மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சித்திர ராமாயணம்

சித்திர ராமாயணம்
பிரீமியம் ஸ்டோரி
News
சித்திர ராமாயணம்

பி.ஸ்ரீ., ஓவியங்கள்:சித்ரலேகா

சித்திர ராமாயணம்

ஆயிரம் தோணிக்கு அரசு!

ஆச்ரமத்திலே முனிவர்கள் இட்ட விருந்தை உண்டு அவர்களோடு ராமன் அளவளாவிக் கொண்டிருக்கும்போது, பம்பை முதலிய பறைகளை ஏக காலத்தில் கொட்டி முழக்கும் ஓசை திடீரென்று காதில் விழுகிறது, கொஞ்ச தூரத்திலிருந்து. உடனே பெருவலிமையும் தோற்றமும் படைத்த ஒரு பெருங் கூட்டம், மத யானைகள் மந்தையாகத் திரண்டு வருவது போல் வந்து கொண்டிருப்பதைப் பார்க்கிறோம். அதோ அந்தக் கூட்டத்தின் முகப்பிலே, வேட்டை நாயைப் பிடித்துக் கொண்டு, இடியிடித்துக் கிளம்பும் காளமேகம் போலக் கிளம்பிய அவன் யார்?

இருட்டு நெருங்கி இறுகி வடிவு கொண்டதுபோல வந்துகொண்டிருக்கும் அந்த ஆசாமி சாமானிய ஆசாமியில்லை; கங்கையிலே குறுக்கும் நெடுக்குமாக ஆயிரம் தோணிகள் போய்க் கொண்டிருக்கின்றனவே, அவையெல்லாம் அவனுக்குத்தான் சொந்தம்! அவன் தயவில்லாமல் யாரும் கங்கையைக் கடந்து போக முடியாது. கங்கைத் துறை களில் தோணியோட்டும் தொழிலைக் குல தர்மமாகக் கொண்டிருக்கிறான். துடுப்பு எடுத்த கை வில்லும் பிடித்து, துஷ்ட மிருகங்களையோ பகைவர்களையோ ஹிம்சித்த வண்ணமாய் இருக்கும்.

குகன் என்ற அவனுடைய பெயர் இந்தப் பிரதேசமெங்கும் ஒரே முழக்கம்: ‘போர்க் குகன்’ என்றே சிறப்பித்துப் பேசுவார்கள்:

ஆய காலையின்
ஆயிரம் அம்பிக்கு
நாயகன், போர்க்
குகன்எனும் நாமத்தான்,
தூய கங்கைத்
துறைவிடும் தொன்மையான்,
காயும் வில்லினன்,
கல்திரள் தோளினான்.


கல்லென்று சொல்லும்படியான தோளில் வில்லைத் தாங்கி வருகிறானே, அவன் மார்பும் ஒரு கற்பாறை போல இருக்கிறது. காலில் கட்டிய வீரக் கழலும் கருங்கல்லைப் பொருத்தியிருப்பதைப் போலவே காண்கிறது;

தொடை வரையில் சல்லடம்; அரையில் தொங்கவிட்ட செந்நிறமான தோல்; அந்தத் தோலாடை நழுவி விழாதபடி அதைச் சுற்றி அரைக் கச்சாக இறுக்கிக் கொண்டிருக்கும் புலிவால். ஆம், உடையும் கச்சையும் பார்வைக்கு வெகு ஜோராகவும் அந்தஸ்தாகவும் இருக்கின்றன, வேடர் கண்களில்!

அந்தப் பேர்வழி அணிந்திருக்கும் ‘ஆபரண விசேஷ’ங்களை என்னென்பது? அரைக் கச்சையில் கூர்மையான உடைவாளைச் செருகியிருக்கிறான்; அந்த உடைவாளில் இரத்தக் கறை தெரிகிறது.

உடைவாளும், வில்லும், வீரக் கழலும் வேடர்பிரானுடைய சிறந்த உபயோகமான ஆபரணங்கள். இவை தவிர அவன், பல்லைத் தொடுத்து வைத்தாற்போலச் சோழிகளைத் தொடுத்து ஆரங்களாக அணிந்திருக்கிறான். இருள்மேல் இருள் தொடுத்தாற்போல இருக்கும் மயிர்முடியில் நெற்கதிர்களைச் சொருகிக் கொண்டிருக்கிறான்.

சிரிப்பே அறியாத அந்த முகத்தையும், கோபமில்லாமலே தீப்பொறி பறக்கும் கண்களையும், விஷப் பாம்புபோல நடுங்கச் செய்யும் பார்வையையும் இப்போது சமீபத்தில் பார்க்கிறோம். யமனும் நடுங்கும்படி முழங்கும் குரலும், பைத்தியக்காரன் போலப் பொருத்தமில்லாமல் பேசும் பேச்சும் காதில் விழுகின்றன.

கங்கையைத் தாண்டி வந்தானே, ஒரு தரம் முங்கித்தான் வரலாகாதா? மாமிசம் தின்று கள்ளைக் குடித்த வாயையாவது கழுவி வரலாகாதா?

‘நாயடியேன்!’

ராமன் இருக்கும் ரிஷி - ஆச்ரமத்தைச் சமீபித்ததும், குகனிடம்தான் என்ன அதிசய மான மாறுதல்! கொஞ்ச தூரத்திலேயே பரிவாரத்தை நிறுத்தி விடுகிறான்; அம்பு, வில், வாள் எல்லாவற்றையும் கழற்றி வைத்து விட்டு வருகிறான். சிறுமை உணர்ச்சிகள் மறைந்து உள்ளத்திலே அன்பு நிறைந்து கொண்டி ருக்கிறது! அந்த இடத்தை எவ்வளவோ நன்றாக அறிந்தவன்தான்: எனினும் முன் பின் அறியாத ஏதோ ஒரு புண்ணிய பூமியில் அடி வைத்துப் போவதுபோலப் போகிறான்:

சித்திர ராமாயணம்

பர்ணசாலையின் வாசலுக்குச் சமீபமாக வந்ததும் விலகி நின்று கொண்டே கூவுகிறான், ‘அடியேன்’ என்று. லட்சுமணன் ஓடி வந்து, ‘நீ யாரப்பா?’ என்று கேட்கிறான். ‘தேவ பூஜை வேளையில் கரடி வந்தது போல் வந்திருக்கிறாயே!’ என்பது குறிப்பு. லட்சுமணனையே ராமன் என்று கருதும் குகன் அன்போடு ஒரு கும்பிடு போட்டுத் தான் யாரென்று தெரிவித்துக் கொள்கிறான்:

கூவா முன்னம்
இளையோன் குறுகி, ‘நீ
ஆவான் யார்?’ என,
அன்பின் இறைஞ்சினான்,
‘தேவா! நின்கழல்
சேவிக்க வந்தனன்;
நாவாய் வேட்டுவன்
நாயடி யேன்!’ என்றான்.


எவ்வளவோ வலிமைச் செருக்கும் சுதந்திரச் செருக்குமுள்ள வேடர் தலைவன் இப்பொழுது ‘நாய் அடியேன்’ என்று எவ்வளவு பணிவாகத் தன்னைத் தெரிவித்துக் கொள்ளுகிறான், பாருங்கள்.
ராமனது குணாதிசயத்தைக் கேள்விப்பட்டு, அதிலே அவ்வளவு ஈடுபட்டு வந்திருக்கிறான். திறந்த வாசல்தோறும் நுழைந்து நுழைந்து பார்த்தும் புகலிடம் பெறாத நாய்போல், இவனுடைய உள்ளமும், உயர்ந்தோன் ஒருவனது நட்புக் காதலைப் பெற விரும்பி அத்தகைய விருப்பம் அந்த முனிவர்கள் மூலமாக நிறைவேறாததால், அலைந்து அலைந்து அலுத்துப் போயிருக்கிறது!

பாட்டைப் பாடிப் பாடிப் பாருங்கள். அந்த முரட்டுச் சரீரத்தில் குடிகொண்டிருக்கும் பொன்னான இதயத்தை அப்படியே பார்த்து விடுகிறீர்களல்லவா?

அவனுடைய அடக்க ஒடுக்கத்தையும், ராமன் மீது அவனுக்கு உள்ள பேரபிமானத்தையும் அறிந்து இன்புற்ற லட்சுமணன், கரையில் கங்கை மோதுவது போல் அம் முகத்திலே அலை மோதிய உணர்ச்சிப் பெருக்கை அப்படியே அனுபவித்த நிலையில், குகனைத் தூய மனமுள்ளவன் என்றும், தாயைக் காட்டிலும் நல்லவன் என்றும், வாயார நெஞ்சாரப் புகழ்ந்து பேசுகிறான். (‘கைகேயி போன்ற தாயும் உலகத்தில் இருக்கிறாளே!’ என்ற உணர்ச்சியும் லட்சுமணனுக்கு உண்டல்லவா?)

‘அப்படியானால் அவனை இங்கேயே என்னிடம் அழைத்து வா’ என்று மனமுவந்து சொல்லுகிறான் ராமன்.

ராமனைக் கண்ணில் கண்டதும் குகனுள்ளம் கனிந்து விடுகிறது, காதலால். ‘என்ன பேரன்பு!’ என்று நாம் வியக்கும்போதே, ‘என்ன பெரும் பணிவு!’ என்றும் அதிசயிக்கும்படியாகக் குகன் சாஷ்டாங்கமாய் நமஸ்கரித்து எழுந்து கை கட்டி வாய் புதைத்து நிற்கிறான்.மெய்யன்பு உள்ள இடத்தில் மெய்யான பணிவும் காணப்படுவது இயற்கை. பூரண அன்பும் பூரணமான பணிவும் ஓர் அழகிய நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.

ராமன் உட்காரச் சொல்லியும் இணங்காமல், ‘தேனும் மீனும் பக்குவம் செய்து கொண்டு வந்திருக்கிறேன்; உட்கொள்ளத் திருவுள்ளம் உண்டோ?’ என்று கேட்டு நிற்கும் குகனுடைய நிலையையும், அது கண்ட ராமனது நிலையையும் பாருங்கள்;

ராமன் குகன் சொன்னதைக் கேட்டதும் வயது முதிர்ந்த பிரம்ம ரிஷிகளைப் பார்த்து இளநகை அரும்புகிறான். இந்த இளநகையின் பொருள்தான் என்ன? ‘காய், கிழங்கு, கனி, இலை ஆகிய தூய உணவை உண்டு வாழும் தவசிகளின் புனிதமான பர்ணசாலையில் ஊனையும் தேனையும் கொண்டு வந்தேன் என்கிறானே, என்ன அறியாமை! என்ன ஆசாரக் குறைவு!’ என்பதுதான் இளநகையின் பொருளா?

குகன் கொண்டு வந்த பொருள்கள் மீனும் தேனுமாகவா தெரிகின்றன ராமன் கண்களில்? அவற்றில் அன்புக் காதலைத் தான் பார்க்கிறான்; குகனுடைய தூய உள்ளத்தைப் பார்க்கிறான். ஆகவே, ‘தேவாமிர் தத்தைக் காட்டிலும் சிறந்தன இவை!’ என்று மதிக்கிறான். இக் கொள்கையை இளநகையோடு ராமன் முனிவர்களுடன் பங்கிட்டுக் கொள்வதைப் பாருங்கள்:

‘அரியதாம், உவப்ப, உள்ளத்(து)
அன்பினால் அமைந்த காதல்
தெரிதரக் கொணர்ந்த தென்றால்
அமிர்தினும் சீர்த்த தன்றே!
பரிவினில் தழீஇய என்னில்
பவித்திரம்; எம்ம னோர்க்கும்
உரியன; இனிதின் நாமும்
உண்டனெம் அன்றோ?’ என்றான்.


‘கிடைப்பதற்கு அரிதாயும் தனக்கு உவந்ததாயும் உள்ள ஒரு பொருளை அன்புக் காதல் விளங்க ஒருவன் கொண்டு வந்தால், அது தேவாமிர்தத்தைவிடச் சிறந்ததல்லவா? எங்களைப் போன்றவர்களுக்கெல்லாம் இத்தகைய பொருள்கள் உரியன; பரிசுத்தமானவையே. இவற்றை உட் கொள்ளாவிட்டாலும், நாங்கள் உண்டதற்குச் சமானம்தான்!” என்கிறான்.

இவ்வளவு உணர்ச்சி - வேகத்துடன் பேசும்போது,

‘பரிவினில் தழீஇய என்னில்
பவித்திரம்’


- அதாவது, அன்பாலும் இரக்கத்தாலும் தழுவப்படுவதே பரிசுத்தம் அல்லது ஆசாரம் என்று கூறிவிடுகிறான் ராமன். இதைக் காட்டிலும் சுருக்கமாகவும் அழகாகவும் தெளிவாகவும் ஆசாரம் இன்னதென்பதை யாரால் வரையறுத்துக் கூற முடியும்? அன்பு தழுவாத பொருளில், இரக்கம் கலவாத இடத்தில், பரிசுத்தம் ஏது, ஆசாரம் ஏது? இது ராமனைப் போன்ற ராஜ ரிஷிகளின் கொள்கை.

ரிஷிகளின் ஆசாரக் கொள்கை யினும், குகனது அன்புக்கொள்கையே ராமன் உகந்த கொள்கை என்பது கம்பன் கொள்கை. இதைச் சரியாகத் தமிழ் மக்கள் இன்று உணர்ந்து ஒழுகுவார்களானால், தீண்டாமைப் பேய் நாட்டை விட்டுத் தொலைந்து போகாதா?

** 20.4.47, 27.4.47, 4.5.47 ஆனந்த விகடன் இதழ்களில் இருந்து...