நான்காம் வீட்டில் அசுப கிரகங்கள் தென் படுகின்றன (செவ்வாய், சனி, சூரியன், ராகு, கேது இவர்களில் இரண்டு பேர் அமர்ந்திருந்தால் போதும்). 4-க்கு உடையவனை அசுப கிரகங்கள் பார்க்கவேண்டும். 4-ம் வீட்டின் முன் பின் வீடுகளில் பாப கிரகங்கள் இருக்க வேண்டும். இப்படியான நிலை ஜாதகத்தில் தென்பட்டால், அவனது உள்ளம் கபடத்தைத் தழுவியிருக்கும். அவனிடம் இருந்து வெளி வரும் தகவல்களிலும் கபடம் மறைந்திருக்கும்.

4-ம் வீட்டில் அசுப கிரகங்கள் அமைந் தாலும் கபடம் இருக்கும். 4-ம் வீட்டுக்கு உடையவனை அசுபர்கள் பார்த்தாலும் கபடம் இருக்கும். 4-ம் வீட்டுக்கு முன்னும் பின்னுமான வீடுகளில் அசுப கிரகம் அமர்ந்தாலும் கபடம் இருக்கும். இது, அவனது தெளிவற்ற இதயத்தை வரையறுக்கிறது என்கிறது ஜோதிடம். ஒரு குடத்தின் அடிப்பகுதியில் விஷம் இருந்து, நுனிப்பகுதி அமிர்தமாக இருந்தால், பார்ப்பவர்களுக்கு எப்படி அமிர்தம் நிரம்பியதாகத் தோன்றுமோ அப்படியே, அவனிடம் இருந்து வெளிப்படும் தகவல், பிறரை ஈர்ப்பதாக அமைந் திருக்கும் என்கிறது ஜோதிடம் (விஷகும்பம் பயோமுகம்).
இணையைத் தேர்ந்தெடுக்கும் நேர்க் காணலில் ஈர்க்கப்பட்டு, உள்ளத்தின் ஆழத்தை அறிந்துகொள்ள இயலாமல், காலப்போக்கில் விவாகரத்தில் தள்ளப்பட்டவர்கள் உண்டு. அவனிடம் இருந்து வெளிவரும் தகவல்களை உள்ளத்தின் வரைபடமாக நினைத்து, அவனுடன் வாழ்வில் இணைந்து ஏமாந்த வர்கள் உண்டு. இருவரது உள்ளத்தின் தரத்தை ஆராய முற்படாமல், பத்து பொருத்தத்தைக் கையாண்டு முடிவை வெளியிடுபவர்களாக ஜோதிட பிரபலங்கள் மாறக் கூடாது.
எந்த பாவத்தை ஆராய விரும்புகிறோமோ அந்த பாவத்தில் அசுப கிரகங்கள் இருப்பது, அந்த பாவத்துக்கு உடையவனை அசுப கிரகங்கள் பார்ப்பது, அந்த பாவத்தின் முன்பின் வீடுகளில் (பாவங்கள்) அசுப கிரகம் வீற்றிருப்பது என்பது, அந்த பாவத் தின் தரக்குறைவை சுட்டிக்காட்டும். இது, நான்காம் பாவத்துக்கு (வீட்டுக்கு) மட்டும் சொல்லப்பட்ட விஷயமல்ல; எல்லா பாவத் துக்கும் பொருந்தும் பொதுவிதி. இந்த அடிப்படையை ஆராய்ந்தபிறகு, அந்த பாவத்துக்குச் செழிப்பூட்டும் சுபகிரகச் சேர்க்கை, பார்வை, உச்சம், மூலத்ரிகோணம் போன்ற தகுதிகள், கேந்திரம், த்ரிகோணம் போன்ற பலமூட்டும் நிலைகள், லக்னாதிபதி, காரக கிரகம் போன்றவற்றின் அனுகூலமான ஒத்துழைப்பு ஆகியவை தென்பட்டால், நான்காம் வீட்டின் குறைகள் அகல வாய்ப்பு உண்டு என்று ஜோதிடம் சுட்டிக்காட்டும்.
அத்துடன் உள்ளத்தை ஆராய்வதற்கு, மனதுக்குக் காரகனான சந்திரனின் பலத்தையும் தொடர்பையும் ஆராயவேண்டும். பலம் பெற்ற சந்திரனின் தொடர்பு உள்ளத்தின் தெளிவையும், தெளிவின்மையையும் வரையறுக்கும். மனதின் போக்கும் செயலும் ஜோதிட ஆராய்ச்சியில் பெரும்பங்கு வகிக்கின்றன. தாம்பத்தியம், படிப்பு, வேலை வாய்ப்பு, குழந்தைச் செல்வம் போன்றவை, அவனது மனப்போக்கின் அளவுகோலுக்கு ஏற்ப ஏற்றக்குறைச்சலுடன் தென்படுவதைப் பார்க்கிறோம். செல்வந்தனாகவும், மகானா கவும், அறிஞனாகவும், சமூக சேவகனாகவும், கொடையாளியாகவும் உருவாவதற்கு, அவர வர் மனப்போக்கின் தரம்தான் முக்கியக் காரணம். சிக்கலில் மாட்டிக்கொண்டவனை துயரத்தில் ஆழ்த்துவதும், அதிலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியில் திளைக்கவைப்பதும் மனதின் திறமையால் நிகழ்வது என்கிறது ஜோதிடம் (மனஏவ மனுஷ்யாணாம் காரணம் பந்த மோக்ஷயோ:). பிறப்பிலிருந்து இறப்பு வரையிலும் அவன் சந்திக்கும் நல்லவை-கெட்டவை, துயரம்- மகிழ்ச்சி, லாப-நஷ்டம், அருமை பெருமைகள், செழிப்பு, இழப்பு ஆகிய அத்தனையையும் வரையறுப்பது மனம். கர்மவினையானது மனம் வாயிலாகச் செயல்பட்டு, தனது பங்கினை நிறைவேற்றிக்கொள்கிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கிரகங்களின் செயல்பாட்டை விளக்கும் தகவல்கள் அத்தனையும், மனப்போக்கின் அடிப்படையில் உருப்பெற்றவை. மனப் போக்கில் ஊடுருவிய கர்மவினையைச் செயல்படுத்துவது தான் கிரகங்களின் பங்கு. கிரகங்கள் எதனையும் தன்னிச்சையாக செய்யாது, கர்மவினைக்குக் கட்டுப்பட்டு செயல்படும். கிரகங்கள் பொருள்களின் மாற்றத்துக்கும், செழிப்புக்கும், இழப்புக்கும் நேரடிக் காரணமாவது இல்லை. அந்தப் பொருள் தத்தமது தகுதிக்கு ஏற்ற மாற்றத்தையும், செழிப்பையும், இழப்பையும் சந்திக்கின்றன. தாமரையிலும், அல்லியிலும் சமமாக சூரியக் கிரணங்கள் பரவுகின்றன. தாமரை மலர்கிறது; அல்லி மலர்வதில்லை.சீடர்களுக்கு, ஒரே மாதிரியான கல்வியைப் புகட்டுகிறார் ஆசான். எனினும், சீடர்களில் சிலர் வெற்றியடைகிறார்கள்; சிலர் தோல்வி யைத் தழுவுகிறார்கள். வெற்றி, தோல்விக்கு ஆசான் நேரடிக் காரணமாக மாட்டார். சீடர்களின் மனப்போக்கு, சிந்தனை வளம், உள் வாங்கும் திறன், ஆராய்ச்சி செய்யும் இயல்பு ஆகிய அத்தனையும் நேரடிக் காரணமாக மாறிவிடுகின்றன. தந்தை ஒன்றானாலும் இரு புதல்வர்களிடம் மாறுபாடு தென்படுகிறது. அதற்குத் தந்தை காரணமல்ல; புதல்வர்களிடம் தென்படும் மனமாற்றம், சிந்தனை வளத்தின் குறைவு ஆகியவைதான் காரணம்.
பிரபஞ்சத்தின் இயக்கத்தை செம்மைப் படுத்த முற்பட்ட ஆகாச பூதத்தின் அங்கமான கிரக வரிசைகள், தனிமனிதனின் தலைவிதியை வரையறுக்கின்றன என்ற தகவல் அப்பட்டமான பொய். ஆறாவது அறிவு பெறாத இனம், இயற்கையின் வழிகாட்டுதலில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து மடிகிறது. ஆறாவது அறிவு பெற்றவன் இயற்கைக்கு எதிராகச் செயல்பட்டு, மனம் போனபடி வாழ்ந்து மடிகிறான். அவற்றுக்கு இயற்கை வழிகாட்டி; இவர்களுக்கோ அவரவர் மனம் வழிகாட்டி. முற்பிறவி கர்மவினை மனதில் தோன்றி, அதற்கு அடிமைப்பட்டு, அதன் வழிகாட்ட லில் சிந்தனை வளர்ந்து, இன்ப-துன்பங் களைச் சந்திக்கிறான். வாணிபத்தில் இடைத் தரகர்களைப் போல், நவகிரகங்களை இணைத் தது, கோணல் புத்தியில் ஏற்பட்ட அறியாமை!
மூன்றரை வயதுக் குழந்தையை எந்தக் கல்வியில் இணைக்க வேண்டும் என்பதை தந்தையின் மனம் தீர்மானிக்கிறது. ஜோதிட விளக்கத்தை எதிர்பார்ப்பதில்லை. துணையைத் தேர்ந்தெடுப்பதிலும் அவன் மனதின் முடிவுதான் இறுதி முடிவு. உலக நடப்பைக் கண்ணுற்று, மருத்துவமா, இன்ஜினீயரா, சி.ஏ படிப்பா, ஐ.பி.எஸ்ஸா என்று மனமே தீர்மானித்தது; ஜோதிடரை அணுகுவதில்லை. மனம் விரும்பிய எந்தத் துறையிலும் நுழைய முடியாமல் கதவு மூடப்படும்போது, செய்வதறியாது சிந்தனை தளர்ந்த நிலையில், முன்பின் தெரியாத ஜோதிடரை அணுக முற்படும். அவர், கர்மவினைக்கு உகந்த முடிவை எடுத்துரைப்பார். சிந்தனையற்ற மனம் அதை ஆராயாமல் ஏற்கும். கர்மவினை அவனது சிந்தனையை முடக்கி, ஜோதிடரின் வாயிலாக தனது செயல்பாட்டை ஏற்கவைக்கிறது. தொழிற்கல்வி, வெளிநாட்டு வாணிபம், சீட்டுக் கம்பெனி, ஏஜென்ஸி போன்றவை, மனப் போக்கில் அதாவது சிந்தனை வளத்தில் உருப்பெற்ற புதுமுறைகள், காலத்தால் உருவாக் கப்பட்டவை. இவற்றை ஏற்க ஜோதிடத்தின் பரிந்துரையை எதிர்பார்ப்பது இல்லை. பெரும் பாலும் ஜோதிடரை அணுகுவோர், தங்களின் சிந்தனை முடங்கிய நிலையில் உள்ளவர்களே என்று ஜோதிடமே சொல்லும். கர்மவினையால் தூண்டப்பட்டு செயல் இழந்தவன், ஜோதிடனை சரணடைகிறான் (ப்ரேரித: அவச: தைவந்ந ஸன்னிதிம் ஏதி).
சுயசிந்தனை செயல்படாதவர்கள் புராண காலத்திலும் இருந்தார்கள். பொன் மான் படைப்பில் இல்லை என்று தெரிந்தும், அதைப் பிடிக்க முற்பட்டு சீதையை இழந்தார் ராமர். சொக்கட்டான் காயை வைத்து சூதாட்டம் இருக்கும். அது, அசையாத பொருளை வைத்துதான் நிகழும். இதை அறிந்தும் சிந்தனை செயல்படாமல், திரெளபதியை வைத்து சூதாடி, தோல்வியைத் தழுவி கானகம் சென்றார் தருமர். யானைக்கும் அடி சறுக்கும் என்ற பழமொழி உண்டு. அந்த சறுக்கலை யானை தன்னிச்சையாக வரவழைத்துக்கொண்டது. அதற்கு வேறொன்று காரணமாகாது. சுயநலத்தை இறுகப்பிடித்துக் கொண்ட மனம், கைப்பிடித்த மனைவியை தவிக்க விட்டுவிட்டு, பிறர் மனைவியை ஏற்கவைக்கும். மனம் ஆர்வத்தில் செயல்பட முற்பட்டால், எந்த சக்தியும் தடுத்து நிறுத்த முற்படாது; சிந்தனை முடங்கப்பட்டுவிட்டால் மட்டுமே ஜோதிடனை அணுகும்.
ஜோதிடத்தில் நம்பிக்கை அற்றவர்கள் ஏராளம். இருந்தும் ஆசையின் உந்துதலில், சுயநலத்தை நிறைவேற்ற, எட்டாத கல்வியை யும் எட்டிப்பிடிக்க முயற்சிக்கிறான். தன் குழந்தைக்கு விஞ்ஞானமோ, மருத்துவமோ ஏற்கத் தகுதியில்லை என்று அறிந்த மனம், குறுக்கு வழியில் அதை எட்ட முயற்சிக்கும். அந்தக் குறுக்கு வழியில் நம்பிக்கை குறைவாக இருக்கும்போது, ஜோதிடரை அணுகி, அவனுக்கு அந்த பாக்கியம் இருக்கிறதா என்று ஆராயவைத்து, தனது நம்பிக்கையில் நப்பாசை வைக்க சான்றுத் தேடுகிறான் என்று சொன்னால் மிகையாகாது.
தன் மனப்போக்கின் வழி செயல்பட ஜோதிடனை அணுகுவது உண்டு. ஜோதிடரின் பரிந்துரையை அவன் விரும்புவதில்லை. மாறுபட்ட தகவல் ஜோதிடரிடம் இருந்து வந்தால், தனது மனதுக்கு உகந்த பதிலை எட்ட மற்றொரு ஜோதிடரை அணுகுவான். அவன் எங்கு சென்றாலும் எந்த ஜோதிடரை அணுகினாலும், தனது விருப்பத்துக்கு உகந்த சிபாரிசை மட்டும்தான் ஏற்பான். அங்கும் மனதின் எண்ணம் வென்றுவிடும்.
ஒவ்வொருவருக்கும், தனது மனம்... அது விரும்பும் எண்ணம், அதை நிறைவேற்று வதில் சுறுசுறுப்பு, அதில் வெற்றியடையும் இலக்குதான் முன்னால் நிற்கும். அதற்கு எதிரான எந்தத் தகவலையும் மனம் பதிய வைக்காது. கபடமான மனம் நேரான சிந்தனையில் இறங்காது. ஆசையை நிறைவேற்றிக்கொள்ள மனம் போனபடி செயல்படும். அது விவாகரத்தை ஏற்கவைக்கும். நிறைவேறாத ஆசை, இரண்டாவது மனைவியிலும் நிறைவேறாது போனால், மூன்றாவது மனைவியை ஏற்கவைக்கும். ஜாதகத்தில் இருக்கும் கிரகங்களின் அமைப்பே அதை நிறைவேற்றுகிறது என்று சொல்வதில் ஜோதிடத்துக்கு உடன்பாடு இல்லை.
விண்வெளியில் சுற்றிக்கொண்டிருக்கும் கிரகங்கள் அத்தனையும் உலக இயக்கத்துக்கு உதவுகின்றன. உலகில் இருக்கும் உயிரினங்களைக் கட்டுப்படுத்தும் செயலில் தன்னிச்சையாக செயல்படாது. அவரவர் மனம்தான் அவரவர் வாழ்க்கையில் தென்படும் நிகழ்வுகளுக்குக் காரணம். மனதில் குடிகொண்டிருக்கும். ஆசாபாசங்கள், காமக்ரோதங்கள், பரோபகார சிந்தனை, பரிவு, பணிவு போன்ற மாறுபட்ட குணங்களைக் கண்டறிந்து முடிவை எட்ட வேண்டும். அந்த முடிவு செயல்படும் விதத்தில், அந்த கால கட்டத்தில் தென்படும் தசாபுத்திகள் அதற்கு உகந்த வகையில் அமர்ந்திருப்பதைக் கண்ணுற்று, பலனை வெளியிடும் தகுதி ஜோதிட பிரபலங்களுக்கு இருக்கவேண்டும். மன ஆராய்ச்சியை அறவே ஒதுக்கி, சூழலுக்கு உகந்த வகையில் வந்தவரின் எண்ணத்தை பிரதிபலிக்கும் விதத்தில் முடிவை அறிவிப்பதில், ஜோதிடத்துக்கு உடன்பாடு இல்லை.
-தொடரும்...