குள்தான் கண்ணகி கோயில் அமைந்திருக்கிறது. ஆனால், கவனிப்பாரின்றி சிதிலமடைந்த நிலையிலேயே காணப்படுகிறது. கோயிலைச் சீரமைக்க ஐம்பது லட்ச ரூபாய்க்கு மேல் நிதி ஒதுக்கியும்கூட, கேரள தொல்லியல் துறை மற்றும் கேரள வனத்துறையினருக்கு இடையே ஏற்பட்டிருக்கும் கருத்து வேறுபாடுகளின் காரணமாக, கற்பரசியின் கோயில் பரிதாப நிலையிலேயேதான் காட்சி தருகிறது.

இதுகுறித்து மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளையின் தலைவர் புலவர் தமிழாதனிடம் பேசியபோது, ''பக்தர்கள் நினைத்தபோதெல்லாம் எந்தச் சிரமும் இடையூறும் இல்லாமல் கற்புக்கரசி கண்ணகி தேவியை வழிபட்டுத் திரும்பி வரும் காலம் வர வேண்டும் என்று அந்தக் கண்ணகி தேவியிடமே வேண்டிக்கொண்டிருக்கிறோம். சித்ரா பௌர்ணமியன்று கோயிலுக்கு வரும் பக்தர்களுக்குத் தேவையான தண்ணீர், உணவு ஆகியவற்றை வழங்கிக்கொண்டிருக்கிறோம்" என்று தெரிவித்தார்.

வரும் 30-ம் தேதி சித்திரை பெளர்ணமி அன்று ஒரு நாள் மட்டும் கண்ணகி தேவியை வழிபட அனுமதி உண்டு. தனக்கான நீதியைப் போராடிப்பெற்ற கண்ணகி தேவியை வழிபட்டு அவளது அருளைப் பெறுவோம்...

எப்படிச் செல்வது?

மங்கலதேவி கண்ணகியின் கோயிலுக்கு தேனி மாவட்டம் பளியங்குடி வழியாகவும், கேரள மாவட்டம் குமுளியிலிருந்தும் செல்லலாம். கார், ஜீப் வழியே செல்பவர்கள் குமுளியிலிருந்தும், நடந்து செல்பவர்கள் தேனி மாவட்டம், பளியங்குடி வழியாகவும் என அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப பாதையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்.