மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - 24

சிவமகுடம் - 24
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம் - 24

ஆலவாய் ஆதிரையான், ஓவியங்கள்: ஸ்யாம்

சிவமகுடம் - 24

மலர்ந்தது பூ வியூகம்!

கீழ்வானம் வெளுக்கத் துவங்கியிருந்தது; மேகத் திரை விலக்கி மெள்ள முகம் காட்டிய செங்கதிரோனின் புத்தொளியால் விழித்தெழுந்த புள்ளினங்கள், அன்றுதான் ஏதோ புதிதாகப் பார்ப்பது போல்... அந்த ஒற்றையடிப் பாதை யில் பாய்ந்து வந்த புரவிகளைக் கண்டதும், பல்வேறு விநோதக் கூச்சல்களை எழுப்பியவாறும், சிறகடித்து சிரம் சிலுப்பியபடியும் தங்களின் உறைவிடங்களான விருட்சங் களை விட்டு அகன்று, வானில் மேலெழுந்து பறந்தன.

அவற்றின் அந்தச் சலனத்துக்குக் காரணமாகிப் பாய்ந்து வந்த புரவிகளும், தங்களின் பாய்ச்சலை சட்டெனக் குறைத்துக்கொண்டு தளர்நடைபோட்டன. அவற்றின் வேகம் தணிந்ததற்குக் காரணம், புள்ளினங்கள் ஏற்படுத்திய அந்தப் புறச்சூழல் அல்ல; தத்தமது எஜமானர்கள் முறையே கால் பெருவிரல்களாலும், கரங்களாலும் தங்களுக்கு விடுத்த ஆணைக்குக் கட்டுப்பட்டே அவை வேகம் குறைத்து, வனத்தின் அந்த ஒற்றையடிப்பாதையில் நடக்கத் துவங்கியிருந்தன.

அந்த தருணத்தில்தான் சைவத் துறவியாருக்கும் பாண்டியனுக்குமான உரையாடல் நடந்தது. துறவியாரின் கேள்விகளுக்கெல்லாம் மன்னவன் பூடகமாகவே பதில் அளித்தது, துறவியாருக்கு பெரும் குழப்பத்தையும் அயர்ச்சியையும் தந்தது.

அதன் வெளிப்பாடாகவே, ‘‘ஏதேது... அணுக்கனான என் மீதும் மன்னவருக்குச் சந்தேகத் திரை விழுந்துவிட்டதோ’’ என்று ஒரு கேள்வியை வீசினார் துறவியார். அத்துடன் நிற்காமல், தொடர்ந்து மன்னவன் வேடிக்கை யாய்ப் பேசிய பேச்சையும் கட்டுப்படுத்தி, ‘‘விளையாடுவதற்கான தருணமல்ல இது’’ என்று உரிமையோடு கடிந்தும் கொண்டார்.

 தன்மீதும் மன்னவன் சந்தேகப்படுகிறார் என்ற எண்ணத்தை தனக்குத்தானே விதைத் துக்கொண்டார். அந்த விதை, அவரின் முகத்தில் பெரும் விரக்தி விருட்சமாய் தளைத்திருந்ததையும் மாறவர்மன் கவனிக்கத் தவறவில்லை.

அதற்குமேலும் அவரது பொறுமையை சோதிக்க விரும்பாத மாறவர்மன் அரிகேசரி, தனது வியூக விஷயங்களை அவருக்கு விளக்க, அதைக் கேட்டு பெரிதும் மலைத்துப்போனார் துறவி. தென்பரத கண்டத்தின் எதிர்கால தலைவிதியையே தீர்மானிக்கப்போகும் மாறவர்மனின் வியூகத் திட்டமும், அவனுடைய தீர்க்கதரிசனமும் துறவியாரை மலைக்க வைத்ததில் ஆச்சரியம் இல்லைதான்.

சோழமும், சேர தேசமும் மட்டுமல்ல, வடக்கில் பல்லவ ராஜ்ஜியத்தையும் கடந்து சாளுக்கியம் வரை நீள்கிறது அவனது பார்வை என்பதைத் தெளிவாகப் புரிந்துகொண்டார்.

காலமும் அதை நிரூபிக்கவே செய்தது. பிற்காலத்தில் சாளுக்கியப் பேரரசன் விக்ரமாதித்தன் காஞ்சியை வென்றதுடன் நில்லாமல், உறையூரிலும் கால்பதித்தான். அவனது அடுத்த இலக்கு மதுரைதான் என்பதை அறிந்த மாறவர்மன் அரிகேசரியின் மைந்தன் கோச்சடையான், பெரும் படையுடன் சென்று சாளுக்கியரை துரத்தியடித்த சரித்திரத்தை செப்பேடுகள் விவரிக்கின்றன.

இப்படியொரு சரித்திரச் சிறப்புக்கு அடிகோலியது, உறையூர் போரை ஒட்டி மாறவர்மன் எடுத்த வியூக நடவடிக்கை கள்தான் என்றே சொல்லவேண்டும்.

ஆமாம்! உறையூரைக் களமாகக் கொண்டு, சேரரை முடக்கவும், பல்லவரை ஒரு கட்டுக் குள் வைக்கவும் யத்தனித்தான் பாண்டியன் மாறவர்மன் அரிகேசரி. அதையொட்டிய தனது திட்டங்களை மேலும் அவன் விளக்கியபோது, எதிர்காலம் குறித்து மட்டுமல்ல, கடந்தகாலத்தையும் - தன் முன்னோரின் வீரத்தையும்கூட அவன் நினைவுகூர தவறவில்லை.

சேர-சோழரும், அவர்களோடு *வேளிர்கள் ஐவரும் இணைந்து எதிர்த்தபோதும், சிறுவயதினனான பாண்டியன் நெடுஞ் செழியன் நெஞ்சுரத்தோடு அவர்களை தலையாலங்கானத்தில் எதிர்கொண்டு வீழ்த்திய சரித்திரத்தை எண்ணிக் களிகூர்ந்தான்.

இளையவனான நெடுஞ்செழியன் போர்க் கோலம் பூண்டு வந்ததைச் சிறப்பித்து இடைக்குன்றூற் கிழார் எனும் புலவர்  ஒருவர் பாடி அருளிய பாடலைப் பாடவும் தலைப்பட்டான்.

மூதூர் வாயில் பனிக்கயம் மண்ணி
மன்ற வேம்பின் ஒண்குழை மலைந்து

என்று மாறவர்மன் பாடி நிறுத்த, சைவத் துறவியார் தொடர்ந்து பாடினார்:

தென்கிணை முன்னர்க் களிற்றின் இயலி
வெம்போர்ச் செழியனும் வந்தனன்...


அவர் பாடி முடிக்கவில்லை, அதற்குள்ளாக அவரை இடைமறித்த பாண்டிய மன்னன், ‘‘துறவியாரே பண்டைய காலம் திரும்பப் போகிறது. திக்கெட்டும் கயற்கொடி பட்டொளி வீசிப் பறப்பதைப் பார்த்து ஆனந்தத்தில் திளைக்கப் போகிறீர்கள்!’’ என்றபடியே, தனது புரவி வேகமெடுக்கும் விதம் அதைத் தட்டிவிட்டான், அடுத்து காத்திருந்த பேராபத்து குறித்து அறியாமல்!

அவனது புரவி பாயத் தயாராகவும் துறவியும் தன் புரவியோடு அவனுக்கு இணையாக வந்து சேர்ந்துகொண்டார்.

மெள்ள இருவரது புரவிகளும் மீண்டும் வேகமெடுக்கத் துவங்கியிருந்த வேளையில், அந்தக் குறுகிய பாதையின் திருப்பத்தில், பாதையை வழிமறித்தபடி தொங்கிக் கொண்டிருந்தன, பெரியதொரு ஆல விருட்சத்தின் விழுதுகள். ஆகவே, அவர்கள் மீண்டும் வேகம் தணிக்க நேர்ந்தது.

அந்த விழுதுகளை தரைநோக்கி விழச் செய்திருந்த விருட்சமானது, தனது கிளை ஒன்றை, அந்தப் பாதைக்கு நேர் மேலாக இருக்கும்படி நீட்டியிருந்தது. அதன் மீது அமர்ந்தபடிதான், பாண்டியனின் வருகைக் காக கையில் சர்ப்பத்துடன் காத்திருந்தான், வீரன் ஒருவன்.

அந்த கிளைக்கு நேர்க் கீழாக பாண்டியன் வரும்போது அவன் மீது சர்ப்பத்தை வீசுவதே அந்த முரடனின் திட்டம். மன்னவன் முழுக்கவசம் அணிந்திருந்தபடியால் வேறு ஆயுதங் களை எறிந்து அவனை வீழ்த்த முடியாது என்பதால் சர்ப்பத்தையே ஆயுதமாகக் கொண்டு காத்திருந்தான் அந்தக் கயவன்.

வெகுசீக்கிரமே அவன் எதிர்பார்த்திருந்த தருணம் வாய்த்தது!

ஆனால், கிளைக்கு நேர்க் கீழே பாண்டியன் வந்ததும், முரடன் தன் கையில் இருந்த சர்ப்பத்தை வீச முயற்சித்த அதேநேரம், எங்கிருந்தோ பாய்ந்து வந்தது பிறைச்சந்திர அஸ்திரம் ஒன்று. காலாக்னி போன்று மிக வேகமாக வந்த அந்த அஸ்திரம், முரடனின் கையில் இருந்த சர்ப்பத்தை துண்டாடி விட்டுச் சென்றது. தொடர்ந்து வந்த மற்றோர் அஸ்திரம் அந்த முரடனையும் காயப்படுத்தி, விருட்சத்தில் இருந்து கீழே விழவைத்தது.

சட்டென்று சுதாரித்து எழுந்தவன், பாண் டிய மன்னன் சுதாரிப்பதற்குள் அங்கிருந்து தப்பியோடினான்.

திடுமென நிகழ்ந்துவிட்ட சம்பவம், பாண்டியனையும் துறவியாரையும் நிலைகுலைய வைத்துவிட்டது. ஆபத்து இன்னதென்று அறியமுடியாவிட்டாலும், ஏதோ நிகழ இருந்ததை எவரோ தடுத்திருக் கிறார்கள் என்பதை மட்டும் பாண்டியனால் உணரமுடிந்தது.

சிவமகுடம் - 24

தடுத்தது யாரென்று யூகிக்க சந்தர்ப்பம் அளிக்காதபடி, வேறு இரண்டு புரவிகள் மின்னல் வேகத்தில் அவர்களைக் கடந்து சென்றன. அவற்றில், பின்னால் சென்ற புரவி மட்டும், சட்டென்று தனது வேகம் கட்டுப் படுத்தப்பட்டதால், பேரவஸ்தையோடு முன்னங்கால்களை உயரத் தூக்கி பெரி தாகக் கனைத்தபடி இவர்களை நோக்கித் திரும்பவும் செய்தது. அதன் மீது ஆரோகணித் திருந்த உருவம், பாண்டிய மன்னவனுக்குத் தலைவணங்கியதுடன், உரக்கக் கூறியது ஒரு செய்தியை.

‘‘சக்கரவர்த்தி அவர்களே! அன்று என்னை நீங்கள் காப்பாற்றினீர்கள்; இன்று உங்களை நான் காப்பாற்றிவிட்டேன். ஆனால், என் தலையில் அடித்து மயக்கமுறச் செய்ததற்கு பதிலடி களத்தில் கிடைக்கும். உறையூர்தானே வருகிறீர்கள்... வாருங்கள்; நாங்கள் முன்னால் செல்கிறோம்!’’

மறுகணம் அந்தப் புரவி அங்கு நிற்க வில்லை; புயலெனப் பாய்ந்து சடுதியில் புள்ளியாய் மறைந்தும் போனது. ஆனால் அந்த பெண் குரல், பாண்டியனின் செவியை விட்டு அகலவே இல்லை.
``அது! பொங்கிதேவியின் குரலேதான்! எனில், அவளுடன் செல்வது நம்பியாகத்தான் இருக்கவேண்டும். இருவரும் எப்படி தப்பித் தார்கள்?'' - துறவி, மன்னவன் இருவருக்குள்ளும் இந்த எண்ணம் எழுந்திருக்க வேண்டும். ஒருவரையொருவர் அர்த்தபுஷ்டியுடன் பார்த்துக் கொண்டனர். பிறகு, ஏதோ முடிவுக்கு வந்தவனாக, தன் இடையில் இருந்த கொம்பை எடுத்து ஊதினான், மாறவர்மன் அரிகேசரி.

மறுகணம், அதேபோன்ற கொம்பு வாத் திய முழக்கங்கள் அந்த கானகம் எங்கும் முழங்கின. தொடர்ந்து, ஆங்காங்கே காட்டின் மறைவுகளில் இருந்து வெளிப்பட்டனர் பாண்டிய வீரர்கள். அவர்களில் சிலர் குதிரை வீரர்களாகத் திகழ்ந்தார்கள். அரைநாழிகைப் பொழுதில், சுமார் ஆயிரம் வீரர்களைக் கொண்ட பாண்டிய சேனை ஒன்று, போருக்குச் சன்னத்தமாய் நின்றிருந்தது. இவை எல்லாவற்றையும் பார்க்கப் பார்க்க துறவியாரின் வியப்பு எல்லை கடந்தது.அவருக்கு வேறொரு வியப்பையும் அளித்தான் பாண்டியன்.

ஆம், அந்த சேனைக்குத் தலைவராக அவ ரையே நியமித்து ஆணையிட்ட மன்னவன், வான் நோக்கி வாளுயர்த்த, தங்கள் மன்னவனுக்கும், தென்பாண்டி தேசத்துக்கும் ஜயகோஷம் எழுப்பியபடி, பெரும்புயலென நகரத் துவங்கியது... மாறவர்மன் அரிகேசரி,  சோழத்தின் மீது ஏவிய அஸ்திர சேனையின் முனைப்பகுதியான அந்த முன்னவர் படை!

அதேநேரம், மன்னவரின் மெய்க்காவல் படையைச் சேர்ந்த வீரர்கள் சிலர், சர்ப்பம் வீச வந்தவனைத் தேடி விரைந்தனர்.

ஆனால், உறையூரிலோ பாண்டியன் கனவிலும் எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்ந்தேறிக்கொண்டிருந்தது. ஆம்! அவனது திட்டப்படி உறையூர்க் கோட்டையில் வட திசை அகழிக் காவிரியில் இருந்து எழுந்த பாண்டிய வீரர்கள், தங்களின் சகாக்கள் இருந்த சிறைக் கொட்டடியின் சாளரம் வழியே கோட்டைக்குள் நுழைய முயற்சிக்க, சோழத்தின் பூ வியூகம் செயல்படத் துவங் கியது. அதன் புற இதழ்கள் விரிந்து, பாண்டி யர்களை நசுக்கத் துவங்கியிருந்தன.

அதுமட்டுமா? கோட்டையின் சிறைக் கோட்டத்து கற்கதவுகளும் கீழிறங்கி, அங்கிருந்து தப்பிக்க முயன்ற பாண்டிய வீரர்களையும் நசுக்க முற்பட்டன!

- மகுடம் சூடுவோம்...

* தலையாலங்கானத்து செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனை எதிர்த்த வேளிர்கள் ஐவர்:

திதியன், எழினி, எருமையூரன், இருங்கோவேண்மான், பொருநன் ஆகியோர் என்று அறியமுடிகிறது.