Published:Updated:

''மனம் உடைந்துபோன மனிதனுக்கு இறைவன்தான் ஊன்றுகோல்’’ - பழ.கருப்பையா #WhatSpiritualityMeansToMe

''மனம் உடைந்துபோன மனிதனுக்கு இறைவன்தான் ஊன்றுகோல்’’ - பழ.கருப்பையா #WhatSpiritualityMeansToMe
''மனம் உடைந்துபோன மனிதனுக்கு இறைவன்தான் ஊன்றுகோல்’’ - பழ.கருப்பையா #WhatSpiritualityMeansToMe

''மனம் உடைந்துபோன மனிதனுக்கு இறைவன்தான் ஊன்றுகோல்’’ - பழ.கருப்பையா #WhatSpiritualityMeansToMe

பழ.கருப்பையா, எல்லோரிடமும் வெளிப்படையாகப் பழகக்கூடியவர். ஆன்மிகம், தத்துவம், அரசியல்... என உலகளாவிய நூல்கள் பலவற்றையும் வாசிப்பவர். எந்தத் தலைப்பைக் கொடுத்தாலும் மணிக்கணக்கில் பேசும் திறன் மிக்கவர்.  அவரிடம் அவர் கடைப்பிடிக்கும் ஆன்மிகம் குறித்துக் கேட்டோம். 

''நான் இறை நம்பிக்கை உள்ளவன். 'நம்பிக்கை என்பதே உண்மையின் மறுதலிப்பு’ என்பார் பெர்ட்ராண்ட் ரஸ்ஸல். இறைவனை நேரில் கண்டவர்களோ, அறிந்தவர்களோ எவரும் இல்லை. காந்திஜிக்கே காட்சியளிக்காத இறைவன், வேறு யாருக்குக் காட்சியளிக்கப் போகிறார் என்று நான் நினைப்பதுண்டு. 


கம்பர், இறைவனைப் பற்றிச் சொல்வார்... 'ஒன்று என்று சொன்னால் ஒன்று, பல என்று சொன்னால் பல, ஆம் என்று சொன்னால் ஆம்,  இல்லை என்று சொன்னால் இல்லை.’ 'இதுதான் இவனுடைய இருப்பு என்றால்,  இவனை நம்பி நாம் எதைச் செய்வது?’ என்பார். 
எனவே, இங்கு பலரும் கடவுளை உய்த்து உணர்ந்துதான் கடவுளைப் பேசுகிறார்களே ஒழிய, கடவுளைக் கண்டவர்கள் யாரும் இல்லை.

'கடவுள் நம்பிக்கை உள்ளவனுக்கும் இல்லாதவனுக்கும் ஒழுக்கத்திலே வேறுபாடு இருக்கும்' என்பது ஆய்ந்து தெளிந்தவர்களின் கருத்து.  ஏனென்றால், கடவுள் நம்பிக்கை உள்ளவன் தானாக வரித்துக்கொண்ட இறை அச்சத்தின் காரணமாக, தன்னை ஒழுங்குபடுத்திக்கொள்வதில் கவனமாக இருப்பான். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களிலும் எத்தனையோ ஆயிரம் பேர் நேர்மையானவர்கள் உண்டு. ஜவஹர்லால் நேருவும் பெரியாரும் நேர்மையாக வாழ்ந்தவர்கள்தான்.  

ஆனால், பெருவாரியான மக்கள் இறை நம்பிக்கை உள்ளவர்களாக இருப்பதால்தான் இந்த உலகம் ஓரளவு சீராக இயங்குகிறது. இறை நம்பிக்கைதான் ஒரு மனிதன் தன்னை சீர்செய்துகொள்வதில் துணையாக இருக்கிறது. இமானுவல் கான்ட் எனும் எழுத்தாளர் 'கடவுள் இருக்கிறார் என்றும் சொல்ல முடியவில்லை. இல்லை என்றும் சொல்ல முடியவில்லை. உலக ஒழுங்குக்கு ஒரு நம்பிக்கை தேவைப்படுகிறது என்றால், அத்தகைய இறை நம்பிக்கை தேவை’ என்று சொல்லியிருக்கிறார்.

சமயம் என்பது தமிழில் உள்ள மதம் குறித்த ஒரு சொல். மதம் என்பது அவரவர் கடைப்பிடித்து தன்னை சரி செய்துகொள்வதற்கொரு வழிகாட்டி. ஆனால், அது மற்ற மதத்தின் மீது மோதவோ, உராய்ந்துகொள்ளவோ கூடாது. சமயம் என்னும் சொல் சமைதல் என்ற சொல்லிலிருந்து வருகிறது. அரிசி சமைகிறது என்றால், சோறாகி சாப்பிடுவதற்கு உரிய பக்குவத்துக்கு வந்துவிட்டது என்று பொருள். மனித மனத்தை எது பக்குவப்படுத்தி இறைவனுடன் கலக்கும் நிலைக்கு வரச் செய்கிறதோ அது சமயம்.
எல்லாவற்றிலும் ஒரு முறைமை இருக்கின்ற காரணத்தினால், இந்த உலக இயக்கத்துக்கும் காரணமாக இறைவன் ஒருவன் இருப்பான் என நாம் நம்புகிறோம். 

இரவு பகல் மாறி மாறி வருகிறது. பருவங்கள் மாறி மாறி வருகின்றன. ஒவ்வொரு மனிதனும் பிறக்கிறான். குழந்தையாகிறான். இளைஞனாகிறான். முதியவனாகின்றான். இறக்கின்றான். மரங்கள் பட்டுப்போகின்றன. விலங்குகள் இறந்து போகின்றன. உயிரினம் ஒவ்வொன்றுக்கும் இறப்பு என்பது மறுக்க முடியாத ஒன்றாக இருக்கிறது. இறப்பு என்பது இறை நம்பிக்கைக்கு ஆதாரமாக இருக்கிறது.

'எல்லாம் இயற்கை... இயற்கை’ என்று கூறும் புத்தன்கூட வினைச் சட்டத்தை ஏற்றுக்கொள்கிறார். தவறான மனிதர்களுக்கு எந்தக் கடவுளும் துணை போவதில்லை. சைவத்திலோ, வைணவத்திலோ எந்த மதத்தில் இருந்தாலும் சரி... அவை மனம் உடைந்துபோன மனிதனுக்கு ஓர் ஊன்றுகோலாக இருந்து, இறைவன் காப்பான் என்பதையே வலியுறுத்துகின்றன. 

''தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் 
மனக்கவலை மாற்றல் அரிது''
என்று கூறுகிறார் திருவள்ளுவர்.

அதாவது, 'தனக்கு ஒப்பில்லாத கடவுளின் திருவடிகளைத் தவறாமல் நினைப்பவர்களுக்கு அல்லாமல், மற்றவர்களுக்கு மனக் கவலையைப் போக்க முடியாது’ என்று கூறுகிறார்.

என்னை ஒருமுறை திராவிடர் கழகக் கூட்டத்தில் பேச வீரமணி அழைத்திருந்தார். நான் அப்போது பேசினேன்... 'வீரமணி  ஊக்கமானவர். நான் அவர்  அளவுக்கு ஊக்கமானவன் இல்லை. வாழ்க்கை என்பது வழுக்குப்பாறையாக இருக்கிறது. செங்குத்துப்பாறையாக இருக்கிறது. எனக்கு இறைவன் என்ற ஊன்றுகோல் தேவைப்படுகிறது. அவருக்குத் தேவையில்லை.’   

கடவுளை வைத்தாகவேண்டியதற்குரிய காரணம். புத்தன் சொல்லுவான், 'ஒருவர் செய்த வினை என்பது நிச்சயம் அவரை மீண்டும் வந்தடையும்.’ அதாவது 'ஆயிரம் பசுக்கள் மேயும் வனத்தில் தனது தாயைக் கண்டறிந்து வந்தடையும் கன்றுக்குட்டியைப்போல் ஒருவனுடைய வினை வந்து சேரும்’ என்று கூறுகிறார்.

'உங்களுக்குத் தலையாக இருப்பதும் உங்கள் செயல்தான். உங்களை வீழ்த்துவதும் உங்கள் செயல்தான்’ என வள்ளுவர் சொல்கிறார். நான் அவரது கோட்பாட்டைப் பெரிதும் மதித்துக் கடைப்பிடித்து வாழ்பவன்.
தனக்கு தீங்கு வேண்டாம் என்று நினைப்பவன் பிறருக்குத் தீங்கு நினைக்காமல், செய்யாமல் இருக்க வேண்டும்.  
வினைச்சட்டம்தான் முக்கியம். கடவுள் ஒரு பாரபட்சமற்ற நீதிபதி. நாம் செய்த வினைகள் தீயவையாக இருக்குமானால்,  இறைவனாலும் நல்லவை செய்ய முடியாது. 

நம் நாட்டில், பக்தி இயக்கம் செய்த நல்ல காரியம் கடவுள் நம்பிக்கையை விதைத்தது. ஆனால், அது செய்த இன்னொரு தவறான காரியம், 'நாம் இறைவனை வேண்டினால் அவர் எதை வேண்டினாலும் தருவார்' என்பதுதான். 
அப்பர்,

''கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க் 
காலத்தைக் கழித்துப் போக்கித்
தெள்ளியே னாகி நின்று 
தேடினேன் நாடிக் கண்டேன்
உள்குவார் உள்கிற் றெல்லாம் 
உடனிருந் தறிதி யென்று
வெள்கினேன் வெள்கி நானும் 
விலாவிறச் சிரித்திட்டேனே''
என்கிறார்.

'கோயிலில்தானே கடவுள் இருக்கிறான் என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். ஆனால், நீ என் நெஞ்சகத்தே இருந்து என்னை அறிந்து இருக்கிறாய், என் செயல்களைப் பார்த்துக்கொண்டிருக்கிறாய் என்பதை அறிந்தபோது என் அறியாமையை எண்ணி நான் நகைத்தேன்’ என்கிறார்.  அப்படி இறைவனிடம் பிறவாமை வேண்டுமென வேண்டுவதே ஆகச்சிறந்த பிரார்த்தனையாக இருக்கும்.'' என்கிறார் பழ.கருப்பையா.

அடுத்த கட்டுரைக்கு