மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி-பதில்! - வயதான பிறகுதான் காசிக்குச் செல்ல வேண்டுமா?

கேள்வி-பதில்! - வயதான பிறகுதான்  காசிக்குச் செல்ல வேண்டுமா?
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி-பதில்! - வயதான பிறகுதான் காசிக்குச் செல்ல வேண்டுமா?

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

? நரகாசுரன் வதைக்கப்பட்ட திருநாளையே தீபாவளியாகக் கொண்டாடு கிறோம். ஓர் உயிரின் அழிவில் கொண்டாட்டம் உருவாகுமா? என் மன நெருடலுக்கு தீர்வு சொல்லுங்களேன்.

- எம்.பத்மப்ரியா, செங்கல்பட்டு


! நீங்கள் சொல்வதற்கும் தீபாவளிக்கும் சம்பந்தம் இல்லை. தீபாவளிக்கு தர்ம சாஸ்திரத்தின் விளக்கம் என்ன தெரியுமா? நரக சதுர்த்தசி. ஐப்பசி மாதம் அமாவாசைக்கு முன்னால் இருக்கக் கூடிய சதுர்த்தசி திதி அன்று காலையில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் அத்தனை பேரும் நரகத்துக்குச் செல்வதிலிருந்து விடுபட்டு மோட்சம் போவார்கள்.

‘சகிக்க முடியாத துயரம்தான் நரகம். அங்கே போகாமல் இருக்க வேண்டுமா... நரக சதுர்த்தசி அன்று உஷத் காலத்தில் எழுந்து, எண்ணெய் தேய்த்துக் குளி’ என்பது தர்மசாஸ்திரத்தில் இருக்கும் குறிப்பு. அதிகாலை வேளையில் எண்ணெய் தேய்த்து ஸ்நானம் செய்யக் கூடாது என்பது நியதி. இந்த தினத்தில் மட்டும் அதைச் செய் என்கிறார்கள். ‘என்ன மாற்றிச் சொல்கிறீர்களே?’ என்ற கேள்வி வரும். அப்போதுதான், இந்த நாளில் எண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் சிறப்பு தெரியவரும்.

`தைலே லக்ஷ்மீ ஜலே கங்கா. எண்ணெயில் லட்சுமி உட்கார்ந்தி ருக்கிறாள். நீரில் கங்கை இருக்கிறாள். கங்கையில் எல்லா பாவமும் போகும். லட்சுமி இருந்தால் ஐஸ்வரியம் இருக்கும். அங்கே நரக வேதனை மறையுமே... அதனால் எண்ணெய் தேய்த்துக் குளி.’  இப்படிப்பட்டதுதான் தர்ம சாஸ்திரத்தின் குறிப்பு. இதில் ஒரு பிடிப்பு ஏற்படுத்துவதற்காக, குறிப்பிட்ட இந்த நரக சதுர்த்தசி நாளிலேயே நரகாசுரன் வதம் செய்யப் பட்டதாக புராணம் பின்னாளில் கூறியது. அவன் செத்துப் போய் விட்டதற்காகக் கொண்டாடுகிறோம் என்று நினைப்பது தவறு. ஒருத்தர் செத்துப் போனதைக் கொண்டாடுவதாக சநாதன தர்மத்தில் எங்கேயுமே வராது.

கேள்வி-பதில்! - வயதான பிறகுதான்  காசிக்குச் செல்ல வேண்டுமா?

? புராணங்கள் கூறும் புஷ்பக விமானம் என்பதெல்லாம் உண்மையா?

- வே.சீனிவாசன், பொள்ளாச்சி


! விஷ்ணுவின் உருவம் பார்த்திருக்கிறோம். சிவன் உருவம் பார்த்திருக்கிறோம். அவற்றுக்கு அடிப்படை என்ன? புராணங்களிலும் வேதங்களிலும் அந்தந்த தெய்வங்களைப் பற்றிச் சொல்லப்பட்டிருக்கும் சில குறிப்புகளை வைத்து, தனது சிந்தனையையும் சேர்த்து ஓர் உருவத்தை வரைந்தார்கள் ஓவியர்கள். இன்னும் சொல்லப் போனால் லட்சுமி, ராமன், பரமேஸ்வரன், சரஸ்வதி போன்ற தெய்வங்களின் படங்கள் எல்லாம் இன்றும் ரவிவர்மா வரைந்த படங்கள் தான். சரஸ்வதி என்றால் வீணையை இப்படி வைத்து அமர்ந்திருப்பாள் என்பது அவருடைய சிந்தனை. அவற்றை எல்லாம் முதலில் இருந்தே பார்த்துப் பழகியதால் அதைக் கேள்வி கேட்கவில்லை.

ஏழு குதிரைகள் பூட்டி சூரியன் ஆகாயத்தில் போகிறான் என்பது வேதம் சொல்வது. அப்படி வரையப்பட்ட படத்தைப் பார்க்கும்போது சூரியனின் பெருமையிலேயே உங்கள் கவனம் இருந்தது. அதனால் ஆகாயத்தில் எப்படி குதிரை போகும் என்பது போல உங்களுக்குத் தோன்றவில்லை. விமானம் என்றதும் இப்போது உங்களுக்கு என்ன தெரிகிறதோ, அதை புஷ்பக விமானம் என்பதோடு பொருத்திப் பார்க்கிறீர்கள். நூறு வருஷம் கழிந்தால், இப்போது இருக்கும் விமானத்தின் வடிவமே மாறியிருக்கும். இப்போது உள்ளதை அப்போது கற்பனையில் பார்க்க முடியாது. அதைப் போல புஷ்பக விமானம் வேறு ஒரு வடிவத்தில் இருந்திருக்கலாம்.

ஆகாயத்தில் பறந்து போகக் கூடியவை எல்லாமே விமானம்தான். விமானத்தை உருவாக்குவது எப்படி, அதை இயக்குவது எப்படி, எந்தெந்த உலோகங்கள் தேவை என்றெல்லாம் தனி ஒரு சாஸ்திரமாகவே எழுதி வைத்திருக்கிறார் பரத்வாஜ மகரிஷி.

? வில்வம் மகாலட்சுமிக்கு உகந்தது என்றும் அதில் அவள் உறைகிறாள் என்றும் புராணங்கள் சொல்கின்றன. இத்தகைய மகத்துவமான வில்வ மரத்தை வீட்டில் வளர்க்கலாமா?

- வி.கிருஷ்ணவேணி, திருச்செந்தூர்


! பத்ரம், புஷ்பம், பலம், தோயம் என்று பகவானுக்கு உகந்த விஷயங்களில் வித்தியாசமே இல்லை. சில காரணங்களுக்காக சில இடங்களில் சில விஷயங்களுக்கு விசேஷம் ஏறும். துளசி, விஷ்ணுவுக்குப் பிரீதி. ஏனென்றால், அதற்கு ஒரு கதை இருக்கிறது. இப்படிக் கதைகளை வைத்துக்கொண்டு இன்னாருக்கு இன்னது உகந்தது என்பது பிற்பாடு வழக்கத்துக்கு வந்தது. வில்வத்தில் மூணு கண்போல் தெரிவதால் அது சிவனுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறோம். உத்தான ஏகாதசி முடிந்து கொஞ்ச நாள் பகவான் துளசி இலை மேலேயே உட்கார்ந்திருக்கிறார். பிருந்தாவன துவாதசி என்று சொல்லி துளசி பூஜை செய்வார்கள். எனவே, இந்தப் பொருட்கள் தவிர மற்றவை எல்லாம் விசேஷமில்லை என்பது சரியல்ல.

ஒருவன் புலிக்கு பயந்து வில்வ மரத்தின்மீது ஏறிவிட்டான். புலி போகவில்லை. தூங்காமல் இருக்க ஒரு கொம்பைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். அதிலிருந்து ஒரு வில்வ இலை தவறிக் கீழே இருந்த லிங்கத்தின்மேல் விழுந்தது. அவனுக்கு மோட்சம் கிடைத்தது. வில்வத்தின் பெருமைக்கு இந்தக் கதை ஓர் உதாரணம்.

கேள்வி-பதில்! - வயதான பிறகுதான்  காசிக்குச் செல்ல வேண்டுமா?

லட்சுமி இல்லாத இடமே கிடையாது. சுறுசுறுப்பே ஒரு லட்சுமிதான். எங்கே களை இருக் கிறதோ, அங்கே லட்சுமி இருக்கிறாள். எனவே, உங்கள் வீட்டில் வில்வத்தைத் தாராளமாக வளர்க்கலாம்.

? கோயில்களுக்குச் செல்லும்போது, அங்கே அமர்ந்திருக்கும் ஏழைகளுக்கு உணவோ, பணமோ தானம் செய்வது உண்டு. அந்த தானத்தை கோயிலுக்குள் செல்லும்போது கொடுப்பதா அல்லது தரிசனம் முடிந்து வெளிவரும்போது கொடுக்க வேண்டுமா?

- எம்.சிவசங்கரன், திருப்பூர்


!  கோயிலுக்கு நாம் போகும்போது பகவானை நினைத்துக்கொண்டு போகிறோம். திரும்பி வரும்போதும் பகவானை நினைத்துக் கொண்டுதான் வருகிறோம். தர்மம் எப்போது வேண்டுமானாலும் பண்ணலாம். நமக்கு வசதி இருக்கும்போது பண்ணலாம். கோயில் வாசலில் இருப்பவர்களுக்குத்தான் தர்மம் பண்ண வேண்டும் என்று எந்த அவசியமும் இல்லை. வீடு தேடி வருபவர்களுக்கும் பண்ணலாம்.

கோயிலுக்குப் போவதற்கும் அங்கே உட்கார்ந்து இருப்பவர்களுக்கு தர்மம் செய்வதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. உண்மையைச் சொல்லப் போனால், கோயில் வாசலில் ஒரு கும்பல் தர்மத்தை எதிர்பார்த்து உட்கார்ந்திருப்பதே நமது கலாசாரத்துக்குப் புறம்பான ஒரு விஷயம். அது நமது சமுதாயத்துக்கே குறை. நமது வீட்டு வாசலுக்கு வந்து கேட்பவரிடம் ‘‘போட்டாச்சு, போ!’’ என்று சொல்லும் தைரியம் நமக்கு உண்டு. ஆனால், கடவுளைக் கும்பிட்டு வரும்போது ‘இல்லை’ என்று சொல்ல நாம் தயங்குவோம்.

இந்த பலகீனத்தைப் பயன்படுத்திக்கொள்ளும் வியாபார யுக்திதான் கோயில் வாசலில் பிச்சைக்கு உட்காருவது. கோயிலில் கொடுப்பது மனமுவந்து கொடுக்கிற தர்மமே இல்லை. தர்மம் என்பதை வீட்டிலேயே செய்ய வேண்டும். இதில் முன்னாடி கொடுப்பதா, பின்னால் கொடுப்பதா என்கிற குழப்பத்துக்கு இடமே இல்லை.!

? அறுபது வயது கடந்தபிறகு காசிக்குச் செல்வதே சிறப்பு. அப்போதுதான் ஒரு பக்குவம் வாய்க்கும் என்கிறார், எங்கள் வீட்டுப் பெரியவர் ஒருவர். புண்ணிய தலங்களுக்குச் செல்லவும் வயது வரம்பு உண்டா?

- கே.குகநாதன், மன்னார்குடி

! நன்றாக இயங்கும் உடல் உறுப்புகள், தெளி வான மனநிலை கொண்ட சுகாதாரமான தருணத்தில் காசிக்குச் செல்வது சிறப்பு. அங்கு நடைமுறைப்படுத்த வேண்டிய சடங்குகளைக் குறைவில்லாமல் செய்வதற்கு உடல் ஆரோக்கியம் தேவை. காது மந்தம்... கண் பார்வை குன்றி விட்டது... ஊன்றுகோல் இல்லாமல் செல்ல இயலாது... அவ்வப்போது மறதி தென்படுகிறது... இந்த நிலையில் காசிக்குப் போனால், செய்யும் சடங்கு நாடகமாக இருக்கும்; பலன் இருக்காது. வயதான பிறகே காசிக்குச் செல்ல வேண்டும் என்று தர்மசாஸ்திரம் சொல்லாது.

புதல்வன் குடும்ப பாரத்தை ஏற்கும் தகுதியை அடைந்த பிறகு, நிம்மதியாக காசிக்குப் போவோம் என்று தகப்பனார் எண்ணுவார். அப்போது அவருக்கு வயதாகி இருக்கலாம். அதை வைத்து, வயதான பிறகே காசிக்குப் போக வேண்டும் என்று ஒரு கட்டளையை தர்ம சாஸ்திரத்தில் இடைச்செருகலாகத் திணிக்கக் கூடாது. இளம் வயதில் காசிக்குப் போவது சிறப்பு. ஈடுபாட்டுடன் சடங்கில் ஈடுபட முதுமையை விட இளமையே சிறந்தது. அது போல தாய் - தந்தையரை இழந்தவர் மட்டுமே காசிக்குப் போக வேண்டும் என்பதும் இல்லை. பெற்றோரை இழந்தவர்களுக்கு கங்கைக் கரையில் தன் முன்னோருக்கு ஆராதனம் செய்யும் வாய்ப்புக் கிடைக்கும். பெற்றோர் இருப்பவர்களும் கங்கையில் நீராடித் தூய்மை பெற்று, ஈசனை வணங்கி அருள் பெறலாம்.

காசி என்பது புண்ணிய க்ஷேத்திரம். அங்கு எல்லோரும் சென்று வழிபடலாம். அங்கு முன்னோருக்கு ஆராதனை செய்வது தனிச் சிறப்பு. இளம் வயதிலேயே நோய் - நொடிகளைச் சந்திப்பவர்கள் தற்போது அதிகம். அதை அகற்ற கங்கா ஸ்நானம் பயன்படலாம். நம் முன்னோர்கள், காசியில் உயிர் துறப்பதற்காக அங்கு தங்குவது உண்டு. அங்கு உயிர் துறந்தால், ஈசன் நம் காதில் தாரக மந்திரம் ஓதி, மோட்சம் அளிப்பார்.

போக்குவரத்தும், பொருளாதாரச் செழிப்பும் உள்ள தற்போது காசிக்குச் சென்று வருவது சிரமம் இல்லாதது. சந்தர்ப்பம் வாய்க்கும்போது, பயன்படுத்தி பலன் அடையலாம். உடம்பில் காற்று இருக்கும்போதே செய்துவிட வேண்டும். நமது முடிவு நம் கையில் இல்லை. இளமையிலேயே காசிக்குச் சென்று பயன் பெறுங்கள். அதில் தவறு இல்லை!

கேள்வி-பதில்! - வயதான பிறகுதான்  காசிக்குச் செல்ல வேண்டுமா?

? வீடுகளில் பூஜையறையில் இருக்கும் விளக்கு களை தினமும் சுத்தம் செய்ய வேண்டுமா? அதேபோல், தினமும் திரி மாற்றவேண்டிய அவசியம் இல்லை என்கிறார்கள் சிலர். அது சரியா?

- பா.செந்தில்குமார், சென்னை-43


! தினமும் நாம் குளிக்க வேண்டும். வேட்டி மட்டும் மாற்றினால் போதுமா? தினமும் வேட்டி மாற்றிக்கொள்கிறோம். குளிக்க வேண்டாமா? பன்னிரண்டு மணி நேரம் தூங்கி எழுந்தோமானால் குளித்துத்தான் ஆக வேண்டும். துவைத்த வேட்டிதான் உடுத்த வேண்டும். இது புது வேட்டி. ஒரு வாரம் கட்டிக்கொள்வேன் என்று சொல்லலாமா?

விளக்கை சுத்தம் செய்யத்தான் வேண்டும். அது தங்க விளக்காக இருந்தாலும் வெள்ளி விளக்காக இருந்தாலும் துடைக்க வேண்டும். பித்தளையாக இருந்தால் தேய்த்தே ஆக வேண்டும். திரியையும் முந்தைய நாளின் மிச்சமாக விட்டுவிடாமல் தூக்கி எறியத்தான் வேண்டும். ஒரு நாளைக்கு எரியும் படியான திரியைத்தான் போட வேண்டும். போடுவது போடுகிறோம், ஒரேயடியாகப் போட்டு விடலாம் என்று முழ நீளத்துக்குப் போடக்கூடாது. விளக்கு என்பது வெளிச்சம் சம்பந்தப்பட்ட சமாசாரம் இல்லை. அது மங்களகரமானது. கலாசாரம். வெறும் வெளிச்சத்தைக் காட்ட வேண்டுமானால் மின்விளக்கே போதுமே. விளக்கு எரிகிறது என்றால் அங்கே அக்னி பகவான் அமர்ந்திருக்கிறார் என்று பொருள். நேற்றைய கரியிலேயே இன்று அவரைக் கொண்டு போய் உட்கார வைப்பதா?

தினமும் திரி மாற்ற வேண்டும். விளக்கை சுத்தம் செய்ய வேண்டும். இதற்கு சோம்பலாக இருந்தால் விளக்கே ஏற்றாதீர்கள். கடவுளை மனதில் நினைத்துக்கொண்டாலே போதும். பரமாத்மாவின் சொரூபமாக விளக்கை ஆராதனம் பண்ணிக்கொண்டிருக்கிறோம். அதற்கு உரிய மரியாதையைக் கொடுக்க வேண்டாமா?

- பதில்கள் தொடரும்...


கேள்விகளை அனுப்பவேண்டிய முகவரி: சக்தி விகடன், 757, அண்ணா சாலை, சென்னை -  600 002
svdesk@vikatan.com என்ற மெயிலுக்கும் அனுப்பலாம்.