Published:Updated:

சித்திர ராமாயணம்

சித்திர ராமாயணம்
பிரீமியம் ஸ்டோரி
சித்திர ராமாயணம்

பி.ஸ்ரீ., ஓவியங்கள்: சித்ரலேகா

சித்திர ராமாயணம்

பி.ஸ்ரீ., ஓவியங்கள்: சித்ரலேகா

Published:Updated:
சித்திர ராமாயணம்
பிரீமியம் ஸ்டோரி
சித்திர ராமாயணம்

ராமனுக்கும் ஒரு புது வாழ்வு

உணவு முதலான வசதிகளைக் குறிப்பிட்ட பின், ராமனுடைய நாகரிகத்தில் உடைக்கு ஒரு முக்கிய ஸ்தானம் உண்டு என்பது குகனுக்கு நினைவு வருகிறது. நகர வாசிகளுக்கு உடுத்தப் பட்டாடை வேண்டுமே; படுத்து உறங்க தூங்குமஞ்சம் வேண்டுமே! ஆம், அழகாய்ச் சங்கிலி கட்டித் தொங்கவிட்ட தூங்குமஞ்சம் இல்லாமல் அரசிளங்குமாரர்களுக்கு எப்படித் தூக்கம் வரும்? சொகுசாய்த் தங்குவதற்கு மாளிகை வேண்டுமே; ஓடித் திரிய வாகனம் வேண்டுமே; அணிந்து மகிழ ஆபரணம் வேண்டுமே. வயிற்றுப் பசி தீர்ந்தாலும் வாய்க்குச் சுவை தரும் திண்பண்டங்களைத் தின்றுகொண்டேயிருப் பார்களே! இத்தனை ‘அநாவசிய’மான தேவை களுக்கும் வேடர் சேரியில் போவதெங்கே? தேவையைப் பெருக்கும் நாகரிகம்தான் வேடர்களுக்குத் தேவையில் லையே?

சித்திர ராமாயணம்

செங்கல் - சுண்ணாம்பு நாகரிகம் ஏன்?

வேடர்கோன் மூளை துரிதமாக வேலை செய்கிறது. கட்டியிருக்கி றார்களே, மரவுரி - கரடு முரடான மரவுரி! பட்டாடையை விட்டு இப்படிப் பழகிக்கொண்டவர்களுக்கு, இனி அடுத்தபடியாகத் தோலாடை கட்டிக் கொள்வதில்தான் என்ன கஷ்டம் இருக்க முடியும்? இன்னும் தோலைக் கொஞ்சம் தேய்த்துப் பதனிட்டுக் கொடுத்தால் ‘நம்மூர்ப் பட்டாடை’ ஆகிவிடாதா?

இப்படி எண்ண அலைகள் மோதியடிக்க, ‘கண்டேன், கண்டு பிடித்து விட்டேன் வசதிகளுக்கெல்லாம் வழி!’ என்கிறான் குதூகலமாக:

தோல்உள துகில் போலும்;
சுவைஉள; தொடர்மஞ்சம்
போல்உள பரண்; வைகப்
புரைஉள; கடிதோடும்
கால்உள; சிலைபூணும்
கைஉள: கலிவானின்
மேல்உள பொருளேனும்
விரைவொடு கொணர்வேமால்!


தோலாடை கட்டிப் பழகிவிட்டால், வேடர்களின் வேறு பழக்கங்களிலும் பயிற்சி பெறலாம். மரங்களில் பரண் கட்டித் தூங்குவார்களே வேடர்கள், காட்டு மிருகங்களின் உபத்திரவங்களுக் காக, - அந்தப் பரண்களையே தூங்கு மஞ்சமாகக் கொண்டு உறங்கவும் கற்றுக் கொள்ளலாமல்லவா? பகல் - வெயிலுக்கோ புல்லுப் புரைபோல் செங்கல் - சுண்ணாம்பு நாகரிகம்தான் இனிமையாகுமா? வசதியாகுமா? சிமிட்டிச் சுண்ணாம்பு நாகரிகம்தான் வேண்டுமா?

வாகனம் எதற்கு? ‘நொண்டிகளா நாம்? கடிதோடும் கால்கள் இருக்கின்றனவே!’ என்கிறான். ஆபரணங்களில் குகனுக்கும் ஆசைதான். அந்தப் பைத்தியம் உற்பத்தியானதே அவ்விடத்தில்தானே? ஆனால், அந்த சேரி நகைகள் இவர்களுக்குப் பிடிக்குமா? இருக்கட்டும், கைக்குப் பூண் வில்தானே? இத்தகைய கால்களும் கைகளும் எந்தப் பொருளையும் கொண்டு வந்து சேர்த்துவிடுமே - வனத்தில் உள்ள பொருளையும்கூட! வசீகரமான வாழ்க்கைச் சித்திரம் - இல்லையா?

தங்கிப் பார்க்கலாமே!


கடைசியாக, குகன் ராமனை நோக்கி ‘நம்முடைய குடிசையில் ஒரு நாளாவது தங்கித் தான் போக வேண்டும்’ என்று பிரார்த்திக்கிறான். நெடுங்காலம் எங்கள் ஊரில் தங்கவேண்டுமென்று பிரார்த்தனை செய்துகொண்டான் முதன் முதல். பதினாலு ஆண்டு வனவாச காலம் கழிந்த பின்பும் ராமனை ராஜ்யத்துக்கு விடாமல் வேடர்களின் முடிசூடா மன்னனாக வைத்துக்கொள்ள விரும்பியதுபோல், - தன் காலத்திற்குப் பின்பும் ராமன் அப்படியே அந்த வாழ்வில் இருந்துவிடலாமென்று கருதியவன்போல் - பேசிவிட்டான். ‘இதற்கெல்லாம் ராமன் இணங்கவா போகிறான்? என்ன பைத்தியம்!’ என்று தன் ஆசை வெள்ளத்துக்கு ஓர் அணை போட்டுக்கொண்டவனைப் போல், ‘நான் உள்ளவரைக்கும் நீ ஒரு கவலையுமில்லாமல் - சிறிய தாயையும் அந்தப் ‘பொய்ம்முறை’யையும் மறந்து - எங்களிடம்தானே தங்கிவிடலாம்’ என்று பேசினான் - தன் முதல் தீர்மானத்திற்குத் தானே ஒரு திருத்தப் பிரேரணை கொண்டு வந்ததுபோல். வேடர் வாழ்க்கையின் வசதிகளையெல்லாம் தெரிந்துகொண்ட பின்பும் ராமன் உத்ஸாகமாய்ச் ‘‘சரி’’ சொல்லாததால், ‘ஒருநாளாவது தங்கிப் பார்க்கலாமே!’ என்கிறான்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சித்திர ராமாயணம்

‘எங்கள் குடிசையில் நீ பல நாள் தங்க விரும்பாவிடினும், ஒரு நாளாவது விருந்தாளியாக இருக்க வேண்டும். ஒரு நாள் நீ தங்கினாலும், நாங்கள் உய்வு பெறுவோம், ஈடேறிவிடுவோம்!’ என்கிறான்:

‘உய்குதும் அடியேம், எம்
குடிலிடை ஒருநாள் நீ
வைகுதி எனின், மேல் ஓர்
வாழ்விலை பிறி(து)!’
என்றான்.

ராமன் சிரிப்பு

அகத்திலே அருள், முகத்திலே இளநகை, அகத்திலே பொங்கி நிறைந்த அருளே அலைவீசி வெளிப்படுவது போல். இளநகை வெண்ணிற நகையாகிறது, ஆம், வெண்ணிறப் பற்கள் தோன்ற ராமன் சிரிக்கிறான் குகனது வேண்டுகோளைச் செவியேற்றதும், - அந்த வேண்டுகோள் வாயிலாக அம் முரட்டுச் சரீரத்திற்குள் தங்கிய அன்பு மயமான இதயத்தைக் கண்டதும்.

‘சில நாட்களில் திரும்பிவிடுகிறோம், தாமதம் செய்வோமா?’ என்று, நகை செய்து ஆறுதல் சொல்லுகிறான். இந்த அருள் பொங்கிய வெண்ணகையில் எவ்வளவு பொருள் தங்கியிருக்கிறது! இந்தப் பொருளின் ஒரு சிறு பகுதிதான் சொற்களில் வெளிப்படுகிறது.

அண்ணலும் அதுகேளா,
அகம்நிறை அருள்மிக்கான்,
வெண்ணிற நகைசெய்தான்,
‘வீர! நின் உழை,யாம் அப்
புண்ணிய நதியாடிப்,
புனிதரை வழிபாடுற்(று),
எண்ணிய சிலநாளில்
குறுகுதும் இனி(து)’ என்றான்!


பதினாலு ஆண்டுகள் கழித்து வருவோம் என்றால், இத்தகைய நண்பன் ஏங்கிப் போவானல்லவா? எனவே ‘எண்ணிய சில நாளில் வந்து சேருவோம்!’ என்கிறான். இந்த வாக்கிலே, - இந்த நகைப்பிலே - குகனது பேரன்பை நோக்கிய திகைப்பு, ஆனந்தம், வியப்பு, அனுதாபம்; அறியாமையையும் கள்ளங் கவடற்ற உள்ளத்தையும் நோக்கிய பரிதாபம், சோகம் - இப்படி எத்தனையோ உணர்ச்சிகள் கலந்து நெருங்கி நிறைந்து பொங்குகின்றன!

குகன் விரைவாகப் போய் ஒரு நீண்ட தோணி கொண்டு வருகிறான். ராமன் சீதையோடும் தம்பியோடும் அந்த ஓடத்தில்  ஏறிக் கொள்ளு கிறான். முனிவர்களை நோக்கி, ‘எங்களுக்கு விடையளிப்பீராக’ என்று வேண்டிக்கொண்டு, குகனை நோக்கி, ‘ஓடம் விடு விரைவாக!’ என்று நட்புரிமை தோன்றத் துரிதப்படுத்துகின்றான்.

ராமன் அன்புக் கட்டளையிட்டதுதான் தாமசம், அலைகள் மடங்கி விழும்படி அவற்றைக் கிழித்துக்கொண்டு ஓடம் முடுகி ஓடும் அழகைப் பார்க்கிறார்கள் கரையிலுள்ள முனிவர்கள், பார்த்து என்ன பாடுபடுகிறார்கள்!

நால்வர் ஐவரானது!

லட்சுமணனைக் காட்டுக்கு அனுப்பி வைக்கும்போது, லட்சுமணனுடைய தாய் பிள்ளையை நோக்கி. ‘ராமனுக்குத் தம்பியாக நீ போக வேண்டாம், அடியார் போலப் பணி செய்யத்தான் போகவேண்டும்!’ என்றாள்; அப்படி லட்சுமணன் நடந்துகொள்ள வேண்டுமென்று தாய் ஆசைப்பட்டாள். ஒருவரும் தனக்குக் கட்டளையிடாமலே குகனும் அப்படிச் செய்ய ஆசைப்படுகிறான்.

‘மன்னும் நகர்க்கே, இவன்வந்திடின்,
வா;அ தன்றேல்,
முன்னம் முடி!’யென்றனள், பால்முலை
சோர நின்றாள்.


‘ராமனுக்கு முன்னம் உயிரைவிட வேண்டும்’ என்ற தாயின் கட்டளை லட்சுமணனுக்குத்தான், குகனுக்கில்லை! இப்படிப்பட்ட நிர்ப்பந்தம் ஒன்றும் இல்லாமலேயே, ‘ராமா! உனக்கு முன்னே முடிந்துபோவேன்!’ என்ற திட சங்கற்பம்-ஆசை-குகனுள்ளத்தில் இடம் பெறுகிறது.

அன்னவன் உரைகேளா,
அமலனும் உரைநேர்வான்:
‘என்உயிர் அனையாய்நீ,
இளவல்உன் இளையான், இந்
நன்னுதல் அவள்நின்கேள்,
நளிர்கடல் நிலமெல்லாம்
உன்னுடை யது, நான்உன்
தொழில்உரி மையின்உள்ளேன்!’


தனக்காக உயிரையும் பரித்தியாகம் செய்ய விரும்பிய குகனைப் பார்த்து, ‘நீயே எனக்கு உயிர்!’ என்றான் ராமன். பிறகு, தம்பி லட்சுமணனை வேடனுக்கும் தம்பி ஆக்குகிறான்: நாம் திகைத்துப் போகிறோம். அதற்கும் மேலாக, ‘இந்தச் சீதைப் பெண் இருக்கிறாளே, இவள் உனக்குத் தோழி!’ என்றும் கூறுவது நம்மைப் பிரமிக்கச் செய்து விடுகிறது. அப்பால், ‘நான் ஆளப்போகும் ராஜ்யம் உன்னுடையது!’ என்று ராமன் ஒப்புக்கொள்ளும் போது, நம்முடைய பிரமிப்பு அதிகமாகிறது, - ‘ராஜ குலமும் வந்து விட்டதே வேடனுக்கு!’ என்று. கடைசியாக, தன் ஆட்சித் தொழிலில் அவனுக்கு உரிமையளித்தது போல், ‘தோணி துழையும் உன் தொழிலிலும் எனக்கு உரிமையுண்டு!’ என்று பாத்தியதை கொண்டாடுகிறான். இப்படி உரிமை கேட்டவர் உண்டா, கேட்கிறவர் உண்டா, - வீட்டுக்குள்ளெயே குறுக்குச் சுவர்கள் போட்டுத் துண்டாடிப் பிரிவினை கேட்கும் இக்காலத்திலே?

முன்புளெம் ஒருநால்வேம்;
முடிவுள(து) எனஉன்னா
அன்புள; இனிநாம்ஓர்
ஐவர்கள் உளரானோம்!


மேலும் சொல்லுகிறான்: ‘எங்கள் குடும்பம் இப்போது பெருகிவிட்டது. முன்பு நால்வராகப் பிறந்தோம் நாங்கள்; இப்பொழுதோ ஐந்து சகோதரர்களாகிவிட்டோம்! ஆம், முடிவில்லாத அன்பினால் உன்னுடன் இணைக்கப்பெற்றுத்தான் ஐவர்கள் ஆனோம்!’
இப்படித் தசரத ராஜகுலத்தைப் பெருக்கிக் கொண்டதைக் காட்டிலும், ராமன் குகனுக்கு அளிக்கக்கூடிய பதவியோ பரிசோ இருக்க முடியுமா? இங்கே வெளியிடப் பெறும் சகோதர தர்மத்திற்கு ஈடு வேறு எந்தக் கதையில், எந்தக் காவியத்தில்தான் பார்க்க முடியும்?
* 8.6.47 மற்றும் 22.6.47 ஆனந்தவிகடன் இதழ்களில் இருந்து...

சித்திர ராமாயணம்

பூஜையறையில் தீபம் ஏற்றும் பலன்கள்...

வீட்டு பூஜையறையில் தீபம் ஏற்றும்போது எத்தனை முகம் ஏற்றினால் என்ன பலன் கிடைக்கும் என்று சாஸ்திரங்கள் சொல்லியிருக்கின்றன.

ஒரு முகம் ஏற்றினால் மத்திம பலன்; இரண்டு முகம் ஏற்றினால் குடும்ப ஒற்றுமை; மூன்று  முகம் ஏற்றினால் புத்திரர் சுகம்; நான்கு முகம் ஏற்றினால் பசு, கன்று போன்ற கால்நடைச் செல்வம்; ஐந்து முகம் ஏற்றினால் சகலவிதமான செல்வங்களும் பெருகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism