Published:Updated:

காமரசவல்லி சௌந்தரேஸ்வரருக்கு `கார்க்கோடகன்’ என்று பெயர் வந்தது ஏன் தெரியுமா?

காமரசவல்லி சௌந்தரேஸ்வரருக்கு `கார்க்கோடகன்’ என்று பெயர் வந்தது ஏன் தெரியுமா?
காமரசவல்லி சௌந்தரேஸ்வரருக்கு `கார்க்கோடகன்’ என்று பெயர் வந்தது ஏன் தெரியுமா?

ர்ஜுனனின் பேரனும் அபிமன்யுவின் மகனுமான பரீட்சித்து மகாராஜா ஒருமுறை வேட்டையாடக் காட்டுக்குச் சென்றபோது, மரத்தடியில் தவம் புரிந்துகொண்டிருந்த முனிவரின் கழுத்தில் இறந்துகிடந்த பாம்பு ஒன்றை எடுத்துப் போட்டான். இதை ஆசிரமத்திலிருந்த முனிவரின் மகன் கண்டுவிட்டார். தன் தந்தையின் கழுத்தில் இறந்த பாம்பை மாலையாகப் போட்ட பரீட்சித்திடம் கோபம் கொண்டு, ``என் தந்தையின் கழுத்தில் இறந்த பாம்பை மாலையாகப் போட்ட நீ, இன்னும் ஏழுநாளில் பாம்பு கடித்து இறப்பாய்'' என்று சபித்துவிடுகிறார். அதன்படியே பரீட்சித்து மகாராஜா ஏழாவது நாளில் `கார்க்கோடகன்' என்னும் பாம்பு கடித்து இறந்துவிட்டார். அஷ்ட நாகங்களில் ஒருவனும் நாகங்களின் தலைவனுமான கத்துருவின் மகன்தான் கார்க்கோடகன்.

முனிவரின் மகன் இட்ட சாபத்தின் காரணமாக தன் தந்தை இறந்துவிட்ட தகவல் பரீட்சித்து மகாராஜாவின் மகன் ஜனமேஜயனுக்குத் தெரிய வந்தது. எனவே, அவன் ஒரு யாகம் செய்து, உலகத்திலுள்ள அனைத்து வகைப் பாம்புகளும் யாக அக்னியில் விழுந்து பொசுங்க வேண்டும் என்று சங்கல்பம் செய்துகொண்டான். அந்த யாக அக்னியில் விழாமல் கார்க்கோடகன் பாம்பு மட்டும் எப்படியோ தப்பித்துவிட்டது. தப்பிச் சென்ற கார்க்கோடகனால் தனக்கு ஆபத்து எதுவும் வரக் கூடாது என்பதற்காக ஜனமேஜயன் மகா விஷ்ணுவைப் பிரார்த்தனை செய்தான். அவன் பிரார்த்தனைக்கு இரங்கிய மகாவிஷ்ணு, ``சோழ மண்டலத்திலுள்ள காமரசவல்லி என்னும் தலத்தில், கார்க்கோடகனால் வழிபடப்பெற்ற அருள்மிகு பாலாம்பிகா சமேத அருள்மிகு சௌந்தரேஸ்வரரை வழிபட்டால், கார்க்கோடகனால் உனக்கு எந்த ஆபத்தும் வராது’’ என்று கூறினார்.

அதன்படியே ஜனமேஜயன் காமரசவல்லிக்கு வந்து அருள்மிகு சௌந்தரேஸ்வரரை பக்தியுடன் வழிபட்டான். ஜனமேஜயனின் பக்தியில் மகிழ்ந்த ஈசன், ``இனி உன் வம்சத்துக்குக் கார்க்கோடகனால் எந்த ஆபத்தும் நேராது'' என்று வரம் கொடுத்ததுடன், அந்தத் தலத்துக்கு வந்து வழிபடுபவர்களுக்கு சகல விதமான சர்ப்ப தோஷங்களும் நீங்கும் என்றும் அருள்புரிந்தார். ஜனமேஜயன் பூஜித்த இந்த ஈசனை, கார்க்கோடகனும் பூஜித்ததால் ஈசனுக்கு, `கார்க்கோடகன்’ என்ற திருப்பெயரும் உண்டு என்கிறது தலபுராணம்.

மன்மதனை தன் நெற்றிக்கண்ணால் சுட்டெரித்த ஈசனிடம்,  தன் கணவனை மீட்டுத் தருமாறு அவரை நோக்கித் தவம் இருந்தாள் ரதிதேவி. ``மன்மதன் உயிர் பெற்று வருவான். ஆனால், அவன் உன் கண்ணுக்கு மட்டுமே தெரிவான்” எனத் தன்னை வழிபட்ட ரதிதேவிக்கு மாங்கல்யப் பிச்சை அளித்தார் ஈசன். ரதிக்கு வரம் கொடுத்த ஊர் என்பதால் `ரதிவரபுரம்’ என அழைக்கப்பட்டது.  காமனின் (மன்மதன்) மனைவி ரதிதேவி தவம் இருந்த இடம் என்பதால், `காமரதிவல்லி’ எனவும் அழைக்கப்பட்டது. இதுவே மருவி, `காமரசவல்லி’ என்றானது எனவும் இந்த ஊருக்குப் பெயர்க் காரணம் சொல்லப்படுகிறது.  இதற்கு திருநள்ளூர், சதுர்வேதிமங்கலம், ரதிவரபுறம் எனப் பல பெயர்கள் உள்ளன. `ஈசனின் வாக்குப்படி இந்த காமரசவல்லி பகுதியில் பாம்பு தீண்டி யாரும் இறந்ததில்லை’ என்கின்றனர் ஊர்மக்கள். இந்த வரத்தை ஈசன் தந்த நாள் கடகராசி, கடக லக்னம் அமைந்த தினம் என்பதால் கடகராசிக் காரர்கள், கடக லக்னக்காரர்கள் இந்தத் தலத்துக்கு வந்து செளந்தரேஸ்வரரை தரிசனம் செய்வது சிறப்பு.  

சிறப்புப் பிரார்த்தனைகள்:

திருமணத் தடை நீங்கி, நல்ல வரன் அமையவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், கருத்து வேறுபாடு காரணமாகப் பிரிந்த தம்பதி ஒன்று சேரவும் இங்கு வந்து அருள்மிகு பாலாம்பிகை சமேத அருள்மிகு சௌந்தரேஸ்வரரை வேண்டிக்கொண்டால், அவர்கள் வேண்டுதல்கள் விரைவில் நிறைவேறுவதாக பக்தர்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றனர்.

எப்படிச் செல்வது : 

அரியலூரிலிருந்து சுமார் 22 கி.மீ தொலைவில் உள்ளது திருமானூர். இங்கிருந்து 6 கி.மீ தொலைவிலுள்ள காமரசவல்லியில் அமைந்திருக்கிறது அருள்மிகு பாலாம்பிகா சமேத அருள்மிகு சௌந்தரேஸ்வரர் திருக்கோயில். 


நடை திறந்திருக்கும் நேரம்:

காலை : 8 மணி முதல் 10 மணி வரை மாலை : 6 மணி முதல் 7 மணி வரை