Published:Updated:

``ஃபார்மாலிட்டிக்காக சாமி கும்பிட்டா பலிக்காது!’’ - இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ் #WhatSpiritualityMeansToMe

``ஃபார்மாலிட்டிக்காக சாமி கும்பிட்டா பலிக்காது!’’ - இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ் #WhatSpiritualityMeansToMe
``ஃபார்மாலிட்டிக்காக சாமி கும்பிட்டா பலிக்காது!’’ - இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ் #WhatSpiritualityMeansToMe

இசையமைப்பாளர் (சங்கர்) கணேஷ் தமிழ்நாடறிந்த பிரபலம். தேவரின் `மகராசி' தொடங்கி ஆயிரம் படங்களுக்கு மேல் இசை அமைத்திருக்கிறார். இப்போதும் இசை அமைப்பு, இசைக் கச்சேரிகள் எனச் சுற்றி சுழன்றுவருகிறார். `எனது ஆன்மிகம்' பகுதிக்காக அவரைச் சந்தித்தோம். அவரது ஆன்மிகம், அவர் முக்கியமாக வணங்கும் மூன்று மனித தெய்வங்கள், வழிபடும் முறை பற்றிக் கூறுகிறார் இங்கே...

``தெய்வ நம்பிக்கையில் பல வகை உண்டு. சின்ன வயசுலே அம்மா, அப்பா சாமி கும்பிடச் சொல்லிக் கொடுப்பாங்க. `டேய்... இந்த சாமிய கும்பிடு. இது தப்பு... செய்யாதே’னு சொல்லிக் கொடுப்பாங்க. `தப்பு செஞ்சா சாமி கண்ணைக் குத்திடும்’னு சொல்லி வளர்ப்பாங்க. அது இயற்கை. 
அதுக்குப் பிறகு நம்ம விருப்பங்கள் நிறைவேறணும்னு சாமிகிட்ட வேண்டிக்க ஆரம்பிப்போம். அப்புறம் சமுதாயத்துல பெரிய ஆளாக ஆகணும், பேரு புகழ் கிடைக்கணும்னு வேண்டிக்குவோம். ஆனா, அதெல்லாம் இயற்கையாக இருக்கணும். அந்த நம்பிக்கை உண்மையாக இருக்கணும். அப்படி இருந்தால்தான் பலன் கிடைக்கும். 
போகிற போக்குல ஏதோ  ஃபார்மால்டிக்காக  சாமி கும்பிட்டோம்னா பலிக்காது. சிவனைக் கும்பிடுறோமோ, இயேசுவைக் கும்பிடுறோமோ, அல்லாவைக் கும்பிடுறோமோ... அது பிரச்னையில்லை. உண்மையாக, முழு மனசோட தெய்வத்தைக் கும்பிட்டோம்னா நிச்சயம் அது பலிக்கும். 

நாம அவசரப்பட்டா மட்டும் போதுமா... அவர் எப்போ நடத்தி வைக்கணும்னு நினைச்சிருக்கிறாரோ... அப்போ கண்டிப்பா நடக்கும். ஆனா, மனித மனம் அதுக்குள்ள அவசரப்பட்டு கடவுளைத் திட்ட ஆரம்பிச்சிடுது. அது கூடாது. 
ஒரே சிந்தனையா கடவுளை நினைச்சு, நம்ம கடமையை நாம சரியா செஞ்சோம்னா அவர் கண்டிப்பாக நடத்திவைப்பார் . 
நான் ஒரு சாதாரண கார் டிரைவரோட மகன். எங்க அப்பாவுக்குச் சொந்த ஊர் திண்டிவனம். அம்மாவுக்குச் சொந்த ஊர் மேல்மருவத்தூர் பக்கத்துல சோத்துப்பாக்கம். நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னை ஆயிரம் விளக்கு மக்கீஸ் கார்டன்ல. தேனாம்பேட்டை கார்ப்பரேஷன் ஸ்கூல்லதான் படிச்சேன். மதியம் 3:30 மணிக்கு விளையாட்டு பீரீயட் நடக்கும். ஆனா, எனக்கு மட்டும் ஆண்டு விழாவுக்கு பாட்டுப் பாட கிளாஸ் நடக்கும்.


 அன்னிக்கு ஆரம்பிச்சது... இன்னிக்கு நான் ஆயிரம் படங்களுக்கு மேல இசை அமைச்சிட்டேன். அதுக்கு முழுக்க முழுக்க காரணம் இறைவன், என் அம்மா அப்பா. என்னைப் பெத்த அம்மா எல்லம்மா இறந்துட்டாங்க. எங்க சின்னம்மா அரவணைப்புலதான் வளர்ந்தேன். இவங்களைத் தவிர, நான் வணங்கும் மூன்று மனித தெய்வங்கள்தாம் என் வளர்ச்சிக்குக் காரணம். 

முதல்  மனித தெய்வம் எம்.எஸ்.விஸ்வநாதன். `தெனாலிராமன்', `நிச்சயத் தாம்பூலம்' படங்களின் கேமராமேனும் இயக்குநருமான வி.எஸ்.ரங்காகிட்ட என் அப்பா டிரைவராக இருந்தார். வி.எஸ்.ரங்கா மூலமாக எம்.எஸ்.விஸ்வநாதன் சார்கிட்ட சேர்த்துவிட்டார். சின்ன வயசுலயே துறுதுறுனு சுறுசுறுப்பா இருக்கிறதைப் பார்த்துட்டு கம்போஸிங் இன்சார்ஜ் பணியையே எம்.எஸ்.வி சார் என்கிட்ட கொடுத்தார். அந்தச் சின்ன வயதில் அத்தனை பெரிய வாய்ப்பை எனக்கு அளித்த மனித தெய்வம் அவர். 
அவருக்கு அடுத்து நான் வணங்கும் மனித தெய்வம் கவியரசர் கண்ணதாசன். அவர்தான் எங்களை இசையமைப்பாளராக்கி `நகரத்தில் திருடர்கள்' என்ற படத்தைத் தயாரித்தார். ஆனா, அந்தப் படம் பாதியிலேயே நின்னு போச்சு. ஆனாலும், அவரே எங்களை சாண்டோ சின்னப்பா தேவரிடம் அழைத்துச்சென்று எங்களைப் பற்றி எடுத்துச்சொல்லி `மகராசி' படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தார். 


எம்.ஜி.ஆர் அவர்களின் படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு என்பது எல்லோருக்கும் ஒரு கனவாக இருக்கும். அந்தக் கனவு, `நான் ஏன் பிறந்தேன்' படத்தில் எங்களுக்குக் கிடைத்தது. அதற்குக் காரணம் என் மாமனார் ஜி.என்.வேலுமணி. 
`பதிபக்தி’, `பாலும் பழமும்’, `பாகப்பிரிவினை’, `பாத காணிக்கை’, `பஞ்சவர்ணக்கிளி’, `குடியிருந்த கோயில்’, `நாணல்’, `நான் ஏன் பிறந்தேன்?’ படங்களைத் தயாரித்தவர். அவர் பையனும் நானும் நல்ல நண்பர்கள். அவங்க வீட்டுக்குப் போக வர இருந்தபோது அவர் பொண்ணுக்கும் எனக்கும் பூ மலர்ந்த மாதிரி காதல் ஏற்பட்டுச்சு. அவர்கிட்ட பொண்ணு கேட்டா கொடுப்பாரா? உதைப்பார். இழுத்துக்கிட்டு போய் மேரேஜ் பண்ணலாம்னாபோலீஸ்ல புடிச்சுக் கொடுதுடுவாரோனு பயம்... என்ன பண்றதுனே தெரியலை.
`சரி எல்லாக் கவலையையும் தீர்க்கிறதுக்குத்தான் நான் இருக்கேனேடா'னு சொல்ற திருவேற்காடு தேவி ஸ்ரீகருமாரியம்மன்தான் என் ஞாபகத்துக்கு வந்தது. 

ஞாயிற்றுக்கிழமைனா காலையிலயே கிளம்பிப்போய் மாரியாத்தாளைக் கும்பிட்டுட்டு வந்துடுவேன். மனசுக்குத் தைரியமா இருக்கும். 
சில நாள்கள் நடந்தே கோயிலுக்குப் போயிருக்கேன். அப்படி ஒருமுறை போனப்போ மழைனா மழை, அப்படியொரு மழை. அங்கே இருக்கிற தரைப்பாலத்துல இடுப்பு அளவு தண்ணி போகுது. நான் கூடையில இருக்கிற பூவோடு இந்தக் கரையில நிக்கிறேன். அந்தக் கரையில் இருந்தவங்க எல்லாரும் `வராதேடா... தண்ணியில அடிச்சிக்கினு போயிடுவே. போ... போ...’னு சொன்னாங்க. 
நான் போய் ஒரு மரத்தடியில் கொஞ்ச நேரம் இருந்துட்டு திரும்ப ஆத்துல இறங்கிப் போய் அம்பாளுக்குப் பூவை சாத்தி வேண்டிக்கிட்டுத்தான் வந்தேன். ஐயர் கூட `இந்த மழையில ஏம்பா?'னு கேட்டார். என் பிரச்னை எனக்குத்தானே தெரியும். 
அம்மன், என் மாமனாருக்கு உடல்ரீதியா சோதனை கொடுத்தா. அவர் மனம் மாறினார். அந்தச் சமயத்துல ஒரு பத்திரிகையில, `வேலும் மணியும் நினைத்தால், கணேஷ் திருமணம் நடக்கும்'னு செய்தி போட்டுட்டாங்க.
எதுக்கு இதைச் சொல்றேன்னா அப்படி வைராக்கியமாப் போய் அம்பாளைக் கும்பிட்டதாலதான் எங்க மாமனாரே என்னை வீட்டுக்கு வரச்சொல்லி, ஆள் அனுப்பினார். 

கொஞ்ச நேரம் கழிச்சுப் பார்த்தா, சாரங்கபாணி கார் வருது. சிவாஜி சார் கார் வருது. சாண்டோ சின்னப்பா தேவர் கார் வருது. சினி ஃபில்டூல ரொம்ப முக்கியமானவங்கல்லாம் வந்துட்டாங்க. சாண்டோ சின்னப்பா தேவரும், மதுக்கூர் ஜமீன்தாரும் என் சார்பா மாப்பிள்ளை வீட்டுக்காரர்களாக இருந்து தட்டை மாற்றி நிச்சயம் நடந்துச்சு. அப்புறம் திருமணம் நடந்துச்சு. 
சிவாஜி சார், எம்.ஜி.ஆர் சார் ரெண்டுபேரும் விருந்து கொடுத்தாங்க. எம்.ஜி.ஆர் தோட்டத்துல சாப்பிடுறப்போ, `என் வீட்டுல போய் இருந்துக்கோ’னு சொல்லி மகாலிங்கபுரத்துல இருந்த அவரோட வீட்டைக் குடியிருப்பதற்குக் கொடுத்தார். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திருவேற்காடுக்குப் போய், நானும் என் மனைவியும் சாமி கும்பிட்டுட்டு வந்து, எம்.ஜி.ஆரைப் பார்த்து பிரசாதம் கொடுத்துட்டுத்தான் வருவோம். அவரோட பாசம்தான் எனக்கு முக்கியமாக இருந்துச்சு. 

1986-ம் வருஷம் எனக்கு `பாம் பிளாஸ்ட்' ஆனப்போ, என் விரல்களிலும் கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அப்போ முதல் ஆளாக வந்து பார்த்தவர் எம்.ஜி.ஆர். என்னைத் தொட்டு ஆறுதல் சொன்னப்போ, அவரது சந்தன கலர் சட்டையெல்லாம் ரத்தமாகிடுச்சு. உதவியாளர் அவரை லேசாக விலக்கப் பார்த்தார். அப்போ எம்.ஜி.ஆர் அவரைக் கோபமாக ஒரு பார்வை பார்த்தாரே... அதை என்னால மறக்கவே முடியாது. 

அப்போலோ மருத்துவமனையில் ஒண்ணரை வருஷம் சிகிச்சை பெற்றேன். `எந்தத் தகடோ, உலோகமோ வைக்கக் கூடாது. அவன் பழைய மாதிரி வரணும்’னு டாக்டர்கள்கிட்ட  அறிவுறுத்திவிட்டுப் போனார். சிகிச்சைக்கான மொத்தத் தொகையையும் எம்.ஜி.ஆரே கொடுத்தார். இந்த உயிர் அவர் போட்ட பிச்சை. அவர்தான் நான் வணங்கும் மூன்றாவது தெய்வம்.    

குளிச்சவுடனே, முதல்ல பெத்தவங்களை வணங்குவேன். அதாவது, `என்னைப் பெத்த எல்லம்மா தாயே தந்தையே, செல்வம், கோபால், அன்பு சகோதரி சுந்தரம்மா தாயே,என்னுடைய மாமனாரே, சரவணனே , மாப்பிள்ளையே, கூலி வேலை செஞ்சு என்னைக் காப்பாற்றிய என் பாட்டியே, கவிஞர் கண்ணதாசன் அவர்களே, எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களே, புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களே, ஜி.கேவெங்கடேஷ் அவர்களே, எனக்கு சாதம் போட்டுக் காப்பாத்தின தாயம்மாவே...’னு சொல்லி வேண்டிக்கொண்ட பிறகுதான் எந்த வேலையையும் பார்ப்பேன். இது குளிச்சவுடனே அன்றாடம் சொல்ற மந்திரம்.. இதுதான் எனது ஆன்மிகம்’’ என்று கூறி விடைகொடுத்தார் சங்கர் கணேஷ்.