மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நாரதர் உலா - கூட்டம்... மயக்கம்... பைரவர் கோயில் நெருக்கடி!

நாரதர் உலா - கூட்டம்... மயக்கம்... பைரவர் கோயில் நெருக்கடி!
பிரீமியம் ஸ்டோரி
News
நாரதர் உலா - கூட்டம்... மயக்கம்... பைரவர் கோயில் நெருக்கடி!

நாரதர் உலா - கூட்டம்... மயக்கம்... பைரவர் கோயில் நெருக்கடி!

நாரதர் உலா - கூட்டம்... மயக்கம்... பைரவர் கோயில் நெருக்கடி!

``நாராயணா... நாராயணா...’’ என்றபடியே உள்ளே நுழைந்த நாரதர், எதிரே இருந்த நாற்காலியை இழுத்துப் போட்டு, அலுப்பும் களைப்புமாக அமர்ந்துகொண்டார்.

`திரிலோக சஞ்சாரி’யான நாரதருக்கே ஆயாசமா? ஆனால், அவர் முகத்தைப் பார்த்தால் அப்படித்தான் தெரிந்தது. அத்தனை களைப்பு!

மேஜையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து, மடக் மடக்கென்று குடித்து முடிக்கும் வரை காத்திருந்து, பின்பு கேட்டோம்... ``என்ன நாரதரே, பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை மாற்ற பாங்க்கில் நீண்ட வரிசையில் நெடுநேரம் நின்றுவிட்டு வந்த மாதிரி, அப்படியொரு களைப்பு மண்டிக் கிடக்கிறதே உங்கள் முகத்தில்? என்ன விஷயம்? எங்கே போய்விட்டு வருகிறீர்?’’

பணம், பொருள், பந்தம் முதலான உலகாயதங்களுக்கு அப்பாற்பட்டவர் தேவரிஷி என்பது நமக்குத் தெரியாதா என்ன? இருந்தாலும் நாரதரின் நியூஸ் அப்டேட்டை அறியும் ஆவலில், நமது கேள்வியை வீசினோம்.

‘‘ஏ.டி.எம் மையங்களில் நீண்ட வரிசை, வங்கிகளில் காத்திருக்கும் மக்கள் கூட்டம் எல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். கோயில் உண்டியல்களில் கட்டுக் கட்டாகப் பணம் வந்து விழும் செய்திகளையும் படித்திருப்பீரே..?’’ என்று தமது பங்குக்குக் கேள்வி எழுப்பினார் நாரதர். அவரே தொடர்ந்து...

நாரதர் உலா - கூட்டம்... மயக்கம்... பைரவர் கோயில் நெருக்கடி!
நாரதர் உலா - கூட்டம்... மயக்கம்... பைரவர் கோயில் நெருக்கடி!

‘‘கணக்கிலே வராத பணங்களையெல்லாம், புண்ணியமாவது சேரட்டும் என்கிற நினைப்பில் சில பிரகிருதிகள் கோயில் உண்டியல்களில் கொண்டு வந்து போட்டுவிடுகிறார்கள். அதனால், கோயில் உண்டியல்களில் சேரும் பணத்தையும் டிசம்பர் 30-க்குள் மாற்றியாகவேண்டும் என்று அறிவித்திருக் கிறது மத்திய நிதித்துறை. ஆனால், இதைப் பயன்படுத்திக்கொண்டு செல்வாக்கு  மிகுந்த எவரேனும்  குளிர்காய்ந்துவிடக் கூடாதே என்பதுதான் பக்தர்களின் கவலை. அது ஒரு பக்கம் இருக்கட்டும். எனது களைப்புக்கான காரணமே வேறு!’’ என்று, டாப்பிக்குக்கு வந்தார் நாரதர்.

“நாகை மாவட்டம், மயிலாடுதுறைக்கு அருகில் இருக்கிறது சேத்திரபாலபுரம். அங்கே இருக்கும் கால பைரவர் கோயில் வெகு பிரசித்தம். வளர்பிறை அஷ்டமி நாளில், பைரவருக்குப் பஞ்ச தீபம் ஏற்றி, கோயிலை 11 முறை வலம் வந்து, அர்ச்சனை செய்து வணங்கினால் கடன் பிரச்னை தீரும்; இதே வழிபாட்டை தேய்பிறை அஷ்டமி நாளில் செய்தால், உடல் பிணி தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை...’’

``நல்ல விஷயம்தானே, இதில் என்ன சங்கடம்?’’

``நல்ல விஷயம்தான். ஆனால், இடம் வேண்டுமே? அதுவோ சின்னஞ்சிறிய கோயில். வருகிற பக்தர்களோ ஏராளம். அந்தக் கூட்டத்தில் புகுந்து பைரவரை சேவித்துவிட்டு வருவதற்குள் எனக்கே மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிவிட்டது என்றால், பார்த்துக்கொள்ளுங்கள்!”

நாரதர் உலா - கூட்டம்... மயக்கம்... பைரவர் கோயில் நெருக்கடி!

``நீங்கள் சொல்வதைப் பார்த்தால், ஏதேனும் நடக்கக்கூடாத அசம்பாவிதம் நடந்துவிட்டதோ?’’ 

``இதுவரை பெரிதாக எதுவும் நடக்கவில்லை. அப்படி எதுவும் நடந்துவிடக்கூடாதே என்பது தான் என் கவலை. கடந்த வாரம் கூட்ட நெரிசலில் சிக்கி, இரண்டு பெண்கள் மயங்கி விழுந்திருக்கிறார்கள். அவர்களுக்கு உதவியவர், குத்தாலத்தைச் சேர்ந்த பிரேமா. அவரிடம் பேசினேன்.

`அஷ்டமி நாளில் அர்ச்சனையை முடித்துவிட வேண்டும் என்கிற அவசரத்தில், வருகிற அத்தனை பக்தர்களுக்கும் அர்ச்சனை சீட்டுக் கொடுத்து உள்ளே அனுப்பிவிடுகிறார்கள். தீபம் ஏற்றும் இடத்தில் கூட்டம் அலைமோதத் தொடங்குவதில் ஆரம்பிக்கிறது பிரச்னை. உடைத்த தேங்காய் மூடி அல்லது பூசணிக்காயில் நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நெய் என அவரவர் பிரச்னைக்கு ஏற்ப ஒரு தீபம் ஏற்றவேண்டும். அதை அர்ச்சகரிடம் கேட்டு, தீபம் ஏற்றி முடிப்பதற்குள் பக்தர்கள் பாடு சொல்லி மாளாது. பிறகு, கோயிலை 11 முறை சுற்றிவர வேண்டும். ஆண்கள், பெண்களுக்கு எனத் தனித்தனி வரிசை எல்லாம் இல்லை. மாநகரப் பேருந்தில் அடைக்கப்பட்டு நசுங்கிச் செல்வதுபோல், அத்தனை பேரும் அடிப் பிரதட்சிணம்தான் செய்ய வேண்டும்.

ஒரே நேரத்தில் அனைவருக்கும் அர்ச்சனை செய்யப்படுகிறது. தீபாராதனையைப் பார்க்க முண்டியடிக்கிறது கூட்டம். அது முடிந்ததும், நீட்டிய கரங்களில் எல்லாம் அர்ச்சனை செய்த பைகளைத் திணித்துவிடுகிறார்கள்... மாற்றி மாற்றி! தங்கள் அர்ச்சனைத் தட்டு தங்களுக்குக் கிடைக்காமல் வேறு ஒன்று கிடைக்கிறதே என்று பலருக்கும் ஆதங்கம்; வருத்தம். 

நாரதர் உலா - கூட்டம்... மயக்கம்... பைரவர் கோயில் நெருக்கடி!

வெளியேறும்போதும் நெரிசல். இந்தப் பிரச்னைகள் எல்லாம் தீர வேண்டுமானால், வரிசை அடிப்படையில் கோயிலின் கொள்ள ளவுக்கு ஏற்ப, பக்தர்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் அனுமதிக்க வேண்டும். பிறகு, அடுத்த வரிசையை உள்ளே விடலாம். ஆனால், இதை நடைமுறைப்படுத்த இங்கே ஆள் இல்லை. இதே நிலைமை தொடர்ந்தால், விரைவில் இந்தக் கோயிலில் அசம்பாவிதம் நிகழவும் வாய்ப்பு உண்டு’ என்று புலம்பித் தீர்த்துவிட்டார் பிரேமா’’ என்ற நாரதர்,

“பக்தர்களாவது தங்களுக்குள் ஓர் ஒழுங்கு முறையைக் கையாளலாம். முண்டியடிக்காமல் வரிசையில் செல்லலாம். பிரதட்சிணம் செய்பவர் கள் சுற்று எண்ணிக்கை மறந்து விடாமல் இருக்க, கோயில் சுவரில் கரியால் அல்லது மையால் கோடு போட்டுப் பாழாக்குவதை நானே நேரில் பார்த்தேன். நம் வீட்டுச் சுவரில் நாம் கிறுக்குவோமா? கோயில் என்றால் இறைவனின் வீடல்லவா? அங்கே கிறுக்க, அசுத்தம் செய்ய இவர்களுக்கு எப்படி மனம் வருகிறது என்று எனக்குப் புரியவில்லை'' என்று அங்கலாய்த்தவர், தீர்வாக ஒரு தகவலையும் சொன்னார்.

ஹைதராபாத் அருகில் சில்கூர் பாலாஜி கோயிலில் வலம் வரும் எண்ணிக்கை மறவாமல் இருக்க, கோயில் சார்பாகவே சிறு அட்டை தருகிறார்கள். பக்தர்கள், சுற்று எண்ணிக்கையை அதில் குறித்துக்கொள்கிறார்கள். இதே பாணியை இங்கும் பின்பற்றலாமே?” என்றவரிடம், ``நெரிசல் பிரச்னை பற்றிக் கோயில் தரப்பில் யாரிடமாவது பேசினீரா?’’ என்று கேட்டோம்.

நாரதர் உலா - கூட்டம்... மயக்கம்... பைரவர் கோயில் நெருக்கடி!

``பேசினேன். `இது பரிகார ஸ்தலம். ஒவ்வொரு வரும் ஒவ்வொரு பிரச்னையோடு வருகிறார்கள். அதற்கேற்பத்தான் பரிகார தீபம் ஏற்றி, அர்ச்சனை செய்யவேண்டியிருக்கிறது. இந்தக் கோயிலில் திருவடி, மெய்க்காவல் பணியாளர்கள் யாரும் இல்லை. தேங்காய் உடைக்கக்கூட என் சொந்தப் பொறுப்பில்தான் ஆறு பேரை வேலைக்கு வைத்திருக்கிறேன். தீபாராதனைத் தட்டில் விழுகிற பணத்தில்தான் அவர்களுக்குச் சம்பளம் தருகிறேன். தட்டில் விழுவதென்னவோ ஐந்து ரூபாய், பத்து ரூபாய்தான். கோயில் நிர்வாகத்திலிருந்து மூன்று பேர் வருவார்கள். அர்ச்சனை சீட்டு தந்து, அதற்கான பணத்தை வசூல் செய்துவிட்டுப் போவார்கள். அதோடு சரி. கட்டுக்கடங்காமல் பக்தர்கள் கூட்டம் வந்தால், நான் ஒருத்தன் என்ன செய்ய முடியும்?’ என்று புலம்புகிறார் அர்ச்சகர். அவரைப் பார்த் தாலும் பரிதாபமாக இருக்கிறது.

இந்து சமய அறநிலையத் துறையைச் சேர்ந்த, இந்தக் கோயில் செயல் அலுவலர் பத்ராசலத் திடமும் பேசினேன். `நான் பொறுப்பேற்ற பின், தீபம் ஏற்றுகிறவர்களின் வசதிக்காக நான்கரை லட்ச ரூபாய் செலவில் தனியாக ஒரு கூரை போட்டுக் கொடுத்திருக்கிறோம். ஆனால், அர்ச்சகரோ வழக்கமான இடத்தில்தான் தீபம் ஏற்ற வேண்டும் என்று பக்தர்களை வலியுறுத்து கிறார். கூட்டத்தை முறைப்படுத்த சேவா சங்கத் தைச் சேர்ந்த சிலரைப் பயன்படுத்துகிறோம். கூட்ட நெரிசலை சரிப்படுத்த வேண்டுமா னால், அதற்கு அர்ச்சகரின் ஒத்துழைப்பும் கட்டாயம் தேவை. விரைவில் அர்ச்சகரிடம் கலந்து பேசி, கூட்டத்தை முறைப்படுத்தத் தேவையான நடவடிக்கை எடுப்போம்’ என்றார் அவர்.” 

“எப்படியோ... கால பைரவரைச் சிரமம் இன்றி பக்தர்கள் வழிபட முடிந்தால் நல்லதுதானே!’’ என்று நாம் சொல்லிக்கொண்டு இருந்தபோதே, நாரதரின் மொபைலில் வாட்ஸ் அப் வந்ததன் அடையாளமாக, தண்ணீரில் கல்லை எறிந்தாற்போன்று ‘களுங்’ என்று சத்தம் கேட்டது. தகவலை மனசுக்குள் வாசித்தவர், ``தஞ்சை மாவட்டம், கும்பகோணத்துக்கு அருகில் உள்ள பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் மற்றும் ஆதிகேசவப் பெருமாள் கோயில் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?’’ என்று கேட்டார்.

``ஏன் கேள்விப்படாமல்... அது, தேவாரப் பாடல் பெற்ற தலம் அல்லவா?'' என்றோம்.

``சரியாகச் சொன்னீர். சிவாலயத்துக்கு அருகிலேயே பெருமாள் கோயிலும் உண்டு. அந்தக் கோயில் வழிபாடு இல்லாமல் கிடக்கிற தாம். சிவன் கோயில் தேர்த் திருப்பணிகளிலும் நிறைய முறைகேடுகளாம். நண்பர் ஒருவர் கவலையோடு செய்தி பகிர்ந்திருக்கிறார். விசாரித்து வந்து சொல்கிறேன்’’ என்றவர், நம் பதிலை எதிர்பாராமல், சட்டென வெளியேறினார்.

படங்கள்: க.சதீஷ்குமார்