
யுவா, ஓவியம்: மகேஸ்

‘‘அம்மா... ஆ... ஆ!’’
படுக்கையறைப் பக்கம் இருந்து மகள் ரக்ஷிதா பெரிதாக அலறும் சத்தம் கேட்டு, சமையலறையில் சப்பாத்தி மாவு பிசைந்து கொண்டிருந்த அம்மா பதைபதைப்புடன் ஓடி வந்தார். அதே நேரம், அவரின் இடப்பக்கமாகக் கடந்து, ஹாலின் வேறுபக்கம் ஓடினான் மகன் தீபக்.
படுக்கையறை வெளியே தாழிடப்பட்டிருந்தது. அம்மா நடந்ததை புரிந்துகொண்டார்; அது மகனின் குறும்புத்தனம்தான் என்று. வேகமாகச் சென்று தாழ்ப்பாளை நீக்கி கதவைத் திறந்தால், உள்ளே கும்மிருட்டு. கைகளால் தடவி சுவிட்சைப் போட்டார் அம்மா. கட்டிலில் வியர்த்து விறுவிறுத்துப்போய் அமர்ந்திருந்தாள் ரக்ஷிதா. அவளுக்கு இருட்டென்றால் அவ்வளவு பயம்!
அம்மவைப் பார்த்ததும் ஓரளவு நிதானத்துக்கு வந்தவள், ‘‘பாரும்மா... இந்த தீபக்கை! லைட்டை ஆஃப் பண்ணிட்டுப் போயிட்டான். டார்ச் லைட்டையும் கையோட எடுத்துட்டுப் போயிட்டான்’’ என்று கம்ப்ளைன்ட் செய்தவளின் குரலும் உடலும் ஒருசேர நடுங்கின. கண்களில் நீர் தழும்பிநின்றது!
‘‘அவ, என்னை அடிச்சாம்மா. அதான்...” என்றான் தீபக், பாதுகாப்பான தொலைவில் நின்றுகொண்டு!
‘‘சரி! விடு அவனுக்குச் சரியான பனிஷ்மென்ட் தர்றேன்’’ என்று மகளை சமாதானம் செய்த அம்மா, மகன் தீபக்கை கண்டித்து விட்டு, ‘‘இந்தப் பொண்ணுக்கு எப்போதான் இந்த இருட்டுபயம் தொலையுமோ?’’ என்ற கவலை மிகுந்த புலம்பலுடன் மீண்டும் சமையலறைக்குள் நுழைந்தாள். மறுநாளே அதற்கு ஒரு தீர்வு கிடைத்தது.
மறுநாள் இரவு... திடுமென கரன்ட் கட்டானது. அதேநேரம் மிகப் பெரிதாக அம்மாவின் அலறல் சத்தமும், அதைத் தொடர்ந்து பாத்திரங்கள் உருண்டு விழும் சத்தமும் கேட்டது. ‘‘அம்மா! என்னாச்சு..?’’ என்று பதறி எழுந்த ரக்ஷிதா, இருட்டில் சுவரைப் பிடித்தபடியே கிச்சனுக்குச் சென்றாள்.
அங்கே கீழே விழுந்துகிடந்தார் அம்மா. ‘‘வழுக்கி விழுந்துட்டேன் ரக்ஷிதா. வேறொண்ணுமில்லை. நீ போய் ஹாலில் அலமாரியில் இருக்கும் தைலத்தை எடுத்து வா!’’ என்றாள்.
ரக்ஷிதா விடவில்லை. அம்மாவை கைத்தாங்கலாகப் பிடித்து தூக்கி படுக்கைக்குக் கொண்டு வந்து அமர்த்தினாள். இப்போது கண்களுக்கு இருட்டு பழகிவிட்டிருந்தபடியால், மெள்ள அலமாரி பக்கம் சென்று, கைகளால் துலாவி தைல டப்பாவையும் எடுத்து வந்தாள். தைலத்தை அம்மாவின் இடுப்பில் அவள் தடவிக் கொண்டிருக்கும்போதே கரன்ட் வந்துவிட்டது.
‘‘அம்மா, ஒண்ணும் ஆகலையே.. பயந்தே போயிட்டேன்’’ என்றாள் ரக்ஷிதா.
‘‘ஸ்லிப் ஆனதும் உட்கார்ந்துட்டேன். கொஞ்சம் ரெஸ்ட் எடுத்தால் சரியாயிடும்’’ என்று பதில் சொன்ன அம்மா, ‘‘ஆமாம்... பயந்துட்டதா சொன்னியே... இருட்டைப் பார்த்தா, என்னை நினைச்சா?” எனச் சிரித்தபடியே கேட்க, ரக்ஷிதா திகைத்தாள். பதற்றத்திலும் பரபரப்பிலும் இருட்டை அவள் பொருட்படுத்தவே இல்லை என்பதை அப்போதுதான் உணர்ந்தாள்.
அவளின் தலையில் கை வைத்து பரிவுடன் தடவிக்கொடுத்தபடி அம்மா சொன்னார்: ‘‘இதான் விஷயம் ரக்ஷிதா! நம்மளோட சின்னச் சின்ன வீக்னஸை விரட்டணும்னா, ஒரு பெரிய பொறுப்பை கையில் எடுத்துக்கணும். அதிலேயே கவனம் செலுத்துனா மற்ற வீக்னஸ் தானா மறந்துடும்’’
புரிந்துகொண்டவளாய் தலையசைத்த ரக்ஷிதா, அன்போடு அம்மாவைக் கட்டிக்கொண்டாள்.