திருத்தலங்கள்
தொடர்கள்
திருக்கதைகள்
Published:Updated:

கயிலை... காலடி... காஞ்சி! - 16

கயிலை... காலடி... காஞ்சி! - 16
பிரீமியம் ஸ்டோரி
News
கயிலை... காலடி... காஞ்சி! - 16

எல்லாம் பெரியவா அனுக்கிரஹம்!நிவேதிதா

யோ: பீடாயந்தே விபுதமுகுடீநாம் படலிகா

யயோ: ஸௌதாயந்தே ஸ்வயமுதபாஜோ பணிதய:

யயோ: தாஸாயந்தே ஸரஸிஜ பவாத்யா: சரணயோ:

தயோர் மே காமாக்ஷ்யா தினமனு வரீவர்த்து ஹ்ருதயம்!


தேவர்களின் கிரீட வரிசையை பீடமாகக் கொண்டதும், தானே தோன்றிய வேதங்களை உலா வரும் உப்பரிகையாகக் கொண்டதும், பிரம்மா உள்ளிட்ட தேவர்களால் வணங்கப்படுவதுமாகிய நின் திருவடிகளில், தேவி காமாக்ஷி! என்னுடைய மனமானது பதிந்திருக்கும்படி அருள்புரிவாய்!

மூகபஞ்சசதீ - பாதாரவிந்த சதகம்

கயிலை... காலடி... காஞ்சி! - 16

`காவியம் கண்ட நாயகியர்' புத்தகத்தை எழுதிய முனைவர் மா.கி.இரமணன் தன்னுடைய அனுபவத்தைத் தொடர்கிறார்.

மஹா பெரியவா சுட்டிக்காட்டிய பகுதியில், ‘செயற்கரிய செயல் செய்த சாவித்திரிக்கு, செவிவழிச் செய்தியே இன்றுவரை சரித்திரம் சொல்கிறது. செவியிலும் நெஞ்சிலும் இருப்பதாலே, அவள் நினைவு காலத்தை வென்றுவிடாது. காலத்தின் வெள்ளத்தில் கரைந்தோடாமல் இருப்பதற்கே சொல்லெனும் அணை கட்டி, அவள் சரிதத்தையும் இலக்கியமாக்கவேண்டும். கணவனை மீட்ட காரிகைக்கு கவிஞர்கள் காவியக் கோயில் எழுப்பவேண்டும்’ என்று எழுதி இருந்தேன்.

‘‘என்னை அருகில் அழைத்து. ‘இப்படியெல்லாம் எழுதணும்னு நோக்கு எப்படி தோணித்து?’ என்று கேட்டார்.

‘‘எனக்குத் தெரியவில்லை பெரியவா, என்னவோ எழுதணும்னு தோணிச்சு. எழுதினேன். பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒரே ஒரு பெண் ஆழ்வாரான ஆண்டாளின் சரிதம் இதுவரை தமிழில் வரவில்லை. ஆனால், கிருஷ்ணதேவராயர், ‘ஆமுக்த மால்யதா’ என்று அற்புதமாக எழுதி இருக்கிறார்’’ என்று ஒரு தகவலையும் சேர்த்துச் சொன்னேன். பிறகுதான், ‘அடடா, அவருக்குத் தெரியாத விஷயமா? அவசரப்பட்டு அதிகபிரசங்கித்தனமாகப் பேசிவிட்டோமே’ என்று என்னை நானே நொந்துகொண்டேன்.

கயிலை... காலடி... காஞ்சி! - 16

பிறகு மஹா பெரியவா எனக்கு பிரசாதம் கொடுத்து அனுக்கிரஹித்தார். மஹா பெரியவாளை தரிசிக்கமுடியுமோ முடியாதோ என்று தவித்துக்கொண்டிருந்த எனக்கு, அருகில் சென்று அவரை தரிசிக்கவும், சில வார்த்தைகள் பேசவும் சந்தர்ப்பம் கிடைத்ததுடன், அவருடைய அனுக்கிரஹமும் கிடைத்த மகிழ்ச்சியில் என்னுடைய கவலைகள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்தே போனது.

சென்னைக்குத் திரும்பிய நான், புத்தகப் பிரதியை எடுத்துக்கொண்டு, சென்னை அண்ணாசாலையில் இருந்த பிரபலமான புத்தக விற்பனை மையத்துக்குச் சென்றேன். அங்கு புத்தகங்களைத் தேர்வு செய்து வாங்கும் முக்கிய பொறுப்பில் இருந்தவர், என்னுடைய புத்தகத்தைப் பார்த்துவிட்டு, ‘‘இந்தக் காலத்தில் இலக்கியப் புத்தகங்கள் விலைபோகாது’’ என்று சொல்லி, வாங்க மறுத்துவிட்டார்.

‘மஹா பெரியவா அனுக்கிரஹம் செய்த புத்தகத்துக்கா இந்த நிலை’ என்று நான் சிறிதும் கலங்கவில்லை. என்னுடைய நம்பிக்கை பொய்க்கவில்லை. நான் வெளியில் வருவதற்கும், எனக்குத் தெரிந்த நண்பர் எதிரில் வருவதற்கும் சரியாக இருந்தது. அவரும் அங்கு முக்கிய பொறுப்பில் இருந்தவர்தான். 

கயிலை... காலடி... காஞ்சி! - 16

‘என்ன விஷயம்?’ என்று கேட்டார்.

விவரம் சொன்னேன்.

 இலக்கியப் புத்தகம் விலைபோகாது என்று மறுத்துச் சொன்னவரிடம் என்னை அழைத்துச் சென்றவர், ‘‘இந்தப் புத்தகம் மஹா பெரியவா அனுக்கிரஹம் பெற்ற புத்தகம். இதை தாராளமாக நாம் வாங்கலாம்’’ என்று சொன்னார்.

அவரும் மறுப்பு தெரிவிக்காமல் உடனடியாக தேவையான புத்தகங் களுக்கு ஆர்டர் செய்தார். பின்னர் பல புத்தக விற்பனை மையங்களும் அந்தப் புத்தகத்தை வாங்கின. புத்தகமும் நன்றாக விற்பனையானது. இன்று அந்தப் புத்தகம் இரண்டாவது பதிப்பும் வந்து விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. எல்லாம் பெரியவா அனுக்கிரஹம்தான்’’ என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

தரமான இலக்கியப் புத்தகம் விலைபோகாது என்று இருந்த காலத்தில், முனைவர் மா.கி.இரமணன் எழுதிய காவியம் கண்ட நாயகியர் புத்தகம் விற்பதற்கு அனுக்கிரஹம் செய்த மஹா பெரியவா, இன்றைக்கும் எண்ணற்ற பல அதிசயங்களை நிகழ்த்தி வருகிறார்.

சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த ரேவதி என்பவர் ஸ்ரீராகவேந்திரரின் பக்தை. அடிக்கடி பத்மா மாமி வீட்டுக்குச் சென்று தன்னுடைய கஷ்டங்களைச் சொல்லி ஆறுதல் அடைவார்.

அவர் தன்னுடைய அனுபவத்தை நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

‘‘என் பெண் கார்த்திகாவுக்கு ஆறு வருஷமா கல்யாணம் தடைப்பட்டு வந்தது. கல்யாணம் தடைப்படறது ஒருபுறம் இருக்க, கையில பணமும் இல்லை. கல்யாணம் நிச்சயம் ஆனாக்கூட செலவுக்கு என்ன பண்றதுன்னு தெரியலை. பணம் இல்லைங்கற காரணத்துக்காக பெண்ணோட கல்யாணத்தைத் தள்ளிப்போட முடியாதே. ஒரே குழப்பத்துல இருந்த நான், ஒருநாள் பத்மா மாமியைப் பார்க்கப் போனப்ப, அவர்தான் என் பெண்ணை ஒன்பது வாரம் தேனம்பாக்கத்துக்குப் போய் வேண்டிக்கிட்டு வரச்சொன்னாங்க.

என்னோட பெண்ணும் தன் அண்ணனைக் கூட்டிக்கிட்டு தேனம்பாக்கம் கோயிலுக்குப் போய், பெரியவாக்கு மாதுளம்பழம் சமர்ப்பணம் பண்ணிட்டு, சந்திரசேகர கணபதிக்கு தேங்காயும், துர்கைக்கு மஞ்சள் மாலை சாத்தி, அர்ச்சனையும் செய்துட்டு ஒன்பது தீபத்தையும் ஏத்திட்டு வந்தா. எட்டு வாரம் அண்ணனோட போய் வேண்டிக்கிட்டு வந்தா.

கயிலை... காலடி... காஞ்சி! - 16

ஒன்பதாவது வாரம் எனக்கும் கூட போகவேண்டும்னு தோணிச்சு. தேனம்பாக்கத் துக்குப் போய், பெரியவா சந்நிதில மாதுளம்பழம்  வச்சிட்டு, என்னோட பெண்ணுக்கு நல்லபடியா கல்யாணம் நடக்கணும்னு வேண்டிக்கிட்டேன். பிறகு சந்திரசேகர கணபதி சந்நிதில தேங்காயை வச்சிட்டு, துர்கை சந்நிதிக்கு வந்து மஞ்சள் மாலை சாத்தி, அர்ச்சனை செய்துட்டு தீபம் ஏத்தினா. சரியா 9-வது தீபம் ஏத்தப் போறப்போ, எனக்கு ஒரு போன் வந்தது.

‘நாங்கள் உங்க பொண்ணோட போட்டோவை மேட்ரிமோனி யல்ல பார்த்தோம். எங்களுக்குப் பொண்ணைப் பிடிச்சிருக்கு. உங்களுக்கு சம்மதம்னா வடபழநி கோயில்ல வச்சி பொண்ணைப் பார்த்துட்டு மேற்கொண்டு பேசலாம்’ என்றனர்.

அந்தநேரத்துல நான் பட்ட சந்தோஷத்துக்கு அளவே இல்லை. சரியா 9-வது வாரம் 9-வது தீபம் ஏத்தப்போற நேரத்துல அந்தப் போன் வந்தது நிச்சயமா மஹா பெரியவா அனுக்கிரஹம்தான் என்று உறுதியா நம்பினேன்.

அதேபோல் வடபழநி கோயில்ல பொண்ணைப் பார்த்துட்டு உடனே சம்மதிச்சிட்டாங்க. நிச்சயதார்த்தத்துக்கும் நாள் குறிச்சாச்சி. கையில சுத்தமா பணம் இல்லை. அப்பத்தான் அந்த அதிசயம் நடந்தது’’ என்றார். அப்படி நடந்த அதிசயம்தான் என்ன..?

- திருவருள் தொடரும்