மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

தெரிந்த புராணம்... தெரியாத கதை!
தெரிந்த புராணம்... தெரியாத கதை!
தெரிந்த புராணம்... தெரியாத கதை!

'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!’ என்கிற நக்கீரனின் வாதம்தான் இந்து தர்மத்தின் அடிப்படை வேதாந்தம். கோபமும் ஆவேசமும் மனிதர்களுக்கு மட்டுமின்றி, கடவுளர்க்கு வந்தாலும், அதற்குரிய பலாபலன்களை அவர்கள் அனுபவித்தே தீரவேண்டும் என்றே புராணங்கள் வலியுறுத்துகின்றன. மனிதர்களின் செயல்களுக்குச் சில தருணங்களில் காரண காரியங்கள் இருப்பதில்லை. ஆனால், கடவுள்களின் செயல்களுக்கு ஏதோ காரண காரியங்கள் இருக்கவே செய்யும். தர்மத்தின் அடிப்படை உண்மைகளை உலகோர்க்கு உணர்த்த, இறைவன் அவ்வப்போது நடத்திய நாடகங்களே, நமது புராணக் கதைகள்.

##~##
அவற்றில், தொன்றுதொட்டு தலைமுறை தலைமுறையாகச் சொல்லப்பட்டு வரும் கதைகளை, வெவ்வேறு கால கட்டங்களில் பார்க்கும்போது, புதிய தத்துவங்களும் கருத்துக்களும் புலனாகின்றன. இதையே, 'தெரிந்த புராணம், தெரியாத கதை’ மூலம் விளக்குகிறோம்.

பரமேஸ்வரனே பாவம் செய்த கதை ஒன்று உண்டு. 'ஒரு யுகத்தில், சிவபெருமானைப் போல பிரம்மதேவனுக்கும் ஐந்து தலைகள் இருந்தன. ஒருமுறை, கயிலாயத்துக்கு வந்த பிரம்மனை, தூரத்திலிருந்து பார்த்த பார்வதிதேவி, ஒரு கணம் சிவனென்று தவறாக எண்ணிக் கொண்டாள். இதனால் கோபம் அடைந்த சிவபெருமான், தனக்கும் பிரம்மனுக்கும் தெளிவான வித்தியாசம் தெரிய வேண்டும் என்பதற்காக, பிரம்மனின் ஐந்து தலைகளில் ஒன்றைக் கிள்ளியெறிந்து, அவரை நான்முகனாக்கிவிட்டார்’ என்பது புராணக் கதை 'இந்தக் கதையால் பிரம்மா, சிவன், பார்வதி மூவருக்குமே இழுக்கு நேருமேயன்றி, ஒப்புக்கொள்ளும்படியான உண்மை இதில் இல்லை’ என்று இந்தக் கதையைப் படிப்பவர்கள் விவாதிக்கலாம்.

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

'ஒரே தலையுடன் இருக்கும் மனிதர்களில் ஒவ்வொருவரையும், சாதாரண மனிதர்களான நாமே தவறு செய்யாமல் தனித்தனியே அடையாளம் கண்டுகொள்ளும்போது, அனைத்தும் உணர்ந்த அன்னை உமாதேவிக்கா தலை பற்றிய தடுமாற்றம் ஏற்பட்டிருக்கும்? தன் கணவனின் தலைகளையும், பிரம்மனின் தலைகளையும் அடையாளம் தெரிந்துகொள்ள முடியாத அளவுக்கு அஞ்ஞானம் மிகுந்தவளா அன்னை பார்வதி?’ என்ற நியாயமான கேள்விகள் இங்கே எழலாம்.

'அப்படியே இருந்தாலும், அதற்காக சிவன் பிரம்மனது தலையைக் கிள்ளுவானேன்? தன்னிலிருந்து மாறுபட்ட தோற்றம் அளிக்கப் புதியதொரு தலையை பிரம்மனுக்குத் தந்து, அவரையும் ஆறுமுகம் உடைய முருகப்பெருமானைப் போல் ஆக்கியிருக்கலாமே? அல்லது, தன் தலைகளில் ஒன்றைக் குறைத்துக் கொண்டு, தான் நான்முகனாகி, ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தியிருக்கலாமே?’ என்றெல்லாம் வாதங்களும் கேள்விகளும் பிறக்க வழிசெய்கிறது இந்தக் கதை.

ஆதாரப்பூர்வமான சில புராண ஆராய்ச்சிகளின் அடிப்படையில், பிரம்மனின் தலை போன கதையின் பின்னணியில் அமைந்த தத்துவத்தைப் பார்ப்போம். பஞ்ச பூதங்களை ஒழுங்குபடுத்தி, படைப்புகளை உருவாக்கவே, பிரம்மனுக்கு ஐந்து தலைகள் இருந்தன என்கிறது பிரம்ம வைவர்த்த புராணம்.

நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் ஆகிய ஐந்தினைக் குறிக்கும் ஐந்து தலைகள் அவை. இவற்றில் ஆகாயத்தைக் குறிக்கும் தலையே பிரம்மனின் எண்ணம், கற்பனை, உருவாக்கும் திறன், சிந்தனா சக்தி, அறிவுத்திறன் அனைத்துக்கும் உறை விடமாயிருந்தது. சிருஷ்டியைத் தொடங்கிய பிரம்மனின் கற்பனைத் திறன் மேலும் மேலும் வளர்ந்து கட்டுக்கடங்காமல் சென்றது. புல், பூண்டு, புழு, பூச்சி, பறவை, மிருகம், மனிதன் என அவன் படைப்புகள் ஒன்றைவிட ஒன்று உயர்ந்து உருவாக ஆரம்பித்தன. திறமைகள் வெளிப்படும்போது ஏற்படும் மகிழ்ச்சியில்தான், சில நேரங்களில் கர்வம் பிறக்கிறது. அனைத்தையும் படைத்த பெருமை யில் பிரம்மனின் அகங்காரம், அவரின் ஐந்தாவது தலையைச் சற்றுக் கனக்கச் செய்தது.

தன்னையே நாபியில் உற்பத்தி செய்த, நாராயணனைக்கூட அவர் அப்போது சற்று மறந்துவிட்டார். சிருஷ்டிக்கு மூலாதாரமான பஞ்ச பூதங்களையும் படைத்த பரமேஸ்வரனையும் அவர் நினைக்கவில்லை. அனைத்தும் தன்னால் படைக்கப்பட்டது என்று அவர் எண்ணியபோது, அவர் அகந்தைக்குக் காரணமான ஐந்தாவது தலையை ஆதிசிவன் மறையும்படி செய்துவிட்டார். பிரம்மனின் அகங்காரம் எனும் தலை மறைந்தது; சிருஷ்டி புனிதமானது. ஆனால், பிரம்மனின் மறைந்துபோன தலை, ஒரு கபாலத் திருவோடு வடிவில் பரமசிவனின் வலக்கரத்தில் ஒட்டிக் கொண்டது. நன்மை கருதியே மகாதேவன் அந்தச் செயலைச் செய்தாலும், பிரம்மனின் ஒரு தலையைத் துண்டித்து மறையச் செய்ததால், பிரம்மஹத்தி என்ற பாபம் சிவனுக்கு ஏற்பட்டது.

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

'நீதி வழங்கிய நீதிபதிக்கே தண்டனை தரலாமா?’ என்ற கேள்வி இப்போது எழலாம். தண்டனை எப்படித் தர வேண்டும் என்பதில்கூட ஒரு தர்மம் அடங்கி இருக்கிறது. சிவன் நீதி வழங்கி இருக்க லாம். ஆனால், அவர் அகங்காரம் நிறைந்த பிரம்மனின் தலையை துண்டித்து, தர்மம் தவறிவிட்டார். அதற்கான தண்டனையிலிருந் தும் அவர் தப்ப முடியவில்லை.

பித்தன் சிவன் பிக்ஷ£ண்டியாகி, பிரம்ம கபாலத்தைக் கையில் ஏந்தி, பி¬க்ஷ (பிச்சை) கேட்கப் புறப்பட்டார். உலகுக்கெல் லாம் படியளக்கும் ஈஸ்வரனே பிக்ஷாடனர் ஆகிவிட்டால், உலகிலுள்ள ஜீவராசிகள், மானிட ஜீவன்கள் உயிர் வாழ்வது எப்படி?! படியளக்கும் பரமேஸ்வரன் பிக்ஷ£ண்டிக் கோலம் பூண்டது உண்மை. அவன் கையில் பிரம்ம கபாலம் திருவோடாக ஒட்டிக் கொண்டதும் உண்மை. ஆனால், பரமேஸ் வரன் எதை பிக்ஷையாகக் கேட்டான்?!

பின்னொரு நாள், ஸ்ரீமன் நாராயணன் திருக்கோயில் கொண்ட பத்ரிநாத் எனும் இமயத்தின் புண்ணிய பூமியில், மகேஸ்வரனின் பிக்ஷைக் கரங்கள் நீண்டன.

தெரிந்த புராணம்... தெரியாத கதை!

அங்கே தவம் புரியும் முனிவர்கள் தங்கள் கர்வத்தையும், அகந்தையையும் தானம் செய்து, இறைவனின் கையில் திருவோடாக ஒட்டிக் கொண்டிருந்த பிரம்ம கபாலத்தை நிரப்பினார்கள். எல்லாக் காலத்திலும் எல்லா விதமான மக்களும் தங்கள் அகங்காரத்தையும், ஆணவத்தையும் விட்டொழிக்க வேண்டி, ஈஸ்வரன் ஓர் அற்புத லீலை செய்தார். நாராயணனின் சங்கல்பமும் அதோடு சேர்ந்தது.

பிரம்ம கபாலம் சிவபெருமானின் கரத்திலிருந்து நழுவி, அங்கே ஓடிக் கொண்டிருந்த புனித கங்கையில் விழுந்தது. எல்லோர் ஆணவத்தையும் ஏற்று, எல்லோரையும் புனிதப்படுத்த, இன்னமும் அது கங்கையில் மிதந்துகொண்டுதான் இருக்கிறது.

பிறருக்குப் புண்ணியத்தைத் தேடித் தர, தான் ஒரு பாவம் செய்து, தன்னையே பிக்ஷ£ண்டியாக்கிக் கொண்ட கருணாமூர்த்தி ஸ்வரூபம்தான் பிக்ஷாடனர் எனும் சிவரூபம்.

பல சிவாலயங்களில் பிக்ஷாடனர் மூர்த்தியைக் காணலாம். குறிப்பாக, மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நுழைந்ததுமே, பொற்றாமரைக் குளத்துக்கு முந்திய மண்டபத்தில், பிக்ஷ£டனர் சிலை உள்ளது.

திருநெல்வேலியில் ஆனித் திருநாள் உற்ஸவத்தின்போது, இறைவன் பிக்ஷாடனர் வடிவில், கையில் கங்காளம் எனும் கால ஓடு ஏந்தி, தங்கச் சப்பரத்தில் பவனி வருவார். அவரை கங்காளநாதர் என்று கொண்டாடுகிறார்கள். மக்கள் அனைவரும் பொன்னும், பொருளும் மட்டுமின்றி, தங்கள் ஆணவத்தை, அகங்காரத்தை, 'தான்’ என்ற செருக்கை அந்தத் திருவோட்டில் சமர்ப்பித்து, தங்களைப் புனிதப்படுத்தி கொள்கின்றனர். இதுபோல், பல்வேறு சிவஸ்தலங்களில் நம்முடைய ஆணவத்தையும், அகங்காரத்தையும் நாம் விட்டுவிடுவதற்காக, பிக்ஷாடனர் வடிவில் சிவபெருமான் அருள்புரிந்து வருகிறார்.

நமது உலகியல் ஆசைகள் மெதுவாக மறைந்து, ஆணவம், பொறாமை, கோபம், குரோதம் போன்ற துர்க்குணங்கள் நம்மிடமிருந்து நீங்கி, நம் ஜீவனெல்லாம் சிவன் நிறைந்திருக்க வேண்டும் என்பதே, சிவபெருமானை வழிபடுவதன் தத்துவம். அந்த நிலையையே சத்- சித்- ஆனந்தம் என சைவ மறைகள் போற்றுகின்றன. அதனை விளக்கும் தோற்றமே பரமேஸ்வரனின் பிக்ஷ£டனர் வடிவம்.

- இன்னும் சொல்வேன்...