மற்ற எபிசோடுகள்
Published:Updated:

சிவமகுடம் -27

சிவமகுடம் -27
பிரீமியம் ஸ்டோரி
News
சிவமகுடம் -27

ஆலவாய் ஆதிரையான், ஓவியங்கள்: ஸ்யாம்

வந்தது வன்படை!

காலம், தனது ஒரு சிறு துளிப் பொழுதில் அசாத்தியமாய் நிகழ்த்திவிடும் சில சம்பவங்கள், பெரும் சரித்திரப் பதிவுகளாகி விடுகின்றன.

அப்படியான பொன் துளி தருணங் களின் மகத்துவத்தை உணர்ந்ததால்தான் என்னவோ, காலத்தின் அளவில் பெரியதை யுகம் என்றும், அதைவிடவும் அளவில் பெரியவற்றுக்கு மன்வந்த்ரம்,  கல்பம், மஹா பிரளயம், பிரம்ம காலம் என்றெல்லாமும் பெயர்களைச் சூட்டி அடையாளப்படுத்திய நம் முன்னோர், மிகச் சிறியதினும் சிறியதுக்கும் பெயர் சூட்டிவிட்டார்கள்.

சிவமகுடம் -27

வருடம், மாதம், நாள் என்பவையெல் லாம் நாமறிந்தவையே. அதற்கும் கீழாக... ஒரு நாளுக்கு எட்டு ஜாமங்கள்; ஒரு ஜாமத்துக்கு ஏழரை நாழிகைகள், ஒரு நாழிகைக்கு அறுபது விநாடிகள் என்ற காலக் கணிதம் உண்டு.

இன்னும் துல்லியமாக... விநாடியையும் பன்னிரண்டாக வகுத்து அதன் ஒரு பாக காலத்துக்கு ‘க்ஷணிகம்’ என்று பெயர் வைத்தார்கள். இந்த க்ஷணிகத்தின் ஆறில் ஒரு பங்கு காலத்துக்கு ‘உயிர்’ என்று பெயர். இதனினும் அரைபாகம் ‘குரு’; அதாவது இரண்டு குரு சேர்ந்தது ஓர் ‘உயிர்’. குருவிலும் பாதியளவு மாத்திரை. அதிலும் பாதி கைந்நொடி. இந்தச் சிறியதையும் இரண்டாக வகுத்தால் வரும் பாதிப்பொழுது- கண்ணிமை!

அப்படியொரு கண்ணிமைப் பொழுதில் உறையூரில் நடந்தேறிய ஒரு சம்பவம், சரித்திரத்தில் நிலைபெற்று விட்ட ஒரு போரின் துவக்கமானது! அப்படி, கண்ணிமைப்பொழுதில் துவங்கிவிட்ட போர், ஒரு நாள் பொழுதில்
முடிவுக்கும் வந்துவிட்டது என்றாலும், தமிழகத்தின் பிற்கால சரித்திரத்தையே புரட்டிப்போட்டது; எதிரெதிராகக் களம் கண்ட இக்கதையின் நாயகனுக்கும் நாயகிக்கும் முடிவில்லாத புகழையும் பெற்றுத் தந்துவிட்டது என்றே சொல்லலாம்.

ஆம்! அந்த கண்ணிமைப்பொழுதில்தான், உறையூர்க் கோட்டைக்குள் தென்னவன் பாண்டியனின் சக்கர வியூகத்தை இயங்கச் செய்யும் முயற்சியின் ஓர் அங்கமாக, அவனுடைய வீரர்கள் அகழிக்காவிரியின் நீர்ப்பரப்பில் தலைகாட்டினார்கள். அதே கண்ணிமைப் பொழுதுதான்... கோட்டையின் வெளிக் காவலை, கண்காணிக்க வந்த கோச்செங்கணின் கண்களுக்கு, இந்த பாண் டிய வீரர்களைக் காட்டியும் கொடுத்தது!

போரை எதிர்பார்த்து உறையூர்க் கோட் டையின் கட்டுக்காவல் மிதமிஞ்சிய நிலையில் இருக்கும் சூழலில், அதுவும் பேராபத்து மிகுந்த - உயிர்க் கொல்லி முதலைகள் உலா வும் கோட்டையின் அகழிக் குள், உயிரை துச்சமென மதித்து பாண்டிய வீரர்கள் தலைகாட்டுகிறார்கள் என்றால், அதற்கும் காரணம் இருக்கவே செய்தது.

வனப் பாசறையில் இருந்து புறப்பட்டுச் செல்லும்போது, பயணவழியில், துறவியாரிடம் கூன்பாண்டியர் பகிர்ந்து கொண்டதுபோல், சோழ மண்டலத்தில் எவ்விதமான உயிர்ப் பலியையும் விரும்பவில்லை பாண்டிய தேசம். அது, சோழத்தை தனது களமாக்கிக் கொள் ளவே விரும்பியது. ஆனால் அதை சோழ மன்னர் அனுமதிக்கமாட்டார் என்பது வும் பாண்டியனுக்குத் தெரியும். ஆகவே, சில திட்டங்களை நேரடியாகவும் மறைமுகமா கவும் செயல்படுத்தினார், கூன் பாண்டியர்

அழகர் மலையில் இருந்த பெரும்படை தொகுப்பு இரண்டு அஸ்திர அணிகளாகப் பிரிக்கப்பட்டது. ஒன்று புலியூரை நோக்கிப் புறப்பட, மற்றொன்று அங்கேயே தங்கியது. கோச்செங்கண் உளவறியச் சென்றபோது, அவன் கண்ட நிலையும் இதுதான்.

அதற்கேற்பவே, சோழமும் தனது வியூகத்தை அமைத்திருந்தது. புலியூரைக் காக்க ஒரு வட்ட மும், உறையூரைச் சுற்றி ஒரு வட்டமும், இரு நகரங்களுக்கு இடையே இரண்டு களங்களில் அர்த்தச் சந்திர வியூகமாகவும் படைகளை நிறுத்தியிருந்தார், மணிமுடிச் சோழர். ஒருவேளை, இரண்டில் ஒரு நகரத்தில் சோழர் களுக்குப் பின்னடைவு ஏற்படும்பட்சத்தில், வெற்றிகொண்ட பகைவர் படை அடுத்த நகரை நோக்கியும் நகரக்கூடும். அதை, தடுத்து நிறுத்தும் இந்த அர்த்த சந்திர படையணிகள். மேலும், உறையூருக்கோ புலியூருக்கோ உதவி தேவைப்பட்டால், இந்த படைகளை எளிதில் அவ்வூர்களை நோக்கி நகர்த்தவும் செய்யலாம் என்பதற்காகவே, இப்படியொரு ஏற்பாட்டை செய்திருந்தார் மணிமுடிச் சோழர்.

அதேபோல்,  பாண்டியரின் கடற்கலன்கள்  நகரத் துவங்கியதை அறிந்தமையால், ஒருவேளை கடற்புறம் இருந்து தாக்குதல் நடந்தால் சமாளிக்கவும், உறையூரை எச்சரித்து தயார் படுத்தவும் தென்னாட்டு பரதவர்கள் அங்கே காத்திருந்தார்கள்.

சிவமகுடம் -27

உறையூரில் மட்டும், அங்கே ஏற்கெனவே ஏற்பட்டிருந்த சிறு போருக்குப் பிறகு, தந்தையின் ஒப்புதலோடு வியூகத்தில் சிறு மாறுதலைச் செய்திருந்தாள், இளவரசி மானி. உறையூர்க் கோட்டை மதில்களில் பாதுகாப்பு இரட்டிப்பாக்கப்பட்டது.

மதிலுக்கு மேல் மட்டுமின்றி, கோட்டைக்கு உள்ளும் பெரும்படையணி ஒன்று சிறு சிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொன்றும் சிறு அர்த்தசந்திர அமைப்பில் மதிலையொட்டி நிறுத்தப்பட்டது. கோட்டைக்கு வெளியிலோ, அதன் ஒருபுறத்தை பொன்னி நதி தழுவிச் செல்ல, மீதி பாகங்களில் கோட்டையைச் சுற்றிவளைத்து காத்திருந்தது சோழ சைன்னியம்!

இப்படி, அனைத்துவகையிலும் தங்களை ஆயத்தப்படுத்திக்கொண்டிருந்தாலும்கூட, புலியூரை நோக்கி நகர்ந்த பாண்டியரின் அஸ்திர அணி திசை மாறியதற்கான காரணமும், ரிஷபகிரியின் அடிவாரத்தில் இருந்த படையணி திடுமென மாயமாய் மறைந்துவிட்டதன் ரகசியமும் புரியாததால், ஒருவித தவிப்புக்கும் ஆளாகியிருந்தார்கள், மணிமுடிச் சோழரும், பட்டர்பிரானும்.

இந்த நிலையில், அவர்களது கவலையை அதிகரிக்கச் செய்யும் செய்தியொன்றும் வந்து சேர்ந்தது... பகைவர்கள் தாக்கப் போவது, சோழப் படைகள் காத்து நிற்கும் புலியூரை அல்ல என்று! அதையொட்டி, கோட்டைக்குள்ளும் சிறு தாக்குதல் நிகழ்ந்து முடிந்தது. மானியின் சாமர்த்தியத்தால் அந்த தாக்குதலை முறியடித்துவிட்டாலும், சோழம் சார்ந்தவர்களை, எதிரியின் நிலையை உள்ளது உள்ளபடி அறியமுடியாததால், பெரும் குழப்பம் சூழ்ந்துகொண்டது!

அவர்களது அந்த குழப்பத்தையும், `அகழிக்குள் பொங்கிப் பாய்ந்து வரும் பொன்னியின் பெரும் வேகம் எதிரிகளை அணுகவொட்டாமல் அடித்துவிடும்’ என்ற நம்பிக்கையில், சோழர்கள் கட்டுக் காவலை மட்டுப்படுத்தி வைத்திருந்த அந்த இடை வெளியையும் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டார் கூன்பாண்டியர்.

அவரது திட்டம் இதுதான்...

சோழர் பிடியில் இருந்த புலியூரை நோக்கி நகர்ந்த பாண்டிய அஸ்திர அணி, திடுமென திசைதிரும்பும். அதன் இலக்கு கேரள னின் பிடியிலிருக்கும் புலியூராக இருக்கும். ஆனால் அவர், வெகு சாமர்த்தியமாக ‘புலியூர்’ என்ற பெயரை மட்டும் வேண்டுமென்றே சோழர் தரப்புக்கு கசியவிட்டார். அதன் பலன், சோழபிரான் தம் படையில் பாதியை தமது புலியூருக்கு நகர்த்திவிட்டார். இதனால் உறையூரின் படைபலம் பாதியாகக் குறைக்கப்பட்டது. அத்துடன், பாண்டியரின் கடற்கலன்கள் நகர்ந்ததால், தங்களின் துணைக்கு வந்த பரதவர் படையில் பாதியை யும் கடற்புறத்துக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம் சோழத்துக்கு. ஆக, பரதவர் துணையும் பெருமளவில் துண்டிக்கப்பட்டு விட்டது.

இந்நிலையில் அழகர் மலையில் எஞ்சியிருந்த மற்றொரு அஸ்திர அணியை, அங்கிருந்து சிறு சிறு பிரிவுகளாக்கி, மெள்ள மெள்ள வனப் புறங்களில் மறைந்தபடி நகரச் செய்த கூன்பாண்டியர், அதில் ஒரு பிரிவையே வணிகர்கள் போர்வையில் உறையூருக்குள் புகச் செய்திருந்தார். அவர்களும் உள்சென்று சிறுபோரை நிகழ்த்தி, சிறைபட்டார்கள். கூன்பாண்டியர் எதிர்பார்த்தபடியே கோட்டை மதிலையொட்டிய சிறைக் கொட்டடியிலேயே அவர்களைச் சிறை வைத்திருந்தாள் மானி. அந்தச் சிறைக் கோட்டத்தின் சாளரங்கள், பொன்னி நதி கோட்டை மதிலைத் தழுவியபடி அகழிக் காவிரியாக பாயும் இடத்துக்கு நேர்மேலே அமைந்திருந்தன.

அந்த சாளரங்களில் ஒன்றை நோக்கி, கயிறு பிணைக்கப்பட்ட கணையை தொடுக்க வேண்டும், அகழிக் காவிரியில் எழும்பும் பாண்டியதேசத்து *வன்படை வீரர்கள். அந்த அம்பு சாளரம் வழியே சிறைக்கோட்டத்துக்குள் விழுந்ததும், அங்கு கைதிகளாக இருக்கும் பாண்டிய வீரர்கள், கயிற்றை ஏதேனும் ஒரு பிடிமானத்தில் பிணைத்து, அகழிக் காவிரி வீரர்கள் மேலே ஏறுவதற்கு வழி செய்வார்கள்.இங்ஙனம், எவரும் அறியாவண்ணம் படிப் படியாக வெளியிலிருந்து  பாண்டிய வீரர்கள் கணிசமாகக் கோட்டைக்குள் புகுந்ததும், மீண்டும் ஒரு தாக்குதல் நடக்கும்; முன்பை விட கடுமையாக!

நிலைமையைச் சமாளிக்க வெளியிலிருக்கும் சோழப் படைகள் கோட்டைக்குள் செல்லும் நிலை ஏற்படும். அவர்கள் உட்புகும் அதே நேரத்தில், அவர்களைப் பின்னால் தாக்கிய படி புயல்வேகத்தில் பாயும் பாண்டியரின் மற்றொரு படையணி. அதன் பின்னர், விளைவுகளைச் சொல்லத் தேவையில்லை!

இப்படியான, கூன்பாண்டியரின் திட்டம் மிகத் துல்லியமாகவே துவங்கி நடைபெற்றது; பாண்டிய வீரர்கள் கோச்செங்கணனின் பார்வையில் படும்வரையிலும்!

காலத்தின் கோலத்தால் தற்காலிகமாக சோழர்களுக்குச் சாதகமான அந்த அதி காலைப் பொழுதில் பாண்டிய வீரர்களின் ரகசிய நடவடிக்கையைக் கண்ட கோச்செங் கண், அதிர்ந்தான். முள்ளை முள்ளால்   எடுக்கவேண்டும் என்று கருதியவன், சோழ சின்னங்களையும் அங்கியையும் துறந்து, எதிரிகள் அறியாவண்ணம் தானும் அகழிக் காவிரிக்குள் மூழ்கினான். அவர்களில் ஒருவனாக தானும் கயிற்றில் ஏறினான். பாதி தூரம் ஏறியதும், குறுவாளால் கயிற்றை அறுக்கத் துவங்கினான். கயிறும் அறுந்தது.

பகைவர்களோடு சேர்ந்து அவனும் அகழிக்குள் விழ, அடுத்த அந்த கண்ணிமைப் பொழுதில், பெரும் வாளுடன் அவன் மீது பாய்ந்தார்கள் பாண்டிய வன்படை வீரர்கள்!

- மகுடம் சூடுவோம்...

* மூலப் படையில் ஒரு பிரிவு வன் படை; போர்த்தொழிலில் எழுச்சியுடன் ஈடுபடும். மென் படையும் உண்டு. இது, படைவகுத்துப் போர்செய்தலில் திறமை வாய்ந்தது (படை வகை- அபிதான சிந்தாமணி).