மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி-பதில்!

கேள்வி-பதில்!
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி-பதில்!

மனிதர்களுக்கு மறுபிறவி உண்டா?சேஷாத்ரிநாத சாஸ்திரிகள், படம்: வீ.சக்தி அருணகிரி

கேள்வி-பதில்!

? முற்பிறவி- மறுபிறவி என்பதெல்லாம் உண்மையா? உண்மை எனில், ஓர் உயிருக்கு எத்தனை பிறவிகள் உண்டு?

- கே.பாலமுருகன், திருவாரூர்


 ‘பல பிறவிகளைத் தாண்டி அறிவை எட்டியவன் என்னுடன் இணைகிறான்’ என்கிறான் கண்ணன். அதேபோல், ‘பல பிறவிகளைத் தாண்டி, தற்போது மனிதனாகப் பிறந்த நான்...’ என்று சங்கல்பத்தின்போது சொல்வது உண்டு (கேனாபி புண்ய கர்மவிசேஷண இதானீம்தனமானுஷ்யே)  ‘பல பிறவிகளை ஏற்று, எந்தப் பிறவியில் அம்பாளின் வழிபாட்டில் அக்கறை செலுத்துகிறானோ, அதுவே அவனது கடைசிப் பிறவி’ என்கிறார் பாஸ்கர ராயர் (தத்சரமம் ஜன்ம...). ‘பிறப்பு-இறப்பு; இறப்பு-பிறப்பு எனும் சங்கிலித் தொடரில் சிக்கித் தவிக்கும் மனிதனைப் பார்த்து, அதிலிருந்து விடுபட கோவிந்தனை நாடுக’ என்று பிரார்த்திக்கிறார் ஆதிசங்கரர்.

நமது செயல்பாடுகளால் நாம் சேமித்த பாவம் அல்லது புண்ணியம்  இருக்கும் வரை,  அதை

கேள்வி-பதில்!

அனுபவித்துத்  தீர்க்க பிறவி எடுக்க நேரிடும். புண்ணியம்- பாவம் முற்றிலும் அகன்று விட்டால், பிறவி முடிந்துவிடும். ஆக, நமது செயல்பாடுகளே பிறவியின் எண்ணிக்கையை வரையறுக்கின்றன. ஆன்மிக வாசனையின்றி, உலகவியலில் வாழ்க்கையை இணைத்துக் கொண்டவன், பெரும்பாலும் துயரத்தையே சந்திக்க நேரிடும். இன்பத்தைச் சந்திக்க நேர்ந்தாலும் அந்த இன்பம் மின்னல் போல் மறைந்துவிடும். ஒருவேளை, அந்த இன்பம் தொடர்ந்தாலும், துயரத்திலேயே முற்றுப்பெறும். இந்த உண்மையை அறிந்த அறிஞர்கள், பிறவித் தளையைக் களையுமாறு பரிந்துரைப்பார்கள்.

ஏழு தலைமுறை என்பது ஒரு வம்சத்தின் (குலத்தின்) எல்லைக் கோடு. இதையே ‘ஏழு பிறவிகள்’ என்று சொல்லும் வழக்கமும் உண்டு. பல பிறவிகள் எடுத்தாலும் ஒவ்வொரு பிறவியிலும் மனிதனாகவே பிறப்பான் என்று சொல்ல முடியாது. பாவ-புண்ணியத்துக்கு ஏற்ப விலங்கினமாகவும், ஊர்வனவாகவும், ஏன் தேவனாகவும்கூட பிறப்பு அமையும். ‘பல பிறவி களுக்குப் பிறகு, அஹிம்சையைப் போதிக்கும் புத்தனாக வடிவெடுத்தார்’ என்று புத்தரின் முற்பிறவிகளை விவரிக்கிறது, பௌத்த ஜாதகம்.

ஸஹஸ்ர கவசன், கர்ணனாகப் பிறந்தான் என்கிறது புராணம். அதேபோல், சாபத்தின் காரணமாக மரமாகவும் பாம்பாகவும் பிறந்தவர் கள் பற்றிய தகவல்களும் புராணத்தில் உண்டு.

ஒருவன் ஒவ்வொரு பிறவியிலும் எப்படி இருப்பான் என்பதை அறிய இயலாது. பிறவியின் எண்ணிக்கையையும் வரையறுக்க இயலாது. நல்லவற்றைச் செய்து நல்லபடியாக வாழ்ந்தால் பிறவியில் இருந்து விடுபடலாம்.

கனவு காணும் வேளையில் அதை உண்மை என எண்ணும் மனம், விழித்தபிறகு அது பொய் என்பதை அறிந்துகொள்ளும். அதேபோல், உலகவியலைச் சுவைக்கும் வேளையில், அறியாமையில் இருப்பதால்... நீண்ட சுவையான வாழ்க்கையை உண்மை என்று எண்ணும். அறிவு வந்து அறியாமை விலகும் போது, நமது வாழ்க்கையே பொய் என்று தோன்றும். அப்போது பிறப்பு முடிந்து விடும்.

? நண்பர் ஒருவருக்குப் பெண்பார்க்கும் படலம் துவங்கியிருக்கிறது. அவர், தனக்கு ஜாதகம் இல்லையென்றும், ஆகவே நஷ்ட ஜாதகம் கணித்துள்ளதாகவும் தெரிவித்தார். அதென்ன நஷ்ட ஜாதகம்?

- சி.ராமசாமி, கும்பகோணம்


பிறந்த தேதி, நேரம், நட்சத்திரம், வருடம்- ஆகியவை குறித்த விவரங்கள் தெரியாதவருக்கு ஜாதகம் கணிக்கும் முறையை சாஸ்திரம் அறிமுகம் செய்திருக்கிறது. அதை ‘நஷ்ட ஜாதகம்’ என்பார்கள். உங்கள் நண்பருக்கு இந்த முறையில் ஜாதகம் கணித்திருப்பார்கள்.

? புண்ணிய திருத்தலங்களுக்கு பாத யாத்திரை செல்பவர்கள் காலில் செருப்பு அணிந்து செல்லலாமா? அதேபோல், சில  பெண்மணிகள் செருப்பு அணிந்தபடியே வீட்டு முற்றத்தில் கோலம் போடுவதைக் கவனித்திருக்கிறேன். இது சரியா?

- பார்வதி கணேசன்,

உடன்குடி உடலுக்கோ மனதுக்கோ உபாதை வந்தால், அந்த உபாதையைக் குணப்படுத்திக் கொண்டால், எந்த தெய்வக் குற்றமும் வராது. உடல் தகுதி, நடக்கும் சக்தி ஆகியவை இருந்து, அகங்காரத்துக்காகக் காலணி அணியக் கூடாது.

இருந்தாலும் ஒரு சின்ன விளக்கம்... 5 வயதில் இருந்து 90 வயது வரைக்கும் உள்ளவர்கள் வைகுண்ட ஏகாதசி அன்று சாப்பிடாமல் உபவாசம் இருக்க வேண்டும். ஆனால், ஒருவரால் உபவாசம் (விரதம்) இருக்க முடியாத நிலை ஏற்பட்டால் அவர் சாப்பிடலாம். சாப்பிட்டால்தான் பகவானை ஆராதனம் பண்ண முடியும் என்றால், அவர் சாப்பிடுவதில் தப்பில்லை. நடந்து வர முடியவில்லை என்றால், அதற்கு முயற்சி செய்வதே தப்பு. வீட்டில் இருந்து, ‘என்னால் நடக்க முடியவில்லை பகவானே’ என்று சொன்னாலே, குறிப்பிட்ட ஸ்தலத்துக்குச் சென்று வழிபட்ட பலன் கிடைக்கும் என்றுதான் தர்ம சாஸ்திரம் சொல்கிறது. முடியவில்லை என்பதற்காக இன்னொரு தப்பு செய்கிறேன் என்று சொல்லலாமா?

‘எனக்கு தினப்படியாக திருப்பதிக்கு வந்து தரிசனம் செய்ய ஆசை. ஆனால், அது எனக்கு சாத்தியமில்லை. இந்த ஒரு முறைதான் என்னால் நேரடியாக வர முடிந்தது. எனவே, நான் தினமும் திருப்பதி வந்து தரிசனம் செய்ததாக எடுத்துக் கொள்’ என்று வேண்டுவதாக ஒரு ஸ்லோகம் உண்டு. நீங்களும் உங்கள் இயலாமையை பகவானிடம் சொல்லுங்கள். அவர் ஏற்றுக் கொள்வார். அதை விட்டு செருப்போடு போகாதீர்கள்.

அடுத்ததாக, செருப்பு அணிந்துகொண்டு கோலம் போடுவது சரியா எனக் கேட்டுள்ளீர்கள்.

தற்போது செருப்புகள் பல கோணங்களில் பயன்படுத்தப்படுகின்றன. வெளியே நடந்து செல்ல ஒரு வகை செருப்பு. வீட்டுக்குள் நடமாட ஒரு வகை செருப்பு. நோயினால் பாதிக்கப்பட்ட கால்களுக்குப் பாதுகாப்பாக ஒரு வகை செருப்பு. கழிப்பிடம் சென்று வர ஒரு வகை செருப்பு. நிலத்தில் கால் வைக்க இயலாத முதியோருக்கு ஒரு வகை செருப்பு. நகரத்தின் சூழலுக்கு எல்லா இடங்களிலும் செருப்பு தேவைப்படுகிறது. செருப்பு போட்டுக் கொண்டு கோலமிடுவதில் தவறில்லை. அவளது ஆரோக்கியத்துக்கு செருப்பு தேவை என்பதால், அது தவறாகாது.

கேள்வி-பதில்!

கிராமங்களில் சாணித் தண்ணீர் தெளித்து, பிறகு கோலம் போடுவது வழக்கம். சாணி தெளித்த இடம் சுத்தமாக இருப்பதால், செருப்பு இல்லாமல் கோலம் போடலாம். சாணி, காலுக்குப் பாதுகாப்பு. நகரத்திலும் வாசலில் சாணி தெளித்த பிறகு கோலம் போடும்போது செருப்பு தேவை இல்லை. இருக்கவும் கூடாது. அப்போது செருப்போடு இருந்தால், அவள் செருக்கோடு செய்வதாக ஆகிவிடும். மற்ற சந்தர்ப்பங்களில் தற்காப்புக்காகச் செருப்பு அணிவது தவறில்லை.

அகங்காரத்தில் அணிவது தவறு. கடவுளை வழிபடும் பூசாரி சட்டையோ, கோட்டோ அணிந்து பூஜை செய்வதில்லை. அப்படிச் செய்வது தென்னாட்டில் தவறாகக் கருதப்படும். ஆனால், வடநாட்டில் குறிப்பாக பத்ரிநாத், ஹரித்வார், காஷ்மீர் போன்ற இடங்களில் பூசாரிகள் கோட்டு அணிந்துகொண்டு பூஜை செய்வதுண்டு. அது தற்காப்பு; அகங்காரமல்ல. அது போல் இதிலும் தவறான கண்ணோட்டம் கூடாது.

செருப்பு அணியாமல்தான் கோலம் போட வேண்டும் என்ற விதியைக் கட்டாயமாக்கினால், பாதுகாப்பு கருதி காலப்போக்கில் கோலம் போடும் பழக்கமே மறைந்துவிடலாம். தற்போது தவறாகவாவது நடைமுறைப்படுத்தப் பட்டால்தான், அடுத்த பரம்பரைக்குக் கோலம் போடும் கலாசாரம் தெரிய வரும்.

? காயத்ரி மந்திரம் உட்பட எந்தவொரு மந்திரமாக இருந்தாலும் நூற்றெட்டு ஜபிக்க வேண்டுமா? நூற்றெட்டு என்ற எண்ணிக்கைக்கு அப்படியென்ன மகத்துவம்?

- வா.பரமேஸ்வரன், அறந்தாங்கி


எண்ணிக்கைக்கு ஒரு சக்தியும் இல்லை. மந்திரத்துக்குத்தான் சக்தி. ஏதோ ஒரு நடை முறையை நாம் ஒரு நாளில் கடைப்பிடித்தாக வேண்டும். அதனால் ஒரு நாளைக்கு 108 முறை ஜபிக்க வேண்டும் என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். எண்ணிக்கைத் தத்துவத்தை வைத்துக்கொண்டு காயத்ரி வரவில்லை; காயத்ரி தத்துவத்தை வைத்துக் கொண்டுதான் ஜபிக்கச் சொன்னார்கள்.

சொல்லப் போனால் அதிக எண்ணிக்கையில் மனம் போனபடி ஜபிக்கக் கூடாது. ஒரு நாள் அதிகமாகச் சொல்லிவிட்டு அடுத்த நாள் அதே அளவில் சொல்ல முடியாமல் போகலாம் இல்லையா..? எண்ணிக்கைக்கு எந்தவிதமான சாஸ்திர சம்பந்தமும் இல்லை.

? சிவமே ஆதி என்கிறது ஒரு புராணம். வேறுசில, சக்தியையே பிரதானமாகப் போற்றுகின்றன. அவளிடமிருந்தே மும்மூர்த்தியரும், அண்டபகிரண்டமும் தோன்றியதாக விவரிக்கிறது. சிவபெருமான் மீது காளிதேவி காலூன்றி நிற்கும் ஓவியங்களையும் பார்த்திருக்கிறேன். எனினும், அதற்கும் எதேனும் தாத்பரியம் இருக்கும் என கருதுகிறேன். அதுகுறித்து நீங்கள்தான் விளக்கவேண்டும்.

- சொ. வேல்முருகன், திண்டுக்கல்


சக்தி வழிபாடு என்று ஒன்று உண்டு. இதில் இரண்டு வகை. ஒன்று மென்மையாக வழிபடுவது. மற்றொன்று உக்கிரமான வழிபாடு. பழைய காலத்தில் படிக்காதவர்களாக இருந்தபடியால், உக்கிரமாக வழிபட்டார்கள். இதற்கு தந்திர சாஸ்திரம் என்று பெயர். இதில் மண்டை ஓட்டு மாலை அணிந்து, நாக்கைத் துருத்திக் கொண்டு ரௌத்ரமாகக் காட்சி அளிப்பாள் அம்பாள். இப்படி வழிபட்டவர்கள் காபாலிகர்கள் எனப்பட்டார்கள். இதை கௌளாசாரம் என்றும் சொல்வது உண்டு.

இதைவிட உசத்தியான வழிபாடு, சமயாசாரம் எனப்படும் மென்மையான வழிபாடுதான். படித்தவர்களாக இருக்கும் நாம் அதைத்தான் பின்பற்ற வேண்டும் என்று சொல்லி அதைப் பரப்பியவர் ஆதிசங்கரர்.

கௌளாசாரத்தில் சக்திதான் முழுமுதற் கடவுள் என்பது தத்துவம். சக்திதான் எல்லாவற்றுக்கும் மேலே; பரமேஸ்வரனோ மற்றவர்களோ இல்லை என்று காட்டுவதற்காக நிறையக் கதைகள் உண்டு. பரமேஸ்வரனுக்கும் மேலே அம்பாள் என்று சகஸ்ரநாமத்தில் வரும். வித்யார்ணவ தந்த்ரம் என்ற நூலிலும் இப்படிப்பட்ட குறிப்பு உண்டு.

எங்கெல்லாம் ஒருத்தரை உசத்தியாகச் சொல்ல வேண்டுமோ, அங்கெல்லாம் இன்னொருத்தரை சிறியதாகத்தான் சொல்ல முடியும். விஷ்ணு படுத்திருப்பார். அவர் நாபியில் ஒரு தாமரை இருக்கும். அதில் பிரம்மா இருப்பார். விஷ்ணுவின் பிள்ளை பிரம்மா என்பார்கள். ஆனால், சிருஷ்டிக்கே கடவுள் பிரம்மாதான். கந்த புராணத்தை எடுத்துக் கொண்டால் எல்லாரையும்விட உயர்ந்தவன் கந்தன் என்று வரும்.

அம்பாள் வழிபாட்டில் அம்பாள்தான் உயர்ந்தவள் என்று காட்டுவதற்காக இப்படிப் பட்ட விக்கிரகங்கள் வந்தன. இதனால் சிவன் ஒன்றுமில்லை என்று நினைத்து விடாதீர்கள். சக்தி இல்லை என்றால் சிவம் இல்லை; சிவம் இல்லையேல் சக்தி இல்லை!

?  எங்கள் வீட்டில் ஒரு சுபகாரியத்துக்காக நல்ல நாள் தேர்வு செய்ய வேண்டி உள்ளது. இந்நிலையில் எங்களுக்கு ஒரு சந்தேகம். மரணயோகம் உள்ள ஒருநாளில் நல்லநேரமும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனில், அந்த நாளை சுப காரியங்களுக்குத் தேர்வு செய்யலாமா?

- வி.ரேணுகா காயத்ரி, கோவை-2


 பாயசத்தில் பல்லி விழுந்து மடிந்திருக்கிறது. உணவில் நச்சு கலந்திருக்கிறது. பல்லியின் நச்சு, பாயசத்தில் முழுமையாகப் பரவிவிடும். அங்கு பாயசத்தை முழுமையாகத் தவிர்க்க வேண்டும். மாங்கனியை கிளி அல்லது ஓணான் கடித்துவிட்டது. அல்லது கீழே விழுந்து, ஒரு பக்கம் சிதைந்துவிட்டது. இங்கு கெடுதல் தென்படும் பகுதியை மட்டும் களைந்துவிட்டு, அவை தொடாத பகுதியைப் பயன்படுத்தலாம்.

கரும்பில் அதன் ‘கணு’ பயன்படாது. கத்திரிக்காயின் காம்பு பயன்படாது. பலாப் பழத்தின் தோல் பயன்படாது. இலந்தையில் கொட்டை பயன்படாது. முருங்கைக்காயின் சதையை மட்டும் பயன்படுத்துவோம் - இவற்றை முற்றிலுமாகத் துறப்பதில்லை. குறையைக் களைந்துவிட்டுப் பயன்படுத்துவோம். சில பொருள்களில் கெடுதல் முற்றிலும் பரவி விடும். சிலவற்றில் குறிப்பிட்ட அளவுதான் அதன் பரவல் இருக்கும். தினசரி நாட்களில் குறிப்பிடும் யோகங்கள், நாள் பூராவும் இருக்கும் என்று சொல்வதற்கு இல்லை. நட்சத்திரம்- திதி- ஆகியவற்றின் பரவுதலில் யோகங்கள் அளக்கப்படுகின்றன.

ஆகையால், ஒரு நாளில் முற்பகலில் மரண யோகமும், பிற்பகலில் சித்த யோகமும் தென்படலாம். நட்சத்திரத்தின் அளவு அல்லது திதியின் அளவு யோகத்தின் அளவாக மாறி விடும். ஆகையால், மரண யோகம் முற்பகலில் இருந்து மதியத்துக்கு மேல் யோகம் மாறினால், மதியத்துக்குப் பிறகு நல்ல காரியங்கள் செய்யலாம். நாள் பூராவும் மரண யோகம் இருந்தால் மட்டுமே அதை விலக்க வேண்டும். யோகம் என்பது, முழு நாளையும் குறிப்பதாக எடுத்துக்கொள்ளக் கூடாது. கெட்ட நேரத்தை விலக்கி, அதே நாளில் நல்ல நேரத்தில் நல்ல காரியங்கள் செய்யலாம்.

- பதில்கள் தொடரும்...

கேள்விகளை அனுப்பவேண்டிய முகவரி: சக்தி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை -  600 002

svdesk@vikatan.com என்ற மெயிலுக்கும் அனுப்பலாம்.