
நீங்காத நிலப்பிரச்னைகள் எல்லாம் நீக்கி, நிலவளம் அருளும் வரலாற்றுத் தலம் ஸ்தல சயனப் பெருமாள் கோயில்... காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான மாமல்லபுரத்தில் உள்ள தொன்மையான ஆலயம் !
திவ்ய திருவடியில் அபூர்வ தாமரை
“108 திவ்ய தேசங்களில் 63-வது திவ்ய தேசம் இந்த ஸ்தல சயனப் பெருமாள் கோயில். திருப்பாற்கடலில் வைகுண்டநாதனாக, பாம்பின்மீது சயனித்து பக்தர்களின் பாவங்களைக் களைந்து வருகிறார் பள்ளிகொண்ட பெருமாள். அதே தோற்றத்தில், இங்கே தரையில் சயனித்தபடி பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார் திருமால்” என்கிற அர்ச்சகர் ஆனந்தசயன பட்டாச்சார்யர், இக்கோயிலின் பெருமைகளை விவரிக்கிறார்...

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

``பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட கடற்கரைக் கோயிலில் சிவனும் விஷ்ணுவும் ஒன்றாகக் காட்சியளிக்கிறார்கள். பின்னாளில் அக்கோயில் சிதிலமடைந்தபோது, 14-ம் நூற்றாண்டைச் சேர்ந்த விஜயநகர மன்னர்களில் ஒருவரான பராங்குச மன்னன், ஊரின் மத்தியில் இத்தலத்தை எழுப்பி, வழிபாடு நடத்தத் தொடங்கினான். இத்தலத்தில், நான்கு திருக்கரங்களுடன் பூதேவி, ஸ்ரீதேவி இன்றி, தரையில் படுத்த நிலையில், வேறு எங்கும் இல்லாத எளிமையான திருக்கோலத்தில் ஸ்தல சயனப் பெருமாளாகக் காட்சியளிக்கிறார், திருமால். பன்னிரு ஆழ்வார்களும் இக்கோயிலில் தனித்தனியாக சந்நிதி கொண்டிருக்கின்றனர். இங்கே திருமங்கையாழ்வார் மங்களசாசனம் பாடியிருக்கிறார். ஆழ்வார்கள் முதல் மூவரில் ஒருவரான பூதத்தாழ்வார் அவதரித்த இடம், இத்தலம் என்பதும் சிறப்பு.
புண்டரீக முனிவர் யாத்திரை சென்றபோது, ‘மாமல்லபுரம் அருகே அபூர்வமாக தாமரை ஒன்று மலர்ந்திருக்கிறது. அம்மலரைப் பறித்து, திருப்பாற்கடலில் உள்ள பரந்தாமனின் திவ்ய திருவடியில் சமர்ப்பித்து அழகுபார்க்க வேண்டும்’ என அசரீரி ஒன்று அவருக்குக் கட்டளை பிறப்பித்தது. அந்தக் குளம் தேடிச் சென்றார், புண்டரீக முனிவர். அங்கே ஆயிரம் இதழ்களோடு கூடிய அழகான தாமரை பூத்துக் குலுங்கியது கண்டு, அதைப் பறித்து எடுத்துக்கொண்டு திருப்பாற்கடல் நோக்கிச் சென்றார். வழியில், கருங்கடல் ஒன்று இடையூறாக இருந்தது. அந்தக் கடல் நீரை கையில் இருந்த ஓடு கொண்டு இறைக்க முயன்றார் புண்டரீக முனிவர். எவ்வளவு இறைத்தாலும் நீரின் அளவு குறையவே இல்லை. இருந்தும், இரவு பகல் பாராது தண்ணீரை இறைத்துக் கொண்டிருந்தார் முனிவர்.
ஒரு கட்டத்தில் மனம் இரங்கிய பெருமாள், முதியவர் தோற்றத்தில் அங்கு சென்று, ‘பெரியவரே, வராஹ பெருமாள் கோயிலில் பூஜை நடந்துகொண்டிருக்கிறது. களைப்பாக இருப்பதால், என்னால் அவ்வளவு தூரம் நடக்க முடியவில்லை. எனக்காகத் தாங்கள் அங்கு கொஞ்சம் சென்று பிரசாதம் வாங்கி வர முடியுமா? அதுவரை நான் நீரை இறைத்துக்கொண்டு இருக்கிறேன்’ என அவரிடம் இருந்த ஓட்டை வாங்கி, அதன்மூலம் ஒருமுறை கடல் நீரை இறைத்தார்.
உடனே, கடலில் பத்து காதம் தண்ணீர் உள்வாங்கியது. வியந்து போன புண்டரீக முனிவர், ‘நல்லது. நீங்கள் நீர் இறைத்துக் கொண்டே இருங்கள். நான் பிரசாதம் வாங்கி வருகிறேன்’ என்று, வராஹ பெருமாள் கோயிலுக்குச் சென்று, பிரசாதம் வாங்கிக் கொண்டு திரும்பினார்.
என்னே அதிசயம்! அவர் திரும்பி வந்தபோது அங்கே துளியும் தண்ணீர் இல்லை. வெறும் மணலாகவே காட்சியளித்தது அந்த இடம். முதியவரைச் சுற்றித் சுற்றித் தேடினார் முனிவர். அங்கே அந்தப் பெரியவர் பெருமாளாகத் தரையில் சயனித்து, முனிவர் கொண்டு வந்த ஆயிரம் இதழ் தாமரைப் பூவைத் தமது திருவடியில் வைத்தபடி காட்சியளித்தார்.

நெகிழ்ச்சியும் பரவசமுமாக சிலிர்த்து நின்ற அம்முனிவருக்கு, ‘இந்தத் தலத்தில் கர்ம காரியங்கள் செய்தால் வழக்கத்தைவிட ஆயிரம் மடங்கு அதிக பலன் கிட்டும்’ என பெருமாள் வரம் கொடுத்ததாக ஐதீகம். இத்தலத்தின் மகிமை அறிந்த பகீரதன், இவ்விடம் வந்து, முன்னோர் மோட்சத்துக்காக வேண்டி வழிபட்டிருக்கிறார்.
மண், மணம், மகப்பேறு
நிலம், வீடு தொடர்பான பிரச்னை இருப்பவர்கள், இங்கு வேண்டிக்கொண்டால் தீர்வு கிடைக்கும். நெய்விளக்கேற்றி, இரவில் தாயார் நிலமங்கையை அர்ச்சனை செய்தால், திருமணம் நடக்கும்.
“எங்க மாமனாருக்கும் எங்க வீட்டுக்காரருக் கும் 25 வருஷமா சொத்து பிரச்னை இருந்து. வீடு கட்டத் தொடங்கும்போதெல்லாம் தடங்கல். செவ்வாய்தோறும் இங்கு வந்து 9 வாரம் நெய்விளக்கு ஏற்றி வழிபட்டேன். சில தினங்களிலேயே எங்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்தது. இப்போது அந்த இடத்தில் வீடு கட்டிவிட்டோம்” என்கிறார், மாமல்லபுரத்தைச் சேர்ந்த கல்பனா, மகிழ்ச்சி ததும்பும் குரலில்.
குழந்தைப்பேறு இல்லாதவர்கள், அவர்களின் ஜன்ம நட்சத்திரத்தன்று சமுத்திரத்தில் நீராடி, ஈரப்புடவையுடன், நிலமங்கைத் தாயார் சந்நிதியின் வாசற்படியை நெய்யால் மெழுகி, சர்க்கரை மாவில் கோலம் போட்டு, தம்பதியின் பெயரில் அர்ச்சனை செய்து, 9 முறை அம்பாளைச் சுற்றி
வந்து மனமுருகி வேண்டினால், அடுத்த வருடமே குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.
- பா.ஜெயவேல்
விசேஷங்கள்: சித்திரை மாதத்தில் பத்து நாள் பிரம்மோற்சவம், ஐப்பசி மாதத்தில் இவ்வூரில் பிறந்த ஆழ்வாருக்குப் பத்து நாள் திருவிழா, மாசி மாதத் தெப்பத் திருவிழா ஆகியவை சிறப்பாக நடைபெறும். வைகானச ஆகம முறைப்படி மூன்று கால பூஜைகள் நடைபெறும்.

எப்படிச் செல்வது?: சென்னையில் உள்ளவர்கள் கிழக்குக் கடற்கரைச் சாலை வழியாக மாமல்லபுரம் வரலாம். தென்மாவட்டங்களில் உள்ளவர்கள் செங்கல்பட்டு வழியாகவும், கிழக்குக் கடற்கரை சாலை வழியாகவும் மாமல்லபுரம் வரலாம். மாமல்லபுரம் பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ளது ஆலயம்.
நடைதிறந்திருக்கும் நேரம்: காலை 7 மணி முதல் பிற்பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும்...