தொடர்கள்
Published:Updated:

கயிலை... காலடி... காஞ்சி! - 13

கயிலை... காலடி... காஞ்சி! - 13
பிரீமியம் ஸ்டோரி
News
கயிலை... காலடி... காஞ்சி! - 13

‘சோமகணபதி... வரப்பிரசாதி!’ - மகா பெரியவாநிவேதிதா

கயிலை... காலடி... காஞ்சி! - 13

சீதநீர் உலகம் போற்றுந் தேவர்க்குந் தேவே போற்றி
கோதற உண்மை காட்டுங் குரவர்க்கும் குருவே போற்றி
பூதநா யகனே போற்றி புரீசர்க்கும் ஈசா போற்றி
பாதியில் உமையை வைத்த பசுபதி போற்றி போற்றி 

  
குளிர்ந்த நீர் சூழ்ந்த உலகிடை ஆன்மாக்கள் துதி செய்யும் கடவுளர்க்குக் கடவுளே (தேவ தேவனே) காத்தருள்க! குற்றமற உண்மைப் பொருளை அனுபவப் பொருளாக உணர்த்தும் ஆசாரியர்க்கும் ஆசாரியனே காத்தருள்க! ஐம்பெரும்பூதங்களுக்கும் தலைவனே காத்தருள்க! விரும்பப் படுகின்ற ஐஸ்வரிய சம்பந்தமுடையவர்க்கும் ஈசனே காத்தருள்க! காத்தருள்க!

- காஞ்சிப் புராணம்

தான் இல்லாமல் யாகம் செய்ய நினைத்த பிரம்மதேவரின் யாகத்தை மட்டுமல்லாமல், யாகம் நடத்தத் தேர்ந்தெடுத்த பூமியையும், பிரம்மதேவரின் சத்தியலோகத்தையும் ஒருசேர அழித்துவிடுவது என்று கங்கணம் கட்டிக்கொண்டவள்போல் நதியாகத் தோன்றிய சரஸ்வதி ஆவேசமான வேகத்துடன் பாய்ந்து வந்தாள்.

அதைக் கண்ட நாரதர் உடனே பிரம்மதேவரிடம் சென்று விவரம் கூறினார். பிரம்மதேவர் சிவபெருமானைப் பிரார்த்தித்தார். சிவபெருமான் வரதராஜ பெருமாளிடம், ‘‘வரதராஜரே, நீர் யாக வடிவினர்; யாகத்துக்கு உரிய பலனை அருள்வதால் யாம் யாகத்துக்குத் தலைவரானோம். எம்மைக் குறித்து பிரம்மதேவன் இயற்றும் வேள்வியை அழிப்பதற்கு சரஸ்வதி நதியாக மாறி வெள்ளப் பெருக்கெடுத்து வருகிறாள். அவளுடைய போக்கை நிறுத்தி வேள்வியைக் காத்து அருள்புரிவாய்’’ என்று கூறினார்.

வரதராஜ பெருமாளும் அப்படியே வெள்ளப் பெருக்கெடுத்து வரும் நதியைத் தடுப்பதுபோல், பாம்பணையில் பள்ளி கொண்டார். அதைக் கண்ட நதியாக வந்த சரஸ்வதி, தன் போக்கை மாற்றிக்கொண்டு வடதிசை நோக்கித் திரும்பினாள். பெருமாளும் அந்த திசையில் பள்ளி கொண்டு விட்டார். உடனே தெற்கு நோக்கிப் பாய்ந்தாள். அந்த திசையிலும் பெருமாள் பள்ளி கொள்ளவே வேறு வழி இல்லாமல் கிழக்கு திசையில் கடலை நோக்கிப் பாய்ந்தாள். இப்படியாக சரஸ்வதியால் ஏற்பட்ட வெள்ள அபாயம் நீங்கியது.

பின்னர், சிவபெருமான் பெருமாளிடம், ‘‘யாம் சொன்னவண்ணம் செய்தமையால், நீர் ‘சொன்ன வண்ணம் செய்த பெருமாள்’ என்று உயர்வு பெற்றுத் திகழ்வாயாக. மேலும், இருளில் நதியின் போக்கை கணிக்க நீர் ஒப்பில்லாத விளக்கொளியாய்த் திகழ்ந்தமை யால், ‘விளக்கொளி பெருமாள்’ என்று பெருமையுடன் விளங்குவீர்’’ என்று அருள்புரிந்தார்.

சரஸ்வதியின் சினத்தைத் தணிப்பதுபோல், ‘‘இந்தத் தெய்வத் தன்மையுடைய நதியானது, மனிதர்களின் பாவங்கள் அனைத்தையும் விரைந்து அகற்றும் வேகவதி என்னும் பெருமை பெறுவதாக’’ என்று அருளினார்.

கயிலை... காலடி... காஞ்சி! - 13

பின்னர் சினம் தணிந்த சரஸ்வதியும் உடன் இருக்க பிரம்மதேவர் யாகத்தைப் பூர்த்தி செய்தார். யாகத்தின் நிறைவில்  தேவ துந்துபிகள் ஒலிக்கவும், தேவர்கள் மலர் மழை பொழியவும்,  தேவ மகளிர் குற்றமில்லாத சாமரம் ஏந்தி வீசவும், கந்தர்வர்கள் சிவபெருமானின் வெற்றி விருதுகளை எடுத்துப் பாடி புகழவும், ஞானம் கைவரப்  பெற்ற சனந்தர் முதலானோர் அருகில் நின்று துதிக்கவும் தேவியுடன் ரிஷபாரூடராக தரிசனம் தந்தார் சிவபெருமான்.

சிவபெருமானை பலவாறாகப் போற்றித் துதித்த பிரம்மதேவர். ‘‘ஐயனே, என்னிடம் இரக்கம் கொண்டு தரிசனம் தந்த தாங்கள் இந்தத் தலத்திலேயே எழுந்தருளி, நான் ஏற்படுத்திய தீர்த்தத்தில் நீராடி தங்களை வழிபடுபவர்களின் சகல பாவங்களையும் அகற்றி, அவர்கள் வாழ்க்கை வளம் பெறச் செய்யவேண்டும். மேலும் தாங்கள் எழுந்தருளிய இத் தலம் தங்களின் ஆஸ்தான பீடமாகத் திகழ்ந்து சிவாத்தானம் என்ற பெயருடன் விளங்கவேண்டும்’’ என்று பிரார்த்தித்தார்.

உலக மக்களின் நன்மைக்காக ஐயனும் அப்படியே அருளினார். கலியுகத்தில் மக்கள் படும் துன்பங்கள் எல்லாம் நீங்கவேண்டும் என்பதற்காக காஞ்சி பெரியவா மாதவம் இயற்றிய மகோன்னதத் தலமான சிவாத்தானம் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் தனிச் சிறப்பு ஒன்று உண்டு. இந்தக் கோயில் கருவறையில் ஐயனின் லிங்கத் திருமேனிக்குப் பின்புறம் கருவறை சுவரில் சிவ பார்வதியருடன் கணபதி இருக்கும் ‘சோமகணபதி’ திருவுருவம் அமைந்திருப்பதுதான் அந்தத் தனிச் சிறப்பு. வேறு எங்கும் இந்தத் திருவுருவத்தை தரிசிக்க முடியாது. சோமகணபதி திருவுருவத்துக்கு அருகிலேயே ஆதிசங்கரரின் திருவுருவம் இருப்பதையும் தரிசிக்கலாம். மேலும் ஆதிசங்கரரின் திருவடிகளும், செப்புத் திருமேனியும் ஆலயத்தில் அமைந்துள்ளது.

ஐயனின் சந்நிதியில் அமைந்திருக்கும் சோமகணபதி மிகவும் வரப்பிரசாதி என்கிறார் சைலேஷ்.

‘‘இங்குள்ள சோமகணபதியை வழிபட்டால், திருமணத் தடை நீங்கி நல்ல வாழ்க்கைத் துணை அமைவதாகவும், குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியருக்கு விரைவிலேயே குழந்தை பாக்கியம் கிடைப் பதாகவும் பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.

சிவபெருமானின் ஆஸ்தான தலமாக வும், ஆதிசங்கரர் வழிபட்ட தலமாகவும் சிறப்பு பெற்றிருக்கும் இந்தத் தலத்தில்தான் மகா பெரியவா உலக நன்மைக்காக நீண்டகாலம் தவம் இயற்றினார்.
மகா பெரியவா ஸித்தியான பிறகும்கூட, இந்தத் தலத்தில் மஹா பெரியவா அருளால் நடைபெறும் அதிசய அற்புதங்களுக்குக் குறைவே இல்லை’’ என்ற சைலேஷ் சில மாதங்களுக்கு முன்பு மகா பெரியவா நிகழ்த்திய ஓர் அதிசய அருளாடலை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

நம்மை பக்திப் பரவசத்தில் ஆழ்த்தி சிலிர்க்கச் செய்த அந்த அற்புதச் சம்பவம்..?

- திருவருள் தொடரும்