Published:Updated:

சித்திர ராமாயணம்

சித்திர ராமாயணம்
பிரீமியம் ஸ்டோரி
News
சித்திர ராமாயணம்

பி.ஸ்ரீ., ஓவியங்கள்:சித்ரலேகா

சித்திர ராமாயணம்

குகன் வளர்ச்சி!

ராம லட்சுமணர் சீதையுடன் நாடு துறந்து காடு புகுந்த வரலாற்றை அறிய விரும்புகிறான் குகன். அந்தத் துன்பக் கதையைத் தம்பி சொல்லுகிறான். (ராமன் சொன்னால் அதுதான் துன்பக் கதையாக இராதே, கைகேயி அம்மாளும் ஒரு மகோபகாரியாகக் காட்சி அளிப்பாளே!) அந்த வரலாற்றைக் குகன் கேட்கத்தான் செய்கிறானா? இல்லை, அந்தச் சோக நாடகத்தில் வரும் தாயின் துன்பம், தந்தையின் சோகம், நகர மாந்தர் துயரம் முதலியவற்றையெல்லாம் குகன் ஒருவனாகவே இப்பொழுது அனுபவித்துத் தீர்க்கிறான்.

மாலை நேரம் வந்தது. அனுஷ்டானங்களை முறைப் படி செய்து கொண்டார்கள் சீதையும் ராமனும். (சீதையும் அனுஷ்டானங்களை ராமனைப் போல் செய்து கொண்டாள் என்று முதல் முதல் குறிப்பிடுவது கவனிக்கத் தக்கது.) படுக்கிற நேரம் வந்தது. தரையே பாயாக நாணற் புல்லை விரித்துப் படுத்துக் கொள்கிறார்கள். ‘இவர்களுக்கு எவ்வித இடையூறும் நேரிடலாகாதே’ என்று அதி ஜாக்கிரதையாக லட்சுமணன் வில்லும் கையுமாய் விடியுமட்டும் இமை கொட்டாமல் ‘பாரா’க் கொடுத்து நிற்கிறான்.

மாலைவாய் நியமம், செய்து
மரபுளி இயற்றி, வைகல்
வேலைவாய் அமுதன் னாளும்
வீரனும்; விரித்த நாணல்
மாலைவாய்ப் பாரின் பாயல்
வைகினர்; - வரிவில் ஏந்திக்
காலைவாய் அளவும் தம்பி
இமைப்பிலன், காத்து நின்றான்.


கண்கொட்டாமல் லட்சுமணன் காத்துக் கொண்டிருக்க, குகன் என்ன செய்கிறான்? ராமன் தரையில் கிடப்பதையும், தம்பி காவல் செய்து நிற்பதையும் பார்த்த வண்ணம் நெஞ்சழிந்து கண்ணீர் அருவியாகச் சொரிய, தொடுத்த அம்போடும் விழித்த கண்ணோடும் நின்று கொண்டிருக்கிறான். இந்நிலையில் குகன் காதல் எத்தகைய பெரு வளர்ச்சி அடைந்திருக்கிறது, பாருங்கள்!

வேடன்தானா? வேடசரீரம் என்ற போர்வைக்குள் மறைந்திருக்கும் ஆழ்வாரைப் போன்ற ஒரு பக்திக் காதலனா?!

ராமனையும் சீதையையும் லட்சுமணன் காத்து நிற்க, இவனையும் சேர்த்துக் காத்து நிற்பதுபோல் குகன் நிற்கிறான்; இந்த வேடனையும் சேர்த்துக் காவல் செய்வதுபோல் சுற்றத்தார்களான வேடர்கள் சுற்றிச் சுற்றி வருகிறார்களாம் யானைக் கூட்டம் போலே, மூன்று ஜீவ அரண்கள் சீதா ராமரைச் சுற்றி; இந்த அரண்களின் நடு நாயகம் குகன்;

தம்பிநின் றானை நோக்கித்,
தலைமகன் தன்மை நோக்கி,
அம்பியின் தலைவன் கண்ணீர்
அருவிசோர் குன்றின் நின்றான்.


‘தம்பி நின்றானை நோக்கி, தலைமகன் தன்மை நோக்கி’னான் குகன். தம்பி இப்படிக் காத்து நிற்க வேண்டுமென்றால், தமையனது தன்மைதான் எப்படி யிருக்க வேண்டும்! பஞ்ச சயன மெத்தையிலே படுத்துறங்க வேண்டிய மகாசுகுமாரன், - ராஜ்ய குலாவி மகிழ வேண்டிய செல்வம் - இப்படி நாணற்புல் நிரப்பிய வெறுங்காட்டுத் தரையில் தன் மனைவியோடு அநாதைபோல் படுத்திருக்கிறானே! இப்படி அண்ணனுக்கு நேர்ந்த நிலையை நினைத்து நினைத்துக் கண் கொட்டாமல் வில்லுங் கையுமாய் இளவரசு சாதாரணக் காவற்காரன் போல் காத்து நிற்கிறானே! இப்படியெல்லாம் எண்ணமிடும் வேடனது கண்களிலிருந்து சோகம் கண்ணீராகத் தாரை தாரையாகப் பெருகுகின்றதாம். இப்படிக் கண்ணீர் பெருக விட்டு நிற்கும் குன்று போன்ற அந்த முரட்டுச் சரீரத்தை அப்படியே பார்த்துவிடுகிறான் கவிஞன். (‘கண்ணீர் அருவி சோர் குன்றின் நின்றான்’.)

‘ராமனுடைய வடிவ ழகும் தியாக சௌந்தரியமும் ஒரு நாள் முகத்திலே விழித்த வேடனையும் இந்தப் பாடு படுத்துகின்றனவா?’ என்று அதிசயிக்கிறோம். ஆனால், குன்று போன்ற உடம்பில் குடியிருக்கும் உள்ள அன்பின் ‘பொங்குமா கடல்’ அல்லவா?

முதுகிலிட்ட அம்பறாத் தூணியும் நடுக்கோத்துப் பிடித்த வில்லுமாய் நடையாடத் தயாராய்க் கோட்டைச் சுவர் நின்று கொண்டிருப்பதுபோல நிற்கும் லட்சுமணனைக் காட்டிலும் குகன் அதி ஜாக்கிரதையாகக் காவல் செய்து நிற்கிறானாம். இப்படி ஒரு ஜாமமா? இரண்டு ஜாமமா? ஜாமம் ஜாமமாக இரவு கழிந்து போகிறது.

உதயகாலத்தில் செய்ய வேண்டிய நியமங்களை விரும்பிச் செய்து ராமன் புறப்படுகிறான். அப்போது முனிவர்களும் வருகிறார்கள். ராமன் குகனை நோக்கி, ‘ஐயா! அன்பா! நாங்கள் கங்கையைக் கடந்து செல்லத் தோணி கொண்டு வா, விரைவில் கொண்டு வா’ என்று வேண்டிக் கொள்கிறான். இக்கட்டளையைக் கேட்டதும் குகனுக்கு அழுகை வந்து விட்டது. ‘இவனுக்குக் குற்றேவல் செய்வதை விட்டு எப்படிப் பிரிந்து வாழப்போகிறோம்!' என்ற ஏக்கம் உயிரையே நடுங்கச் செய்கிறது, அவனும் தனக்கு வாழ்வு ராமனுடன்தான் என்று கருதுகிறான். அந்தச் சூரிய ஒளியிலே ‘நீலக்கடலோ, நீலமேகமோ, நீலமலர்ச் சோதியோ? என்று பிரமிக்கும்படி மிளிரும் அந்த அழகைக் குகனும் சீதையைப் போல் ஆசையாய் நோக்குகிறான்.

சித்திர ராமாயணம்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

இனி என்ன குறை?

உயிர் உடல் எல்லாம் உலைகின்ற நிலையில் கண்ணீர் வடித்து, ‘தோணி கொண்டுவரச் சொல்லுகிறானே; சரி சரி, அந்தத் தோணியை, நம் ஊருக்கே ஓட்டி ராமனை நம்முடனேயே வைத்துக் கொண்டால்... ஆஹா!’ என்றெல்லாம் கனவு  லோகத்திலே பறக்கத் தொடங்குகிறது குகனுள்ளம். ஆகவே, வேடர் வாழ்க்கையின் விசேஷங்களை, வசதிகளைச் சித்திரித்துக் காட்ட ஆசைப்படுகிறான். இதுதான் இப்போது குகன் சிந்தனை.

வேடர் வனவாசிகளானதால் நகரவாசி களைப் போல் நாகரிக முறைகளில் பழக்கமில்லாதவர்கள். ஆகவே, ‘பொய்ம் முறையிலும் பழகாத வனவாசிகள் நாங்கள்!’ என்று மார்தட்டிப் பேசுகிறான் குகன்:

பொய்ம்முறை இலரேம், எம்
புகலிடம் வனமேயால்;
கொய்ம்முறை உறுதாராய்!
குறைவிலெம், வலியேமால்;
செய்ம்முறை குற்றேவல்
செய்குதும்; அடியோமை
இம்முறை உறவென்ன,
இனிதிரு நெடி(து)எம்மூர்!


‘பொய் சொல்லத் தெரியாது; அதற்கு உரிய நாகரிகம்தான் எங்களிடம் இல்லையே!’ என்று சொல்லும் இந்த வனவாசி, ‘ஒரு பொய்யை நிற்க வைக்க ஒன்பது பொய் சொல்ல வேண்டிய ஞாபகசக்தியில் நாங்கள் குறைந்தவர்களாய் இருக்கலாம். ஆனால், சரீர சம்பத்தாகிய வலிமையில் ஒரு குறைவும் இல்லாதவர்கள்’ என்கிறான். இந்த அபார உடல் வலிமையைக் கொண்டு ராமனுக்குப் பணி செய்து கிடக்க ஆசைப்படுகிறது காதலுள்ளம். ‘எத்தகைய குற்றேவலும் செய்யத் தயார்’ என்கிறான். சிறுவேலையையும் ‘சிறு வேலைதானே’ என்று இகழாமல் ‘ராமன் கட்டளை’ என்று பெருமை கொடுத்துத் தொண்டாற்றுவோம் என்கிறான். ‘அடியோம்’ என்ற இந்த உறவு, இந்த மாட்சி கிடைத்தால் போதும் என்கிறான். இப்படித் தங்களை ‘உறவு’ கொண்டு நெடுங்காலம் சுகமாக ராமன் தங்க வேண்டும்’ என்று மன்றாடுகிறான்.

ராமன் தங்கினால் உணவு வேண்டாமா? நீராட, சீதைக்கு விளையாட, வசதிகள் வேண்டாமா? குகனையே கேளுங்கள்:

தேன்உள, தினைஉண்டால்;
தேவரும் நுகர்தற்காம்
ஊன்உள; துணை, நாயேம்
உயிர்உள; விளையாடக்
கான்உள; புனலாடக்
கங்கையும் உளதன்றோ?
நான்உள தனையும், நீ
இனிதிரு, நடஎம்பால்!


ராமன் ‘மரக்கறி உணவுக்காரன்’ என்று குகனுக்குத் தெரிந்து விட்டது. தான் கொண்டு போன மீனும் தேனும் சாப்பிடாததால், ‘தேனும் தினையுமாவது சாப்பிடலாமே’ என்கிறான். எனினும், ‘ஊனுணவுதான் உடம்பிற்கு நல்லது’ என்பது குகனுடைய கோட்பாடு. ஆகவே, ‘தேவர்களுக்கும் நாவில் நீர் ஊறத் தக்க மாமிச வகைகள் வேட்டையினால் செழிப்பாய்க் கிடைக்கும்’ என்கிறான். அவர்கள் வேட்டையாடிப் பக்குவம் செய்யும் மாமிசம் தேவாமிர்தமாயிருக்குமாம். உணவுக் கவலை, பங்கீடு, கள்ளச் சந்தை முதலான நாகரிகத் தொல்லைகளோ, இல்லவே யில்லை.

ராமன் முதலானோர் நீராடுவதில் விசேஷ விருப்பமுள்ளவர்கள் என்பதையும் குகன் தெரிந்து கொண்டான். ‘பொய்ம்முறை நாகரிகத்தைப் போல் நீராடும் நாகரிகமும் குகனுக்குப் பிடிக்காது. எனினும், இது ராமனுக்குப் பிடித்த மாயிருப்பதால், ‘அதற் குத்தான் கங்கையாறு கரை புரண்டு போகிறதே’ என்கிறான். ‘இத்தனை வசதிகளும் நானும் இருக்கும்போது உனக்கும் உண்டோ குறை?’ என்கிறான்.

** 18.5.47, 25.5.47 மற்றும் 1.6.47 ஆனந்த விகடன் இதழ்களில் இருந்து.