தொடர்கள்
Published:Updated:

கேள்வி-பதில்!

கேள்வி-பதில்!
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி-பதில்!

பரிகாரங்களால் பலன் உண்டா?சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி-பதில்!

? பெண்கள் கர்ப்பமாக இருக்கும்போது, நாம் வேறு வீட்டுக்குக் குடி போகலாமா?

 - எம்.சென்னகேசவன், தேனி

கர்ப்பமாக இருக்கும்போது தம்பதி இருவர் அல்ல, மூன்று பேர் என்று பொருள். பழங்காலத்தில் கல்யாணமானவுடன் கிரகப் பிரவேசம் செய்வது வழக்கம். அப்போது இருவராகத்தான் புது மனை புகுவார்கள். வயிற்றில் குழந்தை இருக்கும்போது புது வீட்டுக்குப் போகக் கூடாது.

ஐந்து மாதம் தாண்டினால்தான் கர்ப்பம் நிலைத்திருக்கும். அதற்கு முன்னதாக கர்ப்பம் இருப்பதை ஒப்புக்கொள்ள முடியாது. அதுவரை புது வீட்டுக்குப் போவதில் தவறில்லை. வாடகை வீட்டுக்குப் போகும்போது இதை எல்லாம் பின்பற்ற வேண்டியதில்லை. வாடகை வீடு நிரந்தரம் அல்ல; அடிக்கடி மாறிக்கொண்டு இருப்போம். அது கிரகப்பிரவேசமே அல்ல.நமது சொந்த வீட்டுக்குத்தான்

கேள்வி-பதில்!

கர்ப்பவதியாகப் போகக் கூடாது!

? ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருந்தால் அதற்கு பரிகாரம் உண்டா? சிலர், கயாவுக்குச் சென்று சிராத்தம் செய்யச் சொல்கிறார்கள். பொருளாதார வசதியில்லாதவர்கள் என்ன செய்வது?

-கே.ராமநாதன், கோவை-2

அப்படி ஒரு தோஷம் இருந்தால், அதை விலக்கப் பொருளாதாரம் எங்குமே இடையூறாக இருக்காது. தர்மசாஸ்திரம், பொருளாதாரத்தின் அடிப்படையில் பரிகாரம் வைக்கவில்லை. காசே இல்லாதவருக்கும் பரிகாரம் வைத்திருக்கிறது.

‘என் வீடுதான் கயை. சாப்பிடுபவர்தான் கதாதரன்’ என்று சங்கல்பம் சொல்லி இங்கேயே சிராத்தம் செய்கிறோமே, அதனாலும் பலன் உண்டு. உங்களால் போக முடியாத இடத்துக்குப் போனால் தான் பரிகாரம் என்பதை ஏற்கமுடியாது.

‘ஒரு பசு மாட்டை தானமாகக் கொடு’ என்று ஓர் இடத்தில் தர்ம சாஸ்திரம் சொல்லும். ‘என்னால் முடியவில்லையே...’ என்றால், ‘பசுவின் விலையைக் கொடு’ என்று சொல்லும். ‘அவ்வளவு பணம் என்னிடம் இல்லை...’ என்றால், ‘பாதி விலை கொடு’ என அறிவுறுத்தும். ‘அதுவும் என்னால் ஆகாதே...’ என்று சொன்னால், ‘அப்படியானால் கால் பங்கு விலையைக் கொடு. இது மிகவும் குறைச்சல். இதைக் கொடுத்தாலும் மாட்டையே தானம் செய்த பலன் உண்டு’ என்று தர்மசாஸ்திரம் சொல்லும்.

அதனால் கயாவுக்குச் சென்று பரிகாரம் செய்தால்தான் துன்பம் விலகும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

? பரிகாரங்களால் பலன் உண்டா? சில தருணங்களில், பரிகாரம் செய்தும் உரிய பலன் கிடைக்காததற்கு என்ன காரணம்?

-எஸ்.சுப்புலட்சுமி, காரைக்குடி


தேர்வில் பலமுறை தோற்றவன், திரும்பவும் தேர்வு எழுதுகிறான்; வெற்றி பெறுகிறான். வெற்றியை அடைவதற்கு, தேர்வு எழுதுவதும் பரிகாரம்தான்! தகுதி இருந்தும் வேலை கைநழுவிப் போகுமோ எனும் பயத்தில், பிரபலங்களிடம் இருந்து சிபாரிசுக் கடிதம் பெற்று அதையும் இணைத்துக் கொடுப்பார்கள்; வெற்றி பெறுவார்கள்! அதேநேரம்... திரும்பத் திரும்ப தேர்வு எழுதுபவனும், சிபாரிசுக் கடிதம் பெற்றுக் கொடுப்பவரும் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்பதற்கு உத்தரவாதம் கிடையாது; முயற்சியில் தோல்வியைத் தழுவியவர்களும் உண்டு.

வியாபார நோக்கம் பரிகாரத்தில் எடுபடாது. மற்ற அலுவல்களில் வெற்றி பெற்றுவிட்டதை மனதில்கொண்டு, பரிகார விஷயமும் அப்படித்தான் என்று எடுத்துக்கொண்டால், ஏமாற்றமே மிஞ்சும். அனுபவத்தை வைத்து அதன் காரணத்தை வரையறுக்க இயலாது. அனுபவம் பலவிதம்.

உறுதியான காரணம், அதன் சரியான செயல்பாடு- இவை நிச்சயமாக வெற்றியளிக்கும். தகுதியைத் தக்க வைத்துக்கொள்ளவும், தடைகளை அகற்றவும் பரிகாரம் பயன்படும். அதை நடைமுறைப்படுத்தும் விஷயத்தில் தவறு நிகழக்கூடாது. தவறு செய்ததால்தான் பரிகாரத்தை ஏற்கவேண்டிய நிர்பந்தம் வந்தது. அந்தப் பரிகாரத்திலும் தவறு இருந்தால் பலன் ஏற்பட வழியில்லை. பரிகாரத்தைச் சந்திக்காமல், வாழ்க்கையில் வெற்றி பெற்றவர்கள் ஏராளம். அவர்களின் பட்டியலில் நம்மையும் இணைத்துக்கொள்வது சிறப்பு. பரிகாரத்தை நம்பி அடிக்கடி  தவறு செய்வது பலன் அளிக்காது!

கேள்வி-பதில்!

தவறு செய்தவன் தண்டிக்கப்படுகிறான்; நன்மை செய்தவன் பாராட்டப்படுகிறான். காரணம் உறுதியாக இருந்தால், காரியம் நிறைவேறிவிடுகிறது. மனம் வருந்தி, முனைப்புடனும் ஈடுபாட்டுடனும் முறைப்படி பரிகாரம் செய்தால் பலன் உண்டு.

கர்ப்பப்பையை அகற்றியவர்களுக்கு, பரிகாரத்தால் குழந்தை பிறக்காது. பரிகாரத்துக்குக் கட்டுப்படாத தவறு களும் உண்டு. இதுபோன்றவற்றில், பரிகா ரத்தை நடைமுறைப்படுத்தி பலனை எதிர் பார்ப்பது சிறப்பல்ல. மாறா வியாதியில் மருந்து செயல்படுவதில்லை. தவற்றை உணர்ந்தவனுக்குப் பரிகாரம் பலன் அளிக்கும். தவற்றை மறைப்பதற்குப் பரிகாரம் கை கொடுக்காது. தகுதியில்லாத ஒன்றைப் பெறுவதற்கு பரிகாரம் பயன்படாது. அழிவின் விளிம்பில் நிற்பவன் ‘கருணை மனு’ அளித்தால் பரிசீலிக்கப்படும். எதிர்த்து வாதாட முயன்றால் பரிசீலனை இருக்காது. பரிகாரம் நமது பிறப்புரிமை இல்லை. பரிகாரம் என்பது தண்டனை போன்றது. தண்டனையை முறைப்படி அனுபவித்தால் விடுதலை உண்டு.

அடிக்கடி தவறு செய்பவர்களைப் பரிகாரம் கை தூக்கிவிடாது. தெரிந்தோ தெரியாமலோ தவறு ஏற்படுவது தவிர்க்கமுடியாத ஒன்று. அப்போது, பரிகாரம் வாயிலாக விழிப்பு உணர்வு ஏற்படச் செய்து, நல்லவராக மாற்றும் சாஸ்திரத்தின் முயற்சியே பரிகாரம். பரிகாரம் மனம் சார்ந்த விஷயம்; பணம் சார்ந்த விஷயம் அன்று. மனதைத் தூய்மைப்படுத்தி மீண்டும் தவறு செய்யாதவனாக மாற்றுவதே பரிகாரத்தின் குறிக்கோள்.

? எங்கள் வீட்டு சார்பில் அன்னதானம் நடத்தலாம் என்று தீர்மானித்துள்ளோம். அக்கம்பக்கத்தில் உள்ளவர்களும், அன்னதானத்துக்கு தங்களின் பங்களிப்பாக ஏதேனும் தருவதாகச் சொல்கிறார்கள். அவர்கள் கொடுக்கும் பொருட்களை வாங்கிப் பயன்படுத்தலாமா?

-கோ.லட்சுமி, திருநெல்வேலி-2


அவரவர் சம்பாதித்து, என்ன முடியுமோ, அதை வைத்து அன்னதானம் செய்வது உயர்வானது. ‘நான் பெரிதாகத்தான் செய்யப் போகிறேன். பலரிடம் வாங்கிச் செய்வேன்!’ என்று சொல்வது அவ்வளவு உசிதம் அல்ல.

‘எனக்கு ஏகப்பட்ட பணிகள் இருக்கின்றன. சொத்தும் தேவைக்கு மேலே இருக்கிறது. அதனால் தானம் நடத்துபவரிடம் பணத்தைக் கொடுத்து முடித்துவிடலாம்!’ என்பதும் சரியல்ல. இத்தகைய அன்னதானத்தில் பிடிப்பு இருக்காது. ‘செக்’கைக் கொடுத்துவிடுவோம். அங்கு என்ன நடந்தது என்பதே தெரியாமல் இருப்போம்.

பழைய காலத்தில் எல்லாம், விருந்தோம்பல் என்று அவரவர் வீட்டிலேயேதான் அன்னதானம் செய்தார்கள். அப்போதுதான், ‘என் பொருளைத் தருகிறேன்!’ என்கிற திருப்தி, ‘நான் போட்டேன்!’ என்கிற நிறைவு, ‘என்னால் இவர் சந்தோஷப்பட்டார்!’ என்கிற அனுக்கிரகம்... இத்தனையும் நேரடியாகக் கிடைக்கும்.

? ஸ்வாமிக்குச் செய்யப்படும் சந்தனக்காப்பு அலங்காரத்தை எப்போது கலைக்க வேண்டும்?

-வே.கல்யாணராமன், சென்னை-17


முதல்நாள் சாத்தப்படும் சந்தனக்காப்பை, மறுநாள் காலையில் கலைத்து நித்யாபிஷேகம் செய்வது சிறப்பு. அன்று கலைக்காமல் இருந்துவிட்டு, அதற்கும் மறுநாள் கலைப்பது என்பது சரியல்ல.
ஸ்வாமிக்கு ஒருநாள் நித்யாபிஷேகம் தடைப்பட்டுவிடும். தினமும் காலையில் அபிஷேகம் செய்து பூஜிக்க வேண்டும் என்பதால், அலங்காரத்தில் இருக்கும் அழகை கலைக்க விருப்பம் இல்லாமல் ஒருநாள் தள்ளிப்போடுவது, நித்ய பூஜையைத் தடை செய்வதாகும். இரவு தாண்டிவிட்டால் அலங்காரம் பழசாகிவிடும். எனவே, மறுநாள் காலையில் களைவதில் தவறில்லை.

பூஜை விதிக்கு உடன்படாத நமது விருப்பத்தை செயல்படுத்தக் கூடாது. அலங்காரத்துடன் இரவில் உறங்கச் செல்லும் நாம், மறுநாள் நீராடி புது அலங்காரத்தை ஏற்போம். ஸ்வாமிக்கும் நித்ய பூஜைக்கு குந்தகம் இல்லாமல் செயல்படுவது சிறப்பு. அதற்கேற்பச் செயல்படுவதே உத்தமம்.

-பதில்கள் தொடரும்...

கேள்விகளை அனுப்பவேண்டிய முகவரி: சக்தி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை -  600 002, svdesk@vikatan.com என்ற மெயிலுக்கும் அனுப்பலாம்.