திருத்தலங்கள்
தொடர்கள்
திருக்கதைகள்
Published:Updated:

சித்திர ராமாயணம்

சித்திர ராமாயணம்
பிரீமியம் ஸ்டோரி
News
சித்திர ராமாயணம்

பி.ஸ்ரீ., ஓவியம்: சித்ரலேகா

ஒளியா, களங்கமா?

பெற்ற தாயின் பக்கத்தில் இருக்கவும் விரும்பாமல் பரதன் கோசலை இருக்குமிடம் போய்க் காலைப் பிடித்துக்கொண்டு கதறினான். ‘அப்பா எவ்வுலகத்தில் இருக்கிறார்? அண்ணா எங்கே போய்விட்டார்?’ என்றெல்லாம் குழந்தைபோலப் புலம்பிப் புரண்டு, ‘கொடியவள் வயிற்றில் பிறந்த கள்வனாகிய நான் ஒழிந்தால், எல்லாத் துயரமும் ஒழிந்து விடுமே! சூரியன் போல் ஒளி பெற்றிருந்த குலத்துக்குப் பரதன் என்று ஒரு பழி வந்து விட்டதே! அடடா, நாட்டின் கதி எப்படியாகிவிட்டது!’ என்று அலறினான் பரதன்.

சித்திர ராமாயணம்

துன்ப இரவில் இன்பக் கனவு

இந்த அகத் தூய்மை கோசலையின் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. ராமனே காட்டிலிருந்து திரும்பி வந்துவிட்டது போலத் தோன்றியதாம்! அப்படியே தழுவிக்கொண்டாள் மகனை:

தூய வாசகம் சொன்ன தோன்றலை,

தீய கானகம் திருவின் நீங்கி, முன்

போயி னான்வரக் கண்ட பொம்மலாள்,

ஆய காதலால் அழுது புல்லினாள்.


‘தீமையின் சொரூபமான அந்தச் சக்களத்தியின் மனநிலை என்ன! இந்தப் பிள்ளையின் செம்மை என்ன, செயல் என்ன!’ என்ற சிந்தனையில், காடு சென்ற தன் பிள்ளையே திரும்பிவிட்ட உணர்ச்சி மட்டும் இல்லை, அந்த மகனை அப்பொழுதுதான் பெற்றெடுத்தது போன்ற ஓர் ஆனந்தக் கனவும் காண்கிறாள்:

சித்திர ராமாயணம்இந்நிலையில் கோசலை பரதனை எப்படி வாழ்த்துகிறாள் பாருங்கள்:

‘முன்னை நுங்குல முதலு ளோர்கள்தாம்

நின்னை யாவரே நிகர்க்கும் நீர்மையார்?

மன்னர் மன்னவா!’ என்று வாழ்த்தினாள்,

உன்ன உன்னநைந்(து) உருகி விம்முவாள்.


‘உன்னுடைய குலத்து மூதாதையரில் யாரே உனக்கு நிகராவர்?’ என்று புகழ்ந்ததோடு திருப்தி அடையாத கோசலையுள்ளம், ‘மன்னர் மன்னவா!’ என்று வாழ்த்துகிறது பரதனை. (சூரியன் போல் ஒளி பெற்றிருந்த குலம் பரதனால் மேலும் ஒளி பெற்றுவிட்டது என்பது கோசலை கருத்து.) அந்த அதிசயமான குணாதிசயத்தை உள்ளவாறு உணர்ந்துகொண்டதும், ‘அவனே சக்கரவர்த்தி! இந்தக் குண உரிமை போதுமே! வேறு உரிமையும் வேண்டுமோ?’ என்று தோன்றுகிறது கோசலையின் தூய உள்ளத்திலே. ‘நானே பரதன் தலையில் கிரீடத்தைத் தூக்கி வைத்துவிடலாமா?’ என்று ஆலோசித்துவிட்டது போல வாழ்த்துகிறாள்.

ஆக, கோசலையின் ஹிருதயப் பிரதேசத்திலே பரத பட்டாபிஷேகம் நடந்துவிட்டது! ஆனால், பரதனுடைய ஹிருதயம் என்ன பாடுபடுகிறது!

தருமத்தை நோக்கும் தருமம்


தன் பிராணனைக் கொடுத்துத் தருமத்துக்குப் பிராணப் பிரதிஷ்டை செய்து வைத்த சக்கரவர்த்தியின் அந்த உடம்பைத் ‘தருமத்தின் வடிவமே அது’ என்று பார்ப்பது போலப் பரதன் பார்க்கிறான். அப்படி அந்த உடம்பை நோக்கி மண்ணில் விழுந்து அலறிப் பிறகு அருகே சென்று அம்மேனி மீது கண்ணீர் வடிக்கிறான் பரதன்:

எண்ணெய் உண்டபொன்

எழில்தொள் மேனியைக்

கண்ண நீரினால்

கழுவி ஆட்டினான்.


பிறகு சக்கரவர்த்தியின் உடலைத் தங்க விமானத்தில் வைத்து யானை மேல் ஏற்றிக் கொண்டு போய்ச் சரயு ஆற்றங்கரையை அடைந்தார்கள். பரதன் தந்தைக்குச் செய்ய வேண்டிய ஈமக்கடனைச் செய்து தீர்க்க வேண்டும் என்று தாங்க முடியாத துயரத்துடன் வருகிறான். ஆனால், அப்பொழுது வசிஷ்டர் குறுக்கிட்டுத் தடுக்கிறார். ஏன்?

‘அன்னை தீமையால் அரசன் நின்னையும்

துன்னு துன்பத்தால் துறந்து போயினான்

முன்ன ரே!’ யெனா முனிவன் கூறினான்.


‘இவள் தாரம் அல்லள், துறந்தேன்; பரதனும் மகன் அல்லன்!’ என்று தசரதர் முன்னமே சொன்ன வார்த்தையை வசிஷ்டர் ஞாபகப் படுத்தியதும், பரதன் என்ன செய்கிறான்? பாருங்கள்! அவன் ஒன்றுமே செய்யவில்லை; அப்படியே செத்துப் போகிறான் என்றுதான் சொல்ல வேண்டும்.

இறந்து போயினான்! இருந்த(து) ஆண்(டு)அது

மறந்து வேறொரு மைந்த னாம்கொலாம்!


பின்னர், பரதன் தம்பி ஈமக்கடனை முடிப்பதோடு, திரை விழுகிறது; துன்ப நாடகம் ஒருவாறு முடிவு பெறுகின்றது. ஆனால், பரதன் துயரத்துக்கு முடிவோ, விடிவோ சமீபத்தில் ஏற்படப் போகிறதா?

10.8.47 ஆனந்தவிகடன் இதழில் இருந்து...

பிணிகள் தீர்க்கும் துதிப் பாடல்கள்

சித்திர ராமாயணம்

`திக்கற்றவர்க்கு தெய்வமே துணை' என்று சொல்வார்கள் பெரியோர்கள். மனப் பிணிகள் மட்டுமின்றி, உடற் பிணிகளாலும் வாடி வருந் தும் அன்பர்கள், அபிராமியம்மை பதிகத்தில் வரும் ‘மணியே மணியின் ஒளியே...’ எனும் பாடலைப் பாடி அனுதினமும் அம்பிகையை வழிபட்டால், பிணிக்கு மருந் தாகிய உமை அம்மையின் திருவருளால் நோய்கள் நீங்கும்; ஆரோக்கியம் ஸித்திக்கும்.

திருஞானசம்பந்தர் அருளிய கீழ்க்காணும் பதிகமும் நோய்வாதனைகளைத் தீர்க்கும்.

சூழதரு வல்வினையும் உடல் தோன்றிய பல்பிணியும்

பாழ்பட வேண்டிதிரேன் மிக ஏத்துமின் பாய்புனலும்

போழ்இள வெண்மதியும் அனல் பொங்கரவும் புனைந்த

தாழ்சடையான் பனந்தாள் தாடகை யீச்சரமே

இந்த பதிகத்தைப் பாடி சிவனாரை வழிபட்டால், வலிய வினைகளும் நோய்களும் அவற்றால் உண்டாகும் துன்பங்களும் நீங்கும்.

- பிரியா வெங்கட், காரைக்குடி