மற்ற எபிசோடுகள்
Published:Updated:

கேள்வி-பதில்: ஸ்வாமி பெயருக்கு அர்ச்சனை செய்யலாமா?

கேள்வி-பதில்: ஸ்வாமி பெயருக்கு அர்ச்சனை செய்யலாமா?
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி-பதில்: ஸ்வாமி பெயருக்கு அர்ச்சனை செய்யலாமா?

கேள்வி-பதில்: ஸ்வாமி பெயருக்கு அர்ச்சனை செய்யலாமா?

கேள்வி-பதில்: ஸ்வாமி பெயருக்கு அர்ச்சனை செய்யலாமா?

?கோயில்களில் பக்தர்கள் சிலர் ஸ்வாமி பெயருக்கு அர்ச்சனை செய்யச் சொல்வதைக் கண்டேன். இது சரியா?

- கோ.லட்சுமணன், திருநெல்வேலி-2

பகவான் பெயரைச் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கு ஏதேனும் தேவை என்கிற கோரிக்கை இருந்தால் மட்டுமே, அர்ச்சனை வரும். எனவே, உங்கள் பெயரைச் சொல்லித்தான் செய்ய வேண்டும்.

நீங்கள் ஏதோ காரணத்துக்காக உங்கள் பெயரைச் சொல்லாவிட்டால்கூட, அந்த அர்ச்சகர், ‘இதோ, இப்போது வந்தாரே இவர் நன்றாக இருக்க வேண்டும்’ என்று சொல்லி அர்ச்சிக்கலாமே... ‘ஊரில் இருக்கும் அத்தனை பேரும் நல்லபடியாக இருப்பதற்காகத்தான் நான் தினப்படி அர்ச்சனை செய்து வருகிறேன். உங்களுக்கு விசேஷமாக ஏதோ தேவைப்படுகிறது. அதைச் சொல்லுங்கள். அதைப் பிரார்த்தனையில் சேர்த்துக்கொள்கிறேன்’ என்றுதான் அந்த அர்ச்சகர் சொல்ல வேண்டும். ‘எனக்கு எந்தக் கோரிக்கையும் இல்லை’ என்ற எண்ணத்தோடு அர்ச்சனை செய்வது அலட்சியம். சங்கல்பம் இல்லாமல் எந்தக் காரியத்தையும் செய்யக் கூடாது. ‘லோகம் எல்லாம் நல்லா இருக்கணும்’ என்று சொல்லியாவது அர்ச்சனை செய்யலாம்!


?விநாயகருக்கு சூறைத்தேங்காய் உடைப்பது ஏன்? சாதாரணமாக தேங்காய் நைவேத்தியம் செய்வதற்கும் சூறைத்தேங்காய் உடைப்பதற்குமான பலன்கள் மாறுபடுமா?

- சி.வ.ராஜேஸ்வரி, மானாமதுரை


நிவேதனம் என்ற சொல்லுக்கே ‘ஆண்டவன் முன்னால் அதை பக்தியோடு அவருக்காகக் கொடுப்பது’ என்று அர்த்தம். கடவுளுக்குப் பார்வையிலேயே திருப்தி வரும். த்ருஷ்ட்வா த்ருப்தி. சாப்பிட்டால்தான் திருப்தி என்பதில்லை. அதனால் அவர் முன்பாக வைத்தால் போதும்.

‘சிதறு காய்’ என்று நாம் எறிவது நிவேதனம் என்கிற நோக்கில் இல்லை. அதாவது, ‘உன் முன்னிலையில் பல பேருக்காக இந்தப் பொருளை அளிக்கிறேன்’ என்று அர்த்தம். ‘நீ பார்த்துக் கொண்டிருக்கிறாய். உன் பார்வை பட்ட பொருளை பலருக்கு அளிக்கிறேன்’ என்பதுதான் தாத்பர்யம். ‘சிதறு தேங்காய் உடைவதைப் போல என் அகங்காரம் எல்லாம் சிதறுகிறது’ என்பதெல்லாம் நாமாக உருவாக்கிக்கொண்ட விளக்கங்கள்தான்.

தேங்காயை உடைத்தால் ரெண்டே ரெண்டு பேருக்குத்தான் கிடைக்கும். அதே நேரம் சிதறுகாயை எல்லோரும் எடுத்துக்கொள்ளலாம். உடைத்த தேங்காயைக்கூட நாமாக அடுத்தவருக்குக் கொடுத்தால்தான் உண்டு. சிதறுகாய் உடைக்கும் போது, ‘இது எனக்கு’ என்று எடுத்துக் கொள்பவர் உரிமையோடு எடுப்பார். கேட்காமலேயே எல்லோருக்கும் பகவானின் பிரசாதத்தைக் கொடுப்பதற்கான தனி வழி சிதறுகாய். இது உசத்தியானது.

?மகான்கள் சிலர் கபால மோட்சம் அடைந் தார்கள் என்று பெரியவர்கள் சொல்லிக் கேள்விப் பட்டிருக்கிறேன். அதென்ன கபால மோட்சம்?


- திருமலை.ராமச்சந்திரன், நாகர்கோவில்

நம்  உடம்பில் ஒன்பது ஓட்டைகள் இருக் கின்றன. சாதாரண மனிதனுக்கு மரணம் வரும் போது, இந்த ஒன்பது ஓட்டைகளின் வழியாக உயிர் போகும். நாபிக்குக் கீழே இரு ஓட்டைகள்; மேலே ஏழு ஓட்டைகள்.
கண்ணைத் திறந்துகொண்டு இறந்திருந்தால் கண் வழியாக உயிர் போயிருக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம். சிலர், வாயைத் திறந்து கொண்டு இறந்திருப்பார்கள்; அவருக்கு வாய் வழியாக உயிர் போயிருக்கிறது. சிலர் சாகும் தறுவாயில் சிறுநீர் கழித்திருப்பார்கள். அவருக்கு அந்த வழியாக உயிர் போயிருக்கிறது... இந்த வழியாகவெல்லாம் உயிர் போனால் மோட்சம் இல்லை. மறுபிறவி உண்டு  என்று  ஓர் அடையாளம்.

எப்படி இருந்தால் மோட்சம் கிடைத்ததாகத் தெரிந்துகொள்ளலாம்? கண்ணுக்குப் புலப் படாமல் நம் தலையில் ஓர் ஓட்டை உண்டு. சின்னக் குழந்தைகளின் தலையைத் தொட்டுப் பார்த்தால், ஓர் இடத்தில் மண்டையோட்டு எலும்பு இல்லாமல் மென்மையாகத் தெரியும். அந்த ஓட்டையைத் தலையின் மேல்தோல் மூடியிருக்கும். உள்ளே மூளை துடிப்பது புலப்படும். யோகாப்பியாசம் செய்து புலன்களை அடக்கக் கற்றவன், மற்ற ஓட்டைகளின் வழியாகப் பிராணன் போகாமல் அடக்கி வைக்கும்போது, உயிரானது அதிக ஆவேசத்தோடு தலையில் இருக்கும் துவாரத்தைப் பிளந்துகொண்டு போகும். அப்படி கபாலத்தைப் பிளந்து கொண்டு போகும்போது அதற்கு கபால மோட்சம் என்று பெயர். பெரிய பெரிய துறவிகளுக்கு எல்லாம் இப்படித்தான் உயிர் போகும் என்பார்கள்.

கேள்வி-பதில்: ஸ்வாமி பெயருக்கு அர்ச்சனை செய்யலாமா?

?கயா, காசிக்குச் சென்று சிராத்தம், தர்ப்பணம் செய்து திரும்பிய பின், அமாவாசை மற்றும் வருஷாப்திய சிராத்தங்கள் செய்வது கட்டாயம் இல்லை என்கிறார்களே சிலர்... அது சரியா?

- அ.ம.கணேசன், காரைக்குடி


ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறீர்கள். சம்பளம் கொடுத்தார்கள். இன்க்ரிமென்ட் கொடுத்தார்கள். வருடத்தில் ஒரு தடவை போனஸ் கொடுத்தார்கள். அடுத்த மாதம் உங்களைக் கூப்பிட்டு ‘பத்து வருஷமாக உங்களுக்கு போனஸ் கொடுத்தாகிவிட்டது. இனிமேல் நீங்கள் சம்பளம் இல்லாமல் வேலை பார்க்க வேண்டும்’ என்று சொன்னால், ஒப்புக்கொள்வீர்களா?

‘போனஸ் வேறு, சம்பளம் வேறு. போனஸ் கொடுக்க வருமானம் இல்லை என்றால், போனஸை வேண்டுமானால் நிறுத்திக் கொள்ளுங்கள். கடன் வாங்கியாவது எனது சம்பளத்தைக் கொடுங்கள்’ என்று கேட்பீர்கள் இல்லையா? ஏனெனில், அது ‘மஸ்ட்’

நாம் வைத்திருக்கும் விதிகளிலேயே அவசியம், அவசியம் இல்லாதது என்று பாகுபாடு வைத்திருக்கிறோமே... அதேபோலத்தான் சிராத்தம் என்பது மஸ்ட்.  நீங்கள் ஆயிரம் தடவை கயைக்குப் போனாலும், வருஷா வருஷம் போனாலும் உங்கள் வீட்டுக்கு வந்து சிராத்தம் செய்ய வேண்டியது அவசியம். தர்ப்பணம் பண்ண வேண்டியது அவசியம். கயையில் செய்தது விசேஷம். இங்கே செய்ய வேண்டியது கடமை. கடமையையும் கயையையும் முடிச்சுப் போடாதீர்கள். ஒருவேளை ஒருவரால் கயைக்குப் போக முடியாமலேகூடப் போகலாம். அவர் வருடா வருடம் திதி செய்து வருவது அவசியம்.

?தேவாரம், திருவாசகம் முதலான தெய்வப் பாசுரங்களை கோயில் சந்நிதானங்களில் அல்லது தெய்வங்களின் திருமுன் வைத்துதான்  பாட வேண்டுமா?

- கே.புவனேஸ்வரி, ராமேஸ்வரம்

கோயிலில் தெய்வத்தின் முன்னால் சொல்வது, கோயில் அல்லாத வேறு இடங்களில் சொல்வது என்கிற வேறுபாடு ஏன் வந்தது தெரியுமா? தெய்வத்தை நம் மனத்தில் இருத்தி மனத்திலேயே வழிபடும் பக்குவம் நமக்கு இன்னும் வராத தால்தான்!

பரீட்சைக்குப் படிக்கிறான். புத்தகத்தில் இருந்ததெல்லாம் மனத்துக்குள் வந்துவிட்டது. புத்தகத்தைத் தூக்கி எறிந்து விடுகிறான். அதற்காகப் புத்தகமே வேண்டாம் என்று சொல்ல முடியுமா? உருவம் இல்லாத இறைவனை மனத்திலேயே வழிபடும் தன்மை உங்களுக்கு வந்துவிட்டதா என்று சோதித்துப் பார்த்துக்கொள்ளுங்கள். அப்படி வந்துவிட்டது உறுதியானால், கடவுள் படம் இல்லாமல் சொல்லலாம்.

அதற்கு முந்தைய படியில் இருப்பவரானால், தெய்வச் சந்நிதிகளிலும் - கடவுளின் படத்தின் முன்னால் வைத்தும் சொல்லுங்கள்!

?எங்கள் குடும்பத்தின் சார்பில் அன்னதானம் செய்ய நினைத்துள்ளோம். எந்த நாளில் அன்னதானம் செய்யலாம்? தானம் செய்வதற்கு உகந்த நாட்கள் இன்னின்ன என்ற தகவல் உண்டா?

- ஆர்.வெங்கடேசன், செங்கல்பட்டு

 நிறைய கால அவகாசம் இருந்து, ஆட்கள் வரவும் நாளாகும், இப்போது அவசரமும் இல்லை என்ற நிலையில் நல்ல நாள் பார்க்கலாம். இப்படிச் சொல்வதால், ‘எப்போது தானம் செய்தாலும் நல்ல நேரம் பார்ப்பேன். என்ன அவசியமானாலும் வேறு நேரத்தில் செய்யமாட்டேன்!’ என்று பிடிவாதம் பிடிக்கக் கூடாது. எப்போது தோன்றுகிறதோ நாள், நட்சத்திரம் பார்க்காமல் தானத்தைக் கொடுத்துவிட வேண்டும். அப்புறம் கொடுக்கலாம் என்று நினைத்தால், கொடுக்க முடியாமல்கூட போய்விடலாம்.

‘பத்து நாளைக்குள் ஆபீசுக்கு வரவும்’ என்று சொன்னால், நல்ல நாள் பார்த்துப் போகலாம். ‘நாளைக்கு வரவும்’ என்றால் நாளைக்குப் போயே ஆகவேண்டும். அங்கே நல்ல நாள் - பொல்லாத நாள் எதுவும் செய்யாது.

ரிக் வேதத்தில் ஒரு சம்பவம். தானம் பண்ணுகிறேன் என்று ஒருவன் புறப்பட்டான். கையில் கொஞ்சம் தங்கம் வைத்திருந்தான். ‘உன்னிடம் தானம் வாங்கிக்கொள்ளப் போகிறவர் ரொம்ப உயர்ந்த ஆசாமி. அவருக்கு இப்போது தேவையும் இருக்கிறது. தானத்துக்கு மிகவும் பாத்திரமானவர்’ என்றார்.

இதைக் கேட்டதும், ‘அப்படியா? அப்படியானால், நாளைக்கு எனக்கு இன்னும் அதிகமான தங்கம் வரும். சேர்த்துத் தந்து புண்ணியத்தைக் கூட்டிக்கொள்கிறேன்.’

‘நாளைக்கு நிச்சயம் தங்கம் வருமா?’

‘நிச்சயம் வரும்!’

கேள்வி-பதில்: ஸ்வாமி பெயருக்கு அர்ச்சனை செய்யலாமா?‘நாளைக்கு இவர் இருப்பாரா?’

‘இவரை என்னுடனேயே வைத்துக் கொள்வேன்.’

‘நாளைக்குக் கொடுக்க வேண்டாம் என்று தோன்றிவிட்டால்..’

‘தோன்றாது. என் மனம் மாறாது!’

‘நாளைக்கு நீ செத்துப்போய்விட்டால் என்ன செய்வாய்?’

பதிலில்லை. அந்த நிமிடமே தானத்தைக் கொடுத்தான். ‘கொடுக்க வேண்டும்; அதனால் திருப்தி ஏற்படும்’ என்று தோன்றினால், தோன்றியதும் கொடுங்கள்.

மரண தேவதை, இடக் கையால் உன் தலை முடியைப் பற்றிவிட்டாள். வலக் கையில் உள்ள கத்தியை ஓங்கிவிட்டாள். அப்போது கொடுப்பது போல் நினைத்துக்கொண்டு அந்தக் கணமே தானம் கொடுப்பதுதான் தானம். எனவே, பஞ்சாங்கத்தைப் புரட்டி நேரத்தை வீணாக்கா தீர்கள்!

?நூற்றியெட்டு சிவதாண்டவங்கள் உண்டு என்று படித்திருக்கிறேன். அந்தத் தாண்டவங்களை, அவற்றின் தத்துவங்களை விளக்கும் நூல்கள் ஏதேனும் உண்டா?


- எஸ்.குமரகுருபரன், சென்னை-49

 ரிக், யஜுர், சாம வேதங்களில் இருந்து எடுக்கப் பட்டது நாட்டிய சாஸ்திரத்தின் சாராம்சம். பரத மகரிஷியால் செழுமைப்படுத்தப்பட்டது இது. பரதனுக்கும் முன்பாக இதை நடைமுறைப் படுத்தியவர்கள் இரண்டு பேர். பரமேஸ்வரன், பார்வதி. நடனத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்று, மிக மென்மையானது. அதற்கு லாஸ்யம் என்று பெயர். உக்கிரமான நடனத்துக்குத் தாண்டவம் என்று பெயர். தாண்டவம் ஆடியவர் பரமேஸ்வரன். லாஸ்யம் ஆடியவள் பார்வதி. இந்த நடனங்களைப் பற்றிய விவரங்கள், தச ரூபகம் என்ற நூலில் கிடைக்கும். பரதனின் நாட்டிய சாஸ்திரம் என்கிற நூல் சம்ஸ்கிருதத்தில் இருக்கிறது. அதில் தாண்டவத்தின் வகைகள் விவரிக்கப்பட்டுள்ளன. அந்த நூலின் ஆங்கில, தமிழ் மொழிபெயர்ப்புகளும் இருக்கின்றன. நடனம் ஆடிக்கொண்டு இருப்பவர்களிடமும் இதைப் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

- பதில்கள் தொடரும்...