Published:Updated:

தசாவதாரம் திருத்தலங்கள்!

தி.தெய்வநாயகம்

தசாவதாரம் திருத்தலங்கள்!

தி.தெய்வநாயகம்

Published:Updated:
தசாவதாரம் திருத்தலங்கள்!

ணு நுட்பம் முதல், சமீபத்திய 4-ஜி தொழில்நுட்பம் வரை... விஞ்ஞானத்தின் அதிநவீன கண்டுபிடிப்புகளைக் கண்டு மனித இனம் வியந்துகொண்டிருக்க, அந்த விஞ்ஞானமே வியக்கும் அற்புதம்தான் நம் பிரபஞ்சம்!

உதாரணமாக... தற்போதைய தகவல் தொழில்நுட்பத்துக்கு அடிப்படையான ஒளியைச் சொல்லலாம். உலகுக்கும் உயிர்களுக்கும் உயிர்நாடி 'ஒளி’ என்கின்றன ஞானநூல்கள். செகண்டுக்கு 1,86,282 மைல் அளவிலான அதன் வேகம், பூமியில் எந்தத் திசையிலும் எந்தத் தருணத்திலும் மாறாதது என அறிந்தபோது, ஒளி குறித்து வியந்துதான் போனது விஞ்ஞானம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

##~##
அதுமட்டுமா? ஓசோனை எடுத்துக்கொள்ளுங்கள்... ஒளியின் கடும் வெம்மையை மட்டுப்படுத்த, ஒரு போர்வையாய் சூழ்ந்து பூமிப்பந்தைக் காபந்து செய்வது இதுதானே?! கிட்டத்தட்ட இதுவும் பிராணவாயு போன்றதுதான். பிராண வாயுவில் தனிமத்தின் இரண்டு அணுக்கள் (O
2
); ஓஸோனுக்கு மூன்று (O
3
). ஓஸோன் சற்று அதிகமானால்... பூமியில் உயிருள்ளவை அனைத்தும் உயிரற்றுப் போகுமாம்! இத்தகையதான இயற்கையின் சூட்சுமங்களை அறியும்போது, விஞ்ஞானத்தால் வியக்காமல் என்ன செய்யமுடியும்?!

இப்படி, மனித சிந்தைக்கெட்டாத சூட்சுமங்கள் நிறைந்த மாபெரும் அற்புதமே இயற்கை. அதையே 'இறை’ எனப் போற்றுகிறது மெய்ஞ்ஞானம். அந்த அற்புதம், நிறைய அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறது. அதில் ஒன்று, கேகய தேசத்தில் நிகழ்ந்தது.

ஆமாம்... கேகய தேசத்தின் தலைநகராம் மாகிஷ்மதியின் அரண்மனையில், மாமன்னன் கிருதவீரியனுக்கு ஓர் ஆண் மகவு பிறந்தது. அதில் என்ன அற்புதம் என்கிறீர்களா?

அந்தக் குழந்தைக்கு ஆயிரம் கைகள்!

காரணம் இன்றிக் காரியம் இல்லை அல்லவா? இந்தக் குழந்தை பிறப்பதற்கு... அதுவும் ஆயிரம் கரங்களோடு பிறப்பதற்கு ஒரு காரணம் உண்டு.

தசாவதாரம் திருத்தலங்கள்!

வீதியுலா வரும் உற்ஸவ தெய்வத்தை பக்தர்கள் வணங்கி வழிபட... அவர்கள், தன்னையே வணங்குகிறார்கள் என, உற்ஸவரின் ரதத்தை இழுக்கும் குதிரைகள் பெருமிதம் கொண்ட கதையாக... பாற்கடலில் ஒரு சம்பவம்.

எம்பெருமான் ஸ்ரீமகாவிஷ்ணுவின் மேன்மைகளுக்கு தானே காரணம் என எண்ணம் கொண்டதாம் சுதர்சனம்!

எந்த விதத்தில் தெரியுமா?

'நம் ஸ்வாமி, எவ்வளவோ அசுரர்களை வதைத்திருக்கிறார். அந்த துஷ்ட நிக்கிரகம் அனைத்தும் என்னால் அல்லவா விளைந்தது! நான் மட்டும் இல்லாவிட்டால், பாவம்... ஸ்ரீமந் நாராயணரின் பாடு திண்டாட்டம்தான்’ எனக் கருதியதாம் சக்ராயுதம்.

எத்தகையதொரு எண்ணம்... எய்தவன் இருக்க அம்பு பெருமைப் படலாமா? தவிர, எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் இறைவன் தன்னுள்ளும் இருக்கிறார்; தனது இந்த எண்ணத்தை அவரும் அறிவார் என்பதையும் வசதியாய் மறந்து போனது சுதர்சனம். ஆனால், பகவான் சும்மா விட்டுவிடுவாரா?

மனிதர்களுக்கு கர்வம் ஏற்படுவது வாடிக்கை. ஆனால், தேவதேவனான மாலவன் கை சக்கரத் துக்கு கர்வம் தகுமா? அதன் கர்வத்தை பங்கம் செய்ய முடிவு செய்தார் இறைவன்.

'அசுரர்களை அழிப்பது எனது சக்தியா, உனது சக்தியா என்பது தெரியாததால், தகாத எண்ணம் எழுந்திருக்கிறது உன்னிடம். அதைத் தெளிவுபடத் தெரிந்துகொள்ள, ஒரு காரியம் செய்... உனது ஆயிரம் பற்களையுமே ஆயிரம் கரங்களாகக் கொண்டு, பூமியில் மனிதனாகப் பிறப்பெடு. ஒரு தருணத்தில், ஒரு காரணத்தை மேற்கொண்டு நானும் உன்னிடம் போரிட வருவேன். அப்போது தெரிந்துபோகும், நம்மில் பலசாலி யாரென்று?'' - என சக்ராயுதத்தைப் பணித்தார் பெருமாள்.

அப்போதாவது தன் தவற்றை உணர்ந்து, சுதர்சனம் மறுத்திருக்க வேண்டும். ஆனால், சற்றும் கர்வம் குறையாமல் பூலோக வாசத்துக்குத் தயாரானது. ஸ்வாமியின் ஆக்ஞைப்படி கேகய தேசத்தின் தலைநகராம் மாகிஷ்மதி நகரில், மாமன்னன் கிருதவீரியனின் மைந்தனாக ஆயிரம் கரங்களோடு பிறந்தது!

பின்னாளில் இந்திராதி தேவர்களை யெல்லாம், ஏன்... திருக்கயிலையையே பெயர்த் தெடுக்க முயன்ற ராவணனையே வென்று வாகை சூடப்போகும் அந்தக் குழந்தைக்கு கார்த்தவீர்யார்ஜுனன் எனப் பெயரும் சூட்டப்பட்டது. திக்கெட்டும் ஜெயித்தான் கார்த்தவீர்யார்ஜுனன். சும்மாவா... சக்ராயுதம் அல்லவா? வீரியம் இருக்கத்தானே செய்யும்!

ஆனாலும், அந்த பலசாலிக்கு, தன்னைக் காரணமாகக் கொண்டு பரம்பொருள் பூமியில் ஓர் அவதாரம் நிகழ்த்தப்போகிறது என்பது தெரியாது.

தசாவதாரம் திருத்தலங்கள்!

வசீலர் ஜஹ்னு மகரிஷியின் வழிவந்தவன் காதி ராஜன். இவனுக்கு சத்தியவதி என்ற மகள் இருந்தாள். இவளை, ரிஷிகர் எனும் முனிவ ருக்கு மணம் செய்துவைத்தார் காதிராஜன்.

சத்யவதி, தன் கணவரிடம்... தனக்கு  சத்வ குணம் நிறைந்த சாதுவான ஆண் குழந்தை பிறக்கவும், தன் தாய்க்கு சத்திரிய குணம் கொண்ட வீர மகன் பிறக்கவும் அருளும்படி வேண்டினாள். முனிவரும் இசைந்தார். அவள் கேட்டுக் கொண்டபடியே மந்திர உச்சாடனம் செய்து இரண்டு சருக்களை (ஹவிஸ்) சத்யவதி யிடம் தந்து, ''உனக்குரியதை நீயும் மற்றதை உன் தாயும் பூஜிக்கவேண்டும்'' என்று கூறி, மனைவியிடம் தந்தார். ஆனால், நடந்தது வேறு. விதி வசத்தால் சருக்கள் மாறிப் போயின!

நடந்ததை அறிந்த ரிஷிகர் ''மந்திர சக்தி பலிக்காமல் போகாது; உனக்கே சத்திரிய குணம் கொண்ட மகன் பிறக் கப் போகிறான்'' என்றார். சத்தியவதி அதிர்ந்தாள்.  ''தவறு நிகழ்ந்துவிட்டது. எனக்கு, சாந்த குணம் கொண்ட மகன் பிறக்க நீங்களே அருள்புரிய வேண்டும்'' என்று பிரார்த்தித்தாள்.

''மந்திரமும், முனிவன் வாக்கும் பலிக்காமல் இருக்காது. எனினும் இறையருளால் சிறு மாறுதல் நடக்க அருள்கிறேன். உனக்குப் பிறக்கப் போகும் மகன் சாந்த குணம் கொண்ட வனாகப் பிறப்பான். ஆனால், அவனுடைய மகன் சத்திரியர்களுக்கே உரிய வீர-தீரத்துடன் பிறப்பான். அதை மாற்ற முடியாது'' என்றார்.

அதன்படியே நிகழ்ந்தது. சத்யவதிக்கு சாந்த குணம் கொண்ட ஜமதக்னி பிறந்தார். பெரும் தவசீலரான திகழ்ந்த இவர், ரேணுகையை மணந்தார். இவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளில் ஒருவன், வீர-தீரத்தில் சிறந்தவனாகத் திகழ்ந்தான்.  (இந்தக் கதையை வெவ்வேறு விதமாக விவரித்து சிலாகிக்கின்றன ஞான நூல்கள்).

இறை சங்கல்பமும் இதுதான்!

அதர்மத்தால் பூமியில் பாவங்கள் பெருக... 'அதர்ம பாரம் நீக்கி அருள் புரியுங்கள்; என்னைக் காப்பாற்றுங்கள்’ என பூமிப்பிராட்டி பணிந்து வேண்டிக்கொள்ள, அவளுக்கு அருள்வதாகச் சங்கல்பம் செய்த பரம்பொருளே, ரேணுகையின் பிள்ளையாய் பூமியில் அவதரித்தது.

துஷ்ட நிக்கிரகமும் சிஷ்ட பரிபாலனமும் செய்ய அவதரித்த அந்தப் பிள்ளை, தந்தையின் ஆணைப்படி தவம் செய்த திருவிடம் எது தெரியுமா?

திருக்கயிலாய பர்வதம்!

அந்தப் பிள்ளையின் கடும் தவத்தால் மகிழ்ந்து, சகல தனுர் வேதங்களையும், சர்வ மந்திர சாஸ்திர பிரயோகங்களையும் அவனுக்கு

கற்றுத் தந்தது யார் தெரியுமா?

சாட்சாத் ஸ்ரீபரமேஸ்வரர்!

நுட்பமான அறிவாலும், நிகரற்ற ஆற்றலாலும், பண்பில் சிறந்த தன்னுடைய பணிவிடைகளாலும், பக்தியாலும் ஸ்ரீபார்வதி- பரமேஸ் வரரை மகிழ்வித்து, அவர்களின் திருவருளையும் 'பரசு’ எனும் சக்தி வாய்ந்த ஆயுதத்தையும் பெற்ற அந்தப் பிள்ளை...

ஸ்ரீபரசுராமன்!

- அவதாரம் தொடரும்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism