Published:Updated:

சித்திர ராமாயணம்

சித்திர ராமாயணம்
பிரீமியம் ஸ்டோரி
சித்திர ராமாயணம்

பி.ஸ்ரீ. ஓவியங்கள்: சித்ரலேகா

சித்திர ராமாயணம்

பி.ஸ்ரீ. ஓவியங்கள்: சித்ரலேகா

Published:Updated:
சித்திர ராமாயணம்
பிரீமியம் ஸ்டோரி
சித்திர ராமாயணம்

சித்திரகூடம்!

குகனுக்கு விடைகொடுத்து அனுப்பிவிட்டு, காட்டு வழிகளில் ராமன் சீதையுடன் உல்லாசமாக உரையாடிக் கொண்டே போக, லட்சுமணன் புத்திசாலித்தனமாகப் பின் தங்கிப் பின் தங்கிச் சிறிது தூரத்தில் வந்து கொண்டிருக்கிறான். சீதைக்குக் காட்டும் போது அந்த இயற்கையழகுகள், எவ்வளவோ அதிக இனிமை, அதிசய இனிமை வாய்ந்தனவாகக் காண்கின்றன!

சித்திர ராமாயணம்

இந்த அழகுகளுடன் சூரியாஸ்தமன அழகும் சேர்ந்துகொண்ட போது, சித்திரகூட மலை தூரத்தில் கண்ணுக்குத் தோன்றியது, மங்கலான ஒரு சித்திரம்போலே. அப்போது ஒரு பெரியவர் அங்கே வந்தார். ராமன் வருவதைத் தெரிந்து எதிர்கொள்ளத்தான் வந்தார், ஒரு மரகத மலையை ஞான மலை எதிர்கொள்வது போல. ராமனும் தம்மைப் போல் அரையில் மரவுரியும் ஜடை முடியுமாக இருப்பது கண்டு திகைத்து, ‘இக் கோலத்திலா தசரத ராஜ குமாரனைக் காண்பது?’ என்று சோகக் கண்ணீர் சொரிந்தார். வந்த காரணத்தை ராமன் தெரிவிக்க, முனிவர், ‘உன்னைக் காட்டுக்கு அனுப்பிவிட்டு எனது நண்பனாகிய சக்கரவர்த்தி எப்படித்தான் உயிரை வைத்துக் கொண்டிருக் கிறானோ?’ என்று வருந்தினார். (இவர் இப்போது ஞான திருஷ்டியால் அந்த நண்பனை மட்டும் பார்த்திருந்தால்?) பிறகு, தமது ஆச்ரமத்துக்கு இவர்களை இட்டுக்கொண்டு போய், காய் கனி வகைகளை உணவாகக் கொடுத்து உபசரித்தார். அம் முனிவரைக் கண்டதும் ராமனுக்குத் தந்தையைக் கண்ணுற்றது போல் இருந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

சித்திர ராமாயணம்

மறுநாள் பொழுது புலர்ந்த பின் முனிவர், ‘‘இந்த இடம், கங்கை, யமுனை, சரஸ்வதி என்னும் மூன்று நதிகள் சேருகின்ற பிரயாகை; ‘திரிவேணி சங்கமம்’ ஆகிய இந்த க்ஷேத்திரம் வசிக்கச் சௌகரியமானது’’ என்றார். ஆனால், இது கோசல நாட்டுக்குச் சமீபத்தில் இருந்ததால் ராமன் இங்கே வசிக்க இசையவில்லை. முனிவரை வணங்கி விடைபெற்று ராமன் முதலானோர் சித்திரகூடத்தை நோக்கிப் புறப்பட்டார்கள்.

வழியில் எதிர்ப்பட்ட நதியைக் கடப்பது எப்படி? என்று ஆலோசனை செய்தார்கள். ராமனும் சீதையும் அது குறித்துச் சிந்திப்பதற்குள், லட்சுமணன் பளிச்சென்று பக்கத்திலுள்ள மூங்கிற் காட்டுக்குள் பாய்ந்து சென்று, மூங்கிற் கழிகளை அளவுபட வெட்டி, அவற்றை மாணைக்கொடி என்ற ஒருவகைக் காட்டுக்கொடியால் பிணைத்துத் தெப்பம்போலக் கட்டி ஆற்றிலே மிதக்கவிட்டான். அத்தெப்பத்திலே சீதையுடன் ராமன் சுகமாகத் தங்கியிருக்க, லட்சுமணன் துடுப்புக் கொண்டு தெப்பம் தள்ளுவது போல் இரு கைகளாலும் நீந்தியவண்ணம் தெப்பத்தைத் தள்ளிக்கொண்டு போனான். சீதா ராம லட்சுமணர் மூவரும் அக்கரை சேர்ந்து, காட்டிலே நீள வழி பிடித்துப் போனார்கள்.

அந்தி மயங்கிவிட்டது. ஏதாவதொரு ஜாகையில் போய்த் தங்கவேண்டாமா? `ஜாகை தயார்' என்று தம்பி சொன்னதும் எல்லாரும் பர்ணசாலைக்கு வந்து சேர்ந்தார்கள். அந்த பர்ணசாலையை லட்சுமணன் எப்படி தயாராக்கிவிட்டான்?

லட்சுமணன் கட்டிய மாளிகை

நீண்ட மூங்கில்களை வெட்டிக் கொணர்ந்து தூண்களாக வரிசைப்படுத்தி நிறுத்தினான். மேல் மட்டம் பார்த்து அம்மூங்கில் - தூண்கள் மீது உத்தரம் வைத்தான். முக்குச் சட்டங்களை இறக்கிக் கைகளும் குறுக்கு வரிச்சுகளும் வைத்து, வரிச்சுகளுக்கு மேல் வெள்ளிபோல் பளபளப்பான தேக்கிலைகளைப் பரப்பிப் புல்லை வேய்ந்து விட்டான். பிறகு நட்டுவைத்த தூண்களுக்கிடையே கழிகளை அடைசுவராக நெருக்கி அமைத்து, அவற்றின் மேல் களி மண்ணை உள்ளும் புறமும் அப்பித் தண்ணீர் தெளித்துத் தீற்றி ஒழுங்காக்கி னான். இப்படி அண்ணனுக்கு இடம் அமைத்து வைத்தான். இதை ஒட்டிச் சீதைக்கு ஒரு தனி இடம். கொஞ்சம் அதிகமாய்ச் சிங்காரித்தான். சுவர்மீது செம்மண் கொண்டு பட்டை அடித்து அழகு செய்தான். பல நிறக் கற்களையும் சிப்பிகளை யும் சிறிது தூரத்திலிருந்த நீர்நிலையிலிருந்து பொறுக்கி வந்து, உட்சுவரில் கோலம் போட்டது போலப் பதித்துவைத்தான்.

இப்படி லட்சுமணன் அமைத்திருந்த பர்ண சாலையில் ராமன் சீதையுடன் குடிபுகுந்தான். அவதாரமூர்த்தியான ராமன் சீதா லட்சுமியோடு இப்படியும் ஒரு ‘மாளிகை’யில் குடி புகுந்தானே!’ என்று அதிசயமாய் அந்தக் குடியேற்றத்தைச் சுட்டிக்காட்டுகிறான் கவிஞன்.

தம்பியைப் பார்த்தான் ராமன். விற்பிடித்த அந்த வீரத் தோள்களையும் பார்த்தான். ‘தம்பி! நீயும் என்னைப்போல் வில்வித்தைதானே பழகிக் கொண்டிருந்தாய்? இந்தக் கொத்து வேலையை எப்போது, அப்பா! கற்றுக் கொண்டாய்?’ என்று கண்ணீர் சொரிந்த வண்ணம் கேட்கிறான்.

‘என்று கற்றனை நீ இதுபோல்?’ என்றான்.
துன்று தாமரைக் கண்பனி சோர்கின்றான்.


என்ன அருமையான கவிதை! அபூர்வ எளிமையோடு, இதயத்தை எப்படி உருக்கிவிடுகிறது, பாருங்கள்!

பின்னும் ராமன் லட்சுமணன் முகம் நோக்கி, ‘உனக்கு நான் நெடுநாளாகத் துன்பத்தைத்தான் இழைத்துக் கொண்டிருக்கிறேன்! நான் வேறு என்ன புகழைச் சம்பாதித்து விட்டேன்? இதுதானா தர்ம பரிபாலனம்? பிதுர் வாக்கிய பரிபாலனம்?’ என்று தன்னைத் தானே நொந்து கொண்டு பேசுகிறான்.

அண்ணன் இப்படி நொந்து கொள்வதுதான் தம்பிக்கு இப்போது இடர் இழைப்பதாக இருக் கிறது. உண்மையில், ராமனுக்குப் பணி செய்வது தானே லட்சுமணனுக்கு எப்போதும் இன்பம் - பேரின்பம்?

 பரதன் துயரம்

பேரிகை, சங்கு முதலிய வாத்தியங்கள் கடல்போல் முழங்க, ரதங்களும் யானைகளும் நெருங்கிச் சூழ, குதிரைகள் அங்குமிங்கும் அம்பு போலப் பாய, மின் வெட்டுவதுபோல விட்டுவிட்டு வெட்டி வெட்டிப் பிரகாசிக்கும் ஆயுதங்களோடும் ஆபரணங்களோடும் படை வீரர்களும் அரச குமாரர்களும் திரண்டு தொடர, வந்து கொண்டிருக் கிறானே, அந்த அரசிளங்குமரன் யார்? என்ன ஆத்திரம், என்ன பரபரப்பு! எங்கே போகிறார்கள்? ராஜ வாழ்த்து முரசுகளின் முழக்கத்தையும் அடக்கி முழங்க, மல்லர்களின் வீர கர்ஜனைகளோடு துதி பாடகர்களின் தோத்திரப் பாடல்கள் போட்டி போடுகின்றன. அவ்வளவு உத்ஸாகம் தம்பிக்கு அண்ணனைப் பார்க்கப் போவதில்.

ராமன் சீதையோடும் லட்சுமணனோடும் சித்திரகூட மலைப் பர்ண சாலையில் தங்கியிருக்கி றான். அவர்கள் நாடு துறந்து செல்லும்போது பரதன் கேகய நாட்டுக்குப் போயிருந்தான். அயோத்தியில் நடந்ததும் அவனுக்குத் தெரியாது; சித்திர கூடத்தில் நடப்பதும் தெரியாது. இப்போதுதான் கேகய நாட்டிலிருந்து திரும்பி வந்து கொண்டிருக்கிறான்.

‘பொழுதும் நாளும் குறித்திலன், போயினான்’ என்று, கவிஞன் அந்த அவசர யாத்திரையைக் குறிப்பிடுகிறான். நாள், நட்சத்திரம் ஒன்றும் பாராமல் அப்படியே புறப்பட்டு விட்டானாம், ராமனைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையினால். வயது முதிர்ந்த தந்தையைத் தொழ வேண்டும் என்ற விருப்பங்கூட அடுத்தபடியாகத்தான்.

இவ்வளவு உத்ஸாகமாக வந்தவன், கோசல நாட்டில் அடியெடுத்து வைத்ததும் திடுக்கிட்டுப் போகிறான். இந்த நாட்டின் வளம்தான் கொஞ்சமோ? வனப்பைத்தான் என்னென்பது? பிரிந்து போய்த் திரும்பி வரும் பரதனுக்கு இந்த வளமும் வனப்பும் எவ்வளவு ஆனந்தத்தைக் கொடுத்திருக்க வேண்டும்? அதற்கு மாறாக அவனைத் திடுக்கிடச்செய்த அந்த நிலைமைதான் என்ன?

இத்தனை வயல்களும் ஏர் அடிப்பார் இன்றித் தரிசாய்க் கிடப்பதற்குக் காரணம் என்ன? தண்ணீர் பாய்ச்சாமல் சில வயல்கள் காய்ந்து கொண்டிருப்பதேன்? அறுவடைக்குரிய வயல்களில் நெற்பயிர் தலை சாய்ந்து அடிமுறிந்து கிடப்பதேன்? இன்னும் சில வயல்களில் களை பயிரையே மூடி விடும் என்று தோன்றுகிறது. பழங்கள் பொறுக்குவோர் இல்லாமல் சிதறி அழிந்துகிடக்கின்றன. பூக்கள் பறிப்பார் இல்லாமல் உதிர்ந்து உலர்ந்து கிடக்கின்றன.

அயோத்தியில் அந்திவேளையென்றால் தனியான உல்லாசம்தான், அழகுதான்; ஆடலும் பாடலும்தான்! ஆனால் அந்த அயோத்திதானா இது? மலர் துறந்த கூந்தல், மாலை துறந்த தோள், நகை இழந்த முகம், களை இழந்த மாளிகை, விழா இழந்த வீதி, அழகழிந்த தோற்றம்! பரதன் திக்பிரமை கொண்டான். தயங்கித் தயங்கி நின்று பெரு மூச்சுவிடுகிறான்.

அரண்மனைக்குள்ளே சக்கரவர்த்தியைக் காணவில்லை. கைகேயி மாளிகைக்குப் போய் வணங்கியதும், அந்த அம்மாள் தன் தந்தை முதலியோரின் க்ஷேமத்தைக் குறித்து ஆவலாக விசாரிக்கிறாள். ‘ஆம்’ என்று பரதன் சுருங்கக் கூறி விளங்க வைத்து, ‘தந்தை எங்கே?’ என்று கேட்கிறான். அம்மாள் அமைதியாக,

‘வானகம் எய்தினான்: வருந்தல்நீ!’ என்றாள்.

பெருந் துயரத்துடன் பரதன்,

‘தீயெரி செவியில்வைத் தனைய தீயசொல்

நீஅல(து) உரைசெய நினைப்பரோ?’ என்றான்.


பலவிதமாய்ப் பிரலாபித்த பின் பரதன் ஒருவாறு தன்னைத்தானே தேற்றிக்கொண்டு தாயை நோக்கி, ‘இனி அண்ணனாகிய ராமனைக் கண்டு வணங்கினாலன்றி இந்த மனத் துயரைத் தாங்க முடியாது’ என்று சொல்லுகிறான். இந்த அன்பும் மரியாதை யும் கைகேயிக்குச் சகிக்க முடியுமா?

‘தெவ்வடு சிலையினாய்! தேவி தம்பியென்(று)

இவ்விரு வோரொடும் கானத்தான்’ என்றாள்.


‘அசட்டுப் பிள்ளை! என்ன வீரம் இது? பெண் பிள்ளையை விட மோசமாக நடந்து கொள்ளுகிறான்!’ என்று பரிகாசம் தொனிக் கவே, கைகேயி, ‘தெவ்வடு சிலையினாய்!’ என்று பரதனை அழைக்கிறாள். எந்த ராமன் காலில் போய் விழவேண்டுமென்று பிள்ளை ஆசைப்படுகிறானோ அந்த ராமனுடைய இன்றைய விலாசம் காடுதான்! என்று - தெரிவித்து விடுகிறாள். ‘தேவி, தம்பி, ராமன் ஆகிய மூவருக்கும் அந்த ஒரே விலாசம்தான்!’ என்றும் கூசாது கூறிவிடுகிறாள். இடி விழுந்த மாதிரி விழுகிறது இந்தக் கொடிய வார்த்தை பரதன் காதிலே.

சித்திர ராமாயணம்

‘தந்தை இறந்தான்’ என்ற செய்தியாவது எதிர்பாராததாய் இருந்த போதிலும், வயசு காலத்தில் இறப்பது இயல்புதானே?  என்று விவேகமானது ஒருவாறு ஆறுதல் செய்ய முயலும். ஆனால், உயிருக்கு உயிரான தமையன், தந்தை இறந்ததும் ராஜ்ய காரியம் பார்க்க வேண்டியிருக்க, ஏன் காட்டுக்குப் போக வேண்டும்? ‘ஐயோ! இன்னும் என்னென்ன கொடிய செய்திகளைக் கேட்க வேண்டுமோ? இன்னும் என்னென்ன விளையப் போகிறதோ?’ என்று ஏங்கி இடிந்து போகிறது பரதன் உள்ளம்.

ராமன் காடு சென்ற காரியத்தைப் பரதன் அறிந்து கொள்ள விரும்பித் தாயைக் கேள்வி கேட்கிறான். அவள் பதில் சொல்லுகிறாள் எக்களிப்புடன், - தான் வரம்பெற்ற வைபவத்தையெல்லாம்:

வாக்கினால் வரந்தரக் கொண்டு, மைந்தனைப்

போக்கினேன் வனத்திடைப்,

போக்கிப் பார்உனக்(கு) ஆக்கினேன்; அன்னது

பொறுக்க லாமையால் நீக்கினான் தன்உயிர்

நேமி வேந்(து)!’ என்றாள்.


தான் தவறு ஒன்றும் செய்யாதது போல், எல்லாம் தசரதன் தவறு போலவே பேசிவிடுகிறாள் கைகேயி. சக்கரவர்த்தி வாக்குக் கடனாய்க் கொடுக்க வேண்டியிருந்த அந்த வரத்தைக் கொண்டே அவனுடைய மகனைக் காட்டுக்கு ஓட்டினேன் என்கிறாள். ‘அதனால் என்ன கெட்டுப் போய்விட்டது? உனக்கு ராஜ்யத்தை வாங்கி வைத்திருக்கிறேன் அல்லவா?’ என்கிறாள். ‘ராஜ்யம் உனக்குக் கிடைத்தது பற்றி உன் அப்பனுக்கு ஆற்றாமைதான்!’ என்று சொல்லி மகனுக்கு வெறுப்பை உண்டாக்கித் தந்தை மேலுள்ள பாசத்தை அறுத்து விடப் பார்க்கிறாள். பிள்ளை மேலுள்ள பாசம் இப்படியெல்லாம் கைகேயியை நினைக்க வைக்கிறது, பேச வைக்கிறது. ‘பரதனுக்கு ராஜ்யமா?’ என்று ஏங்கிச் செத்துப் போனானாம். அந்த ஏக்கம் என்ற கருவியினாலேயே தசரதன் தற்கொலை செய்து கொண்டது போலப் பேசுகிறாள்.

இந்தப் பேச்சைக் கேட்ட பரதன் உள்ளத்தில் கொதித்தெழுந்த கோபத் துக்குக் கங்குகரையில்லை.  அந்தக் கொடிய கோபம் தாயென்றும் பாராமல் கொடுஞ் செயல்களில் இறங்கி விடுமோ? - என்று கூடத் தோன்று கிறது.

6.7.47  27.7.47  3.8.47 ஆனந்தவிகடன் இதழ்களில் இருந்து...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism