Published:Updated:

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

கவிஞர் பொன்மணி

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

கவிஞர் பொன்மணி

Published:Updated:
சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

கவான் சத்ய சாயிபாபா தனக்குத் தந்த நூதனமான அனுபவங்களை, பக்தை ரமா கிருஷ்ணமூர்த்தி சொல்லிக் கொண்டிருந்தார். ஸ்வாமியிடம் இன்டர்வியூ... பாத நமஸ்காரம் அடைந்த இந்த பக்தையின் மனையான 'ஸ்ரீசாயி சுபமங்களா’வில், ஸ்வாமியின் பரிபூரண காவல் இருக்கிறது. இவருடைய கணவர் கிருஷ்ணமூர்த்தி, ஒரு வைகுண்ட ஏகாதசியில் மறைந்து, ஸ்வாமிக்குள் கலந்துபோன பின்பு, ரத்த அழுத்தம், தைராய்டு, மூட்டுவலி என்று பல்வேறு உடல் உபாதைகளால் இவர் வெளியில் அதிகம் போவதில்லை.  

##~##

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஸ்வாமி, தங்களுக்குத் தந்த அதிசய அனுபவங்களை பக்தை ரமா சொல்லத் தொடங்கினார்.

''அன்று பகவானின் 85-வது பிறந்தநாள். வீட்டில் வழிபாடு ஆனதும், மகள் திவ்யாவும், மகன் ஆதித்யாவும் பக்தர் ரங்கன்சாய் நடத்திய ஸ்வாமியின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்குப் போயிருந்தனர். பஜன், நாராயண சேவை என்று அங்கெல்லாம் நடப்பதால், அங்கேயே சாப்பிட்டுவிட்டு வருவதாகச் சொல்லிப் போயிருந்தனர். சரி, நமக்கு மட்டும்தானே... மதியம் இரண்டு தோசை வார்த்து சாப்பிடலாம் என்று நினைத்தவள், வெளி வாசல் தெரியும்படியாக ஹாலில் உட்கார்ந்தபடி, ஸ்வாமியின் பிறந்தநாள் செய்திகளை வாசித்துக் கொண்டிருந்தேன். மூட்டு வலி காரணமாக வேகமாக நடந்துபோய்த் திறக்க முடியாதே என்று வாசல் கதவைத் திறந்து வைத்து, க்ரில் கதவை மட்டும் வெறுமனே மூடியிருந்தேன்.

காலை பதினோரு மணியிருக்கும். இதுவரை நான் பார்த்திராத ஒரு பெண்மணி, கதவைத் திறந்துகொண்டு உள்ளே வந்தார். நல்ல மாநிறம். பச்சை வண்ணப் பட்டுப் புடவையும் ஜாக்கெட்டும்! நெற்றியில் மிகப்பெரிய பொட்டு; தலையில் மல்லிகைப் பூவும் கைகள் நிறைய கண்ணாடி வளையல்களும்... கழுத்தில் கருகமணியும் கால்களில் மெட்டியும் கொலுசுமாக தெய்வீகக் களையோடு இருந்தார். யார் என்ன என்று சொல்லாமல் நேராக உள்ளே வந்துவிட்டார். அவர் கையில் பெரிய பேப்பர் பிளேட். அதன்மேல் ஒரு மூடியோடு இருந்தது. என் முன்னிருந்த டீபாயில் பேப்பரைக் கொஞ்சம் தள்ளி வைத்துவிட்டு, கையிலிருந்த தட்டை அங்கே வைத்தார். 'நீங்க யாரம்மா... எங்கிருந்து வறீங்க?’ என்று நான் பாட்டுக்குக் கேட்டுக் கொண்டேயிருந்தேன்... பதிலே சொல்லவில்லை!

எங்கள் பூஜையறையில் போய் நின்றார். எங்கள் குலதெய்வமான மண்டாசனப் பெருமாள் முன் நின்று கை கூப்பி வணங்கினார். 'நீங்க எந்த சாயி சமிதியிலிருந்து பிரசாதம் கொண்டு வர்றீங்க..’ என்று மறுபடியும் கேட்டேன். பதில் வந்தால்தானே?! பூஜை அறையிலிருந்து வந்ததும் புன்னகையோடு என்னைப் பார்த்துச் சொன்னார்... 'ஸ்வாமி இச்சிந்தி திஸாகோன்டி’. ஸ்வாமி தந்திருக்கிறார் எடுத்துக் கொள்ளுங்கள். மேலும் சொன்னார்

'மீக்கே இச்சிந்தி மீரே தீஸிகோண்டி பிட்டலு ஒத்து’

ஸ்வாமி உங்களுக்காகக் கொடுத்தது... நீங்களே சாப்பிடுங்கள்; பிள்ளைகளுக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டு, வெளியே சென்றுவிட்டார். மெள்ள எழுந்து எட்டிப் பார்த்தேன் பக்கத்து வீட்டு வாசல்வரை தெரிந்து... மறைந்து போனார்! இது என் பிரமையா?

'இதென்னடா முன்பின் தெரியாத இந்த அம்மா இப்படி வந்து பேசிட்டுப் போறாங்களே’ என்று அந்தப் பெண்மணியின் அடையாளம் சொல்லி இரண்டு சாயிசமிதிகளில் கேட்டபோது அப்படி யாரையும் அனுப்பவேயில்லை என்றனர். வந்து... மூடியிருந்த தட்டைத் திறந்தேன். ஆச்சர்யம் தாங்கவில்லை தட்டில் 15 வகையான உணவுகள் கொஞ்சம் கொஞ்சமாக வைக்கப்பட்டிருந்தன! சித்ரான்னங்கள், கேசரி, சர்க்கரைப் பொங்கல், வடை, சிப்ஸ், பச்சடிகள், ஸ்வீட், வாழைப்பழம்... என்று ஸ்வாமி பிறந்தநாளின் அமர்க்களமான பிரசாதமாக இருந்தது அது!

மறுபடியும் அந்த சமிதிகளுக்கு ஃபோன் செய்து பிரசாதம் பற்றிக் கேட்டபோது, 'இங்கு ஸ்வாமி பிரசாதம்... இன்று சாம்பார் சாதம், தயிர்சாதம், சுண்டல் மட்டுமே’ என்றார்கள். அதற்குமேல் என்ன கேட்பது!? ஸ்வாமிக்கு நமஸ்காரம் செய்துவிட்டு, திவ்யமாகச் சாப்பிட்டு முடித்தேன்... அற்புதமான விருந்து! பிள்ளைகள் வந்ததும், கேட்டு வியந்து போனார்கள்.

அன்று இரவு தூங்கத் தொடங்கியதுமே ஸ்வாமி கனவில் வந்துவிட்டார். 'இந்த மாதிரி ஸ்வாமி பிறந்த நாள் பிரசாதம் சாப்பிடணும்னு உனக்கு ஆசை இருந்தது. கொடுத்தனுப்பியிருந்தேனே... சாப்பிட்டே இல்லே... ஒரு பிடிபிடிச்சேல்லே...’ என்று குறும்போடு கேட்டார் ஸ்வாமி. 'ஆமாம் ஸ்வாமி... ரொம்ப சந்தோஷம். நல்லா சாப்பிட்டேன்’ என்றேன். அதோடு கனவு முடிந்துவிட்டது. அடடா... மனமறிந்து பசியறிந்து ஸ்வாமிதான் பிரசாதம் அனுப்பியிருக்கிறார். அதுசரி அன்று வந்தது யார்... தேவியா தேவதையா... மனம் வெகுநாட்களுக்கு பிரமிப்பிலிருந்து மீளவேயில்லை!

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

ருமுறை விசித்திரமான உடல் உபாதைக்கு ஆளானேன். என் முகத்தின் இடது பக்கம் கன்னம்

காது தாடை வரை பெரிய வீக்கம் ஏற்பட்டது. நரம்புகள் 'ஜிவு ஜிவு’ வென்று இழுக்க, உயிர் போகும் வலி! ஒரு பக்கம் வீங்கி, இன்னொரு பக்க முகம் ஒட்டியிருக்க முகம் விகாரமாய்ப் போனது. எதையும் மென்று சாப்பி டவோ, விழுங்கவோ முடியவில்லை. 'பொன்னுக்கு வீங்கிதான்... இரவல் நகையை வாங்கிக் கழுத்தில் போடு. சரியாய்ப் போகும்’ என்றார்கள் சகோதரிகள். வந்து பார்த்தவர்களும் பிள்ளைகளும் டாக்டரிடம் உடனே போ என்றார்கள். ஒரே பக்கமாகப் படுத்ததால் முதுகு வலி, தூக்கமில்லை காய்ச்சல் வந்து விட்டது. திவ்யாவும் ஆதித்யாவும் 'டாக்டரிடம் கட்டாயம் போய் வா’ என்று கவலையோடு சொல்லி விட்டுக் காலையில் புறப்பட்டுப் போனார்கள். கதவை மூடிவிட்டு வந்தேன். வலி தாங்காமல் கண்ணீர் முட்டிக் கொண்டு வந்தது.

'ஏற்கெனவே மூட்டுவலியால் நடக்க முடியலே... இப்ப, ஏன் ஸ்வாமி இந்த உபாதை?’ என்று அழுதேன். எனக்கு டாக்டரிடம் போக மனமில்லை. ஸ்வாமியின் முன்னால் உட்கார்ந்து, 'ஸ்வாமி, என்னால் வேதனையைத் தாள முடியவில்லை. இந்த வலியைப் போக்கு’ என்று மனமுருகிப் பிரார்த்தித்தபடி, கண்களை மூடி, என்னை மறந்து ஸ்வாமியின் மூலமந்திரமான 'சாயி காயத்ரி’யை சொல்லத் தொடங்கினேன்.

'சாயிச்வராய வித்மஹே சத்யதேவாய தீமஹி தந்நோ சர்வ பிரசோதயாத்’ - சாயி காயத்ரியை இடம்- காலம்- சூழல் எல்லாம் மறந்து சொல்லிக் கொண்டேயிருந்தேன். சடாரென்று... தெய்விக அதிர்வுகளில் மனம் மூழ்கிப் போனது. ஒரு புள்ளியில் மனம் ஓய்ந்து அமைதியானது. சூழ்ந்த அமைதி... அப்போது ஸ்வாமியின் குரல் மிகத் தெளிவாகக் கேட்டது.

'ஸ்வாமின நம்மிதே ஸ்வாமி சூசுகுண்டாரு’

ஸ்வாமியை நம்பினா ஸ்வாமி பாத்துப்பார்!

'டாக்டர நம்மிதே டாக்டர் சூசுகுண்டாரு’

டாக்டரை நம்பினா டாக்டர் பாத்துப்பார்!

உடனே சொன்னேன். 'ஸ்வாமி, டாக்டர் களின் டாக்டர் நீங்க... என்னால வேதனையை தாங்க முடியலே... தயவுசெய்து இந்தக் கஷ்டத்த ஸ்வாமிதான் போக்கணும்’ என்று அழுதபடியே சொன்னேன். ஸ்வாமி பதில் சொல்லவில்லை. மூன்று நாட்களாகத் தூங்காமல் இருந்ததால், ஒரே தூக்கமாக வந்தது. காலை 11 மணிக்குப் படுத்து, ஒரு மணி வரை அடித்துப் போட்டாற்போல் தூங்கிவிட்டேன். ஒரு மணிக்கு எழுந்து வழக்கம் போல் கன்னத்தைத் தொட்டேன்... கொஞ்சமும் வலியில்லை! மெள்ள இடது பக்க முகத்தைத் தடவிப் பார்த்தேன்... அட சாயிராமா... வீக்கமே இல்லை..! சுத்தமாக மறைந்தே போய்விட்டது!

தூக்கத்தில் மெல்லியதாக விபூதி வாசம் வந்தது ஞாபகத்துக்கு வந்தது. கண்ணாடியில் முகத்தைப் பார்த்தேன். பழையபடிக்கு நன்றாகிவிட்டது. கால்வலியை மீறி துள்ளிக் குதித்தேன். வந்தவர்களும் பிள்ளைகளும் ஸ்வாமி நடத்திவிட்ட இந்த அற்புதத்தைக் கண்டு குதூகலங் கொண்டாடினார்கள். இந்தக் காவல்தெய்வம் இருக்கும்போது அவர்களுக்கென்ன கவலை!'' என்று பகவான் பாபாவின் கருணையைச் சொல்லி பக்தை ரமா அழுதார்... சிரித்தார்... ஸ்வாமிக்கு நன்றி சொல்லிக்கொண்டே இருந்தார்!

ஸ்வாமி மகா சமாதியான பின்பு, ஒரு நாள் கனவில் வந்து சொன்னார். 'கேம்ப்பஸ் இன்டர்வியூ’வில் மகள் திவ்யாவுக்கு நிறைய வேலைகள் வந்தபோதெல்லாம் மறுத்த ஸ்வாமி, இப்போது சொன்னார்... 'வரும் வாரத்தில் திவ்யாவுக்கு நல்ல வேலை வரும். எல்லா விதத்திலும் அவளுக்கு உகந்த வேலை. வர்ற வேலையை ஒத்துக்கச் சொல்லு. நல்ல சம்பளம்... டென்ஷன் இல்லாம சந்தோஷமா டைம் போகும். உனக்கும் சிரமமிருக்காது’ என்றார். ஸ்வாமி சொன்னது போல் ஒரு பெரிய கம்பெனியில் நல்ல வேலை கிடைத்தது திவ்யாவுக்கு. அந்த வேலையில் திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறாள். அது ஸ்வாமியின் ஆசீர்வாதம் அல்லவா?! மகன் ஆதித்யா விளையாட்டைக் குறைத்துக்கொண்டு படிப்பில் முழுக் கவனம் செலுத்த வேண்டும் என்பார் ஸ்வாமி...

பக்தை ரமா சொன்னார்... ''ஸ்வாமி சத்ய சாயிபாபாவின் அன்பும் காவலும் எங்களைச் சுற்றி நிறைந்திருப்பதால், எல்லாம் இனிதாகவே நடக்கிறது!''

- அற்புதங்கள் தொடரும்

ஸ்ரீசாயி பிரசாதம்!

சத்தியம் நிகழ்த்திய அற்புதம்!

ருபது ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீசாயி நிகழ்த்திய அற்புதம் இது. பகவானைத் தரிசிக்க பலமுறை புட்டபர்த்திக்குச் சென்றிருக்கிறேன். அவர் கொடைக்கானலுக்கு வரும்போதும் சென்று தரிசித்திருக் கிறேன். ஆசிரமத்தில் அன்பர்கள் தரும் விபூதி பிரசாதத்தை, அலுவலக அன்பர்களுக்குக் கொடுப்பது எனது வழக்கம்.

ஒருமுறை நண்பர் ஒருவர், ''நீ வணங்கும் ஸ்ரீசத்யசாயி சக்தி உள்ளவராக இருந்தால், எனக்கு இந்த விபூதி பிரசாதத்தை, அவரே நேரில் கொடுக்க வேண்டும்'' என்று வாதாடினார்.

சில மாதங்கள் சென்றிருக்கும்! விளையாட்டுப் போட்டி ஒன்றில் கலந்துகொள்வதற்காக, சென்னை நேரு விளையாட்டு மைதானத்துக்குச் சென்றிருந்தார் நண்பர். விசேஷ அழைப்பின் பெயரில் பகவானும் அங்கு விஜயம் செய்திருந்தார். நண்பர் லிஃப்டுக்காக காத்திருந்த அந்த அதிஅற்புத தருணத்தில், நண்பர் கேட்டது நிகழ்ந்தேவிட்டது! ஆமாம்... பகவானும் அங்கே வர, அவரை கரம் கூப்பி வணங்கினாராம் நண்பர். உடனே, மந்திர சக்தியால் விபூதி வரவழைத்து தந்தாராம் ஸ்ரீசத்யசாயி.

எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரிபூரணர் ஸ்ரீசத்யசாயி என்பதற்கு, இதைவிட வேறு உதாரணம் வேண்டுமா என்ன?!

- கொள்ளிடம் காமராஜ், திருச்சி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism