மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - 25

சிவமகுடம் - 25
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம் - 25

ஆலவாய் ஆதிரையான், ஓவியங்கள்: ஸ்யாம்

சிவமகுடம் - 25

ஆனந்த தாண்டவம்!

நான்முகன் குடமுழாவை முழங்க, நாமகள் வீணை இசைக்க,  நந்திதேவர் மத்தளம் வாசிக்க, சிவகணங்களில் சிலர் சிவ பேரிகை களையும், இன்னும் சிலர் தேவதுந்துபிகளையும் கொண்டு இசை தப்பாமல் ஒலியெழுப்ப... படம்பக்கம் எனும் வாத்தியத்தை தாமே இசைத்தபடி பரமனார் ஆடும் ஆனந்த தாண்டவம்.

திருக்கயிலையின் பனிச் சிகரங்களை கருமேகங்கள் சூழ்ந்தனவோ என்று எண்ணும்படியாக, ஆடலுக்குத் தக்கவகையில் தமது விரிசடை பரந்தும் பணிந்தும் திகழ, ஒரு நேரம் குனித்தப் புருவங் களை சுழித்து நெறித்தபடியும், வேறொரு தருணம் தம்முடைய கொவ்வை செவ்விதழ்களில் புன்னகையைக் காட்டியும், பவள மேனியில் வெண்ணீறு துலங்க, சிவப்பரம்பொருள் நிகழ்த்தும் ஆனந்த தாண்டவம்.

அவர் மட்டுமா ஆடுகிறார்? அதோ... அன்னை சிவகாமியும் உடன் ஆடுகிறாள். அவர்களோடு சேர்ந்து அண்டபகிரண்டமும் ஆடுகின்றனவே!

மேலும் கீழுமாய் தலையசைத்தாள் இளவரசி மானி. அவளின் கண்கள் மூடியிருந்தன. இதழ்களில் மட்டும்... திருக்கயிலையின்  சிவ தாண்டவ திருக்காட்சியை, தன் மனக்கயிலையில் கண்டு மகிழ்வதன் வெளிப்பாடாக சிறு புன்னகை. அப்படி, மனத் திரையில் தோன்றிய சிவ நடனத்தின் அசைவுகளுக்கு ஏற்ப,  இளவரசியின் திருமுகமும் அபிநயம் பிடித்ததுபோலும்; கணத்துக்குக் கணம் மாறிக்கொண்டே இருந்தது அவளின் முகபாவனை.

மொத்தத்தில் மெய்ம்மறந்து சிவ தியானத் தில் லயித்துவிட்டிருந்தாள் சோழ இளவரசி. அகக்கண்களால் அவள் கண்ட சிவ தாண்டவக் காட்சி, சோழவள நாட்டின் எதிர்காலச் சிறப்பை குறிப்பால் உணர்த்தியது போலும். ‘சிவ... சிவ...’ என்று சிவ திருநாமத்தை உச்சரித்துக்கொண்டிருந்த அவளின் இதழ்கள், சிற்சில தருணங்களில் ‘சோழம் சோழம்’ என்றும் வார்த்தைகளை உதிர்த்தன.

கயிலையைச் சூழ்ந்து நிற்கும் சிவகணத்தவரை சோழப் படையின் வீரர்களாகவே கண்டாள். ரிஷபக்கொடியும் புலிக் கொடியாக மாறி பட்டொளி வீசிப் பறக்கிறது அவளது காட்சியில். அதோ... குடமுழாவை இசைக்கும் நான்முகனைக் காணும்போது, பரமேஸ்வர பட்டராகத் தெரிகிறது. மத்தளம் இசைக்கும் நந்தியின் அருகிலோ மணிமுடிச்சோழர் பொற்றாளம் வாசிக்கிறார். இவளோ, சங்கரனை சுற்றியாடும் அரம்பையர் கூட்டத்தில் ஒருத்தியாகக் கலந்து நிற்கிறாள்; அவர்களோடு தானும் ஆடத் துவங்கு கிறாள். விதவிதமான தாளங்களின் ஜதிகளுக்கேற்ப அபிநயம் பிடிக்கிறாள்; அதன் விளைவு, பற்பல பாவனைகளாக  வெளிப்பட்டுக் கொண்டிருந்தன மானியின் முகத்தில்.

பரமனாரின் தாண்டவத்தில் பலவகை உண்டு. சிருஷ்டிக்காக ஆடுவது உற்பத்தி தாண்டவம். உலகையும் உயிர்களையும் ரட்சிக்க ஆடுவது காத்தல் தாண்டவம். அதர்மத்தை அழிக்க நிகழ்த்துவது சம்ஹார தாண்டவம். தன்னில் இருந்து வெளிப்பட்டதை எல்லாம் தன்னுள் ஏற்று, ஸ்தூலத்தையெல்லாம் சூட்சுமமாக்கி, பாவ-புண்ணிய கர்மங்களையெல்லாம் சமப்படுத்தி, மேற்கொண்டு வினைகள் தோன்றவொண்ணாமல் அவற்றை மறைத்து ஆடுவது மறைத்தல் தாண்டவம். அடியார்களின் உள்ளம் உவக்க அருள் புரிந்து ஆடுவது அருளல் தாண்டவம்.

இவை மட்டுமா? *அல்லியம், எல்லியம், பல்லியம், உள்ளம், நுதல்விழி, நுதல்கால்... என்று, அரனாரின் ஆடற்கோலங்களின் உட்பிரிவாகவும் பலவகை உண்டு. ஆனால், இங்கே இளவரசி மானி தன் மனக்கண்ணில் காண்பது,  ஆனந்த தாண்டவம்தான்!

பாண்டியனின் படையெடுப்பால் சோழதேசத்தை பேராபத்து சூழ்ந்திருக்கும் இவ்வேளையில், மானி தனக்கும் தன் தேசத்துக்கும் பெரும் காப்பாகக் கருதியது, தனது பூ வியூகத்தையோ, மணிமுடிச் சோழர் மற்றும் பட்டர்பிரானின் ராஜ தந்திரத்தையோ, தென்னாடு பரதவர்களின் உற்றத் துணையையோ, சோழ மறவர்களின் பெரும் வீரத்தையோகூட அல்ல; அவள் காப்பாகக் கருதியது சிவனாரின் திருவடிக் கழல்களையே!

பாண்டியனின் அஸ்திர அணி களில் ஒன்றின் நகர்வு நன்கு புலப்படுகிறது. மற்றொன்று எங்கு சென்றதென்றே யூகிக்க முடிய வில்லை. கோட்டைக்குள் திடுமென ஏற்பட்டுவிட்ட சிறுபோர். எல்லையிலோ எதிரிகளின் எரிபரந்தூட்டல்; அதை முறியடிக்கச் சென்ற உபதளபதியாரோ மயக்க நிலையில் திரும்புகிறார். புலியூர் நிலவரத்தை அறியவும், அங்குள்ள வர்களை உசுப்பவும் தன்னால் அனுப்பப்பட்ட பொங்கியின் நிலை என்னவென்று தெரியவில்லை. அவளை மீட்கச் சென்ற நம்பியின் நிலையும் அப்படியே. இவை எல்லாவற்றுக்கும் முன்னதாக... மணிமுடிச் சோழரின் மந்திராலோசனை அறையிலும், கோட்டை முற்றத்திலும் நிகழ்ந்த கொலை முயற்சிகள்!

சிவமகுடம் - 25அடுத்தடுத்த நிகழ்வுகளால் அபாய நிலையில் சிக்கியிருக்கிறது சோழம். எனினும், இவை எதற்கும்  கலங்கினாள் இல்லை மானி. காரணம் சிவனார் அவளுக்கு அளித்த பூவாக்கு! அந்த அருள்வாக்கின்படி, வெற்றி சோழத்தின் பக்கமே என்பதை திடமாக நம்பினாள் அவள். வாகீசரின் திருவாக்கும் அவ்வகையில்தானே இருந்தது. ஆனால், அந்த வெற்றி எவ்வகையில் சாத்தியப்படும் என்பதைதான் அவளால் யூகிக்க முடியவில்லை.  முடிவை துல்லியமாகத் தெரிந்துகொள்ள முக்கண்ணனையே நாடினாள். வெளிப்படையாக போரைத் துவக்காமல், போக்கு காட்டிக்கொண்டிருக்கும் பாண்டியனின் விளையாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க, சோழ தேசமே முதலில் போரைத் துவக்குவது என்று முடிவுக்கு வந்தாள். அதன்பொருட்டு, தனது வழக்கப்படி- அனுதினமும் தான் வணங்கும் சிவனாரின் திருமுன் வந்து, அவரின் திருவடி தொழுது, மீண்டும் ‘பூ வாக்கு’ கேட்க விரும்பினாள்.

அப்படி, பூஜிக்க வந்தவள்தான் தியானத்தில் மூழ்கிப்போனாள்; தான் படித்தும், பெரியோர்கள் சொல்லக் கேட்டும் ரசித்த சிவ தாண்டவம் மனக்கண்ணில் எழ, அதிலேயே லயித்தும்விட்டாள். தாண்டவக் காட்சி தொடர்ந்தது. ஆனால், இதற்கு முன்னர் ‘மூன்றாவது வியூகத்தால் வெற்றி கிட்டும்’ என்று பூ வாக்கு தந்த சிவப்பரம்பொருள், இப்போது ‘சோழமே முதலில் போரை துவக்கு வது’ என்ற அவளின் எண்ணத்துக்கு ‘பூ வாக்கு’ அனுமதியை தரவில்லை!

அதேநேரம்... அவளின் மனக் காட்சியிலும் திடுமென மாற்றம் நிகழ்ந்தது! அணு அணுவாய் அவள் ரசித்துக்கொண்டிருந்த ஆனந்த தாண்டவத்தின் நிலை மாறியது. எம்பெருமானின் திருமுகத்திலும் அப்படியோர் உக்கிரம்.

‘ஆ!’  இதென்ன..?! இதுவரையிலும், ஆனந்த தாண்ட வத்துக்கு ஏற்ப ஒலித்துக்கொண்டிருந்த வாத்திய நாதங்களிலும் லயம் தப்புகின்றனவே?! அப்பப்பா... செவிகளைப் பழுதாக்கும் விதமான அபாய பெரு முழக்கம்வேறு எங்கிருந்து வருகிறதே?!'

- இளவரசியின், ஆழ்மனதில் தோன்றிய ஆனந்த தாண்டவக் காட்சியை மாறுபடுத்தி மறையச்செய்ததோடு, பேரொலியால் பெரிதும் உசுப்பி மனக்கயிலையில் இருந்து அவளை உறையூருக்கு இழுத்து வந்த அந்த அபாய பெருமுழக்கம் எழும்பியது, உறையூர்க் கோட்டை மதிலின் மீதிருந்துதான்!

ஆம்! சிவ தியானத்தில் அவள் திளைத்திருந்த தருணத்தில்தான், அகழிக் காவிரியின் நீர்ப்பரப்பில் இருந்து வெளிப்பட்டார்கள் பாண்டிய வீரர்கள். தொடர்ந்து, கயிறு பிணைக்கப்பட்ட சரம் தொடுத்து சிறைக் கொட்டடியின் சாளரத்தை நோக்கி ஏறவும் முற்பட்டார்கள். அவர்களை இனம் கண்டுகொண்டு சோழப் படையினர் தாக்குதலை துவக்க யத்தனிக்க, அவர்களே எதிர்பாராத விதமாக கோட்டை மதிலின் மீதிருந்து பாயந்து வந்தன எரியம்புகள்.

‘நம்மவர்களே நம்மை தாக்குவது ஏன்?’ என்று முதலில் சற்று நிலைகுலைந்த படை முன்னவனான கோச்செங்கண், பிறகு ஒருவாறு சுதாரித்துக்கொண்டான். கோட்டை மதிலின் அந்த பகுதியில், காவல் புரிவது சோழர்கள்

உருவில் இருக்கும் பகைவர்கள் என்று யூகித்துக் கொண்டவன், கொம்பு வாத்தியத்தை ஒலிக்கச் செய்து, சோழர் படைகளுக்கு  அபாயத்தை உணர்த்தினான்.  மறுகணம் பேரிடியாய் முழங்கித் துவங்கின உறையூரின் காவல் முரசங்களும் பேரிகைகளும்! அதனால் உண்டான பெரும் சத்தமே இளவரசி மானியையும் உசுப்பியது.

இயல்புநிலைக்குத் திரும்பி தனது அறையின் மாடப்பகுதிக்கு வந்து, அங்கிருந்தபடியே கோட்டை மதிலைக் கவனித்த மானிக்கு, உள்ள நிலைமை தெளிவாகப் புரிந்தது. சற்றும் தாமதிக்கவில்லை அவள்; அறைக் காவலரை அழைத்து ஆணையிட்டாள், ‘‘மதிற்புற சிறைக் கொட்டடியின் கற்கதவுகள் இறங்கட்டும்’’ என்று!

ஆணையைக் கேட்ட காவலர்கள் அதிர்ந்து போனார்கள். அவர்களின் உடல்நடுக்கம் தீர சில விநாடிகள் தேவைப்பட்டன. ஏனெனில், அவர்களுக்குத் தெரியும், சிறைக் கொட்டடியின் கற்கதவுகள் இறங்கினால், உள்ளே அடைபட்டுக் கிடக்கும் பகைவர் கூட்டத்தின் கதி என்னவாகும் என்று! ஆம், அவர்கள் மூலம் அந்த ஆணை நிறைவேற்றப்பட்டபோது, அதுவரையிலும் சந்திக்காத உயிராபத்தைச் சந்தித்தார்கள், சிறைக் கைதிகளாக பிடி பட்டிருந்த பாண்டிய வீரர்கள்!

அதேநேரம், பாண்டிய தேசத்தின் கிராமம் ஒன்றின் எல்லையில் ஆவேசமாக ஆடியபடி குறிசொல்லிக் கொண்டிருந்தான், வெறியாட்டு வேலன் ஒருவன். அருள்வாக்காய் அவன் சொன்ன சூட்சுமங்கள், பாண்டிய தேசம் குறித்த பெரும் ரகசியம் என்பது, அங்கிருந்த சிலருக்கு மட்டுமே புலப்பட்டது.

- மகுடம் சூடுவோம்...

*அல்லியம், எல்லியம், பல்லியம், உள்ளம், நுதல் விழி, நுதல்கால், நோக்கம், நுணுக்கம், கால் வரி, பேய் வரி, களிற்றுரி, நச்சம் ஆகிய 12 ஆடற் கோலங்களை விவரிக்கிறது, கூத்து நூல்.