
ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

ஏழாம் வீட்டுக்கு உடையவன் 12-ம் வீட்டில் அமர்ந்திருக்கிறான். லக்னாதிபதியும் சந்திர லக்னாதிபதியும் ஒரு பாப கிரகத்துடன் 7-ம் வீட்டில் அமர்ந்திருக்கிறார்கள். இப்படியொரு அமைப்பு புருஷ ஜாதகத்தில் தென்பட்டால், அவனுக்குக் குழந்தைச் செல்வம் இருக்காது. மனைவியும் தங்கமாட்டாள் என்கிறது ஜோதிடம் (பார்யாதிஸவ்யயக தேதனு ஜன்மபத்யோ: பாபாட்யமோ: மதகயோ: ஸீததாரணீன:).
6,8,12 என்ற மூன்றில் ஒன்று (த்ரிகம்) பன்னிரண்டு. 12-ம் வீடு இழப்பைச் சுட்டிக்காட்டும். ‘வ்யயம்’ என்ற சொல்லுக்கு இழப்பு என்று பொருளும் உண்டு. ‘சிலவு’ என்று சொல்வதுண்டு. இருக்கிற செல்வம் அல்லது சேமித்த செல்வம் கையைவிட்டு நழுவுவது என்பது இழப்புதான். ஏழாம் வீடு மனைவியைக் குறிக்கும். அதன் அதிபதி 12 (இழப்பில்) அமர்ந்தால், அவள் இழக்கப்படுகிறாள் என்று விளக்கும் ஜோதிடம்.
லக்னத்துக்கு உடையவனும் சந்திர லக்னத்துக்கு உடையவனும் 7-ல் அமர்ந்திருக் கிறார்கள். அவருடன் இயல்பாகவே பாபியான கிரகம் சேர்ந்திருக்கிறது. செவ்வாய், சனி, சூரியன் இவர்களில் ஒருவர் அல்லது இருவர் அல்லது மூவர் சேர்ந்து இருக்கலாம். ஒன்றுசேர்ந்தால் மட்டுமே லக்னாதிபதியும் சந்திர லக்னாதிபதியும் தங்களது சுதந்திரத்தை இழந்து, சேர்ந்திருக்கும் பாபியின் செயல்பாட்டில் தன்னை இணைத்துக்கொண்டு விடுவார்கள். வலுக்கட்டாயமாக தங்களது உரிமையைப் பறிகொடுக்க முனைந்து விடுவார்கள். மனைவியோடு சேர்ந்து வாழும் தகுதி இழக்கப்பட்டு விடும். 7-ஐ அதாவது அவர்கள் வீற்றிருக்கும் இடத்தை லக்னமாக வைத்து பலன்சொல்ல முற்படும்போது, அவர்களுக்கு 6-ல், தான் அமர்ந்த கிரகத்தின் அதிபதி (7-க்கு உடையவன்) வருவதால், பாக்கியம் இருந்தும் சேர்ந்து வாழும் தகுதி பறிக்கப்பட்டுவிடுகிறது. 12-ம் இடம், ஏழுக்கு 6-ம் இடமாக வருவதால், த்ரிகம் லக்னாதிபதிக்கும் சந்திர லக்னாதிபதிக்கும் தான் அமர்ந்த கிரகத்தின் (7-ம் பாவம்) பலனை அனுபவிக்க வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது. 12-ல் அமர்ந்த 7-ம் பாவாதிபதிக்கு 7 அட்டமமாக (8-ஆக) வருவதால், தொடர்பு துண்டிக்கப்படுகிறது.
8 என்பது த்ரிகத்தில் (6,8,12-ல்) ஒன்று. எட்டு ஆயுளின் அளவைச் சொல்லும். (மனைவியின்) ஆயுள் இல்லாமல் செய்துவிடுவதை உறுதிசெய்யும் அது. 6, 8, 12 என்ற மூன்றின் தொடர்பு எல்லோருக்கும் வந்துவிடுவதால் மனைவியின் இழப்பு நிகழ்கிறது. எந்த பாவத்தின் (வீட்டின்) பலனை நாம் நிர்ணயம் செய்யவேண்டுமோ, அதை லக்னத்தை வைத்து நிர்ணயம் செய்வது உண்டு அந்த பாவத்தின் தரத்தை (பலம் - பலவீனம் என்பதை) இறுதிசெய்ய, அந்த பாவத்தை லக்னமாக வைத்து ஆராயச் சொல்லும் ஜோதிடம். உதாரணமாக செல்வத்தை ஆராய 2-ம் இடமும், 11-ம் இடமும் ஆராயப்படுகின்றன. இது, லக்னத்தை வைத்து ஆராயும் முறை.
செல்வத்தின் அளவை அதாவது இரண்டாம் பாவத்தின் எல்லையை - வரையறையை தீர்மானம் செய்ய, இரண்டை லக்னமாக பாவித்து ஆராயவேண்டும். அந்தந்த பாவத்தை லக்னமாக வைத்து ஆராயும் முறையைக் கடைப்பிடிக்கச் சொல்லும் ஜோதிடம். துல்லியமான பலனை எட்ட அது உதவும். லக்னத்தில் இருந்து ஆராய்வது போல், இரண்டை லக்னமாக எண்ணி ஆராயவேண்டும். இங்கு ஆராய்ச்சிக்கு (பலனை அறிய) எடுத்துக்கொண்ட பாவம் 7-ம் இடம். அதாவது மனைவி. லக்னத்தின் தொடர்பை மறந்து 7-ஐ லக்னமாக வைத்து ஆராய வேண்டும். 7-ல் பாப கிரகம் இருக்கிறதா அல்லது 7-ஐ பாப கிரகம் பார்க்கிறதா, பலம் குன்றிய கிரகம் 7-ல் அமர்ந்திருக்கிறதா, 7-ம் பாவம் இரு பக்கங்களிலும் பாபியோடு இணைந்திருக்கிறதா, ஆறிலும் எட்டிலும் பாப கிரகங்கள் இருக்கிறார்களா என்றும் பார்க்கவேண்டும். மேலும், 7-ல் கிரகங்கள் இல்லாமல் இருந்து ஆறிலும் எட்டிலும் பாப கிரகங்கள் இருந்தால், கிடுக்கிப்பிடி போல் 7-ம் வீடு பாப கிரகங்களில் மாட்டிக் கொண்டிருக்கிறதா, 5-க்கு உடையவன் 7-ல் அமர்ந்திருக்கிறானா, 8-க்கு உடையவன் 7-ல் அமர்ந்திருக்கிறானா, குளிகன் அமர்ந்த ராசிநாதன் ஏழில் அமர்ந்திருக்கிறானா... இப்படி, பல இடையூறுகளில் சிக்கிய 7-ம் வீடு சுயபலத்தை இழந்துவிடும் என்கிறது ஜோதிடம்.
ஆனால், ஏதாவதொரு சுபகிரகம் அந்த 7-ஐ பார்த்துவிட்டால், அதுவும் ஏழாம் பார்வையாக சுபகிரகம் பார்த்துவிட்டால், அத்தனை இடையூறுகளும் தலைதூக்காமல் இருந்துவிடும் என்கிறது ஜோதிடம் (பாப: பாபேஷிகோவ யதிபல ரஹித:...). 7-ஐ லக்னமாக வைத்து ஆராயும் வேளையில் லக்னத்துக்குச் சொன்ன நடைமுறையை இந்த பாவத்துக்குக் கையாளவேண்டும். 7-ல் பாப கிரகம் இருக்கக்கூடாது. ஏழுக்குடைய ஏழில் அதாவது லக்னத்தில் பாப கிரகம் இருக்கக் கூடாது. 7-ல் இருந்து கேந்திரத்திலும் (1,4,7,10-ம் வீடுகள்), திரிகோணத்திலும் (1,5,9) பாப கிரகங்கள் இருக்கக் கூடாது. 7-க்கு உடையவன், 6,8,12-ல் அமரக்கூடாது. 7-க்கு உடையவன் நின்ற ராசிநாதன் பலவீனம் அடையக்கூடாது. 7-க்கு உடையவன் இரண்டு பாப கிரகங்களுக்கு இடையில் அமரக் கூடாது. 7-க்கு உடையவன் பாப கிரகத்துடன் இணையக்கூடாது. அப்படி இணைந்து இருந்தால் அந்த பாவம் (7-ம் பாவம்) பலவீனம் அடைந்து உரிய பலனை அளிக்காமல் அதாவது அனுபவத்துக்கு வராமல் போய்விடும்.
7-க்கு உடையவனுக்கு பலவீனத்தை அளிக்கும் பாப கிரகங்களின் சேர்க்கையை சுபகிரகத்தின் பார்வை விலக்கிவிடும். ஒரு கிரகத்துக்கு வலு இருந்தும் பாப கிரகத்தின் சேர்க்கையில் வலு இழக்கப்படும்போது, சுபகிரகத்தின் பார்வையானது பாப கிரகத்தினால் விளையும் பலனை தலைதூக்காமல் செய்துவிடுவதுடன், சுபகிரகத்தின் பார்வை எந்த கிரகத்துக்கு கிடைத்திருக்கிறதோ, அதன் தகுதி உயர்வைப் பெற்று, நல்ல பலனை உணர இடமளித்து விடும். பாப கிரகத்தின் சேர்க்கையில் ஏற்பட்ட விபரீத விளைவுகளை சுபகிரகத்தின் பார்வை அகற்றிவிடும் (ஸெளம்ய யோகே க்ஷணோனா). எப்படி பாப கிரகத்தின் பார்வை, சேர்க்கை கெடுதலை ஏற்க வைக்கின்றனவோ, அது போல், சுபகிரகத்தின் பார்வை சேர்க்கை நல்லதை ஏற்கவைக்கும்.
சுக்கிரனுக்கு உலகவியல் சுகபோகங்களை அள்ளிக்கொடுத்து மகிழவைக்கும் தகுதியுண்டு. அதோடு நிற்காமல் குறிப்பாக தாம்பத்திய சுகத்தை முழுமையாக சுவைக்கவைக்கும் தகுதியையும் அளிப்பான். ஆகவேதான் சுக்கிரனுக்கு களத்ரகாரகன், விவாஹ காரகன் என்ற பெருமை ஏற்பட்டது. மனைவியும் கிடைத்து, தனக்கும் அதைப்பெற தகுதி இருந்தும் விவாககாரக கிரகத்தின் இடையூறு அவர்களது தாம்பத்திய சுகத்தை முழுமையாக சுவைக்க முடியாமல் செய்துவிடும்.
சுக்கிரனுக்கு இரு பக்கங்களிலும் பாப கிரகங்கள் வீற்றிருந்தால், அதாவது சுக்கிரனுக்கு முன்பின் ராசிகளில் அசுப கிரகம் இருந்தாலும் சரி, அல்லது ஒரே ராசியில் முன்பின் பாகைகளில் அசுப கிரகம் வீற்றிருந்தாலும் சரி, அதன் (வெப்ப கிரகத்தின்) தாக்கத்தால், தாம்பத்தியம் முழுமை பெறாமல் இருந்துவிடும்.

ஆனால் அந்த (பாபிகளுக்கு இடையில் மாட்டிக் கொண்ட) சுக்கிரனை சுப கிரகம் பார்த்தால், அந்த இடையூறு முற்றிலும் விலகி தாம்பத்திய சுகத்தை முழுமையாக உணரவைக்கும். பாபியின் சேர்க்கையில் கெடுதல் வந்தது; சுபனின் பார்வையில் கெடுதல் அகன்றது என்று அர்த்தம் அல்ல. சேர்க்கையில் விளையும் கெடுதலை அகற்றிவிடுகிறான் என்று பொருள். வந்த கெடுதலை அகற்றவில்லை சுப கிரக பார்வை; ஏற்படும் கெடுதலை அழித்து விடுகிறான்.
7-ல் இருக்கும் செவ்வாயை சுப கிரகம் ஏழாம் பார்வையாகப் பார்த்தால், செவ்வாயின் கெடுதலை தலைதூக்காமல் செய்துவிட்டது சுப கிரகத்தின் பார்வை என்று பொருள். சுப கிரக பார்வை ஏழாம் வீட்டிலும் விழும். அங்கிருக்கும் பாப கிரகத்திலும் விழும். வீட்டையும் (7-ம் வீடு) செழிப்பாக்கி, கெடுதல் செய்பவனின் செயலையும் அடக்கி, அந்த வீட்டின் (தாம்பத்தியத்தை) பலனை உறுதி செய்கிறது பார்வை. சேர்க்கையும் நல்ல பலனை அளிக்கும். ஆகையால்தான் 7-ல் செவ்வாயோடு சுப கிரகம் இணைந்தாலோ, பார்த்தாலோ செவ்வாய் தோஷம் இல்லை என்று சொல்வதற்கு ஏற்ப... அங்கு சுப கிரகத்தின் சேர்க்கை அல்லது பார்வை செவ்வா யின் செயல்பாட்டை நடைமுறைப்படுத்த முடியாமல் செய்துவிட்டது என்று பொருள்.
பலனை ஆராய, கிரகங்களின் தகுதியை மட்டும் ஆராய்ந்தால் போதாது. சுப-அசுப கிரகங்களின் சேர்க்கை அல்லது பார்வை நன்கு ஆராயப்பட வேண்டும் என்கிறது ஜோதிடம். எந்த வீட்டின் பலனை அறிய விரும்புகிறோமோ அதை எட்ட, பிறந்த வேளையான லக்னத்தை வைத்து மட்டும் ஆராய்ந்து பலனை இறுதி செய்யாமல், விரும்பும் வீட்டை லக்னமாக ஏற்றுக்கொண்டு அந்த வீட்டின் தகுதியை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் சுப-அசுப கிரகங்களின் சேர்க்கை, பார்வைகள் முக்கிய பங்கு வகிப்பதை மறுக்க இயலாது. வெப்ப கிரகம், தட்ப கிரகம் ஆகிய இரண்டும்தான் பலன் மாறுபடுவதில் முக்கிய பங்காற்றுகின்றன.
இயற்கை தத்துவமான வெட்பதட்பங்கள் கிரகங்களின் வாயிலாக மனித சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்தி, நல்லது-கெட்டதை உணரவைக்கின்றன. அத்தனை கிரகங்களையும் வெப்பம் - தட்பம்

என்ற இரண்டு பிரிவுகளில் அறிமுகம் செய்தது ஜோதிடம். மனதையோ அதன் வழி சிந்தனையையோ பாதிக்கும் தகுதி வெப்ப-தட்ப கிரகங்களுக்கு உண்டு என்பதை மறுக்க முடியாது. எல்லா உயிரினங்களிலும் ஏன் செடி-கொடிகளிலும்கூட அதன் வளர்ச்சிக்கும் அழிவுக்கும் வெப்பதட்பம் பங்கு வகிப்பதை மறுக்க முடியாது. வானவியலும் அந்தந்த நேரத்தில் வெப்ப-தட்பத்தை கணக்கிட்டு அறிமுகம் செய்கிறது. வெப்பச் சலனம் (தட்பத்துக்கு) மழைக்கு அறிகுறி என்பது எல்லோரும் அறிந்த உண்மை. வெப்பத்தின் மேலிட்டால், உலகச் சூழல் மாறிக்கொண்டு வருவதை உணர்த்துகிறார்கள்.
மனிதனின் சிந்தனையில் ஏற்பட்ட மாறுபாடு தான், அவன் ஏற்கும் சுக-துக்கங்களுக்குக் காரணம். சிந்தனையில் மாறுபாட்டை ஏற்படுத்துவது வெப்பதட்பம். நமது உடல் நல்ல முறையில் இயங்க, வெப்பதட்பத்தின் சமநிலை தேவைப்படுகிறது. வெப்பம் மிகுந்த தேசத்தில் வாழ்பவர்களுக்கும், தட்பம் மிகுந்த தேசத்தில் வாழ்பவர்களுக்கும் இடையே உருவத்திலும், சிந்தனையிலும், நடைமுறையிலும் மாறுபாடு இருப்பதைக் காணலாம். மனிதனின் அடையாளம் ஸ்தூலமான உருவம் அல்ல. சூட்சுமமான சிந்தனைதான். அதை வைத்துதான் மனிதன் ஒவ்வொருவனும் மாறுபடுகிறான்.
ஜோதிடத்தின் இலக்கணம், அதன் இலக்கு, அதன் தோற்றம் இப்படி எதையும் ஆராயாமல், கணினி அறிமுகம் செய்த கட்டத்தை வைத்துக்கொண்டு, தனது அனுபவத்தை மூலதனமாகக் கொண்டு, மனிதனின் இயல்புக்கு உகந்த வகையில் பலன் சொல்லும் ஜோதிட பிரபலங்கள் தோன்றக்கூடாது. இந்த ஜாதகம் வெளிநாடு சென்று பணம் ஈட்டி பெரியமனிதனாக மாற வைக்கும், இவனுக்கு முதல் மனைவி விலகி, இரண்டாவது திருமணம் நடக்கும், இவன் கணினிக் கல்வியில் சிறப்பான், இவன் சமூக சேவகனாகத் திகழ்வான், இவன் சீர்திருத்தவாதி, இவன் வக்கீல், இவன் மருத்துவனாவான்... இப்படிக் கூறுவதெல்லாம் 300 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவர்களிடம் தென்படாது.
காலத்துக்கு உகந்தவாறு பலன் சொல்லும் திறமையை, ஜோதிட வல்லுனருக்கு அடையாள மாக ஏற்க இயலாது. உனக்கு எட்டு குழந்தைகள், பத்து குழந்தைகள் என்றெல்லாம் சொல்வது இல்லை. தற்காலத்தில் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளோடு நிறுத்திக் கொள்கிறார்கள். மக்களின் அன்றாட வாழ்க்கைமுறை அனுபவங் களை வைத்தும், அவர்களது சிந்தனையை நடைமுறையில் பார்த்தும், தோராயமாக பலன் சொல்லும் முறையை ஜோதிட பிரபலங்கள் பின்பற்றக்கூடாது. கல்வியும் செல்வமும் வாழ்கைக்குத் தேவை. அவற்றை, ஜாதகம் பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.
- தொடரும்...