மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் - 26

சிவமகுடம் - 26
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம் - 26

ஆலவாய் ஆதிரையான், ஓவியங்கள்: ஸ்யாம்

சிவமகுடம் - 26

ரகசியம் பேசிய வேலன் பாட்டு!

`வேப்பம்பூ மணக்குதய்யா வேலன் படை கிளம்புதய்யா  வில்லவன் சிரம் முறிக்க சினம்பொங்க சீறுதய்யா...

- எல்லைப்புறக் கோயிலில் சூறைக்காற்றுக்கும் கோடை இடிச் சத்தத்துக்கும் இடையே, அவற்றுக்கு சற்றும் சளைக்காதவனாய், உடுக்கடித்தபடி பெருங் குரலெடுத்துப் பாடிய வெறியாட்டு வேலனின் பாட்டுச் சத்தம், இன்னும் தங்களின் செவிகளில் ஒலித்துக்கொண்டிருந்ததாகவே உணர்ந்தார்கள், அந்த வனத்தின் ஒற்றையடிப் பாதையை உற்றுநோக்கியபடி காத்திருந்த பாண்டிய சேனாவீரர்கள்.


இடையிடையே ‘ஹோய் ஹோய்’ என்று முழங்கியவாறும், பார்ப்பவர் களை பயத்துக்கு ஆட்படுத்தும்விதம் விழிகளை அகல விரித்து முறைத்தபடியும், எந்த இலக்கணத்துக்கும் பொருந்தாது உடலை கோணல் மாணலாய் வளைத்தபடி ஒருவித ஆட்டத்தை ஆடிக்கொண்டும் அவன் பாடிய பாட்டு, பல தகவல்களைச் சொன்னது! மேலோட்டமாகப் பார்த்தால், சீரலைவாய் வேலவன் போருக்குப் புறப்படுவதை விவரிப்பதாகத் தோன்றினாலும், உண்மையில் அந்தப்  பாட்டு, பாண்டிய மன்னரின் இரண்டாவது அஸ்திர அணியைச் சேர்ந்த இந்த வீரர்கள், அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த மன்னரின் ஆணையை சூசகமாகத் தெரிவிப்பதாகவே இருந்தது. அதில் முக்கியமான ஒன்றைச் செயல்படுத்தவே, தக்க தருணத்தை எதிர்பார்த்தபடி, மேடாகத் திகழ்ந்த ஓடுபாதையில் இருந்து விலகி, புதர்களின் மறைவில் பதுங்கிக் கிடந்தார்கள், இந்த வீரர்கள்!

சிலபல நாழிகைகள் கழிந்தபிறகு, பெரும் நிசப்தத்தைக் கலைத்தபடி, தூரத்தே ஒலித்தது ‘சலங்... சலங்’ எனும் ஓசை. நேரம் கரையக் கரைய அந்த ஓலி இவர்கள் பதுங்கி இருக்கும் இடத்துக்கு அணுக்கமாகக் கேட்டது. ஆனால், அவர்கள் எதிர்பார்த்திருந்த சத்தம் அதுவல்ல; குதிரைகளின் குளம்படி ஓசையையே எதிர்பார்த்திருந்தார்கள். ஆகவே, இந்தச் சத்தம் குறித்தோ அதற்கான காரணம் குறித்தோ ஆராய ஆர்வம் இல்லாமல், புதருக்குள்ளேயே பதுங்கிக்கிடந்தார்கள்.

ஆனாலும்,  எதிர்பாராத விதமாக மேட்டுப்பகுதியின் ஓடு பாதையில் வண்டிச் சக்கரத்தின் முனையில் பட்டுத் தெறித்த சிறு கல்லொன்று புதரை நோக்கிப் பறந்து வர, எங்கே அது தன் தலையைப் பதம் பார்த்துவிடுமோ என்ற பதைபதைப்புடன் சட்டென புதர் மறைவில் இருந்து விலகி நகர்ந்த வீரன் ஒருவன், அந்த நகர்தலின் தொடர்ச்சியாய் மறைவிடத்தில் இருந்து சற்றே எழுந்து நிற்க, யதேச்சையாய் அவன் கண்கள், அவர்களைக் கடந்து சென்ற மாட்டுவண்டியைக் கவனித்தன. அந்த அளவில் பெரும் அதிர்ச்சிக்கு ஆளானான் வீரன்.
ஆம்! அவர்கள், எவருக்காகக் காத்திருக்கிறார் களோ, அந்த நபர்களையே சுமந்து சென்றது மாட்டு வண்டி. சோழர் உபதளபதி கோச்செங்கணின் சகோதர னான நம்பி வண்டியைச் செலுத்திக் கொண்டிருக்க, பின்னால் கால்களை தொங்க விட்டபடி அமர்ந்திருந்தாள் பொங்கி. இருவருக்கும் நடுவில்- வண்டியின் மையப் பகுதியில், பெரும்பீதி நிறைந்த முகத்துடன் அமர்ந்திருந்தார், முதியவரான அந்த *வரியிலார்க் கிழவர்.

மாட்டுவண்டியை பாண்டிய வீரன் கண்டுகொண்ட அதேகணம், பொங்கியும் அவனைக் கவனித்துவிட்டாள். அடுத்து நிகழப்போவதை சடுதியில் யூகித்துக்கொண்டவள்,  சட்டென்று எழுந்து நின்றாள், எழுந்த வேகத்திலேயே அவளின் கைகளில் சரம் தொடுக்கத் தயாராக ஒரு தனுசும் முளைத்திருந்தது!

சிவமகுடம் - 26


இந்த இடத்தில் நம்பியும், பொங்கிதேவியும் பாண்டி யரின் பாசறைக் குடிலில் இருந்து தப்பிவந்த கதையைச் சொல்லியாக வேண்டும். கூன்பாண்டியரின் ஆணைப்படி நம்பியையும், பொங்கியையும் தனித்தனியே கயிறுகளால் பிணைத்துப்போட்ட வீரர்கள், பொங்கிதேவி தனது இடையில் மறைத்துவைத்திருந்த குறுவாளை கவனிக்கத் தவறிவிட்டார்கள். நம்பியை அணுஅணுவாய் ஆராய்ந்த வர்கள், பெண் என்பதால் பொங்கியை சோதனைக்குப் பெரிதாக ஆட்படுத்தவில்லை. அதுவே பொங்கிக்கும் நம்பிக்கும் சாதகமாகிவிட்டது. காவல் வீரர்கள் சிரம பரிகாரத்தின் பொருட்டு, குடில் காவலை விட்டு நீங்கிய அரைநாழிகை அவகாசம் போதுமானதாக இருந்தது பொங்கிக்கு. குறுவாளின் உதவி யால் பிணைப்பில் இருந்து விடுபட்டவள், நம்பியையும் விடுவித்தாள்.

அவர்களது நல்ல காலம்... பாசறைக்கு வெளியே- பகைவர்களின் புரவிகளில் சில, வெவ்வேறு விருட்சங்களில் கட்டப்பட்டிருந் தன. மெள்ள நகர்ந்து புரவிகளில் இரண் டின் கட்டுத்தளைகளை அவிழ்த்துவிட்ட பொங்கி, சந்தடியில்லாமல் அங்கிருந்து விலகி, நம்பியுடன் சற்றுத் தள்ளியிருந்த புல்வெளியை அடைந்தாள். அந்த இடத்துக்கும் பாசறைக் குடில்கள் அமைந்த பகுதிக்கும் நடுவே இருந்த பெரிய மணல் திட்டானது, ஆங்காங்கே பேசிக்கொண்டும் உணவருந்திக் கொண்டும் இருந்த பகை வீரர்களின் பார்வையில் இருந்து இவர்களைப் பெரிதும் மறைத்துவிட்டது.

வீரர்கள் உணவு அருந்திவிட்டு திரும்புவதற் குள் தப்பித்தாக வேண்டுமே என்ற பதை பதைப்புடன் காத்திருந்தனர் இருவரும். அவர்கள் நம்பிக்கை வீண்போகவில்லை. பொங்கியால் பிணைப்பில் இருந்து விடுபட்ட புரவிகள் இரண்டும், மேய்ச்சலில் கவனம் செலுத்தியபடியே இவர்கள் இருக்கும் இடத்தை நெருங்கின.

பொங்கியும் நம்பியும் ஆளுக்கொரு புரவியை மெள்ள அணுகி, அவை சத்தம் எழுப்பிவிடாதபடி பரிவுடன் பிடரியைத் தடவிக்கொடுத்தபடி, அங்கிருந்து அவற்றை நகர்த்தி நடத்தி வந்தனர். பாதுகாப்பான தூரம் வந்ததும் இருவரும் புரவிகளில் ஏறிக் கொள்ள, அவை உறையூரை நோக்கிப் பாயத் துவங்கின.

அவ்வாறு அவர்கள் வரும் வழியில்தான் துறவியையும், பாண்டிய மன்னரையும், அவருக்கு நேரவிருந்த ஆபத்தையும் கண்டார்கள். துரிதமாகச் செயல்பட்ட பொங்கி, மரக்கிளையில் இருந்து முரடனால் நழுவவிடப்பட்ட சர்ப்பம் மன்னரின் தலையில் விழுமுன், வாளால் அதை வெட்டி எறிந்தாள்; அதே வேகத்திலேயே பாண்டிய மன்னருக்குத் தன்னை இன்னாரென்று அடையாளமும் காட்டிவிட்டு பாய்ச்சலைத் தொடர்ந்தாள். முன்னர் ஒருமுறை, தன்னைக் காப்பாற்றிய பகை மன்னவருக்கு நன்றிக் கடனைச் செலுத்திவிட்ட திருப்தி அவளுக்கு.

அதன்பிறகு வேறு எங்கும் அவர்கள் நிற்காமல் பயணத்தைத் தொடர்ந்தார்கள். வழியில் ஓர் ஓடையை அவர்கள் கடக்க முற்பட்டபோது, எதிர்பாராதவிதமாக நம்பி யின் புரவி ஓடையின் பாறைகளால், தடம் புரண்டு நிலைதடுமாறி கீழே விழுந்தது. பின் னால் வந்த பொங்கியின் புரவியும்  அதன் மீது மோதி நிலைகுலைந்து கீழே விழுந்து காயப்பட, வேறுவழியின்றி அந்த வரியிலார்க் கிழவரின் வண்டியைக் கைப்பற்ற நேர்ந்தது!

மாட்டுவண்டியில் இரண்டு நாழிகைகள் பயணித்திருப்பார்கள். அப்போதுதான் புதர் மறைவில் இருந்து திடுமென எழுந்த வீரனைக் கண்டாள் பொங்கி.  அடுத்த சில கணங்களில் அவர்கள் துரத்த ஆரம்பிக்க, பொங்கியின் அஸ்திரத் தாக்குதலும் ஆரம்பித்தது!

உறையூரிலோ... சரம் தொடுத்து பிணைத்தக் கயிற்றின் மூலம் கோட்டைக்குள் பிரவேசிக்க முயன்று, பாண்டிய வீரர்கள் சோழர்களுக்கு அதிர்ச்சி அளிக்க... கயிற்றில் ஏறிக்கொண்டிருந்த வீரர்களில் ஒருவனோ, குறுவாளால் அந்தக் கயிற்றை அறுத்து, பாண் டியர்களுக்கு பேரதிர்ச்சியை அளித்தான்!

- மகுடம் சூடுவோம்...

* `வரியிலார்' என்பது பதவியைக் குறிக்கும் சொல்; அரசாங்க வரி குறித்த கணக்காளர். இதுபோன்று அரையர், நாடுவகை செய்வோர், திருமுகம் எழுதுவோர் உட்பட பல பதவிகள் பாண்டிய அரசில் உண்டு.