தொடர்கள்
Published:Updated:

முன்னோர்கள் சொன்னார்கள்

முன்னோர்கள் சொன்னார்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
முன்னோர்கள் சொன்னார்கள்

ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

முன்னோர்கள் சொன்னார்கள்

பிறந்தவேளை மகர லக்னம். 7-ம் வீட்டில் (கடகத்தில்) சனியும் செவ்வாயும் வீற்றிருக்கிறார்கள். இந்த அமைப்பு புருஷ ஜாதகத்தில் இருந்தால், நல்ல மனைவி வாய்ப்பாள். அன்பு, அடக்கம், பரிவு, பொறுப்பு ஆகியவற்றுடன், மனைவியின் இலக்கணத்துக்கு உதாரணமாகத் திகழ்வாள் என்கிறது ஜோதிடம் (ஸெளராரயோ: மதகயோ:அமிருதாம்சுராசி ஸம்ப்ராப்தயோ: கிஹபவேத்கில சோபனாஸ்திரீ).

இங்கு  லக்னத்தில் இருந்து 7-ல் (கடகத்தில்) செவ்வாய் தென்படுகிறான். இது செவ்வாய் தோஷம். அந்த செவ்வாய் நீசனாகவும் (பலமிழந்தவனாகவும்) இருக்கிறான். அத்துடன், சனி என்ற பாப கிரகத்துடன் இணைந்து இருக்கிறான். அதாவது அவனது களத்திர ஸ்தானத்தில், அதாவது 7-ல் (கடகத்தில்) இரண்டு பாப கிரகங்கள் சேர்ந்து இருக்கின்றன. செவ்வாய் இருந்தாலே, அவனுக்கு மனைவி தங்கமாட்டாள். பாப கிரகமான சனியின் சேர்க்கையில் மனைவி இழப்பு ஊர்ஜிதமாக்கப்பட்டது என்று ஜோதிடத்தின் பொதுவான கோட்பாட்டை இங்கு நடைமுறைப்படுத்தக் கூடாது. 7-ல் இருக்கும் சனியும் செவ்வாயும் எதிர்மாறான பலனை அளிப்பார்கள். தாம்பத்தியம் இனிக்கும். இல்லாள் நல்லாளாக இருப்பாள்.

7-ல் (கடகத்தில்) செவ்வாய் நீசன். அவன் சுப கிரகத்தின் வீட்டில் அமர்ந்திருக்கிறான். கடகம் சந்திரனின் வீடு. செவ்வாயின் உச்ச வீடான மகரத்தின் அதிபதி சனியுடன் இணைந்திருக்கிறான். நீசம் பெற்ற கிரகத்தின் உச்ச வீட்டுக்கு உடையவனுடன் இணைந்தால், அவன் சுபனாக மாறிவிடுகிறான். ‘நீசன்’ என்ற தகுதி விலகிவிடுகிறது. செவ்வாய் தனது உச்ச வீட்டை (மகரத்தை), அதாவது அவன் பிறந்த வேளையை 7-ம் பார்வையாகப் பார்த்து, அவனது சுக அனுபவத்துக்கு உரம் ஊட்டுகிறான். 7-க்கு உடையவன், கடகத்தில் - சுப வீட்டில் (சந்திரன் வீடு) அமர்ந்து, தனது வீட்டை ஏழாம் பார்வை யாகப் பார்த்து அதன் செழிப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறான்.

7-ஐ லக்னமாக வைத்து ஆராயும்போது, சனியும் செவ்வாயும் சேர்ந்து லக்னத்தின் பெருமையை இரட்டிப்பாக்குகிறார்கள். செவ்வாய் மகரத்தையும் கும்பத்தையும் 7, 8-ம் பார்வையாகப் பார்த்து அதன் பெருமையை பெருக்குகிறான். தானும் தனது குடும்பமும் (கும்பம் 2-ம் வீடு) செழிப்புற ஒத்துழைப்பு அளிக்கிறான் செவ்வாய்.  கடக ராசிக்கு செவ்வாய் யோக காரகன் ஆவான். கேந்திரத்துக்கும் த்ரிகோணத்துக்கும் அதிபதியா கிறான். கடகத்தில் இருந்து விருச்சிகத்துக்கும் (5) மேஷத்துக்கும் (10) அதிபதியாவான். த்ரிகோணத்துக்கும் (5-ம் வீடு) கேந்திரத்துக்கும் (10-ம் வீடு) அதிபதியாவான். அத்துடன், அவனது சுக ஸ்தானம் 4-ம் வீடு; சுக்கிரன் அதிபதி. அதற்கு யோக காரகனான செவ்வாயின் பார்வை சுகத்தை உணரும் அனுபவத்தை உண்டுபண்ணும்.

4, 7, 8-ஐ பார்ப்பதுடன் நில்லாமல் சொந்த வீடான ஐந்தையும் பத்தையும் சிறப்பாக்குவதால், அவன் பெருமைக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் செவ்வாய் மாறிவிடுகிறான். அவனுடன் இணைந்த சனி 3-ம் பார்வையாக, அவனது 9-யும் (பாக்கியம்), 7-ம் பார்வையாக அவனையும் (லக்னம்), அவனது 10-யும் பார்க்கிறான். அவனது ஒத்துழைப்பு செவ்வாய்க்கு ஊக்கம் அளித்து, தாம்பத்தியத்தைச் சுவைக்கவைக்கிறது.

சனியும் செவ்வாயும் சேர்ந்து இருந்தாலோ, பார்த்தாலோ கெடுதலை தோற்றுவிப்பார்கள். சனியும் செவ்வாயும் சேர்ந்து இருந்தால், அக்னி மாருத யோகம் என்று சொல்லும் ஜோதிடம். நெருப்பும் காற்றும் இணைந்தால் விபரீதம் ஏற்படும். கொழுந்துவிட்டு எரியும் நெருப்புடன் காற்றும் இணைந்தால், நெருப்பு தனது செயலில் வென்றுவிடும். பலவீனமான நெருப்பின் தீப்பொறி, காற்றின் அணைப்பில் தன்னை அழித்துக் கொள்ளும்.  இரண்டும் நமக்கு எதிரிடைதான்.  இருவரது சேர்க்கை நல்ல பலனை அளிக்க வாய்ப்பு இல்லை என்ற கோட்பாடு ஜோதிடத்தில் உண்டு. ஆனால், இங்கிருக்கும் விளக்கம் வித்தியாசமானது. அவர்களது சேர்க்கை நன்மையை விளக்கும் என்று  ஜோதிடம் விளக்கும்.

இருவரும் ஒருவருக்கொருவர் ஏழாம் பார்வையாகப் பார்த் தாலும் விபரீத பலனைச் சொல்லும் ஜோதிடம். ஆனால், இங்கு வேறுவிதமான விளக்கத்தை ஏற்கச் சொல்லும் ஜோதிடம். நீசனான செவ்வாய்க்கு யோக காரகன் என்ற தகுதியும், சனிக்கு லக்னாதிபதி என்ற தகுதியும்... அவ்விருவரது சேர்க்கையால் அவர் களது மனமகிழ்ச்சிக்கு ஊக்கமளித்துவிடுகின்றன என்பதை ஏற்கச் சொல்லும். ஒரே ராசிக்கட்டத்தில் அமைந்த கிரகங்களுக்கு பல கோணத்தில் மாறுபட்ட விளக்கங்கள் உண்டு. குறிப்பிட்ட கிரகங்களின் அமைப்புக்கு எந்த விளக்கம் பொருந்தும் என்பதை, அவனது சிந்தனையின் மாறுபாட்டை வைத்து அளக்கவேண்டும். சிந்தனையின் மாறுபாட்டை தெரிந்துகொள்ள, அவனது கர்மவினையின் உருவம் புலப்பட வேண்டும். கர்மவினையின் அடையாளத்தைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு சிந்தனை வளம் பெற்றிருக்கவேண்டும். காலத்தின் அட்டவணையோ (ஜாதகம்), அட்டவணைக்கு உகந்த பலன்களை வெளியிட முனைவோர்களின் சிந்தனையோ பலனை இறுதிசெய்ய ஒத்துழைக்காது.

கட்டத்தில் தென்படும் எதிர்மாறான பல விளக்கங்களில், எந்த விளக்கம் எவருக்குப் பொருந்தும் என்பதை புரிந்துகொள்ளும் திறன், ஜோதிட பிரபலங்களுக்கு இருக்கவேண்டும் என்று ஜோதிடம் வலியுறுத்தும். பல முனிவர்களது மாறுபட்ட விளக் கங்களை உள்ளடக்கிய ‘ஹோரா’ நூல்களைப் படித்து உள் வாங்கி யிருக்க வேண்டும். வானவியல் கருத்துத்துக்களை விளக்கும், ஐந்து  முனிவர்களது ‘கால விதான’ சாஸ்திரங்களின் விளக்கங்களை மனதில் பதியவைத்திருக்க வேண்டும். கிரகங்களின் அமைப்பில் எந்தக் கோட்பாடு இங்கு பொருந்தும், எந்தக் கோட்பாடு பொருந்தாது என்று ஆராயந்து அறியும் திறன் பெற்றிருக்க வேண்டும். இங்கு, முனிவர்களது விளக்கங்களில் இந்த விளக்கம் ஏற்புடையது, இது பொருந்தாது என்கிற ஊஹாபோஹம் (இதை விடலாம் இதை ஏற்கலாம் என்ற சிந்தனைவளம்) இருக்க வேண்டும். நடுநிலையுடன் ஆராய மனப்பக்குவம் இருக்க வேண்டும். அதை அடைய மனதில் மந்திரத்தை அசைபோட்டு அசை போட்டு பழக்கப்பட்டு, சுயசிந்தனையை ஒதுக்கி ஜாதகனின் பலனுக்கு உகந்த சிந்தனையை வரவழைக்கும் திறமை பெற்றிருக்க வேண்டும். இப்படியெல்லாம் ஜோதிட வல்லுநருக்கான இலக்கணத்தை ஜோதிடம் வெளியிடும் (‘அனேகஹோரா சாஸ்த்ரஞ்ஞ: பஞ்ச ஸித்தாந்தகோவித: ஊஹா போஹபடு ஸித்த மந்திர: ஜானாதி ஜாதகம்’ என்று ப்ருதுயசஸ் விளக்கம் அளிப்பார்).

முன்னோர்கள் சொன்னார்கள்

ஆன்மிகம், உளவியல், உலகவியல், அறிவியல், தத்துவவியல், இயற்கையின் தோற்றம், செயல்பாடு, அழிவு, வேதவியல் போன்ற வற்றில் தேர்ச்சி பெற்றவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். மஹான்கள் அத்தனைபேரும் எண்ணிக்கையில் குறைந்தவர்கள். அறிஞர்களும் அளவோடுதான் இருப்பார்கள். அதுபோல், ஜோதிட பிரபலங்களும் எண்ணிக்கையில் குறைந்தளவிலேயே இருக்க முடியும். பாமர சிந்தனைக்கு இலக்காகாது ஜோதிடம். பண்டைய நாளில் கிளி ஜோதிடம் பார்ப்பவர்கள் உண்டு. அந்த ஜோதிடனுக்கு எந்த தகுதியும் தேவையில்லை. கிளி எடுத்துக் கொடுக்கும் தகவலைப் படித்தால் போதும். தகவலைப் பற்றிய அறிவும் அவனுக்குத் தேவையில்லை. தற்போது கிளிக்குப் பதிலாக கணினி வந்திருக்கிறது. பிரபலங்களின் சிந்தனைக்கு வேலை இல்லை. கணினி சொல்வதைச் சொன்னால் போதும்.

கடலுக்கு அடியில் ஏற்படும் நிலநடுக்கம் சுனாமியை உருவாக்கும் என்பார் விஞ்ஞானி. ஆனால், இந்த நிலநடுக்கம் சுனாமியை ஏற்படுத்தாது என்றும் குறிப்பிட்டுச் சொல்வார். அவரது கணிப்பு சிலநேரம் பொய்த்துப்போவதும் உண்டு. இப்படியிருக்க கடலுக்கு அடியில் ஏற்பட்ட எல்லா நிலநடுக்கங்களும் சுனாமியை உண்டு பண்ணும் என்று முடிவுக்கு வருவது எப்படிப் பொருந்தும்?

ஒரே வேளையில் பிறந்த இருவரது ஜாதகத்தின் பலன் ஒன்றாக இருக்காது. அவை மாறுபட்டி ருப்பதை அறியும் சிந்தனை வளத்தை ஜோதிட பிரபலங்கள் பெற்றிருக்கவேண்டும். சிந்தனை வளம் இருந்தும், கிளி ஜோதிடம் போல் செயல்படும்  போக்கு ஜோதிட பிரபலங்களிடம் தோன்றக் கூடாது. எல்லோரும் புரிந்து கொள்ளும் அளவுக்கு மிக எளிதானதல்ல ஜோதிடம். திறமை இருப்பவனுக்கு மட்டும்தான் புலப்படும். எல்லோரும் ஆன்மிகவாதியாக முடியாது. எல்லோரும் வருங்காலத்தைக் கணித்துத் தெரிந்து கொள்ளும் திறமை பெற்றவராக இருக்க முடியாது.  இது சரித்திரமோ, பூகோளமோ, பொருளாதார நூலோ அல்ல. சாமானிய சிந்த னைக்கு எட்டாதது ஜோதிடம். அதைப் புரிந்து கொண்டு உலக நன்மைக்காகச் செயல்பட வேண்டும், ஜோதிட பிரபலங்கள்.

பிறந்த வேளை கன்னி லக்னம். 7-ம் வீட்டில், அதாவது மீன ராசியில் புதன் நீசனாக இருக்கிறான். அத்துடன் சனியும் இணைந்திருக்கிறான். லக்னத் தில் சூரியனும் வீற்றிருக்கிறான். இப்படியொரு அமைப்பு இருந்தால், அவன் மனைவியை இழக்க நேரிடும் என்கிறது ஜோதிடம்.

தாம்பத்தியத்தை அனுபவிக்க வேண்டிய வனுக்கு தகுதி இழப்பைச் சுட்டிக்காட்டுகிறது. மீனத்தில் (7-ல்) இருக்கும் நீசம் பெற்ற புதன்... 6-க்கு உடைய சனி அவனோடு இணைந்திருப்பது, 7-க்கு உடைய மனைவியின் தகுதி இழப்பைச் சுட்டிக் காட்டும்.  12-க்கு உடைய சூரியன் (இழப்பை ஏற்படுத்தும்) லக்னத்தில் இணைந்தி ருப்பது, மனைவியின் இழப்பை ஊர்ஜிதம் செய்கிறது.  6, 8, 12 என்ற த்ரிகத்தில் இருவர்... 6,12-க்கு உடையவர்கள், நேருக்கு நேர் 7-ம் பார்வை யாக இணைந்துகொண்டு, இரு வீட்டையும் தகுதியற்றதாகச் செய்துவிட்டார்கள் என்று ஜோதிடம் விளக்கும்.

7-ஐ லக்னமாக வைத்து ஆராயும்போது, 7-க்கு 7-க்கு உடையவன் (லக்னத்துக்கு) புதன் நீசனாக 7-ல் அமைவது, 7-ன் பன்னிரண்டுக்கு உடையவன் சனி 7-ல் அமர்வது, 7-ன் ஆறுக்கு  உடையவன் சூரியன் 7-ன் 7-ல் அதாவது லக்னத்தில் அமைவது- இவை அத்தனையும் எதிரிடை பலனை உருவாக்குவதில் முனைந்திருப்பதை உணரலாம். பலனை ஊர்ஜிதம் செய்ய பாவத்தை லக்னமாக வைத்து ஆராய்வதும் அவசியம்.

பிறந்த வேளை கன்யா லக்னம். 7-ம் வீட்டில் குரு அமர்ந்திருக் கிறார். அவர், 7-க்கு (மீனம்) உடையவர். பாவாதிபதி பாவத்தில் இருக்கிறார். கன்னி லக்னத்தில் பிறந்து, 7-ல் குரு இருக்கையில், அவன் மனைவியை இழப்பான் என்கிறது ஜோதிடம்.

அதுபோல் மிதுன லக்னத்தில் பிறந்தவனுக்கு தனுசில் குரு (7-ம் வீடு) இருந்தால், மனைவி தங்கமாட்டாள் என்றும் சொல்லும்.

இந்த குருவுக்கு கேந்திராதிபத்ய தோஷம் உண்டு என்கிறது ஜோதிடம். 7 கேந்திரங்களில் ஒன்று. அதற்கு உடையவன் குரு. அவன் அதிபதி- கேந்திரத்துக்கு உடையவனாக மாறும் தறுவாயில்,
அவன் எதிர்மாறான பலனை அளித்துவிடுவான் என்கிறது ஜோதிடம். லக்னாதிபதி புதனும், 7-க்கு உடைய குருவும் சுப கிரகமானாலும் ஒருவருக்கு ஒருவர் எதிரிகள். லக்னத்துக்கும் (புதனுக்கும்) 7-க்கும் தகுதி இழப்பை ஏற்படுத்திவிடுகிறார்கள். சுப கிரகமானாலும் எதிரிடையான பலனை அளித்துவிடுவான் குரு.

மிதுன லக்னத்துக்கும் 7-க்கும் 10-க்கும் உடையவன், கன்யா லக்னத்துக்கு 4-க்கும் 7-க்கும் உடையவன் என்பதால், மகிழ்ச்சி யையும், செயல்பாட்டையும் சேர்த்து இழக்க வைப்பதால், மனைவியின் இணைப்பில் ஏற்படும் மகிழ்ச்சியை அறவே இல்லாமல் செய்ய அவளை இழக்கவைக் கிறான் என்று பொருள்.

முனிவர்களது தகவல்களை மாறுபட்ட கோணத்தில் ஆராய்ந்து, பிறகு இந்த ஜாதகனுக்கு எது அனுபவத்துக்கு வரும், எது வராது என்பதை ஜோதிட பிரபலங்கள் தங்களின் சுய திறமையால் கண்டுகொள்ள வேண்டும். அவர்களின் சிந்தனை வளம்தான் ஜாதகத்தின் இறுதி பலனை வெளிக் கொண்டு வரும்.

கன்னி லக்னம், மிதுன லக்னம் (7-ம் வீட்டில்) மீனம், தனுசு ராசிகளில் குரு தென்படுகிறான். குரு சுப கிரகம். அந்தந்த வீட்டின் அதிபதி, அந்தந்த வீட்டைச் செழிப்பாக்குவான். பாப கிரகமானாலும் செழிப்புறச் செய்யும். அப்படியிருக்க குரு நிச்சயம் செழிப்பாக்குவான். குரு பார்வை கோடி தோஷத்தை விலக்கும் என்று பாமரர்களின் மனதில் பதியவைத்திருக்கிறோம். குரு 7-ல் மனைவியைச் சுவைத்து மகிழவைப்பான். 7-க்கு (லக்னம்) குருவின் 7-ம் பார்வை, கணவனுக்கு தாம்பத்திய சுகத்தை முழுமையாக் குவான். இப்படியெல்லாம் விளக்கம் உண்டு. அந்த விளக்கம் இந்த இரு லக்னங்களுக்கும் ஏற்புடையது அல்ல.

கேந்திராதிபத்யம் என்ற தோஷம், குருவின் எதிரிடை பலனை ஏற்கவைக்கும் என்பது ஜோதிட பிரபலங்களுக்குத் தெரிந்திருக்க வேண்டும். எங்கு எந்த விளக்கம் பொருந்தும், எங்கு பொருந்தாது,  எங்கு எதிரிடை விளக்கம் செயல்படும் என்ற சிந்தனையின் தெளிவு பிரபலங்களுக்கு வேண்டும். ஜோதிடம் விளையாட்டு அரங்கம் அல்ல. எச்சரிக்கையோடு செயல்படவேண்டிய போர்க்களம். கரணம் தப்பினால் மரணம்.

- தொடரும்...