Published:Updated:

``மற்றவர்களிடம் அன்பாக இருப்பதுதான் ஆன்மிகம்'' - கவிஞர் பிறைசூடன் #WhatSpiritualityMeansToMe

``மற்றவர்களிடம் அன்பாக இருப்பதுதான் ஆன்மிகம்'' - கவிஞர் பிறைசூடன் #WhatSpiritualityMeansToMe
``மற்றவர்களிடம் அன்பாக இருப்பதுதான் ஆன்மிகம்'' - கவிஞர் பிறைசூடன் #WhatSpiritualityMeansToMe

விஞர் பிறைசூடன், கவிஞர், ஜோதிடர், ஆன்மிகப்பற்றாளர்.  பழகுவதற்கும் அன்பு பாராட்டுவதற்கும்  இனிய மனிதர். `சிறை’ படம் தொடங்கி 2,000 திரைப்படப் பாடல்களும் 7,000 தனிப்பாடல்கள் மற்றும் பக்தி பாடல்களையும் இயற்றியிருக்கிறார். அவரை, `எனது ஆன்மிகம்’ பகுதிக்காகச் சந்தித்தோம். ஆன்மிகம் பற்றித் தெளிந்த நீரோடையாகப் பல்வேறு கருத்துகளை முன்வைத்தார்.

``ஆன்மிகங்கிறது ஒண்ணும் பெரிய விஷயமில்லை. அவங்க சொல்ற மாதிரி இவங்க சொல்ற மாதிரிங்கிறதெல்லாம் கிடையாது. `மீகாமன்' என்றால், மாலுமினு அர்த்தம். ஓர் ஆன்மா எங்கு செல்கிறது... எப்படித் தோன்றியது... எங்கு சென்று அடையப்போகிறது?ங்கிற பயணம்தான் வாழ்க்கை. அதன் மாலுமிதான் நாம. `அன்பே சிவம்’தான் ஆன்மிகம். மற்றவர்களிடம் அன்பாக இருப்பதுதான் ஆன்மிகம். அன்பைத் தவிர  வேறு எதுவும் பெரிதில்லை என்பதைத்தான் எல்லா மதங்களும் வலியுறுத்துகின்றன.

ஔவையார் சொல்லுவார்... `பசுவின் நிறம் வெள்ளையாகவோ, மஞ்சளாகவோ, கறுப்பாகவோ இருந்தாலும் அது தரும் பாலின் நிறம் வெண்மைதான்.’ அதைப்போல எல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன. 

பைபிள் உள்பட எல்லா மத நூல்களிலுமே, `மனிதர்கள் கட்டிய கோயில்களில் மட்டுமே நான் இருப்பேன் என நினைக்காதீர்கள்’னுதான் இறைவன் சொல்றார். `மனமது செம்மையானால் மந்திரம் ஜபிக்க வேண்டாம்'னுதான் சொல்லுவாங்க. 

தலை நிறைய ஜடாமுடியை வளர்த்துக்கிட்டு, ருத்திராட்சக் கொட்டை மாலையை போட்டுக்கிட்டு, நெற்றி நிறைய விபூதியைப் பூசிக்கிட்டு `அடுத்தவன் வாழக்கூடாது’னு பூஜை பண்ணினா பலிக்குமா? நிச்சயம் பலிக்காது. 

40 ரூபாய்க்கு கோயில்ல  ட்யூப்லைட் வாங்கிப் போட்டுட்டு, உபயம்: `ஆனா. முனா. சாமியின் மகன் வேணுகோபால்’னு எழுதிவெச்சா நிச்சயம் நம்மைப் பார்த்து கடவுள் சிரிக்கத்தான் செய்வார். இந்த உலகத்துக்கு ரெண்டு லைட்டை... `சூரியன், சந்திரன்’னு பர்மனென்ட்டா வெச்சிருக்கிறவர் இறைவன். அதுக்கு `ஆன்’, `ஆஃப்’ ஸ்விட்சே கிடையாது. அதுபாட்டுக்கு ரொட்டீனா இயங்கிக்கிட்டே இருக்கு.

`ஆரறிவார் எங்கள் அண்ணல் பெருமையை 
யாரறிவார் இந்த அகலமும் நீளமும் 
பேரறியாத பெருஞ்சுடர் ஒன்றதின் 
வேரறியாமல் விளம்புகின்றேனே'

என்கிறார் திருமூலர். இதைத்தான் வள்ளலார் 'அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை'னு சொல்றார். 
உலகத்தில் இருக்கும் அத்தனை நந்தவனங்களையும் படைத்த இறைவனுக்கு ஒரே ஒரு முழம் பூவைப் போட்டுவிட்டு, `நான் வேண்டியது கிடைக்கலை’ங்கிறான் மனிதன்.

`இந்த ஊருக்கு வாங்க சார்... பவர் ஃபுல் காளி இருக்குது, வாங்க சார்'னு சொல்றான். அப்போ, `பவர்லெஸ் காளி’னு  ஒண்ணு இருக்குதா?திருப்பதி போய்விட்டு திரும்பி வந்தால் திருப்பம் நிகழுதுன்னா... பழனி போய் வந்தா திருப்பம் நிகழாதா? அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. அவரவர் மனப்பாங்குக்கு ஏற்ற இடங்களுக்குச் செல்லும்போது, மனம் உசுப்பிவிடப்பட்டு ஓர் உற்சாகம் கிடைக்கிறது. அவ்வளவுதான்.

அம்பலவாணன் (சிவபெருமான்) நமக்கு எழுதியதைத் தவிர, அதற்கு  மேல் ஒரு சிறுதுளியையும் நாம் அனுபவிக்க இயலாது. இந்தப் புரிதல் வந்துவிட்டால் போதும். ஆன்மிகத்தின் மீது நமக்கு எந்தக் குழப்பமும் வராது.  

இறைவனுக்கு நீ ஒரு முழம் பூ வாங்கிப் போட்டாலும், உன்னிலும் வலியவன் ஒரு லட்ச ரூபாய்க்கு  பூக்கள் வாங்கிப்போட்டாலும் இரண்டையும் ஒன்றாகத்தான் அவன் பாவிப்பான்.

`யாவருக்குமாம் இறைவற்கொரு பச்சிலை
யாவருக்குமாம் பசுவுக்கொரு வாயுறை
யாவருக்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவருக்கு மாம் பிறர்க் கின்னுரை தானே’

என்கிறார் திருமூலர். 

`இறைவனுக்கு மிகப்பெரிய ஆளுயர மாலையைத்தான் சார்த்த வேண்டும் என்பதில்லை. ஒரேயொரு வில்வ இலையைச் சார்த்தினாலே போதுமானது’ என்கிறார் திருமூலர். சாப்பிடும்போது ஒரு பிடி சோற்றை ஜீவகாருண்யமாகக் காக்காவுக்கோ, பூச்சிகளுக்கோ வைத்தால் போதும். பசுவுக்கு ஒரு கைப்பிடி புல் வாங்கிப்போட்டால் போதும். மற்ற சக மனிதர்களிடம் அன்பாகப் பேசினாலே போதும். இதுதான் ஆன்மிகம். 

சரி எனக்குள் எப்படி ஆன்மிகம் வந்ததுனு கேட்கறீங்களா?

எங்க அப்பா போலீஸ்காரர். கடவுள் நம்பிக்கை அவருக்குக் கிடையாது. நான் பிறந்த ஊர் சிதம்பரம் அருகே கொள்ளிடம்.  இப்போது `ஆனைக்காரன்சத்திரம்’ என்று அழைக்கப்படுகிறது. 

எனக்கு மூன்று வயது இருக்கும்போது எங்கள் ஊரில் பெரியம்மை நோய் பரவியது. இதில் 27 குழந்தைகள் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டனர். அப்போது என் தாயார்  நிறைமாத கர்ப்பிணியாக இருந்து என்னைக் கவனித்துவந்தார்.

அப்போது எங்கள் ஊரிலிருக்கும் புலீஸ்வரி அம்மன் கோயிலைச் சுற்றி வந்து, `வயிற்றிலிருக்கும் பிள்ளையை நான் பார்க்கவில்லை. இவன் நான் வளர்த்த பிள்ளை. இவனுக்கு உயிர் கொடு' என்று வேண்டிக்கொண்டார். அவர் சாஸ்திரப் பாடங்கள் எல்லாம் படித்தவரில்லை. ஏதோ அவர் மனதுக்குத் தோன்றியதை வேண்டிக்கொண்டார். வயிற்றிலிருந்த குழந்தை இறந்துவிட்டது. நான் பிழைத்துக்கொண்டேன்.  அதனால ஆன்மிகங்கிறது என் தாயார் எனக்கு ஊட்டியது. அதன் பிறகு எனக்கு நிறைய தம்பிகள், தங்கைகள்.

நான் வளர்ந்த பிறகு, `இந்தக் கோயிலுக்குப் போனால் பணம் கிடைக்கும்’, `இந்தக் கோயிலுக்குப் போனால் வேலை கிடைக்கும்’ என்பது மட்டும்தான் ஆன்மிகம் என்று இருந்தேன். அப்போது எனக்கு ஆன்மிகத்தைப் புரிந்துகொள்ள பக்குவம் கிடையாது. அதன் பிறகு நான் சென்னைக்கு வேலை தேடி வந்தேன். நிறைய கலைகளைக் கற்றுக்கொண்டேன். ஜோதிடம், நியூமராலஜி, கைரேகை, இலக்கியம், அகஸ்தியர், சித்தர்கள்னு பலவற்றையும் படித்துத் தேர்ந்தேன்.   

இலக்கிய சேவை, கலைச் சேவை பண்ணணும்ங்கிறதெல்லாம் கிடையாது. வாழ்வதற்குப் பணம் தேவை. அந்தப் பணம் கிடைக்க என்ன வழினு தேர்வு பண்ணியதுதான் பாடல்கள் எழுதுவது. 
என்னுடைய இயற்பெயர் சந்திரசேகர், அம்மா பெயர் தனம், அதனால `தனசேகர்’ங்கிற பெயரில் எழுதினேன். அப்புறம் அப்பா பெயர் ராஜூவுடன் சேர்த்து `ராஜசேகர்’ங்கிற பெயர்ல எழுத ஆரம்பிச்சேன். கடைசியில கவிஞர் சேகர், கவிஞர் சந்துருங்கிற பெயர்ல பாடல்கள் எழுதினேன். எதுவும் வொர்க்அவுட் ஆகலை.

புதுக்கோட்டையைச் சேர்ந்த தாசனந்த சுவாமிகள்ங்கிறவரை சந்திச்சேன். அவர்தான் எனக்கு `பிறைசூடன்’-னு பெயர் வெச்சார். அந்தப் பெயரையும் நான் உடனே ஏத்துக்கலை. 
ஆல் இந்தியா ரேடியோவுல அந்தச் சமயத்துல ஒரு தலைப்புல பாட்டெழுதக் கேட்டாங்க. நான் ஆறுவிதமான பாடல்களை எழுதி ஆறு பெயர்களில் அனுப்பினேன். அதில் அவர்கள் தேர்வுசெய்தது `பிறைசூடன்’ என்ற பெயரில் எழுதிய பாடலைத்தான். 

`சரி, இனி பிறைசூடன்ங்கிற பெயரிலேயே எழுதுவோம்’னு முடிவு பண்ணினேன். அப்புறம் சுவாமிகிட்டே வந்து சொன்னேன். `சினிமாவுல பாட்டெழுத வாய்ப்பு வரும். இரண்டெழுத்துப் படத்துக்கு எழுதுவே. 501 ரூபாய் காசு கொடுப்பாங்க. அதுக்கப்புறம் 5 வருஷம் நாயா பேயா அலைவே. அப்புறம்தான் உனக்கு நல்ல நேரம் வரும். பிரபலமாவே’னு சொன்னார். அதே மாதிரி நடந்தது. 

நான் முதன்முதலாகப் பாடல் எழுதிய படம் `சிறை.’ அதற்குக் கிடைத்த பணம் 500 ரூபாய் செக். அப்புறம் அதன் தயாரிப்பாளர் நடராஜனைச் சந்தித்து நன்றி கூறினேன். அந்தப் படத்தின் சக தயாரிப்பாளர் மோகன் செக்கை வாங்கிப் பார்த்துவிட்டு, `என்னய்யா 500 ரூபாய் மொட்டையா இருக்கு. வளரட்டும்யா'னு சொல்லி ஒரு ரூபாய் எடுத்துக் கொடுத்தார்.

தாசானந்த சுவாமிகள் சொன்னது சொன்னபடி நடந்தது. அதன் பிறகு 36 படங்களுக்கு பாடல்கள் எழுதினேன். எந்தப் பணமும் கைக்கு வந்து சேரவில்லை. அதன் பிறகு `பிறைசூடன்’ங்கிற பேர்ல சினிமாவுல 2,000 பாடல்களும், தனிப் பாடல்களாக 7,000 பாடல்களும் எழுதியிருக்கேன். கிட்டத்தட்ட 10,000 பாடல்கள் எழுதும் நிலைக்கு வந்திருக்கேன்’’ என்றவரிடம், ``உங்களுடைய வழிபாட்டுமுறைகள் என்னென்ன?’’ என்று கேட்டோம்.

தாசானந்த சுவாமிகள் கொடுத்த புதுக்கோட்டை புவனேஸ்வரி அம்மன்தான் என் இஷ்டதெய்வம். ஆனால், இப்போ கோயில்களுக்கெல்லாம் அதிகம் போவதில்லை. அடுப்பே திருப்பதினு இருந்துடுவேன். அதாவது நாம இருக்கிற இடம்தான் கோயில். நம் மனைவிக்கு நல்ல கணவனாக, நம் பிள்ளைக்கு நல்ல தகப்பனாக, நம் சகோதர சகோதரிகளுக்கு நல்ல சகோதரனாக, சக மனிதர்களுக்கு உண்மையான அன்பைத் தரும் நல்ல மனிதனாக இருப்பதுதான் எனது வழிபாடு’’ என்கிறார் கவிஞர் பிறைசூடன்.