Published:Updated:

காயத்ரி ஜபம் செய்தபோது பாபா தரிசனம்! - பாபாவின் அருளாடல்கள் #SaiBaba

காயத்ரி ஜபம் செய்தபோது பாபா தரிசனம்...

காயத்ரி ஜபம் செய்தபோது பாபா தரிசனம்! - பாபாவின் அருளாடல்கள் #SaiBaba
காயத்ரி ஜபம் செய்தபோது பாபா தரிசனம்! - பாபாவின் அருளாடல்கள் #SaiBaba

ப்படி ஒரு விருட்சம், தான் தரும் சுவை மிகுந்த கனிகளால் பெருமையடைகிறதோ அப்படி சில குருமார்களை உருவாக்கும்போதுதான் ஒருவர் சத்குரு என்று போற்றப்பெறுகிறார். ஷீர்டி பாபாவும் ஶ்ரீகாட்கி மஹராஜைப்போல் பல குருமார்களை உருவாக்கியிருக்கிறார். அவர்களில் இன்னும் சிலரைப் பற்றி இங்கே பார்ப்போம்.

ராம மாருதி மஹராஜ்

1910-ம் ஆண்டு...

தீபாவளிக்கு முந்தைய நாளில் அவர் தமது பக்தர்களிடம் மிகவும் மகிழ்ச்சியுடன் பின்வரும் வார்த்தைகளைக் கூறினார்... ''நாளைய தினம் தீபாவளி. அதுமட்டுமல்லாமல் எனக்கு மிகவும் விருப்பமான நாளும்கூட.’’ 

அடுத்த நாள் தீபாவளி. அன்று காலை அவர் தம்முடைய அத்யந்த பக்தர்களிடம், ''இன்று என் தம்பி என்னைக் காண வரப்போகிறான். அவன் மீது நான் மிகுந்த பிரியம் வைத்திருக்கிறேன். எங்கள் இருவரின் மனைவிக்கிடையில் ஏற்பட்ட சண்டையின் காரணமாக நாங்கள் பிரிந்துவிட்டோம்’’ என்று கூறினார். பாபா கூறியதன் பொருள் அங்கிருந்தவர்களுக்குப் புரியவில்லை.

துவாரகாமாயியில் மதிய ஆரத்தி தொடங்கியபோது, ராம மாருதி மஹராஜ் என்னும் துறவி தம்முடைய சீடர்களுடன் துவாரகாமாயிக்கு வந்தார். அவரைக் கண்டவுடன் பாபா ஆரத்திப் பாடலை நிறுத்தச் சொல்லிவிட்டு, ராம மாருதி மஹராஜை தமக்கு அருகில் வருமாறு அழைத்தார்.  

அதற்காகவே காத்திருந்த ராம மாருதி மஹராஜ், பசுவைக் கண்ட கன்றினைப்போல அவரிடம் ஓடிச் சென்று கட்டியணைத்துக்கொண்டு முத்தமிட்டார். அதன் பின்னர் ஆரத்தி தொடங்கியது. பாபா, அவருடைய கையைப் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தார். ஆரத்தி முடிந்ததும்,  ராம மாருதி மஹராஜ் கண்டோபா ஆலயத்துக்குச் சென்றார். அங்கிருந்த தன் சீடர்களிடம் பாபாவுக்கு நைவேத்தியம் செய்வதற்காக ரவா கேசரி செய்யச் சொன்னார்.

அதே தருணம், துவாரகாமாயியில் பாபாவுக்கு நைவேத்தியம் செய்வதற்காக பல்வேறு உணவு வகைகளை பக்தர்கள் கொண்டு வந்திருந்தனர். அவர்களைச் சற்றுநேரம் பொறுத்திருக்கும்படிக் கூறிவிட்டு, ராம மாருதி மஹராஜுக்காக காத்துக்கொண்டிருந்தார். சற்றைக்கெல்லாம் ராம மாருதி மஹராஜ் கேசரியுடன் அங்கு வந்தார். பாபா மகிழ்ச்சியுடன் ராம மாருதி மஹராஜ் நைவேத்தியம் செய்த கேசரியை சிறிது உண்டுவிட்டு, அதன் பிறகே மற்ற பக்தர்கள் கொண்டு வந்த நைவேத்தியங்களை ஏற்றுக்கொண்டார். பாபா, தம்முடைய தம்பியைப்போல் பாவித்த ராம மாருதி மஹராஜை பதினான்கு நாள்கள் தம்முடனேயே வைத்திருந்தார். இரவு வேளையில் மட்டும் அவரை கண்டோபா ஆலயத்துக்குச் சென்று ஓய்வெடுக்கும்படி கூறினார்.

ராம மாருதி மஹராஜின்  குரு, ஶ்ரீபாலகுந்தஸ்வாமிதான் என்றாலும், அவர் பாபாவையே தமது மானசீக குருவாகக் கொண்டிருப்பதாகக் கூறுவார். பாபா, அவர்களுடைய மனைவிகள் என்று குறிப்பிட்டது அவர்களுடைய மனங்களைத்தான். ராம மாருதி மஹராஜ் வேறு ஒருவரை குருவாகக் கொண்டிருந்ததால்தான் தங்களுக்குள் பிரிவு ஏற்பட்டுவிட்டது என்பதையே பாபா இப்படி குறிப்பால் உணர்த்தினார். ராம மாருதி மஹராஜ் அந்தப் பிறவியில் வேறு ஒருவரை குருவாகக் கொண்டிருந்தாலும், அவருடைய பல பிறவிகளில் பாபாவையே அவருடைய குருவாகக் கொண்டிருந்தார். அதனால்தான் இந்தப் பிறவியிலும் பாபாவை மானசீக குருவாகக் கொண்டதுடன், அவரிடம் மிகுந்த அன்பும் செலுத்திவந்தார். பாபாவை வணங்குவதிலேயே பெரும் மகிழ்ச்சியும் அடைந்தார்.
***

பாபாவின் மகா சமாதிக்குப் பிறகு நிகழ்ந்த அற்புதம் இது...

குஜராத்தில் சாந்தாவன்ஜி என்னும் பெயர் கொண்ட துறவி ஒருவர் இருந்தார். இவர் கிட்டத்தட்ட முப்பது ஆண்டு காலம் இமாலயத்தில் தங்கியிருந்து பிரம்மசரியத்தைக் கடைப்பிடித்து வந்ததுடன்,  காயத்ரிநாமத்தை தீவிரமாக ஜபித்துக்கொண்டிருந்தார்.  அவர் ஒருமுறை பாலனபுரத்திலுள்ள பலராம க்ஷேத்திரத்தில் காயத்ரி ஜபம் செய்துகொண்டிருந்தார். எவ்வளவு கடினமாக முயன்றும் அவரால் அவருடைய மனதை ஒருமுகப்படுத்த இயலவில்லை. எனவே, விரக்தி ஏற்பட்டு, நதியில் குதித்து உயிர்விடத்  துணிந்தார். சிவாலயத்திலிருக்கும் தேவியைப் பிரார்த்தித்துவிட்டு, காயத்ரி மந்திரத்தை ஜபித்தபடி நதியில் குதிக்க நினைத்தபோது, ஒரு மகான் அவருடைய கையைப் பற்றி இழுத்தார். அந்த மகான் தாடியுடனும், ஒளி பொருந்திய கண்களுடனும் இருந்தார். அவர் சாந்தாவன்ஜியின் கையில் ஒரு பயணச்சீட்டைக் கொடுத்துவிட்டு மறைந்தார். கலோல் என்னும் ஊருக்குச் செல்வதற்கான பயணச்சீட்டு அது. 

அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு சாந்தாவன்ஜி பலமுறை இமாலயத்துக்குச் சென்று வந்தார். இறுதியாக அவர் நர்மதா நதி தீரத்தில் அருகிலுள்ள கரணாலி என்னும் இடத்தில் வசிக்கத் தொடங்கினார். அதன் பின்னர் 1976-ம் ஆண்டில் சூரத் என்னும் இடத்திலிருந்த பாபாவின் ஆலயத்தில் காயத்ரி ஜபம் செய்வதற்காக இவரை அழைத்தனர். அதுவரை அவர் எந்த  பாபாவுடைய ஆலயத்துக்கும் போயிருக்கவில்லை. அவரைப் பற்றி எதுவும் அறிந்திருக்கவுமில்லை. அவரது ஆலயத்தில் அவர் தங்கியிருந்தபோது ஒருநாள் இரவு அவருடைய கனவில் தோன்றிய பாபா, முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் பலராம க்ஷேத்திரத்தில் நதியில் குதித்து உயிர்விட நினைத்தபோது, தாமே வந்து அவரைக் காப்பாற்றியதாகக் கூறினார். அந்த நிகழ்ச்சியை நினைவுபடுத்திக்கொண்ட  சாந்தாவன்ஜி மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அடுத்த நாள் அவர் காயத்ரி ஜபம் உச்சரிக்கும்போது காயத்ரி தேவிக்குப் பதிலாக, பாபாவே அவருக்கு தரிசனம் தந்தார்.
 

சாயி பற்றி மேலும் அறிந்துகொள்ள, இங்கே க்ளிக் செய்யவும்...