மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கயிலை... காலடி... காஞ்சி! - 14

கயிலை... காலடி... காஞ்சி! - 14
பிரீமியம் ஸ்டோரி
News
கயிலை... காலடி... காஞ்சி! - 14

பெரியவா கேட்ட விளாம்பழம்!நிவேதிதா

கயிலை... காலடி... காஞ்சி! - 14

ச்ருதி ஸ்ம்ருதி புராணோக்த தர்மமார்கரதம் குரும்
பக்தானாம் ஹித வக்தாரம் நமஸ்யே சித்தசுத்தயே
பகவத்பாத பாதாப்ஜ விநிவேசிதசேதஸ:
ஸ்ரீசந்த்ரசேகரகுரோ: ப்ரஸாதோ மயிஜாயதாம்

வேதங்களிலும் ஸ்ம்ருதிகளிலும் கூறப்பட்ட தர்மங்களை அனுஷ்டித்துக் காட்டுவதில் ஈடுபடுபவரும், ஜகத்குருவாக விளங்குபவரும், பக்தர்களுக்கு நன்மை புகட்டுபவருமான குருவை மனத்தூய்மை அடைவதற்காக வணங்குகிறேன். ஆதிசங்கர பகவத்பாதரின் பாதகமலங்களில் ஈடுபட்ட மனதை உடையவரான ஸ்ரீசந்திரசேகரரின் கருணை கடாக்ஷம் என்னிடம் உண்டாகட்டும்.

-மகா பெரியவாளைப் போற்றி ஸ்ரீபால பெரியவா இயற்றிய ஸ்தோத்திரம்.

லியின் துன்பங்களால் மக்கள் ஒரு சிறிதும் பாதிக்கப்படக் கூடாது என்பது மகா பெரியவா திருவுள்ளம். அதற்காக அவர் நீண்ட நெடிய தவம் மேற்கொள்ள தேர்ந்தெடுத்த உன்னதத் தலம்தான் தேனம்பாக்கம்.

தம்முடைய ஸித்திக்குப் பிறகும்கூட, தாம் தவமியற்றிய அந்த தவபூமிக்கு வந்து தரிசிப்பவர்கள் அனைவரும் அனைத்து நலன்களையும் பெறவேண்டும் என்பதற்காக, இன்றைக்கும் அங்கே பல அருளாடல்களை நிகழ்த்தி வருகிறார் மகா பெரியவா.

அப்படி அவர் சில மாதங்களுக்கு முன்பு நிகழ்த்திய ஓர் அருளாடலைத்தான் சைலேஷ் நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

அந்த அருளாடல்...

கடந்த மார்கழி மாதத்தில் ஒருநாள் ஸ்ரீராகவேந்திரரின் பக்தையான பத்மா மாமியின் கனவில், ஆற்றங்கரையில் இருந்து நடந்து வருவதுபோல் மகா பெரியவா தரிசனம் தந்தார். தாம் தவம் இயற்றிய தவபூமிக்கு வருமாறு உத்தரவு பிறப்பித்தார். அந்த இடத்தின் அனைத்து அடையாளங்களையும் தெளிவாகக் காட்டவும் செய்தார். அதுமட்டுமல்ல, வரும்போது தமக்கு விளாம்பழம் கொண்டு வந்து சமர்ப்பிக்கும்படியும் உத்தரவிட்டார். பத்மா மாமிக்கு எதுவும் புரியவில்லை. காரணம் அவருடைய கனவில் மகா பெரி யவா தரிசனம் தருவது அதுவே முதல்முறை.

மகா பெரியவா பற்றியும் அவருடைய மகிமைகள் பற்றியும் பத்மா மாமிக்குத் தெரியும் என்றாலும், அவர் தம்மை எந்த இடத்துக்கு வரும்படி உத்தரவிட்டார் என்பது பற்றி அவருக்கு ஒன்றும் புரியவில்லை.
விடிந்ததும் தனக்குத் தெரிந்தவர்கள் ஒவ்வொருவரிடமும் விசாரித்தார். அவர்கள் சொன்ன விவரங்கள் எதுவுமே பத்மா மாமியின் கனவில் தோன்றிய காட்சிகளுடன் பொருந்தவில்லை. பின்னர் சைலேஷிடம் கேட்டபோது அவர் சொன்ன விவரங்கள் கனவுக் காட்சியுடன் கச்சிதமாகப் பொருந்தி இருந்தது.

மகா பெரியவா தன்னை அழைத்த இடம் பத்மா மாமிக்குத் தெரிந்துவிட்டது. அவருக்கும் உடனே சென்று வர விருப்பம்தான். ஆனால், வரும்போது விளாம்பழம் வாங்கி வந்து சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டதை எப்படி நிறைவேற்றுவது என்று தெரியாமல் தவித்தார். காரணம் மார்கழி மாதத்தில் விளாம்பழம் கிடைக்காது. மகா பெரியவா உத்தரவை எப்படியும் நிறைவேற்றிவிடவேண்டும் என்று விரும்பிய பத்மா மாமி, பல இடங்களுக்கும் சென்று விளாம்பழம் கிடைக்குமா என்று பார்த்தார். தனக்குத் தெரிந்தவர்களிடமும் சொல்லி வைத்தார். பல ஊர்களில் விசாரித்தும் எங்குமே விளாம்பழம் கிடைக்கவில்லை.

என்ன செய்வது என்று தவித்துக் கொண்டிருந்த பத்மா மாமியின் கனவில் அவர் வழிபடும் ஸ்ரீராகவேந்திரர் தரிசனம் தந்து, ‘தனக்கு ஒரு ரூபாயும் ஒரு விளாம்பழமும் காணிக்கை தருவதாக வேண்டிக்கொண்டு சென்றால் விளாம்பழம் கிடைக்கும்’ என்று தெரிவித்தார்.
மறுநாள் காலையில் பத்மா மாமி ஸ்ரீராகவேந்திரர் திருவடிகளில் ஒரு ரூபாய் காணிக்கை வைத்துவிட்டு, ஒரு விளாம்பழம் சமர்ப்பணம் செய்வதாகவும் பிரார்த்தித்துக்கொண்டார்.

பின்னர் எதிர்த்தாற்போல் இருந்த உமா மாமி என்பவரிடம் விவரம் சொல்லி, பணம் எடுத்துக்கொண்டு தி.நகர் ரங்கநாதன் தெருவுக்குச் சென்றனர். விளாம்பழம் எங்காவது இருக்கிறதா என்று சுற்றும் முற்றும் பார்த்துக்கொண்டு இருந்தவர்களின் பார்வையில், ஒருவர் அட்டைப்பெட்டியைப் பிரித்து உள்ளே இருந்த விளாம்பழங்களை எடுத்து அடுக்கிக் கொண்டிருந்தது பட்டது. அதைப் பார்த்ததுமே பத்மா மாமிக்கு சந்தோஷம் தாங்கவில்லை. நேராக அவரிடம் போய் மொத்த விளாம்பழங்களையும் வாங்கிக்கொண்டு திரும்பினார்.
ஒரு விளாம்பழத்தை ஸ்ரீராகவேந்திரருக்குக் காணிக்கையாக வைத்துவிட்டு, தன்னுடன் சிலரை அழைத்துக்கொண்டு தேனம்பாக்கத் துக்குக் கிளம்பிவிட்டார்.

தேனம்பாக்கத்துக்குச் சென்று பார்த்த போதுதான், தன்னுடைய கனவில் மகா பெரியவா அடையாளம் காட்டிய அத்தனை இடங்களும் அப்படியே இருந்ததை தெரிந்து கொண்டு வியப்பும் பரவசமும் அடைந்தார்.
கோயிலில் பிரம்மபுரீஸ்வரரையும், பரிவார தெய்வங்களையும் வழிபட்டுவிட்டு, மகா பெரியவா உலக நன்மைக்காக நெடிய தவம் இயற்றிய புனித அறைக்குச் சென்றார்.

விவரிக்க முடியாத பக்திப் பரவசம் பத்மா மாமியை ஆட்கொண்டது. அதுமட்டுமல்ல, அவரை அந்த புனிதத் தலத்துக்கு அழைத்த தற்கான காரணத்தையும் மகா பெரியவா உணர்த்தி அருளினார்.

நம்மையெல்லாம் சிலிர்க்கச் செய்வதும் புனிதப்படுத்துவதுமான அந்தக் காரணம்..?

-திருவருள் தொடரும்