Published:Updated:

கயிலை... காலடி... காஞ்சி! - 12

கயிலை... காலடி... காஞ்சி! - 12
பிரீமியம் ஸ்டோரி
News
கயிலை... காலடி... காஞ்சி! - 12

தேனம்பாக்கம் எனும் புண்ணிய பூமி!நிவேதிதா

கயிலை... காலடி... காஞ்சி! - 12

நின்னருட் குரியே னாகி நின்பணி தலைநின்றானா
உன்னடி யிணைக்கீழ்ப் பத்தி உலப்புறா தடியேன் என்றும்
நன்னெறி ஒழுகச் செய்யாய் நவில்சிவாத் தானத் தெய்தி
என்னரே யெனினும் நின்னை ஏத்தினோர் உய்யக் கோடி.


நின் அருளுக்குப் பாத்திரனாகி நின் அருள் தொண்டில் தலைநின்று  உன்னுடைய திருவடிகளின் கீழ் நீங்காத பேரன்பு கொண்டு அடியன் எந்நாளும் திருநெறியில் ஒழுகுமாறு அருள்வாய். சிவாத்தானம் எனப்படும் இங்கெய்தி நின்னைத் துதித்தோர் எத்துணைக் கீழ் மக்களெனினும்  அவரையும் உய்யக்கொள்வாய்.

- காஞ்சிப் புராணம்

லியுகத்தில் பல்வேறு துன்பங்களுக்கு ஆளாகப் போகும் நம்மை யெல்லாம், துன்பங்களில் இருந்து விடுவித்து மகிழ்ச்சியான வாழ்க்கையை அருள்வதற்காகத் திருவுள்ளம் கொண்ட ஐயன் கயிலை நாயகனின் கலியுக அவதாரம்தான் காலடி சங்கரரும், ஜகத்குருவாக காஞ்சியில் நமக்கெல்லாம் அருள்புரிந்த மஹா ஸ்வாமிகளும்!

காலடி சங்கரர் குறுகிய காலத்திலேயே அத்வைத தத்துவத்தை நிலைபெறச் செய்தும், ஷண்மத ஸ்தாபனம் செய்தும் தாம் யார் என்பதையும் தாம் எங்கிருந்து வந்தோம் என்பதையும் உணர்ந்துகொண்டு அந்தச் சிவத்துடனே கலந்துவிட்டார்.

ஆனால், நாம் மிகவும் பாக்கியசாலிகள்! அதனால்தான் நடமாடும் தெய்வம் என்று வாய் மணக்க மணக்க நாமெல்லாம் போற்றிக் கொண்டாடிய காஞ்சி மஹா பெரியவா ஒரு நூற்றாண்டு காலம் நம்மிடையே அருளொளி பரப்பி, நமக்கெல்லாம் திவ்விய தரிசனம் தந்ததுடன், தம்முடைய ஸித்திக்குப் பிறகும் நமக்கெல்லாம் அருள்புரிய திருவுள்ளம் கொண்டார்.

அதன் காரணமாகவே மகா புனிதமான ஒரு திருத்தலத்தில் நீண்ட நெடிய தவ வாழ்க்கையும் மேற்கொண்டார். அப்படி அவர் உகந்து ஏற்ற திருத்தலம்தான் தேனம்பாக்கம் என்னும் திவ்விய தலம்!
பிரம்மதேவரைக் காரணமாகக் கொண்டு சிவபெருமான் கோயில் கொண்ட புண்ணிய பூமி தேனம்பாக்கம்; அவருடைய அம்சமாக அவதரித்த காலடி சங்கரரின் திருவடி பதிந்த புனித பூமி தேனம்பாக்கம்; காஞ்சி மஹா பெரியவா நம் நன்மைக்காக நீண்ட நெடிய தவம் மேற்கொண்ட தவபூமி தேனம்பாக்கம்!

தம்முடைய ஸித்திக்குப் பிறகு இன்றும் மஹா பெரியவா அங்கே அநேக அருளாடல் களைப் புரிந்து வருகிறார். அவர்தம் அருளாடல்களைத் தெரிந்துகொள்வதற்கு முன்பு தேனம்பாக்கம் திருத்தல வரலாற்றினைத் தெரிந்துகொள்வோம்.

கயிலை... காலடி... காஞ்சி! - 12

தேனம்பாக்கம் திருத்தலத்துக்கு சிவாத்தானம் - சிவபெருமானின் ஆஸ்தானம் என்றும் ஒரு திருப்பெயர் உண்டு. சிவாத்தான வரலாறு காஞ்சிப் புராணத்தில் விரிவாகச் சொல்லப்பட்டு இருக்கிறது.
அந்த வரலாறு...

ஆதிகாலத்தில் சிவபெருமானின் இடபாகத்தில் தோன்றிய திருமால், அவருடைய அருளால் பிரம்மதேவரையும், உலகத்து ஜீவராசிகளையும் படைத்தார். சிவபெருமானின் இடபாகத்தில் தோன்றிய திருமால் தம்மையும் உலக உயிர்களையும் படைக்கும் வரத்தைப் பெற்றது பிரம்மதேவருக்குப் பொறாமையை ஏற்படுத்தியது. அதற்குக் காரணமும் இருக்கவே செய்தது.

கயிலைக்குச் சென்று சிவபெருமானை தரிசித்த பிரம்மதேவர், ‘‘ஐயனே, முன்பு உம் இடபாகத்தில் திருமாலும் வலபாகத்தில் அடியேனும் தோன்றினோம். ஆனால், திருமால் உம் அருளால் இப்போது என்னையும் உலக ஜீவராசிகளையும் படைக்கும் வரம் பெற்றார். உம் வலபாகத்தில் தோன்றிய எனக்கும் திருமாலுக்கு நிகராக திருமாலையும் உலக ஜீவராசிகளையும் படைக்கும் வரம் அருளவேண்டும்’’ என்று பிரார்த்தித்தார்.

கயிலை... காலடி... காஞ்சி! - 12

சிவனாரின் கட்டளைப்படி காஞ்சி - தேனம்பாக்கம் தலத்துக்கு வந்த பிரம்மதேவர், சிவபெருமானை வேண்டி மாபெரும் வேள்வி செய்தார். வேள்வியில் பங்கேற்க முனிவர்களும் தேவர்களும் வருகை தந்தனர். அச்சமயம் பிரம்மதேவரின் மூன்று தேவியரில் ஒரு தேவியான சரஸ்வதி சில காலம் நீரிலும், சில காலம் மரங்களிலும் மறைந்திருந்தனள். சரஸ்வதியைக் காணாததால், பிரம்மதேவர் மற்ற இரு தேவியரான சாவித்திரி, காயத்திரி ஆகியோருடன் வேள்வியைத் தொடங்கினார்.

‘தான் இல்லாமல் பிரம்மதேவர் வேள்வி நடத்துவதா?’ என்று சினம் கொண்ட சரஸ்வதி, வேள்வி நடக்கும் பூமி மட்டுமல்லாமல், அகில உலகங்களையும், பிரம்மதேவரின் சத்தியலோகத்தையும் அழித்துவிடுவது என்று கங்கணம் கட்டிக் கொண்டவளாக நதியாக மாறி ஆவேசமாகப் பாய்ந்து வந்தாள்.

அப்போது..?

- திருவருள் தொடரும்

படங்கள்: தே.அசோக்குமார்

தேனம்பாக்கம் சிவாத்தானத்தில் நவராத்திரி வைபவம்..!

மஹா பெரியவா நீண்ட நெடிய தவம் இயற்றிய சிவாத்தானம் அருள்மிகு பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயிலில், 1.10.16 முதல் 11.10.16 வரை நவராத்திரி வைபவம் மிக விமரிசையாக நடைபெற இருக்கிறது.

சண்டி ஹோமம், வேத பாராயணம், சுவாஸினி பூஜை, கன்யா பூஜை, வடுக பூஜை போன்றவை நடைபெற உள்ளன. ஒவ்வொரு நாளும் துர்கைக்கு சிறப்பு அபிஷேக அலங்காரங்களும், விசேஷ பூஜைகளும் நடைபெற இருக்கின்றன.

நவராத்திரி வைபவத் துக்கு அன்பர்கள் தங்களால் இயன்ற பொருளுதவி செய்து, துர்கையின் அருளுடன், மஹா பெரியவா அனுக்கிரகமும் பெற்றுச் சிறப்புற வாழலாம்.