தொடர்கள்
Published:Updated:

நாரதர் உலா

நாரதர் உலா
பிரீமியம் ஸ்டோரி
News
நாரதர் உலா

கல்யாண வரம் தரும் கோயிலில் கஷ்டத்தில் பக்தர்கள்!

நாரதர் உலா

‘‘உங்க பிள்ளையின் கல்யாணத்துக்குப் பெண் பார்த்துக் கொண்டு இருப்பதாகக் கூறினீரே, அமைந்துவிட்டதா?” என்று கேட்டபடியே நம் அறைக்குள் பிரசன்னமானார் நாரதர்.

‘‘இன்னும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்...’’ என்று நாம் முடிப்பதற்குள், நாரதர் குறுக்கிட்டு, ‘‘உங்கள் பிள்ளைக்கு நல்ல இடத்தில் பெண் அமைய வேண்டும் என்று வேண்டிக்கொண்டு, அந்தக் கோயிலுக்கு மட்டும் போய்விடாதீர்கள்!’’ என்றார்.

நாரதர் உலா

ஒன்றும் புரியாமல், ‘‘எந்தக் கோயிலைச் சொல்கிறீர், நாரதரே?’’ என்று கேட்டோம்.

‘‘நாகை மாவட்டம், மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருமணஞ்சேரி கோயிலைத்தான் சொல்கிறேன்’’ என்றார் நாரதர்.

‘‘திருமணஞ்சேரிக்குச் சென்றால் திருமணம் கூடிவருகிறது என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். நீர் என்னவோ நேர்மாறாகச் சொல்கிறீரே?’’

‘‘அந்தக் கோயிலுக்குச் சென்றால், பக்தர்களின் நம்பிக்கைக்கு ஏற்ற பலன் கிடைக்கத்தான் செய்கிறது. நான் அதைக் குறை சொல்லவில்லை. அங்கே, கோயிலுக்கு வெளியில் பக்தர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளைப் பார்த்து, நொந்து போய்த்தான் அப்படிச் சொல்கிறேன்!’’

“நீரே நொந்துபோகும் அளவுக்கு அங்கே அப்படியென்ன பிரச்னைகள்?”

‘‘திருமணம் நடைபெறவேண்டியும், வேண்டியபடி இனிதே திருமணம் நடந்ததும் இறைவனுக்கு நன்றி செலுத்தவேண்டியும் தினமும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் அந்தக் கோயிலுக்குச் செல்கிறார்கள். அவர்கள் நிம்மதியாகப் பிரார்த்தனை செய்யமுடியாதபடி கோயிலுக்கு வெளியே அடாவடித்தனம் அதிகமாகிவிட்டது!’’

‘‘அப்படி அங்கே யார், என்னதான் செய்கிறார்கள்? விளக்கமாகத்தான் சொல்லுங்களேன்!’’

‘‘கோவையில் இருந்து வந்த பக்தர் மௌனசாமி என்பவர் வருத்தத்துடன் என்னிடம் சொன்னதை அப்படியே சொல்கிறேன். ‘நான் என் மகளுக்குத் திருமணம் நடைபெற வேண்டும் என்று வேண்டிக்கொள்வதற்காக இந்தக் கோயிலுக்கு வந்தேன். கோயில் வாசலிலேயே அர்ச்சனைப் பொருட்கள் என்ற பெயரில் ஒரு பையை ரூபாய் 100 கொடுத்து வாங்கிக்கொள்ளும்படி கட்டாயப்படுத்தினார்கள்.

நாரதர் உலா

நான், `இது கோயில் மூலம் விற்கப்படுகிறதா?' என்று கேட்டதற்கு `ஆமாம்' என்று சொன்னார். அதை நம்பி வாங்கிக் கொண்டு கோயிலுக்குள் சென்றால், அதை அர்ச்சனைக்குப் பயன்படுத்த முடியாது என்று சொல்லி, வேறு அர்ச்சனைத் தட்டை வாங்கி வருமாறு சொல்கிறார்கள்.

மீண்டும் கோயில் வாசலுக்குப் போய் `ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?' என்று கேட்டால்,  ‘இங்கே இப்படித்தான் செய்வோம். உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்துகொள்' என்று மிரட்டலாகச் சொல்கிறார்கள். கடந்த பல வருடங்களாகவே இப்படிக் கோயிலுக்கு வெளியில் கடை வைத்து, அர்ச்சனைத் தட்டு விற்று வரும் அவர்கள், தங்கள் இஷ்டத்துக்கு விலை சொல்லி பக்தர்களை வேதனைப்படுத்துகிறார்கள்’ என்றார் மௌனசாமி. அவர் மட்டுமல்ல, உள்ளூர்வாசிகள் சிலரும் ரொம்ப காலமாகவே இப்படித்தான் நடந்து வருகிறது என்று வருத்தத்துடன் தெரிவித்தார்கள்’’ என்றார் நாரதர். தொடர்ந்து, ‘‘அதோடு விட்டால் பரவாயில்லையே! கோயிலுக்குள் சிறப்பு பூஜை செய்து தருகிறோம் என்ற பெயரில், வேண்டாம் வேண்டாம் என்று சொன்னாலும், வம்படியாக எக்கச்சக்கமான பணத்தைப் பிடுங்கிக்கொள்கிறார்கள்’’ என்றார். 

‘‘அடக் கடவுளே!”

‘‘போதாக்குறைக்கு, ஊருக்குள் நுழையும் வாகனங்களுக்கு ஊராட்சி சார்பில் ஒரு கட்டண மும், கோயிலுக்கு அருகில் நிர்வாகம் சார்பில் ஒரு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இதனால் பக்தர்களுக்கு டபுள் கட்டணம் தண்டம் அழவேண்டிய சூழ்நிலை!’’

‘‘இதுபற்றிக் கோயில் நிர்வாகத்திடம் பேசினீரா?’’ என்று கேட்டோம்.

‘‘கோயில் செயல் அலுவலர் பத்ராசலத்திடம் பேசினேன். ‘இங்கே நடக்கும் அடாவடி காரணமாகப் பலரும் வேலைக்கு வரத் தயங்கிய நிலையில், நான் இங்கே பொறுப்பேற்றுக் கொண் டிருக்கிறேன். அடாவடி செய்யும் நபர்களைச் சட்ட உதவியுடன் அகற்றினேன். மேலும், அர்ச்சனைத் தட்டில் உள்ள பொருட்களின் படத்தைப் போட்டு, கோயில் நிர்வாகம் சார்பில் ‘ரூ.100/-க்கு விற்கப்படும்’ என்று பல இடங்களில் விளம்பரப் பலகை வைத்திருக்கிறோம். இதை பக்தர்கள் கவனிப்பதில்லை. இதனால், சில நேரங்களில் அவர்களைச் சிலர் சுலபமாக ஏமாற்றிவிடுகிறார்கள்.  இதை உயர் அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு சென்று, காவல் துறையினரின் துணையோடு இந்தப் பிரச்னைக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க இருக்கிறேன். மேலும், வாகனங்களை நிறுத்துவதற்கு ஊராட்சி சார்பில் எந்த ஒரு வளர்ச்சிப் பணியும் செய்யாமல் பணம் வசூலிப்பது தவறு. எனவே, அதற்கும் தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறேன்’ என்றார் அவர்.”

நாரதர் உலா

‘‘எப்படியோ... பிள்ளைகளுக்குக் கல்யாணம் நடக்கவேண்டுமே என்ற கவலையுடன் வரும் பக்தர்களுக்கு, இதுபோன்ற அடாவடிப் பேர்வழி களிடம் இருந்து விடுதலை கிடைத்தால் சரிதான். அதிருக்கட்டும்... போனமுறை பரக்கலக் கோட்டை சம்பந்தமாக ஊராட்சி நிர்வாகத்திடம் பேசுவதாகக் கூறினீரே, பேசினீரா?’’ என்று கேட்டோம்.

‘‘பேசினேன். கோயிலைச் சுற்றிச் சாலைகள் போடவும், பூங்கா அமைக்கவும், கோயிலுக்கு அருகில் செல்லும் ஆற்றின் கரைகளை வலுப்படுத்தவும், மின்விளக்கு வசதி ஏற்படுத்தித் தரவும் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் நிர்வாகம் தயாராக இருக்கிறதாம். கோயில் நிர்வாகம் தரப்பில்தான் ஒத்துழைப்பு தராமல் அலட்சியம் காட்டி வருவதாக இவர்கள் சொல்கிறார்கள். மொத்தத்தில், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர, ஊராட்சி நிர்வாகம் தீர்மானம் போட்டாலும், அறநிலையத்துறை அதிகாரி களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் நிறைவேற்ற முடியும் என்கிறார்கள்’’ என்று நாரதர் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே, அவருடைய செல்போன் சிணுங் கியது. எடுத்துப் பேசியவர், நாம் என்ன, ஏது என்று விசாரிப்பதற்குள், சட்டென்று விடைபெற்றுக் கிளம்பிச் சென்றுவிட்டார்.

படங்கள்: க.சதீஷ்குமார்