மற்ற எபிசோடுகள்
Published:Updated:

ஆலயம் தேடுவோம் - சூரியன் வழிபடும் சொர்ணபுரீஸ்வரர்!

ஆலயம் தேடுவோம் - சூரியன் வழிபடும் சொர்ணபுரீஸ்வரர்!
பிரீமியம் ஸ்டோரி
News
ஆலயம் தேடுவோம் - சூரியன் வழிபடும் சொர்ணபுரீஸ்வரர்!

எஸ்.கண்ணன்கோபாலன்

‘சோறுடைத்த சோழநாடு’ என்று சிறப்பிக்கப்பெறும் சோழநாட்டில், ‘எங்கள் சோழம் சோறுடைத்து மட்டுமல்ல, இறைவனிடத்தே நீங்காத பக்தி கொண்ட மக்களும் வாழும் தேசம்’ என்று சொல்லாமல் சொல்வதுபோல், சோழ மன்னர்கள்தான் எத்தனை எத்தனை கோயில்களை எழுப்பி, பக்திப் பயிர் தழைக்கச் செய்தனர்?!  அத்தகைய கோயில்களைக் காணும்போது நமக்கு சோழ அரசர்களிடம் பெரும் மதிப்பு ஏற்படுகிறது.

ஆலயம் தேடுவோம் - சூரியன் வழிபடும் சொர்ணபுரீஸ்வரர்!

அதேநேரத்தில் ஆலயங்களை நிர்மாணித்த சிற்பிகளின் கலைத் திறனும் அவர்களுடைய வானசாஸ்திர புலமையும் நம்மை வியக்கச் செய்வதுடன், அவர்களிடம் அளவற்ற மதிப்பையும் ஏற்படுத்துகிறது. ஆலயத்தில் இருக்கும் இறைவனை, ஆண்டுக்கு சில குறிப்பிட்ட நாள்களில் சூரியன் வழிபடுவதுபோல், கருவறையை நிர்மாணிக்கவேண்டுமானால், சிற்பிகள் எந்த அளவுக்கு வானியல் சாஸ்திரத்தில் நிபுணத்துவம் பெற்றிருக்கவேண்டும்?!

இறைவனை சூரியன் தன் ஒளிக்கிரணங்களால் வழிபடும் கோயில்களுக்கு நம் தமிழகத்தில் பஞ்சமே இல்லை. அப்படி ஓர் அதிசய ஆலயம்தான் இதோ இப்போது நாம் தரிசிக்கப்போகும் ஸ்ரீசொர்ணாம்பிகை சமேத ஸ்ரீசொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்.
தஞ்சை மாவட்டம் பாபநாசத்துக்கு அருகில் உள்ள கோபுராஜபுரம் என்ற கிராமத்தில்தான் இந்த அதிசய ஆலயம் அமைந்திருக்கிறது. ஆகமம், வானியல் சாஸ்திரங்களில் பெற்றிருந்த தேர்ச்சியின் துணை கொண்டு, எண்ணற்ற சிற்பிகள் தங்களுடைய பல வருட உழைப்பின் பயனாக எழிலுற நிர்மாணித்த ஆலயம்தான் ஐயன் சொர்ணபுரீஸ்வரர் திருக்கோயில். மேற்கு நோக்கிய திருக்கோயிலில் ஐயனும் மேற்கு நோக்கியே சந்நிதி கொண்டிருக்கிறார்.

ஆலயம் தேடுவோம் - சூரியன் வழிபடும் சொர்ணபுரீஸ்வரர்!

மிகவும் புராதனமான இந்த ஆலயத்து இறைவனை குபேரன் வழிபட்டதாகச் சொல்லப்படுகிறது.

தன்னுடைய சகோதரனான ராவணனிடம் நாட்டையும் செல்வங் களையும் பறிகொடுத்த குபேரன், தான் இழந்த செல்வங்களையும், நாட்டையும் திரும்பப்பெறவேண்டும் என்பதற்காக பல தலங்களுக்கும் சென்று சிவபெருமானை வழிபட்டான். பின்னர் தஞ்சை குபேரபுரீஸ்வரரை வழிபட்டபோது சிவபெருமான் குபேரனுக்கு தரிசனம் தந்து, அவன் இழந்த செல்வங்களையும், வடக்கு திசைக்கு அதிபதி என்ற பதவியையும் வழங்கினார்.

தனக்கு அருள்புரிந்த சிவபெருமானைப் போற்றித் துதித்த குபேரன், சிவபெருமானுக்கு நிர்மாணித்த கோயில்தான் கோபுராஜபுரம் ஆலயம் என்றும், தனக்கு செல்வங்களை அருளிய தால் சிவபெருமானுக்கு சொர்ணபுரீஸ்வரர் என்றும் அம்பிகைக்கு சொர்ணாம்பிகை என்றும் திருப்பெயர் சூட்டி வழிபட்டான் என்று செவிவழிச் செய்தியாக சொல்லப்படுகிறது.

இத்தகு புராணப் பெருமையும், கட்டுமானச் சிறப்பும் மிகுந்த இந்த ஆலயத்தின் இன்றைய நிலை, நம் நெஞ்சைப் பதற வைக்கும்படி சிதிலம் அடைந்து திகழ்கிறது. ஒருகாலத்தில் சீரும் சிறப்புமாகத் திகழ்ந்த இந்த ஆலயத்தில் தற்போது ஒருகால பூஜை மட்டுமே நடைபெறுகிறது.தனது சிரமங்களைப் பொருட்படுத்தாமல் கோயிலுக்கு நித்திய பூஜைகளைத் தவறாமல் செய்து வரும் அன்பர் பாலசுப்ரமணியனிடம் பேசினோம்.

ஆலயம் தேடுவோம் - சூரியன் வழிபடும் சொர்ணபுரீஸ்வரர்!

‘‘இந்தக் கோயிலை குபேரன் நிர்மாணித்து வழிபட்டதாக காலம்காலமாக ஒரு நம்பிக்கை நிலவி வருகிறது. ஒருகாலத்தில் மிகுந்த பிரசித்திப் பெற்று விளங்கிய இந்த ஆலயத்துக்கு, ராஜ ராஜ சோழனின் சகோதரியான குந்தவை பிராட்டி பல திருப் பணிகளைச் செய்து வழிபட்டதாகவும் சொல்லப்படுகிறது.கோயிலின் கட்டட அமைப்பைப் பார்க்கும்போது பிற்காலச் சோழர்களின் காலத்தில்தான் இந்தக் கோயில் திருப்பணிகள் செய்து புதுப்பிக்கப்பட்டு இருக்கவேண்டும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

ஒருகாலத்தில் எண்ணற்ற பக்தர்கள் வந்து வழிபட்டு அருள்பெற்ற இந்தக் கோயில், கடந்த பல வருடங்களாகவே சரியான பராமரிப்பு இல்லாமல் இருக்கிறது. இந்து சமய அறநிலையத் துறையின் ஒருகால பூஜை திட்டத்தின்கீழ் பூஜை நடைபெறுகிறது. அரசுத் துறையில் பணிபுரிந்த நான் ஓய்வுக்குப் பிறகு கோயில் கைங்கர்யத்தில் ஈடுபட்டிருக்கிறேன். கோயிலுக்கு திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் செய்யவேண்டும் என்றுதான் நாங்கள் விரும்புகிறோம். இப்போது ஒருகால பூஜையைத் தவிர உபயதாரர்களின் உதவியுடன் பிரதோஷம், பௌர்ணமி போன்ற நாள்களில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து வருகிறோம்’’ என்றவரிடம்,

‘‘இந்தக் கோயிலில் விசேஷமான பரிகார பூஜை என்று எதுவும் இருக்கிறதா?’’ என்று கேட்டோம்.

‘‘வியாபார நஷ்டத்தால் கஷ்டப்படுபவர்கள், பிரதோஷம் மற்றும் அமாவாசை தினங்களில் இந்தக் கோயிலுக்கு வந்து இறைவனுக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபட்டால், சொர்ணபுரீஸ்வரர் அவர்களுடைய கஷ்டங்களைப் போக்கி, வாழ்க்கையில் சகல ஐஸ்வர்யங்களையும் அருள்வார் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அவர்களுடைய நம்பிக்கைக்கு ஏற்ப பலன் கிடைப்பதையும் அனுபவத்தில் காண முடிகிறது’’ என்றவர் தொடர்ந்து,

ஆலயம் தேடுவோம் - சூரியன் வழிபடும் சொர்ணபுரீஸ்வரர்!



‘‘இந்தக் கோயிலில் வருடம்தோறும் மார்ச் மாதம் 10-ம் தேதியில் இருந்து 30-ம் தேதி வரை மற்றும் செப்டம்பர் மாதம் 10-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை மாலை நேரத்து சூரியனின் கிரணங்கள் இறைவனை தன் ஒளிக்கிரணங்களால் வழிபடுவது தனிச் சிறப்பு. சூரியன் வழிபடும் ஆலயங்கள் பல தமிழகத்தில் இருந்தாலும், வருடத்தில் சுமார் 40 தினங்கள் சூரியன் இறைவனை வழிபடுவது இந்தக் கோயிலாகத்தான் இருக்கும்’’ என்று சிலிர்ப்புடன் தெரிவித்தார்.

தொடர்ந்து, ‘‘ஐயனின் திருக்கோயிலைப் புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்யவேண்டும் என்பதுதான் ஊர் மக்களின் விருப்பமாக இருக்கிறது. ஆனால், அதற்கான பொருள் வசதி எங்களிடம் இல்லை. பொன்னும் பொருளும் அருளும் ஐயன் திருக்கோயில் புதுப்பொலிவு பெற இறைவன்தான் எங்களுக்கு அருள்புரியவேண்டும்’’ என்றார்.

கோடைக் காலம் மக்களை வாட்டாமல் இருக்கவேண்டும் என்பதற்காக மார்ச் மாதத்திலும், கார் காலம் மக்களுக்கு சேதம் எதுவும் ஏற்படுத்தாமல் இருக்கவேண்டும் என்பதற்காக செப்டம்பர் மாதத்திலும் சூரியன் தன் ஒளிக்கிரணங்களால் இறைவனை வழிபடும் விதமாக சிற்பிகள் அமைத்த இந்த ஆலயத்து இறைவனை, இப்போதும் குறிப்பிட்ட அந்த நாள்களில் சூரியன் வழிபடவே செய்கிறான்.

நாம் நலம் வாழவேண்டி, சூரியன் வழிபடும் இறைவனின் திருக்கோயில் விரைவிலேயே புதுப் பொலிவுடன் திகழ வேண்டாமா? அதற்கு நம்மால் இயன்ற பொருள் உதவியைச் செய்வோம். அதன் பயனாக, ‘அந்தமாய் ஆதியாய் வேதமாய் அருமறையோடு ஐம் பூதமும் தானேயான’ ஐயனின் அளப்பரிய கருணைத் திறம் நமக்கும் நம் சந்ததியர்க்கும் அளவற்ற செல்வங்களை வழங்கும் என்பது உறுதி.

படங்கள்: ம.அரவிந்த்

உங்கள் கவனத்துக்கு

தலம்    :                கோபுராஜபுரம்

இறைவன்    :       ஸ்ரீசொர்ணபுரீஸ்வரர்

இறைவி    :         ஸ்ரீசொர்ணாம்பிகை

வழிபட்டோர்   :  குபேரன், சூரியன்

திருத்தலச் சிறப்பு: மார்ச் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நிகழும் சூரிய பூஜை. குபேரன் வழிபட்ட சிவாலயம்.

பிரார்த்தனைச் சிறப்பு:
வியாபாரத்தில் மிகுந்த நஷ்டம் ஏற்பட்டு கஷ்டப்படுபவர்கள், பிரதோஷம் மற்றும் அமாவாசை தினங்களில் இங்கு வந்து இறைவனுக்கு அபிஷேகம், அர்ச்சனை செய்து வழிபட்டால், கஷ்டங்களும் நஷ்டங்களும் நீங்கும்.

திறந்திருக்கும் நேரம்: காலை 8 முதல் 9 மணி வரை மட்டுமே ஆலயம் திறந்திருக்கும். ஆலயத்துக்கு அருகிலேயே அர்ச்சகர் வீடு உள்ளது. உதவிக்கு அவரை அணுகலாம்.

எப்படிச் செல்வது?:
தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் இருந்து ஆவூர் செல்லும் சாலையில், சுமார் 2 கி.மீ. தூரத்திலுள்ளது. பாபநாசத்தில் இருந்து பேருந்து மற்றும் ஆட்டோ வசதிகள் உண்டு.