மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி-பதில்! - வீட்டில் சிவலிங்கம் வைத்து வழிபடலாமா?

கேள்வி-பதில்! - வீட்டில் சிவலிங்கம் வைத்து வழிபடலாமா?
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி-பதில்! - வீட்டில் சிவலிங்கம் வைத்து வழிபடலாமா?

சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கேள்வி-பதில்! - வீட்டில் சிவலிங்கம் வைத்து வழிபடலாமா?

? நமக்கு அன்பளிப்பாக வரும் வஸ்திரங்கள், கனிகள் ஆகியவற்றை சாமிக்குப் படைத்து வழிபடலாமா?

- எம்.வத்சலா, நெல்லை-2

எல்லாப் பொருட்களும் நமது உழைப்பில் வந்தவை அல்ல. ஏராளமான பொருட்களை இனாமாகப் பெறுகிறோம். நமது உழைப்புக்குப் பத்து ரூபாய் அதிகமாகக் கிடைத்தால், அதுவும் இனாம்தான். அன்பளிப்பாக வருவதால் ஒரு பொருள் தரம் தாழ்ந்தது என்பதில்லை. அன்பளிப்பு என்றாலே ‘இந்தப் பொருளை உன் உடைமை ஆக்குகிறேன்!’ என்பதுதான். உங்கள் உடைமையை நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் கொடுக்கலாமே... அது கடவுளுக்குப் படைக்கிற தகுதியோடு இருக்கிறதா என்பதைப் பார்த்தால் போதும். ஏதோ வந்தது, தள்ளிவிடுவோம் என்கிற நினைப்போடு பண்ணக்கூடாது.

அன்றாட நடைமுறையிலேயே அன்பளிப்பாகக் கிடைத்ததைத்தான் பகவானுக்குக் கொடுத்துக்கொண்டு இருக்கிறோம். பகவான் அன்பளிப்பாகக் கொடுத்ததுதான் தண்ணீர். நீங்களா உண்டாக்கினீர்கள்? அதைக் கொண்டு பகவானுக்கு அபிஷேகிக் கிறீர்களே... அதுபோல்தான் இதுவும்!

?வீட்டில் சிவலிங்கம் வைத்து வழிபடலாமா?

கேள்வி-பதில்! - வீட்டில் சிவலிங்கம் வைத்து வழிபடலாமா?

- சி.ராஜேஷ், கடையநல்லூர்

இரண்டு நடைமுறைகள் வைத்திருக்கிறோம். ஒன்று கோயிலுக்குச் சென்று வழிபடுவது. மற்றொன்று வீட்டிலேயே வணங்கு வது. கோயிலில் இருக்கும் ஸ்வாமி, மருந்து வைத்து நிரந்தரமாகப் பிரதிஷ்டை பண்ணப்பட்டது. இதற்கு அசரம் என்று பெயர். வீட்டில் இருப்பதை எங்கேயும் எடுத்துப் போகலாம். இதற்கு சரம் என்று பெயர். வீட்டில் பஞ்சாயதன பூஜை என்று வைத்திருக் கிறோம். ஆதித்யம், அம்பிகாம், விஷ்ணும், கணநாதம், மகேஸ்வரம் என்பார்கள். சூரியன், அம்பாள், நாராயணன், பிள்ளையார், மகாதேவன் ஆகிய ஐந்து உருவங்களை வணங்குவது பஞ்சாயதன பூஜை. விஷ்ணுவுக்கு சாளக்ராமம். சிவனுக்கு பாணம் என்று வைப்போம். இந்த ஐந்து பேரையும் வீட்டில் வைத்து அபிஷேகம் செய்வித்து வழிபடுவது பாரதிய கலாசாரம். இதில் சிவனிடம் அதிக ப்ரீதி இருந்தால், லிங்கத்தை நடுவில் வைத்து மற்றவற்றை நாற்புறங்களிலும் வைப்பார்கள். விஷ்ணு மேல் ப்ரீதி அதிகம் என்பவர்கள், சாளக்ராமத்தை நடுவில் வைத்து மற்றவற்றை நாலு பக்கங்களிலும் வைத்து வணங்குவர். பாகுபாடு ஏதும் இல்லை. இந்த முறையில் சிவலிங்கத்தைப் பூஜை செய்வது அவசியம். சாளக்ராம வழிபாடும் அவசியம்.

? கோயிலில், ஸ்வாமி சந்நிதி நடை சாத்தப்பட்ட பிறகு, பிராகார வலம் வரலாமா?


- கோ.வேலுமணி, பொள்ளாச்சி

நடை சாத்தப்பட்டாலும் கடவுள் சந்நிதியையும், பிராகாரத்தையும் வலம் வரலாம். காலை பூஜை முடிந்த பின் கருவறையை மட்டும் சாத்திவிட்டுப் போவார்கள். கோயிலை முழுவதுமாக மூடுவதில்லை. கோயிலின் பிரதான வாயில் திறந்திருக்கும். பொதுமக்கள் வந்து போவதற்காகவே இந்த ஏற்பாடு.  இப்படி வலம் வரும்போது நடை சாத்தப்பட்டிருந்தாலும், நம் மனம் முன்பு பார்த்த அந்த தெய்வத்தை நினைவுகூரும். கதவால் மறைக்கப்பட்ட கடவுள், மனக்கண்ணில்  தென்படுவார். திறந்திருந்தால் கண்கள் பார்க்கும். ஆனால், மனம் ஒன்றியிருக்குமா என்பதற்கு உத்தரவாதம் இல்லை. சாத்தியிருந்தால் கண்கள் பார்க்காது. ஆனால், மனம் அவரை நினைக்கும். கதவு சாத்தியிருந்தாலும், உங்கள் வழிபாட்டுக்குக் குந்தகம் ஏற்படாது!

? சுப காரியங்கள் நடத்தும்போது சில நட்சத்திரங் களைத் தவிர்க்கச் சொல்கிறார்களே, ஏன்?


- கே.சண்முகநாதன், திண்டிவனம்

சுப காரியங்களைத் துவங்கும் நேரம் சுப வேளையாக, அதாவது நல்ல நேரமாக இருப்பது அவசியம். அந்த சுப வேளை, நமது எண்ணம் சிறப்பாக நிறைவேற ஒத்துழைக்கும்.

வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்தும் இணைந்து சுப வேளையை முடிவு செய்யும். இதில் நட்சத்திரத்தின் பங்கும் சிறப்பானது. நாம் செய்யப்போகும் காரியத்துக்கு ஏற்ற, அதற்கு இணையான இயல்புகொண்ட நட்சத்திரத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வேதத்தின் மூலம் நட்சத்திரங்களின் இயல்புகளை அறியலாம்.

கேள்வி-பதில்! - வீட்டில் சிவலிங்கம் வைத்து வழிபடலாமா?

திருமணம், ஆண்-பெண் இணைதல், படிப்பு, வேலை, வியாபாரம், புதுமனை புகுதல், எதிரியைச் சந்தித்தல், பயணம், சண்டை- சச்சரவு, விவாதம், போர், விளையாட்டு போன்ற காரியங்களைத் துவங்கும்போது, நமது மனதுக்கு உகந்த நிலையில் செயல்படும் நட்சத்திரங்களை ஏற்கலாம்; அதற்கு குந்தகமான நட்சத்திரங்களைத் தவிர்த்துவிட வேண்டும். நட்சத்திரங்களின் இயல்புகளை வரையறுக்கும் நூல்கள் ஏராளம் இருக்கின்றன.

உதாரணமாக... வரனிடம் பெண்ணை ஒப்படைக்கும் வேளை யில், சுவாதி நட்சத்திரத்தின் சேர்க்கை இருந்தால், அவளது வருங்காலம் செழிக்கும். போர்த் தளவாடங்கள் செய்யத் துவங்கும் வேளையில், விசாக நட்சத்திரம் இணைவது சிறப்பு. இதனால், போர்த் தளவாடங்கள் பற்றாக்குறை இல்லாமல் கிடைக்கும்; வெற்றியும் உறுதியாகும். இப்படி ஒவ்வொரு நட்சத்திரத்தையும், அதன் சேர்க்கையால் சிறப்படையும் காரியங்களையும் அறிந்து செயல்படுவது நல்லது.

ஜோதிடத்தில் பலன் சொல்லும் பகுதி, நம்முடைய முன்னோர்களால் படைக்கப்பட்டது. சுப வேளையை வரையறுக்கும் பகுதி, இயற்கையின் அன்பளிப்பு. அதை, வான சாஸ்திரம் என்று பாகு படுத்திச் சொல்லலாம். வேளையை வரையறுக்கும் பகுதியை முகூர்த்த சாஸ்திரம் என்றும் சொல்வதுண்டு. நாம் ஈடுபடும் செயல் வெற்றி பெற, நமது தகுதியும் முக்கியம். எனினும், அதன் நிறைவுக்குக் காலத்தின் ஒத்துழைப்பும் அவசியம்.

? பூஜை - வழிபாடுகளில் எவர்சில்வரால் ஆன பொருட்களைப் பயன்படுத்தக் கூடாது என்கிறார் என் தந்தை. ஏன் அப்படி?

- வி.ராமலட்சுமி, மேலூர்

மண், செம்பு, பித்தளை, வெண்கலம், வெள்ளி, தங்கம் ஆகியவற்றை பூஜையறையில் பயன்படுத்தலாம். மண், பித்தளை, வெண்கலம், வெள்ளி - ஆகியவற்றால் ஆன விளக்குகளும் பாத்திரங்களும் உண்டு. பொருளாதாரத்துக்குத் தக்கவாறு பயன்படுத்தலாம். தூய்மையில் மேற்சொன்ன அனைத்தும் ஏற்கத்தக்கவை.

‘இரும்பு’ பாத்திரங்களைப் பூஜைகளில் பயன்படுத்துவதில்லை. அதற்குச் சுத்தம் போதாது என்கிறது சாஸ்திரம். ‘இரும்பை பயன்படுத்தலாம்’ என்று சில இடங்களைச் சுட்டிக்காட்டும். அங்கு மட்டும் அதற்குப் பெருமை உண்டு. எவர்சில்வர், இரும்பைச் சார்ந்த உலோகம். ஆகையால், பூஜையில் அதைத் தவிர்க்க வேண் டும்.  பூஜையைத் தவிர மற்ற விஷயங்களில் பயன்படுத்த வாய்ப்பு இருக்கும்போது,  பூஜை பயன்பாட்டிலும் விதிக்குப் புறம்பாக எவர்சில்வரை சேர்க்க வேண்டிய கட்டாயம் என்ன?

‘நிரீக்ஷித ஆஜ்யதானம்’ என்று ஒன்று உண்டு. அப்போது உருக்கிய நெய்யை வெண்கலப் பாத்திரத்தில் நிரப்பித் தானம் அளிப்பார்கள். தானம் கொடுப்பவன் தனது நிழலை நெய்யில் காண்பான். அதாவது, வெண்கலப் பாத்திரம் மற்றும் நெய்யுடன் தனது உருவத்தையும் நிழல் வடிவில் சேர்த்து அளிக்கிறான் என்று பொருள். வெண்கலத்துடன் இணைந்த சூடான நெய், கண்ணாடியைப் போன்று உருவத்தைத் தன்னில் பதியவைக்கும் திறன் கொண்டது என்பார்கள் பெரியோர்கள். இரண்டின் சேர்க்கைக்கும் இந்தத் திறமை இருப்பதால், அதைப் பரிந்துரைத்தது ‘தர்ம சாஸ்திரம்’.

மண், இயற்கையாகவே சுத்தமானது. மண் பாத்திரத்தில் செய்த உணவு தரம் குறையாமல் இருக்கும். செம்புப் பாத்திரத்தில் இருக்கும் தண்ணீர், மருத்துவ குணம் பெற்றுவிடும். வெள்ளி மற்றும் தங்கம் ஆகியவற்றுடன் சேர்ந்த பொருட்கள், தமது தனித்தன்மையை இழக்காது.

இப்படி சில சிறப்புகளைக் கண்ணுற்று அதற்கு உகந்த பொருளை அறிமுகம் செய்தது தர்ம சாஸ்திரம். இரும்புக்கு எத்தனையோ சிறப்புகள் இருக்கலாம். ஆனால், பூஜை விஷயங்களுக்குத் தேவையான சிறப்பு இல்லை என்பதால், அதை விலக்கியது. மாற்றுப் பொருள்கள் ஏராளம் உள்ளன என்பதற்காக பழையதை விலக்கக் கூடாது. பழக்கப்பட்ட ஒன்றை அகற்றிவிட்டு, மாற்றுப் பொருளைத் திணிக்கும்போது சிந்தனை செயல்பட வேண்டும். ‘பழசு - புதுசு என்று பார்க்காதே... சிறப்பையும் பார்!’ என்பது காளிதாசனின் அறிவுரை.

பண்டைய கிராம மக்கள் உமியைக் கரியாக்கி, அதில் உப்பைக் கலந்து, பல் துலக்கப் பயன்படுத்தினார்கள். அதை விரட்டிவிட்டு, புதுமையைப் புகுத்தினோம். அதனால் சுகாதாரத்தை இழந்தவர்களும் உண்டு.  இப்போது, ‘பற்பசையில் உப்பு கலந்திருக்கிறது. அது உயர்வு!’ என்று பழைய சிறப்பு திரும்பவும் முளைத் திருக்கிறது. வெளிநாட்டு மருத்துவம் நமது மருத்துவத்தை விரட்டியடித்தது. தற்போது புதுப் புது அழகுப் பொருள்களில், நமது மூலிகைகள் ஒளிந்து இருப்பதாகச் சொல்லி வரவேற்கிறது.

வெள்ளிக்கும், தங்கத்துக்கும் இருக்கும் மவுசு எவர்சில்வருக்கு இல்லை. ஆனால், நடுத்தர மக்கள் பெரும்பாலும் எவர்சில்வர் உருப்படிகளையே விரும்புகிறார்கள். சில இடங்களில் மற்ற உலோகங்கள் அறவே அகற்றப்பட்டும்விட்டன. உணவு உண்ண தட்டாகப் பயன்படுத்துங்கள். ஆனால், கடவுளுக்கு சர்க்கரைப் பொங்கல் போன்று நைவேத்தியம் படைக்கும்போது எவர்சில்வர் பாத்திரங்களைத் தவிர்த்துவிடுங்கள்.

? ‘சனி நீராடு’ என்பார்கள் பெரியோர்கள். சனிக்கிழமைக்கு அப்படியென்ன சிறப்பு? அதேபோல், செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் முடி திருத்தக் கூடாது என்கிறார்களே, ஏன்?

- ஏ.பாலமுருகன், மானாமதுரை

 ‘சனி நீராடு’ என்பது பாதிதான். ‘சனி, புதன் நீராடு’ என்பதுதான் முழுசு. முன்பெல்லாம் சனி, புதன் நாட்களில் எண்ணெய் தேய்த்துக் குளிப்போம். இப்போது நாம் ஷாம்புக்கு வந்தாச்சு. புதிதாக வந்த வைத்தியங்களும் எண்ணெய் தேய்க்கத் தேவை இல்லை என்று சொல்லிவிட்டன. அது நமக்கு இஷ்டமாக இருப்பதால், அப்படியே செய்கிறோம். நிறைய வியாதிகளும் வந்து அவஸ்தைப்படுகிறோம். தேக ஆரோக்கியத்துக்காக நீங்கள் எண்ணெய் தேய்த்துக் குளிக்க விரும்பினால், சனியோடு புதனையும் சேர்த்துக்கொள்ளுங்கள்!

அடுத்ததாக முடிவெட்டுவது குறித்து கேட்டுள்ளீர்கள். முடி, உடலின் பகுதிகளில் ஒன்று. நாம் பிறக்கும்போதே இருப்பது அது. பல்கூட அப்புறமாகத்தான் முளைக்கும். கடைசிக் காலம் வரை முடி நம்மோடு இருக்கிறது. அதனால்தான் பழைய காலத்தில் இருந்தவர்கள் முடி வளர்த்தார்கள். நம் உடற்பகுதிகளை எந்தெந்த நாட்களில் இழக்கலாம் என்பதற்கு சாஸ்திரத்தில் விஸ்தாரமான விளக்கங்கள் இருக்கின்றன. நாள், கிழமை, நட்சத்திரம் போன்றவை எல்லாம்கூட அதில் இருக்கும்.

காலப்போக்கில் கிழமையை மட்டும் பார்த்தால் போதும் என்றாகிவிட்டது. எனவே, இன்னின்ன கிழமைகளில் முடி வெட்டக் கூடாது என்பதைப் பின்பற்றுகிறோம். ‘குஜதின மதிஷ்டமிதி’ என்று ஜோதிட சாஸ்திரம் இதைக் குறிப்பிடும்.

செவ்வாய், சனி ஆகியவை குஜ தினங்கள். நல்ல காரியம் செய்வதைத் தவிர்க்க வேண்டிய தினங்கள். வெள்ளிக் கிழமை அன்று நல்ல நாள். ஆனாலும் ஒரு நல்ல நாளிலா இதைச் செய்வது என்கிற சிந்தனையில் வெள்ளியும் அதில் சேர்ந்து கொண்டது. வெள்ளிக்கிழமை முடி வெட்டக் கூடாது என்பது எல்லோருக்கும் பொருந்தாது. தகப்பனார் இல்லாதவர்கள், வெள்ளிக்கிழமை முடி எடுக்கலாம். அவர்களும் செவ்வாய், சனிக் கிழமைகளில் முடி வெட்டிக்கொள்வது கூடாது.

- பதில்கள் தொடரும்...