திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் 6 மாதங்களுக்கு பிறகு தங்கதேர் மீண்டும் ஓடத் துவங்கியது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி ஜெயந்திநாதரை தரிசனம் செய்தனர்.
அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த டிசம்பர் 14ம் தேதி கிரி பிரகாரத்தின் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதில் மோர் விற்றுக் கொண்டிந்த ஒரு பெண் பலியானார். பிரகாரத்தில் நடந்து சென்ற இரண்டு பக்தர்கள் காயமடைந்தனர். இதனால் கிரிப்பிரகாரத்தில் பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அத்துடன், தங்கத்தேர் உலாவும் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து கிரி பிரகாரத்தை அறநிலையத்துறை பொறியாளர்கள் குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது பல இடங்கள் பலமிழந்து விட்டதாக அறிக்கை சமர்பித்தனர். இதனால் கோயில் கிரி பிரகார மண்டபம் பாதுகாப்போடு இடித்து அகற்றப்பட்டது.
கிரி பிரகார மண்டபம் முழுமையாக அகற்றப்பட்ட பிறகும், தங்க தேர் ஓடவில்லை. இது பக்தர்களிடையே வேதனையை ஏற்படுத்தியது. இதற்கிடையே வைகாசி வசந்த திருவிழா நேற்று (19.05.18) துவங்கியது. இத்திருவிழாவில், வழக்கமாக வசந்த மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதர் அபிஷேகம் அலங்காரம் தீபாராதனைகுப் பிறகு, வசந்த மண்டபத்திலிருந்து தங்கதேரில் சுவாமி எழுந்தருளி கிரி பிரகாரம் வலம் வருதல் நடைபெறும். ஆனால், தங்க தேர் ஓடாமல் இருப்பது குறித்து பக்தர்கள், இணை ஆணையரின் பாரதியின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
இதனையடுத்து வசந்த திருவிழாவின் இரண்டாவது நாளான (20.05.18) இன்றிலிருந்து தங்க தேர் ஓடும் என இணை ஆணையர் பாரதி அறிவித்தார். இந்நிலையில் பகலில் உச்சிகால தீபாராதனை ஆனதும் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானையோடு வசந்த மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடந்தது. பின்னர் வசந்த மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையோடு 11 முறை வலம் வந்தார்.
அதன்பின்னர் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தங்கதேரில் இரவு 7 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி தெய்வானையோடு எழுந்தருளினார். ”கந்தனுக்கு அரோகரா.. முருகனுக்கு அரோகரா..” என பக்தர்களின் கோஷத்துடன் தங்க தேர் இழுக்கப்பட்டது. 6 மாதத்திற்கு பிறகு தங்க தேர் ஓடியது பக்தர்களிடையே மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தேரினைக் காண வழக்கத்தை விட கூடுதலாக பக்தர்கள் கோயில் வாசல் முன்பு கூடி நின்று சுவாமி ஜெயந்திநாதரை தரிசனம் செய்தனர். இனி, வழக்கம் போல், தினமும் மாலை 6 மணிக்கு தங்கத்தேர் ஓடும் என திருக்கோயில் இணை ஆணையர் பாரதி தெரிவித்துள்ளார்.